பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வருமான வரம்பு (கிரீமிலேயர்) பத்தரை லட்சமாக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது

மே 16-31

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வருமான வரம்பு (கிரீமிலேயர்) பத்தரை லட்சமாக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது

1992இல் உச்ச நீதிமன்ற ஒன்பது பேர் கொண்ட அமர்வு கூறிய  தீர்ப்பில் சொல்லப்பட்ட மண்டல் கமிஷன் வழக்கில் (இந்திரா சஹானி vs state)  கிரீமிலேயர் என்ற பொருளாதார அளவுகோல் புகுத்தப்பட்டதே _- இந்திய அரசியல் சட்ட கர்த்தாக்களின் கருத்துக்கு விரோதமான _- நியாய விரோதப் போக்கு என்பதை நாம் அத்தீர்ப்பை வரவேற்ற நேரத்திலேயே சுட்டிக்காட்டி,

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் கிரீமிலேயர் என்ற அளவுகோல் புகுத்தப்பட்டதைக் கடுமையாக எதிர்த்தோம்; இன்றும் எதிர்த்து வருகிறோம்.

முதல் முக்கியக் காரணங்கள் இதோ:

1. அரசியல் சட்டத் திருத்தம் கொணர்ந்த நிலையில் பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் உட்பட (அதற்குமுன் அரசியல் நிர்ணயசபைகூட) சமூக ரீதியாக கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (Socially and Educationally Backward Classes of  Citizens) என்ற சொற்றொடர்கள் மட்டுமே இருக்க வேண்டும், (Economically) பொருளாதார ரீதியாக என்பது புகுத்தப்படத் தேவையில்லை;

காரணம் அது நிலையான சரியான அளவுகோலாக இருக்காது என்று பிரதமர் நேருவே நாடாளுமன்றத்தில் கூறி அதனைப் புறக்கணித்து நிறைவேற்றினார்! பொருளாதார அளவுகோல் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்ட நிலையில் அது தோற்கடிக்கவும்பட்டது என்பதும் நினைவூட்டத்தக்கதாகும்.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் பெரும்பான்மை நீதிபதிகள் வலிந்து புகுத்திய கிரீமிலேயர் இதற்கு எதிரானது அல்லவா?

2. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மத்திய அரசில் முதல் முதலாக மண்டல் ஆணையப் பரிந்துரை செயலாக்கத்தின் மூலமே கிடைக்கும் நிலையில், மேல்தட்டு வர்க்கத்தினர், கீழ்த்தட்டு வர்க்கத்தினரின் இடங்களைப் பறித்துக் கொள்ளாமல் தடுக்கவே கிரீமிலேயர் என்ற வாதமே தவறானது அல்லவா!

பந்தியில் உட்கார வைப்பதற்கு முன்பே, இவர்களே சாப்பிட்டுவிட்டார்கள் என்ற குற்றச்சாற்று மிக கேலிக்குரியது அல்லவா?

3. “That a few of the seats and posts reserved for backward classes are snatched away by the more fortunate among them is not to say that reservation is not necessary. This is bound to happen in a competitive society such as ours.

Are not the unreserved seats and posts snatched away, in the same way, by the top creamy layers amongst them on the same principle of merit on which the non-reserved seats are taken away by the top

layers of society?  How can it be bad if reserved seats and posts are snatched away by the creamy layer of backward classes, if such snatching away of unreserved posts by the top creamy layer of society itself is not bad?”

இதன் தமிழாக்கம்:

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள குறைந்த அளவிலான பணியிடங்கள் மற்றும் பதவிகளை அவர்களில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் பறித்துக் கொள்கிறார்கள் என்றுகூறி இடஒதுக்கீடே தேவையில்லை என்று கூறக்கூடாது.. போட்டி நிறைந்த நம்முடைய சமுதாயத்தில் அவர்களுக்-கான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.

அதேபோன்றே பணியிடங்கள் மற்றும் பதவிகளில் இடஒதுக்கீட்டுக்குள் வராதவர்-களாக, சமுதாயத்தில் மேல்தட்டினராக, பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக இருப்பவர்கள் பணியிடங்கள் மற்றும் பதவிகளைப் பறித்துக் கொண்டு செல்வது கேடில்லை எனும்போது, அதே நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் என்று கூறி அவர்களுக்கு இடஒதுக்கீட்டை அளிப்பது எப்படிக் கேடாகிவிடும்?

(நீதிபதி எஸ். ரத்தினவேல் பாண்டியன் தனது தீர்ப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்).

இதே நீதிபதிகள் தந்த மெஜாரிட்டி தீர்ப்பில், பொருளாதார அடிப்படைக்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை என்பதைக் கூறிவிட்டு, கொல்லைப்புற வழியாக இப்படி கிரிமிலேயர் என்ற பெயரில் பொருளாதார அளவுகோலைப் புகுத்தியது சட்ட முரண்பாடு அல்லவா?

பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலகட்டத்தில் முன்னேறிய சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடுக்கு வழி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்துத் தள்ளுபடி செய்யவில்லையா? நாம் திராவிடர் கழகத்தின் சார்பில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து போராடி வருகிறோம்.

மண்டல் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டுமென்பதற்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது. நம்மைப் போலவே தி.மு.க. உட்பட பல ஒத்த கருத்துகள் உள்ள சமூக அமைப்புகளும் போராடி வந்துள்ளன.

அதே நேரத்தில், அதற்கென அரசு நிர்ணயித்த (பிற்படுத்தப்பட்டோருக்கான அளவுகோல்) தற்போது உள்ள  ஆண்டுக்கு 6 (ஆறு) லட்சம் ரூபாய் 10.50 லட்சமாக உயர்த்தப்படல் அவசியம் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் ஜஸ்டீஸ் ஈசுவரய்யா அவர்கள் பரிந்துரை செய்துள்ளது மிகவும் ஆறுதல் அளிப்பதாகவும், வரவேற்கத்தக்கதாகவும் உள்ளது.

(நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்ட நிலைக்கு முன்பு அதை ஏற்று சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் போதிய இடங்கள் கிடைப்பதை ஏற்பது எப்படி தவிர்க்க முடியாத நிலையாக இருந்ததோ அதைப் போலத்தான் இதுவும்).

கிரீமிலேயர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நிபந்தனையாக வைக்கப்பட்டதால் அவர்-களுக்கான 27 சதவீத இடங்கள் நிரப்பப்பட முடியாத நிலை; வெறும் 7 சதவீதம்தான் அவர்களுக்குக் கிடைத்து வருகிறது. முதல் நிலை (குரூப் ஏ) பதவிகளில், மத்திய அரசின் முக்கியத் துறைகளான

1. Administrative Reforms and Public Grievances, 2. Development of North Eastern Region, 3. Disinvestment, 4. Food Processing Industries,
5. Heavy Industries, 6. Land Resources, 7. Panchayati Raj, 8. Parliamentary Affairs, 9. Pensions, 10. Petroleum and Natural Gas, 11. Public Enterprises, 12. Steel. இந்தத் துறைகளில் ஒரே ஒருவர்கூட பிற்படுத்தப்பட்டவர் இல்லை என்பது எத்தகைய கொடுமை?

இதனை மத்திய அரசு —_ பிரதமர் மோடி தலைமையில் உள்ள அரசு ஏற்க வேண்டும். கிரீமிலேயர் என்பதே கூடாது என்பதே நமது இலக்கு. ஒத்த கருத்துடையோருடன் இணைந்து போராடுவோம்.

– கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *