கண்ணதாசன் கூறுகிறார்: தமிழர்க்குத் தாலியில்லை

மே 16-31

தந்தை பெரியார் அவர்கள் தன்மதிப்பு இயக்கத்தை உருவாக்கி, வளர்த்து, இந்த மண்ணில் புரட்சி செய்தவர். அவர் சீர்திருத்தக்காரர் அல்லர்; புரட்சிக்காரர்.

தன்மான உந்தலினால் உருவாக்கப்பட்டதே தன்மதிப்பு (சுயமரியாதை) இயக்கம். தன்மானம், தன்மதிப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும் என்பது அதன் பொருள்.

ஒரு மனிதர்க்குள்ள உணர்வுகள் மற்ற மனிதர்க்கும் உண்டு என்பது அதன் அடிப்படை. மனிதன் என்னும்போது ஆண், பெண், மதம், ஜாதி, இனம் என்ற பிரிவுகளில் இன்று தொகுக்கப்படுகிறான்.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும், எந்த ஜாதியினராக இருந்தாலும், எந்த இனத்தவராக இருந்தாலும், அவர்கள் மனிதர்கள். அவர்களுள் இந்த வேற்றுமைகள் கற்பிக்கப்பட்டாலும் உணர்வால் ஒரே இயல்புடையவர்கள் என்ற உண்மையை ஏற்று உருவாக்கப்பட்டதே திராவிடர் கழகம் என்னும் தன்மதிப்பு இயக்கம்.

பிறர் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அப்படி நீங்கள் பிறரிடம் நடந்துகொள்ளுங்கள் என்ற பெரியாரின் வாழ்க்கை நெறி இதனடிப்படையில் அவரால் சொல்லப்பட்டதாகும்.

இதன்படி, ஒருவருக்குள்ள உரிமை மற்றவர்க்கு உண்டு, ஒருவருக்குள்ள உணர்வு, எதிர்பார்ப்பு மற்றவர்க்கு உண்டு. மனிதர்கள் அனைவரும் சமம். இதில் ஒருவருக்கொருவர் இழிவு செய்வது, ஏற்றத்தாழ்வு கற்பிப்பது, ஆதிக்கம் செலுத்துவது, அடிமைப்படுத்துவது, அடக்கி ஆள முயல்வது எல்லாம் மனித எதிர் செயல் மட்டுமல்ல, மாபெரும் அநீதி.

இந்த அடிப்படைதான் எதுவும் சரியா? தப்பா? வேண்டுமா? வேண்டாமா? ஏற்றதா? ஏற்கத்தகாததா? கொள்ளத்தக்கதா? தள்ளத்தக்கதா? செய்யலாமா? செய்யக்கூடாதா? என்பனவற்றைத் தீர்மானிக்கிறது.

அப்படி அணுகிப் பார்க்கின் தாலி என்பது பெண்ணுக்கு வேண்டுமா? வேண்டாமா? என்பதும் பரிசீலிக்கப்பட, விவாதிக்கப்பட வேண்டும்.

ஆனால், தாலி பெண்ணின் பக்திக்குரியதாக, புனிதமாக, அஞ்சத்தக்கதாக மூளைச் சலவை செய்யப்பட்டு, திருமண நிகழ்வோடு, ஆணின் ஆயுளோடு முடியப்பட்டு விட்டதால், அதை அகற்றுதல் என்ற முடிவு வரும்போது பல்வேறு கோணங்களிலிருந்து மறுப்பு எதிர்ப்பு, கண்டனம் வருகிறது.

குறிப்பாக இது புனிதம்; மரபு; அடையாளம்; பரிசு என்று பலவாறு குறிக்கப்பட்டு, எனவே, அது கட்டாயம்; அதை அகற்றுவது கூடாது என்ற கண்டனங்கள் எழுகின்றன.

எனவே, இவை அனைத்துக்கும் விடைகண்டு, விளக்கப் பெற்று, தாலி வேண்டுமா என்பதில் முடிவு காண வேண்டும் என்பதாய் அந்த வகையில் இந்த ஆய்வு அமைகிறது.

தாலி கட்டுவது தமிழர் மரபா?

தாலி தமிழர்க்கு ஆதிகாலந்தொட்டு வழக்கில் உள்ளதா? அல்லது பாதியில் வந்த பழக்கமா? என்ற கேள்விக்கு விடைகாண வேண்டுமானால் அதற்கு இலக்கிய ஆய்வே துணை நிற்கிறது.

எதற்கெடுத்தாலும் இது மரபு; இது எங்கள் கலாச்சாரம், எங்கள் வழக்கம் என்று வரிந்துவந்து நிற்கின்றனர். ஆனால், அப்படிப் பேசும் எவர்க்கும் வரலாறும் தெரியாது, இலக்கியமும் தெரியாது. ஆனால், தப்புத்தப்பாய்ச் சொல்லி மக்களை நம்பச் செய்வர்.

எனவே, இதுபோன்ற உண்மைக்கு மாறான கருத்துப் பரப்பல், மூளைச் சலவை செய்தல் போன்றவற்றை முறியடித்து முற்றுப் புள்ளி வைக்க சரியான, முறையான, ஆதாரப்பூர்வமான ஆய்வும், விளக்கமும் கட்டாயத் தேவை என்பதால், அந்த அடிப்படையில் இச்சிக்கலுக்கு இங்கு விளக்கமும் விடையும் அளிக்கப்படுகிறது.

தாலிபற்றி வாதமும் எதிர்வாதமும்:

தாலிபற்றிய விவாதம் இன்றைக்கு வந்ததல்ல. 1954லே இது சூடுபறக்க விவாதிக்கப்பட்ட பொருள்.

தமிழறிஞர் மா.இராசமாணிக்கனார் அவர்கள், மதுரைத் திருவள்ளுவர் தமிழ்க் கழகத்தில், 1954ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தென்னிந்திய வரலாறும் தமிழிலக்கியமும் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகையில், சங்க காலத்தில் கி.பி.10ஆம் நூற்றாண்டு வரையில் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் இல்லையென்றும்,

அதன் பின்னரே தாலிகட்டும் வழக்கம் வந்தது என்றும் இதற்கு இலக்கியத்தில் வலுவான சான்றுகள் உள்ளன என்றும் கூறினார். இச்செய்தி தினத்தந்தியில் வெளிவர, ம.பொ.சிவஞானம் அவர்கள், இது உண்மைக்கு மாறானது என்று மறுத்து, 25.10.1954 தினத்தந்தி தீபாவளி மலரில் கட்டுரை எழுதினார். ம.பொ.சி.யின் கட்டுரையைக் கண்ட கண்ணதாசன் தென்றல் ஏட்டில் மறுப்புக் கட்டுரை எழுதினார்.

ம.பொ.சி.க்கு கண்ணதாசன் மறுப்பு

ம.பொ.சி எப்போதும் ஆரியப் பார்ப்பனர்களின் ஆதரவாளர். திரிபுவாதங்கள் செய்வதில் வல்லவர். ஆனால், இவரது சூழ்ச்சி வாதம் கண்ணதாசனிடம் எடுபடவில்லை. கிடுக்கிப்பிடி போட்டு, ம.பொ.சி.யை மடக்கி, மறுப்பு எழுதுகிறார் கவிஞர் கண்ணதாசன்.

தமிழர்க்குத் தாலியுண்டு, அதற்கு இலக்கியச் சான்று உண்டு என்ற ம.பொ.சி.யின் கருத்துக்கு, அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசன், தமிழர்க்குத் தாலியில்லை, அதற்கு இலக்கியத்தில் சான்றே இல்லை, ம.பொ.சி. முன்னுக்குப்பின் முரணாக உளறுகிறார் என்று தனது கடுமையான, விளக்கமான மறுப்பை வைக்கிறார். கண்ணதாசனின் மறுப்பு இதோ:

தோழர் சிவஞானமும் தமிழன் தாலியும்

தமிழ்ப் பண்பாட்டில் தாலிகட்டும் வழக்கம் உண்டா? இதுபற்றி பல பெரும்புலவர்கள் ஆராய்ந்தனர். மிகப் பெரும்பாலோரின் முடிவு, தாலிகட்டும் வழக்கம், தமிழ் வழக்கம் அல்ல என்பதே.

தமிழன், தாலி கட்டியதாகவோ, திருமணத்தின் புனிதத் தன்மைக்கு அது நீங்காத சின்னம் என்பதாகவோ தமிழ் வரலாறு எதுவும் குறிப்பிடவில்லை. இதனையே, அண்மையில், மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராயிருக்கும் தோழர், டாக்டர் ராசமாணிக்கனார் அவர்கள் உறுதிப்-படுத்தினார்கள்.

அதாவது, பழங்காலத்தில் தமிழர்களிடையே தாலி கட்டும் வழக்கம் இல்லை என்றும், எட்டாம் நூற்றாண்டிற்கூட, தமிழர் திருமணமுறையில், சடங்குகள் சில இருந்தன என்றும், தாலி கட்டும் வழக்கம் இல்லையென்றும் உரைத்தார்கள்.

இதனை எதிர்த்து தாலியின் சார்பில் வழக்காட விரும்பிய தமிழரசுப் பெருந்தகையாளர் தோழர் ம.பொ.சிவஞானம் அவர்கள், தாலி கட்டும் வழக்கம் இருந்தது என்பதற்கு ஆதாரமாக, சிலம்பு முதல், கம்பனின் புலம்பல் வரை உள்ள இலக்கியங்களில் இரண்டு மூன்றிலிருந்து ஆதாரம் காட்டியுள்ளார்கள். (இது 25.10.54 தினத்தந்தியில் வந்துள்ளது.)

அந்த ஆராய்ச்சி எவ்வளவு வழுவுள்ளது _ எவ்வளவு குறைபட்ட ஆராய்ச்சி என்பதைக் கூறுமுன், அவர் ராசமாணிக்கனார் பற்றிக் கூறிய முதற் கருத்தையும் ஆய்தல் வேண்டும். முதன்முதலாக அவர், தமிழினத்தின் வாழ்வை ஒட்டிய பழக்க வழக்கங்கள் பற்றி, தெளிவாக எழுதப்பட்ட வரலாற்று நூல் நம்மிடம் இல்லை.

இதனால் பெரும்புலவர்கள் கூட சிலசமயம், உண்மைக்கு மாறான கருத்துகளை வெளியிடுவதைக் காண்கிறோம் என்கிறார்.

இதில் அவர், பெரும்புலவர்கள் என்ற வார்த்தையில் உள்ளடக்கியவர்களில், தோழர் ராசமாணிக்கனாரும் ஒருவர் என்பது அவர்தம் உரையால் அறியக் கிடக்கின்றது. அத்தகைய பெரும்புலவர், ராசமாணிக்கனார் உண்மைக்கு மாறான கருத்தை வெளியிட்டு விட்டார் என சிவஞானம் கூறுகிறார்.

ஏதோ, தெளிவான உண்மை என்று ஒன்று முடிபு கண்டு இருத்தல் போலவும், அதனின் நீங்கி, ராசமாணிக்கனார், அறியாமையால் பேசிவிட்டதாகவும் அவர் கருத்து! முதல் வரியில் சிவஞானம் கூறுகிறார், தெளிவாக எழுதப்பட்ட வரலாற்று நூல் இல்லை என்று. மறுவரியில், உண்மைக்கு மாறானதைச் சொல்கிறார்கள் என்று கூறுகிறார்.

தெளிவான நூல் இல்லாதபோது, முடிபு கட்டிய உண்மை எங்கிருந்து புலனாயிற்றோ, நாம் அறியோம்!

இது இப்படி இருந்திருக்கலாம் என ஒருவர் ஆராய்வதில் தவறில்லை. தெளிவான வரலாறு காணமுடியாத விஷயத்தில், இது போன்ற யூகங்களே கூற முடியும். இதுதான் உண்மை என்று முடிபு கட்டுதற்கு மறுத்தளிக்கப்பட முடியாத ஆதாரங்கள் வேண்டும்.

சகஜமாக சிவஞானம் செய்கிற தவறுகளில் இப்படி சுலபமாக முடிபு கட்டிவிடுதலும் ஒன்று. ஆராய்ச்சியாளன், முழுவிபரமும் கிடைக்காதவரை, யூகந்தான் கூறமுடியும். எந்த விஷயத்திற்கும் அதாரிட்டி ஆக முடியாது.

தெளிவு இல்லாத வரலாற்றில், அவர் உண்மை கண்டதாகக் கூறி, ராசமாணிக்கனார், அதற்குமாறான கருத்தை வெளியிடுவதாகக் கூறுவது, முதற்பெரும் பேதமை! நிற்க.

தாலிகட்டும் வழக்கம் இருந்தது என்பதற்கு எவ்வெவற்றிலிருந்து ஆதாரம் காண்கிறார் சிவஞானம்? சங்ககாலம் தொட்டு இருந்தது என்கிறார்! முதலில் சிலப்பதிகாரத்தை ஆதாரமாக்குகிறார்.

சிலப்பதிகாரத்தில், கண்ணகி-_கோவலன் திருமணத்திற்கு முன்பு, மங்கல அணி புகார் நகர வீதிகளை வலம் வந்ததாகக் கூறுகிறார், இளங்கோவடிகள். இந்த மங்கலஅணி என்பதற்கு மாங்கல்ய சூத்திரம் என்று பொருள் கூறுகிறார் அரும்பத உரை ஆசிரியர்.

_ இது சிவஞானம் எழுதியிருப்பது மங்கல அணி புகார் நகரை வலம் வந்ததாக சிலப்பதிகாரத்தில் உள்ள பாடலைக் குறிப்பிடவில்லையேனும் அதன் பொருளைக் குறிப்பிடுகிறார். பாடல் இதுதான்:

முரசியம்பின; முருடதிர்ந்தன;

முறை எழுந்தன பணிலம் வெண்நடை

அரசெழுந்ததோர் படியெழுந்தன

வகலுண் மங்கல அணி எழுந்தது!

_ இது சிலப்பதிகாரப் பாடல். இதில் வருகிற மங்கல அணி என்பதற்கு மாங்கல்ய சூத்திரம் என அரும்பத உரையாசிரியர் உரை கூறியிருப்பதை, தமது கூற்றுக்கு ஆதாரமாக்குகிறார், சிவஞானம். உண்மையில் இவ்விடத்தில் மங்கல அணி என்பது மாங்கல்ய சூத்திரம் என்ற பொருளோடு இயங்குகிறதா?

முரசு இயம்பின _ முரசு முதலியன ஒலித்தன.

முருடு அதிர்ந்தன_மத்தளம் முதலியன அதிர்ந்தன.

முறை எழுந்தன பணிலம் _ சங்கம் முதலியன முறையே முழங்கின.

வெண்குடை அரசு எழுந்ததோர் படி எழுந்தன _ வெண்குடைகள் அரசன் உலா எழுந்தபடியாக எழுந்தன.

_ இதுவரை சொன்ன உரையிலிருந்து ஊருக்குள்ளிருந்த உற்சாகம் _ புகாரின் உள் நிலை விளக்கப்படுகிறது. ஊர் ஜேஜே என்றிருந்தது என்பது போல, உற்சாகத்தை விளக்குகிறார் இளங்கோ அடிகள். அகலுண் மங்கல அணி எழுந்தது என முடிக்கிறார்.

இதற்கு, மாங்கல்ய சூத்திரம் வலஞ்செய்தது எனப் பொருள் கொள்வது தவறு. அரும்பத உரையாசிரியர்தான் இதற்கு அப்படிப் பொருள் கொண்டுள்ளார். அடியார்க்கு நல்லார் தன் உரையில் மங்கல அணி _ மங்கல அணி என்று மட்டுமே கூறிவிட்டார்.

இதிலிருந்தே, அரும்பத உரையாசிரியரின் கருத்தில் அடியார்க்கு நல்லார் அய்யப்பாடு கொண்டார் என்பதும் அப்பெரியாருக்குப் பின் மாற்றுப் பொருளான எதிர் பொருளைக் கூற அஞ்சி விடுத்தார் என்பதும் அறியக் கிடக்கின்றன.

ஊரிலே முரசு, மத்தளம், சங்கம் ஆகியவற்றின் ஒலியோடு இயற்கை அழகும் எழுந்தது எனக்கொள்வதே முறை. மங்கல அணி என்பதற்கு இயற்கை அழகு என்பதே  பொருள் _ இந்த இடத்தில்! அத்தனையோடும், ஊரில் இயற்கை அழகும் எங்கும் எழுந்தது என்பதுதான் இளங்கோவடிகள் கருத்து.

மங்கல அணியை, வேறு பொருளின்றி, மங்கல அணி என்றே கூறிப்போந்த அடியார்க்குநல்லார், அதற்குத் தனிப்பொருள் கூறவில்லையே தவிர, பொதுப்பொருளில் தம் கருத்தை வெளியிடுகிறார். அதாவது மங்கல அணி எங்கும் எழுந்தது என அடியார்க்குநல்லார் கூறுகிறார்.

எங்கும் எழுந்தது! ஆம்; வலஞ்செய்யவில்லை| எங்கும் ஒரே பொருள் திடீரென்று எழுவதற்கும், ஒரு பொருளே ஊரைச்சுற்றி வலம் வருவதற்கும் ஏராளமான வேறுபாடு_முரண்பாடு உண்டு. ஆகவே இயற்கை அழகு எங்கும் எழுந்தது என, சிறப்புரையாகத்தான் இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

இந்த மங்கல அணியை மங்கல நாணாக_மாங்கல்ய சூத்திரமாகக் கொள்ள முடியாது என்பதற்கு இன்னும் சிலப்பதிகாரமே சான்று காட்டுகிறது.

மாங்கல்ய சூத்திரம் வலம் வந்தது என்னும் பொருளில் இதை இளங்கோவடிகள் கூறியிருந்தால், திருமணம் நடப்பதைக் குறிக்கும் இடத்தில் அதை மறந்தா போயிருப்பார்? மாங்கல்யம் வலம் வந்தது என்று கூறியிருந்தால், தாலி கட்டப்பட்டதை மறைத்தா இருப்பார்? அல்லது மறந்தா இருப்பார்? திருமணக் கூற்றில், தாலி கட்டப்பட்டால்_அதைக் கூறாது விடுவதுண்டா?

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *