அவ என்ன சொல்றது… நான் சொல்றேன்

மே 01-15

இவ்விடம் அரசியல் பேசலாம்

அவ என்ன சொல்றது… நான் சொல்றேன்

சந்தானத்தின் சலூனுக்குள் “முத்து! முத்து!” என குரல் கொடுத்துக் கொண்டே நுழைந்தார் தோழர் மகேந்திரன்.

“முத்து நேற்றிலிருந்தே லீவு தோழர். ஊருக்குப் போயிருக்கார்” என்றார் தோழர் சந்தானம்.

“என்ன இது? முத்துவைப் பார்க்கறதே அபூர்வமா இருக்கே! முத்துவுக்கும் நம்மோட

அரசியல் ஞானத்தைக் கொஞ்சங்கொஞ்சமா ஏத்திவிடலாம்னு பார்த்தேன்!” சலித்தவாறே சொன்னார் தோழர் மகேந்திரன்.

“எங்கிட்டு ஏத்துறது! பிரதமர் அந்தப் பக்கம் டூர் கிளம்பினால், முத்து இந்தப் பக்கமா டூர் கிளம்புறார்! ரெண்டு பேரும் தங்கறதே இல்லை!”

“ஓ, பிரதமருக்கான அத்தனை தகுதியும் இருக்குதுன்னு சொல்றிங்களா தோழர்?”

“பின்ன, நம்ம பிரதமர்கிட்ட இப்போதைக்கு இருக்குற தகுதி இந்த டூர் அடிக்கிறது மட்டும்தான்! அவரு உண்மையிலேயே டீக்கடை தான் வச்சிருந்தாரா, அல்லது டிராவல்ஸ் கம்பெனி நடத்திட்டு இருந்தாரான்னே டவுட்டா இருக்கு!” எனக் கலாய்த்தார் சந்தானம்.

“எனக்கும்கூட அப்படித் தோணும்தான்… நாட்டுல ஏகப்பட்ட பிரச்சினை சூறாவளியா சுத்திக்கிட்டிருக்கு… இவரு சூறாவளி சுற்றுப்பயணத்துல இருக்காரு… அதுமட்டுமில்லாம போன ஆட்சியில போட்ட தொழில் ஒப்பந்தத்தையெல்லாம் கேன்சல் பண்ற மாதிரி பண்ணிட்டு, திரும்ப இவரு கையால கையெழுத்துப் போட்டுத் தொடங்குற கூத்து இருக்கே…!”

“ஆமா, நானும் கேள்விப்பட்டேன். இப்போ பிரான்ஸ் நாட்டுக்குப் போன மோடி,  அந்த நாட்டிலிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கறதா ஒப்பந்தம் போட்டிருக்கார். ஏற்கெனவே காங்கிரஸ் கவர்மென்ட் வேற மாதிரி போட்ட ஒப்பந்தம்தானாம் அது. அதை கேன்சல் பண்ணிட்டு நம்ம ரிலையன்ஸ் கம்பெனி அந்த விமானங்களோட பராமரிப்பைப் பார்த்துக்கற மாதிரி பண்ணியிருக்காராம்! ஆக, அதானிக்கு ஒன்னு, அம்பானிக்கு ஒன்னுன்னு ஊர் ஊரா சுத்தி, ஞானப்பழத்தை(!) வாங்கி, பங்கு பிரிச்சுக் கொடுக்குற வேலையைத்தான் நம்ம பிரதமர் பண்ணிக்கிட்டிருக்கார்!”

“பின்ன, பங்காளிகள் நல்லா இருந்தால்தான அவங்ககிட்ட பணத்தை வாங்கி விளம்பரம் பண்ணி ஆட்சியிலிருக்கும் இவரும் நல்லா இருக்க முடியும்! இதுல போன கவர்மெண்டோட போட்டி வேற!

“மாமியார் துரத்திவிட்ட பிச்சைக்காரனைத் திரும்பக் கூட்டிட்டு வந்து, மாமியார் என்ன சொல்றது, நான் மருமக சொல்றேன், சோறு இல்ல போ-ன்னு துரத்தின கதைன்னு சொல்லுங்க!”

“அதேதான்! இவரு வெளிநாட்டு டூர் அடிக்க வேண்டியதுதான்… உள்ளூரிலிருக்கும் காவிச்சாமியார்கள் உள்ளூர்ல கலகம் பண்ண வேண்டியதுதான்… மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, “இருக்கு… ஆனா இல்லை” மாதிரி கேஸ்தான்!”

“இந்த நிலையிலும், தாலி சென்டிமென்ட வச்சு அவங்க அடிக்கிற கலாச்சாரக் கூத்து இருக்கே… மாநில அரசே செயல்படாதமாதிரி இருந்துக்கிட்டு, அரசு அனுமதியோட நடக்குற நிகழ்ச்சியில வந்து கலாட்டா பண்றவங்களை வேடிக்கை பார்த்துக்கிட்டும், அவங்ககூட சேர்ந்து நிகழ்ச்சி நடத்துறவங்க மேலயே அடிதடி நடத்துறதும்….”

“இதுல நம்ம பத்திரிகைகள் பண்ற மோசடியப் பார்த்திங்களா? தாலியை அகற்றும் நிகழ்ச்சின்னு சொன்னால், என்னவோ செயின் திருடர்களைச் சொல்ற மாதிரி தாலியறுப்பு தாலியறுப்புன்னு செய்தி போடுறாங்க! வேண்டுமென்றே  மக்களோட மனோபாவத்தைத் திசைதிருப்புற வேலைதான் இது! இவங்க என்ன வலுக்கட்டாயமாவா தாலியை அகற்றுறாங்க? தாலி தேவையில்லை என்பதை அடையாளப்-படுத்துவதற்காக அந்த்க் கருத்துடைய பெண்கள் தாங்களே முன்வந்து தாலியை அகற்றி, விழிப்புணர்வைத் தூண்டுறாங்க… இதைப் பொறுக்க முடியாமல், சமூக விரோதக் கும்பல்களும், அவர்களைச் சேர்ந்த சில ஊடகங்களும் பண்ணின கூத்திருக்கே!”

“இன்னொன்னு கவனிச்சிங்களா தோழர்… தாலி புனிதம், புனிதம், புனிதமான தாலியைக் கழட்டுறானுங்களேன்னு கூப்பாடு போடுற இதே கூட்டம்தான், வாழை மரத்துல தாலி கட்டச்சொல்லுது! எங்க குடும்பம் நடத்தச்  கொல்லிடுவாங்களோன்னு, உடனே அந்த வாழை மரத்தை வெட்டிச் சாய்க்குது! கேட்டால் தோஷம் கழிக்கிறாங்களாம்!”

“அட, வாழை மரத்தை விடுங்க, கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம், நாய்க்கும் நாய்க்கும் கல்யாணம்னு பண்றானுங்க… புனிதமான தாலியை நாய்க்கு மாட்டி விடுறானுங்க…, கழுதைக்கு மாட்டிவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்குறானுங்க… அப்பல்லாம் இவங்களோட புனிதம் எங்க இருந்துச்சாம்?!”

“அதானே! கழுதைக்குத் தாலி கட்டுறவனுங்க, அப்படியே அதோட குடும்பம் நடத்தலாம்… ஆடி, தீபாவளிக்கு சீர் செய்யலாம்… பிரசவம் பார்க்கலாம்… பிறக்குற நாய்க்குட்டிக்கும், கழுதைக் குட்டிக்கும் காது குத்தி மொட்டை போடலாம்! இதையெல்லாம் பண்ண மாட்டாங்க! இவங்களுக்கு ஒரு நடிகை கழுத்துல மாட்டியிருக்குற தாலியில தான் கலாச்சாரமெல்லாம் இருக்கும்! நாய்க்கும் கழுதைக்கும் பூனைக்கும் கட்டுற தாலியில மட்டும் புனிதமும் இல்ல, கத்திரிக்காயும் இல்ல!”

“தாலி என்பது வெறும் கயிறுதான்னு நிரூபிக்கிறதுக்காவது இந்த “சும்மாக்காச்சி” கல்யாணமெல்லாம் இருக்கணும் தோழரே! இதுல ஒரு காமெடியான சம்பவம் ஒன்றைச் சொல்லியே ஆகணும்…

“சொல்லுங்க தோழர்”

“என்னோட நண்பர் ஒருத்தர் செல்லமா நிறைய நாய்க்குட்டி வளர்த்துட்டு வர்றார். ஒருமுறை, நாய்க்கும் நாய்க்கும் கல்யாணம் பண்றவங்க, அதுக்காக நண்பர் வளர்க்குற நாயை வாங்கிட்டுப் போயிருக்காங்க”

“ஓகோ… அப்புறம் என்னாச்சு?”

“வாங்கிட்டுப் போனவங்க, தாலி கட்டுற நிகழ்ச்சியெல்லாம் முடிச்சுட்டு, கட்டுன தாலியையும் கழட்டிட்டு, மொட்டையா கொண்டாந்து குடுத்திருக்காங்க…”
“ஆஹா!”

“நண்பர் கொஞ்சம் நம்மளை மாதிரி நக்கல்புடிச்ச ஆசாமி… பொண்ணு மாப்பிள்ளை இல்லாம எங்க வீட்டுப் பொண்ணை மட்டும் கூட்டிட்டு வந்திருக்கீங்களே… மாப்பிள்ளை எங்க? அதுவும் எங்க வீட்டுப் பொண்ணு கழுத்துல தாலி எங்க? தாலிக்கு எத்தனை பவுனு போட்டீங்க? அந்தத் தாலியை யாரு ஆட்டையைப் போட்டது?ன்னு கேட்டு வறுத்து எடுத்துட்டாராம்!”

“துண்டக் காணும் துணியைக் காணும்னு ஓடியிருப்பாங்களே!”

“அதோட விட்டால் பரவாயில்லையே… அவரோட நாயை வாங்கிட்டுப் போன ஆளுங்களை எப்பவாவது எதிர்ல பார்த்தால், கல்யாணம் பண்ணின அன்னைக்கே புருஷனைப் பறிகொடுத்துட்டு நிக்குது எங்க வீட்டு நாயி… அதுக்கு இன்னொரு மாப்பிள்ளை பாருங்க… அதைக் கட்டிக் கொடுத்தால்தான் எங்களுக்கு நிம்மதின்னு சொல்லவும் அந்த ஆளு ஊரையே காலி பண்ணிட்டுக் கௌம்பிட்டாராம்!”

“ஹஹஹ! பின்ன… இவனுங்க நினைச்சால் வருஷாவருஷம் மீனாட்சிக்கும் தாலி கட்டி கல்யாணம் பண்ணி வைப்பானுங்க.. மழை வரலைன்னா கழுதைக்கும் தாலி கட்டி விடுவானுங்க… இதுல இந்தத் தாலியை மட்டும் பெண்கள் சென்டிமெண்டா பொத்திப் பொத்தி வச்சுக் காப்பாத்தணுமாம்! இந்தத் தாலி சென்டிமெண்டுக்கு நம்ம ஊர் திரைப்படங்களுக்கும் பெரிய பங்கு இருக்கு! தூங்குற பொண்ணுக்குத் தாலி கட்டி-விட்டாலும், தூங்கி எழுந்திரிச்சதும், தாலி கட்டுனவன்தான் என்னோட புருஷன்னு சொல்லிட்டு அவன் பின்னாடியே போற காமெடியெல்லாம் நம்ம சினிமாவுலதான் பார்க்க முடியுது!”

“இந்தத் தாலி சென்டிமென்ட் உடையாமல் காப்பாத்துறதுல ஒரு வியாபாரமும் அடங்கியிருக்கு தோழர்… இந்த வருஷ அட்சய திருதியைக்கு 2500 கிலோ தங்கம் விற்பனையாகியிருக்காம்… இப்படி தங்கத்தின் மேல மக்களுக்கு சென்டிமென்ட் கலந்த ஆர்வத்தை ஏற்படுத்துறதுக்கு தாலி கட்டுறதுங்கற சடங்கு ரொம்ப அவசியப்படுது… அதை மட்டும் உடைச்சு எறிஞ்சாச்சுன்னா அணிகலன்மேல பெண்களுக்கு மட்டுமே இருக்குற மோகம் பெருமளவு குறைஞ்சிடும்… ஆக, நம்மளை அடிமைப்படுத்துற அம்புட்டு விஷயங்களிலும் ஒரு முதலாளித்துவத்தின் கரம் இருக்கத்தான் செய்யுது!”

“ம்ம்ம்ம் இதெல்லாம் என்னைக்கு மக்களுக்குப் புரிஞ்சி, என்னைக்குத் திருந்துறதோ…”

“ரொம்பச் சீக்கிரமே வரும் தோழர்… அதுக்குள்ள நம்ம முத்து சுற்றுப்பயணத்தை முடிச்சுட்டு வந்தால் தேவலை!” என தோழர் மகேந்திரன் சொல்லவும், சிரிப்பலையால் நிறைந்தது சலூன் கடை!

– கல்வெட்டான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *