கேள்வி : மத்திய பி.ஜே.பி. அரசின் நிலம் கையகப்படுத்தும் மோசமான கொள்கையினை பெரும்பகுதி மக்களும் குறிப்பிடத்தக்க அளவில் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் எதிர்த்தும், அதைப்பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமல் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க முயற்சிப்பது ஜனநாயக விரோதப் போக்கு இல்லையா?
– க.அறிவுடைநம்பி, வேலூர்
பதில் : ஜனநாயக விரோதப் போக்கு மட்டுமில்லை, எதேச்சதிகார -_- தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்ற வறட்டுப் பிடிவாத, விவசாய விரோதப்போக்கும் ஆகும்.
கேள்வி : என்றும் இல்லாத அளவிற்கு எந்நேரமும் மோடியின் ஊதுகுழலாக அகில இந்திய வானொலி நிலையங்களும், பொதிகை தொலைக்காட்சியும் மாறி வருவதைக் கவனித்தீர்களா?
– த.தங்கப்பாண்டியன், துவரங்குறிச்சி
பதில் : வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் என்றும் எங்கும் அவர் குரலே! என்ற நிலைதான்.
கேள்வி : மத்திய மாநில அரசுகளில் ஒரு சில நேர்மைமிக்க அதிகாரிகளும் எதிர்காலத்தில் தன்னம்பிக்கை இழக்கும் நிலை உருவாகிவிடும்போல் தோன்றுகிறதே?
– கோ.சரசுவதி, அந்தநல்லூர்.
பதில் : ஆம். நிச்சயமாக பெருகிவரும் தற்கொலைகள் அதற்குச் சாட்சிகளாகி வருகின்ற விரும்பத்தகாத போக்கு விரிகிறது.
கேள்வி : கொலிஜியம் முறைக்குப் பதிலாகக் கொண்டு வரப்பட்டுள்ள நீதிபதிகள் நியமனக் கமிஷன் நடைமுறைக்கு வந்திருப்பதன் மூலம், பா.ஜ.க.வின் இந்துத்துவா வெறியர்கள் நீதித்துறையில் நுழைந்துவிடும் ஆபத்து அதிகரித்துள்ளது என கருதலாமா? – ம.பாலாஜி, துறையூர்
பதில் : அதற்கும் வாய்ப்பு உண்டு. அதைத் தள்ளிவிட முடியாது. தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக ஆகிவிடும்.
கேள்வி : ஏழை மக்களுக்கு _ குறிப்பாக விவசாயிகளுக்கு அரசுடைமை வங்கிகள் அவர்களின் தேவைக்குத் தடையின்றி கடன் வழங்குவது சம்பந்தமாக, வங்கிகளுக்குத் தகுந்த உத்தரவு வழங்குவதை விடுத்து, அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கிறாரே மோடி?
– மா.சுந்தரபாண்டியன், மதுரை
பதில் : செய்ய முடிந்தவர் சாதிக்கிறார், செய்ய முடியாதவர் போதிக்கிறார் என்பது பேரறிஞர் பெர்னாட்ஷாவின் வாக்கு!
கேள்வி : மனிதனின் ஒவ்வொரு அசைவும் படைத்த ஆண்டவனால் நிச்சயிக்கப்படுகிறது என்ற மதவாதிகளின் நம்பிக்கை உண்மை என்றால் மனித முயற்சிகளுக்கு இங்கு என்ன வேலை?
– டி.வி.எஸ்.மணி, பெரம்பலூர்
பதில் : திருட்டு, புரட்டு, கொலை, கொள்ளை, இந்த அப்பாவி மனிதர்களைத் தண்டிக்கலாமா இந்தக் கூற்று உண்மையெனில்? அவர்களையே கேளுங்கள்.
கேள்வி : தமிழக சட்டமன்ற சபாநாயகரின் செயல்பாடுகள் எந்த நியாயமான வழிமுறைகளுக்கும் சட்ட நெறிகளைக் காக்கும் வகையிலும் அமையவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாகப் பேசப்படுகிறதே?
– கு.கன்னியம்மாள், வந்தவாசி
பதில் : அவர்கள் மாறுவதாகத் தெரியவில்லையே, எஜமான விசுவாசம் எல்லை மீறியா செயல்பட வேண்டும்?
கேள்வி : அறிவியல் சாதனங்களை நாத்திகர், பகுத்தறிவாளர் தவிர ஏனையோர் பயன்படுத்தக் கூடாது எனக் கடுமையான சட்டம் வந்தால்… ஆன்மீகத்தின் நிலை எப்படி இருக்கும்?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : ஆன்மீகம் என்ற சொல்லாட்சியே இல்லாத ஒன்றைப் பற்றிப் பேசி வருவது.
ஆத்மா _- ஆன்மா _- அதிலிருந்து ஆன்மீகம், ஆத்மா கற்பனை!
– அறிவியல் சாதனங்கள் இன்று தலைகீழாக, மூடநம்பிக்கைப் புராணக் குப்பைகளைப் பரப்பும் திருவிழா போன்றவற்றைத்தானே காட்டுகின்றன! எந்த அரசு இவற்றைத் தடுத்துவிடப்போகிறது!
கேள்வி : பல்லாயிரக்கணக்கான பட்டுப்-பூச்சிகளைக் கொன்று நெய்யப்பட்ட பட்டு வேட்டிகளை, பட்டுப் புடவைகளை மாமாவும் மாமியும் கட்டி மகிழ்வதைவிட, மலிவாகக் கிடைக்கும் மாட்டிறைச்சியை ஏழை, எளியோர் உண்பது பாவமா? இது நியாயமா?
– இல.சங்கத்தமிழன், செங்கை
பதில் : இது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான்! அவ்வளவு தூரம் போவானேன்? தயிர் எப்படி உருவாகிறது? கொசுவர்த்தி பயன்படுத்தி கொசுக்களை அழிக்கலாமா? மூட்டைப்பூச்சி, பூரான்களை ஒழிக்கலாமா? பாவமில்லையா, ஜீவராசிகள் பகவான் படைப்பில்லையோ?
கேள்வி : நில மசோதா நிறைவேற்றப்படுமாயின் 30 கோடி இந்திய மக்கள் வேலைவாய்ப்புப் பெறுவர் என மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளதை நம்ப முடியுமா? – கே.இராவணன், தஞ்சை
பதில் : ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்!
கேள்வி : வேளாண்துறை தலைமைப் பொறியாளர் செந்திலும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி உயிரை மாய்த்துக்கொள்ளக் காரணமானவர்கள் என கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மூலம் எதுவோ அதனை வேரறுத்து வீழ்த்தும் முயற்சி மேற்கொள்ளப்படுமா?
– ஆ.நெடுஞ்செழியன், தருமபுரி
பதில் : எப்போதுமே, நோய் நாடி நோய்முதல் நாடும் வேரை அறிந்து பரிகாரம் தேடும் அணுகுமுறை நம் நாட்டில் பல விஷயங்களில் இல்லையே, அது போலத்தான் இதுவும். அமைச்சரவைப் பொறுப்பு என்றால் தலைமை உள்ளவர் இதில் பொறுப்பேற்க வேண்டும். அதற்குப் பெயர்தான் ஜனநாயகம்!
கேள்வி : ஏராளமான மக்கள் பிரச்சினைகள் அன்றாடம் பெருகிவரும் நிலையில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் கும்பகோணம் ஆன்மீகத் திருவிழாவுக்கு (மகாமகம்) ரூ.260 கோடி ஒதுக்கி துரிதமாகச் செய்து முடிக்க அதிகார வர்க்கம் அனைத்தும் இறக்கிவிடப்-பட்டுள்ளது பொறுப்பற்ற செயல்தானே?
– வா.குணசேகரன், மல்லை
பதில் : சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது. ஓய்வூதியம் 1000 ரூபாய்க்குக் கீழே வைத்தவர்கள், வறுமை, பட்டினி! இந்த லட்சணத்தில் மகாமகத்திற்கு 260 கோடி ரூபாய் ஒதுக்கீடு எதற்கு? அது எப்படிச் செலவாகும் என்பது நாடறிந்தது தானே!
கேள்வி : செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 20 ஏழைத் தமிழ்த் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது காட்டுமிராண்டித்தனம் இல்லையா? இதன் பின்னணியில் உள்ள மாபியா கும்பல்கள் திரைமறைவில் யாரை இயக்குகின்றது? – பெ.செல்வம், அம்மாபாளையம்
பதில் : இதில் -_ மணல் மாஃபியா, கிரானைட், மாஃபியா கும்பலைவிட மிகுந்த செல்வாக்குள்ள கொள்ளை முதலாளித்துவ-மார்கள் உண்டே! இந்த வலையில் அவை எளிதில் சிக்காதே!
கேள்வி : இலவசம் வேண்டாம். நல்ல ரோடு போடுங்க என அமைச்சரை முற்றுகையிட்ட பெண்களைப் பற்றி?
– தி.காவிரிச்செல்வன், சேலம்
பதில் : இந்தத் தெளிவும், துணிவும் நாடு முழுவதும் வந்தால், நல்லாட்சிகள், தானே மலரும் என்பது உறுதி!