மலம் அள்ளுவதைவிட மாண்டுபோவதே மேல்….

மே 01-15

திரைப்பார்வை

மலம் அள்ளுவதைவிட மாண்டுபோவதே மேல்….

இந்தியாவின் 62ஆவது தேசிய திரைப்பட விருது உள்பட உலகம் முழுவதும் 18 விருதுகளைப் பெற்ற கோர்ட் என்ற மராத்தி திரைப்படம், ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி  திரைக்கு வந்தது. கோர்ட் படத்தில் அப்படி என்ன இருக்கிறது?

ஜாதி – மத – வகுப்பு ரீதியிலான வல்லாதிக்கம் மனவேரில் அழுகி, மக்கி உரமாகிப்போன இந்தியாவில் சாமானிய மனிதனின் குரலுக்குச் செவிசாய்க்கும் கடைசிப் புகலிடமாக இருப்பவை நீதிமன்றங்கள். அப்படிப்பட்ட நீதிமன்றங்கள் ஜாதி, மத, அரசியல் அதிகார மய்யங்களின் கைப்பாவையாக இருப்பதையும், அங்குள்ள நீதிமான்கள்  மற்றும் வழக்குரைஞர்களின் கேடுகெட்ட மனப்போக்கையும், அழுகிப்போன  சட்டப் பிரிவுகளையும்  கடுமையாக விமர்சிக்கிறது, கோர்ட் என்ற மராத்தி திரைப்படம்.

இது, இந்த ஆண்டுக்கான சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம்  62ஆவது  திரைப்பட தேசிய விருதைப் பெறவிருக்கிறார், 28 வயது இளைஞர் இயக்குநர் சைதன்ய தம்ஹானே. இவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக்களம், தலித் அரசியல்.

மனிதக் கழிவை மனிதனே அள்ளும் ஜாதிரீதியிலான தொழில்முறை ஒழிய வேண்டும் என்ற கருப்பொருளை அடிநாதமாக வலியுறுத்தும் கோர்ட் திரைப்படத்திற்கு தேசிய விருது எப்படிச் சாத்தியமாகியது. நம்பவே முடியவில்லை. பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் கலைச்சேவை ஆற்றுவோர் மத்தியில் ஜாதி ஆதிக்க மனோநிலை வெளிப்படையாகவே கோலோச்சும் சூழலில், தலித் அரசியலை மய்யப்படுத்தி அட்டகத்தி ரஞ்சித் இயக்கிய  மெட்ராஸ் போன்ற படங்கள் முதற்கட்டப் பார்வையிலேயே விருதுக்கான தேர்வுக் கமிட்டியால் தூக்கியெறியப்பட்டது. ஆனால், அம்பேத்கர் பிறந்த (இன்று பா.ஜ.க.ஆளும்)  மகாராஷ்ரா மாநிலத்தில் உருவான கோர்ட் திரைப்படம் மாநில அளவில் எந்தத் தடையும் இல்லாமல் விருதுக்கான தகுதியை அடைந்திருக்கிறது.
ஏழை – எளிய மக்களின்  நலன் சார்ந்து இயங்கும் பைவ் ஸ்டார் ஆக்டிவிஸ்டுகளின் எண்ணங்களுக்கு ஆதரவாக நீதித் துறை இருக்கக் கூடாது என்று ஏப்ரல் 5ஆம் தேதி நடந்த தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். அவரின் அரசாங்க ஆளுகைக்கு உட்பட்ட தேசிய விருது தேர்வுக் கமிட்டி, தலித் ஆக்டிவிஸ்டுகளை ஒடுக்கும் நீதித் துறையை விமர்சிக்கும் திரைப்படத்திற்கு விருது வழங்கியிருக்கிறது. இதற்குப் பின்னணியில் பொதிந்துள்ள அரசியலை, மூளையைக் கசக்கிச் சிந்தித்துப் பார்த்தாலும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

எது எப்படியோ, சில கீழ்த்தரமான படங்களுக்குத் தேசிய விருது கிடைப்பதைக் கண்டு  மனம் நொந்துபோன நாம், கோர்ட் திரைப்படத்திற்குத் தேசிய விருது கொடுத்திருப்பதைப் பாராட்டலாம்; வரவேற்கலாம்.

அப்படி என்ன சொல்கிறது கோர்ட் திரைப்படம்?

அம்பேத்கர் பிறந்த மாநிலத்தில் மும்பை புறநகர் பகுதியில் வசிக்கும் தலித் கவிஞரும், எழுச்சிப் பாடகருமான நாராயண் காம்ளேதான் கதைநாயகன்… சேரிக் குழந்தைகளுக்குக் கற்பித்தல், அதிகார _- அரசியல் மய்யங்களால் வஞ்சிக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்ட மேடைகளில் எழுச்சிப் பாடல்களைப் பாடுதல், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடத் தூண்டும் புத்தகங்களை எழுதுதல் என கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்ற அம்பேத்கரின் கோட்பாட்டின்படி வாழ்பவர் கவிஞர் நாராயண் காம்ளே.  நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்று, பாடல் பாடிக் கொண்டிருக்கும் சூழலில் மேடையிலேயே  கைது செய்கிறது காவல்துறை.

குற்றம் என்ன?

சாக்கடைக் குழியில் தலித் இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்ததற்குக் காரணம் நாராயண் காம்ளே என்று காவல்துறை சொல்கிறது. சாக்கடைக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் அந்தத் தொழில் செய்வதைவிட சாக்கடைக் கால்வாய்களில் தங்களைத் தாங்களே மூச்சுத் திணறச் செய்து செத்துப்போவதே மேலானது என்று நாராயண் காம்ளே மேடையில் பாடிய எழுச்சிப் பாடல் அந்த தலித் இளைஞரைத் தற்கொலைக்குத் தூண்டியது என்பது போலீசாரின் குற்றச்சாட்டு. கைது செய்யப்பட்ட நாராயண் காம்ளேவை சிறையில் அடைக்காமல் வெளியேவிட்டால் எழுச்சிப் பாடல்களைப் பாடி இன்னும் ஏராளமானோரை சாகத் தூண்டுவார் என்பது நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் முன்வைக்கும் வாதம்.

விநோதமான குற்றச்சாட்டில் சிக்கிய தலித் கவிஞர் விடுதலையானாரா…

இல்லையா? என்பதுதான் கோர்ட் திரைப்படத்தின் கதை.

மும்பை, காட்கோபர் பகுதியில் உள்ள ரமாபாய் காலனியில் நிறுவப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதை எதிர்த்து 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி போராட்டம் நடத்திய மக்களில் 10 பேரை மும்பை காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திக் கொன்றது. இந்தத் துயரை நெஞ்சில் தாங்கி வாழ முடியாமல் தலித் செயல்பாட்டாளரும், மராட்டிய இடதுசாரி கவிஞருமான விலாஸ் கோக்ரே தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார். இந்த நிகழ்வை மய்யப்படுத்தி 2011ஆம் ஆண்டு ஜெய்பீம் காம்ரேட் என்ற ஆவணப்படத்தை ஆனந்த் பட்வர்த்தன் இயக்கினார். அந்த ஆவணப்படத்தைப் பார்த்ததும் ஏற்பட்ட மன உந்துதலால் கோர்ட் படத்தின் கதைக் களனைத் தேர்வு செய்ததாகக் கூறியிருக்கிறார் இயக்குநர் சைதன்ய தம்ஹானே.

ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்காகப் போராடும் தலித் கவிஞர், அவர் தரப்பு வழக்குரைஞர், அரசு தரப்பு வழக்குரைஞர், நீதிபதி, துப்புரவுத் தொழிலாளியின் மனைவி, காவல்துறை ஆய்வாளர் என  ஆறு முக்கிய கதைப் பாத்திரங்களை மய்யமிட்டு கோர்ட் படத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவரின் வழக்குரைஞர், நீதிபதி, அரசு வழக்குரைஞர் ஆகிய மூவரும் தங்களின் கடமையை எவ்வாறு செய்கிறார்கள் என்பதை நீதி தேவதையின் செவுளில் அறையும்படி மிக நேர்த்தியாகவும், துணிச்சலாகவும் பதிவு செய்திருக்கிறார்  இயக்குநர் சைதன்ய தம்ஹானே.

முக்கியக் கதாபாத்திரங்களின் குணாதிசயங்-களை முன்வைத்தே கதை சொல்லப்-பட்டிருக்கிறது. அதுவே கோர்ட் படத்திற்கு வலிமை.

ஏழை மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த 65 வயது முதியவர் நாராயண் காம்ளேவைக் காப்பாற்றும் பொறுப்புள்ள அவரின் வழக்குரைஞர் வினய் வோரா உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவர். சொந்த காரில் பயணிக்கும் அளவுக்கு வசதியானவர். மாலை நேரமானால் மதுவிடுதிக்கு நட்புக்குழாமுடன் சென்று ஜாஸ் இசை கேட்டு, டிஸ்கொத்தே நடனமாடி மது அருந்திப் பொழுதைக் கழிப்பவர்.

அரசு வழக்குரைஞர் நிதான், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். பொது போக்குவரத்து வாகனத்தில்  பயணிக்கும்போது பக்கத்தில் அமர்ந்திருப்பவரின் சேலையின் அற்புதத்தை வர்ணிப்பவர்.  குற்றம் சாட்டப்பட்டவரின் வாழ்க்கைச் சூழல் குறித்த பின்னணியை அறியத் துளியும் விருப்பம் இல்லாதவர்.

ஏழைகளுக்காகவும், சமூகத்திற்காகவும் பாடுபடுகிறவர்களைக் கைது செய்தால், உடனே 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்துவிடலாம், எதற்கு விசாரணை என்று வெறுப்பை உமிழ்பவர். குடும்ப அங்கத்தினரின் நலனைப் பேணும் பொறுப்புள்ள குடும்ப ஸ்திரி.   பொதுஅரங்கத்திற்குச் சென்று  நாடகம் பார்த்துப் பொழுதைக் கழிப்பவர் .

நாராயண் காம்ளே மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதி சதவர்த், பெண்கள் இந்த மாதிரி உடையைத்தான் அணிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். போகும் பாதையில், தான் விபத்தில் சிக்காமல் இருக்க கடவுளைத்  துணைக்கு அழைப்பவர். உயர்வர்க்க சுற்றத்தாருடன் பொழுதைக் கழித்து மகிழ்பவர். மாதத்திற்கு 8 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் அய்.டி இளைஞர்கள் பற்றிய செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் படித்து சிலாகித்து ஆதங்கப்படும் அந்த நீதிபதி, அரசியல் அதிகாரத்தால் வஞ்சிக்கப்பட்ட ஏழை  எளியவர்கள் பற்றிக் கொஞ்சமும் தெரிந்து கொள்ள முற்படாதவர்.

இப்படி பன்முக குணங்களை ஆர்ப்பாட்ட-மில்லாத, எளிமையான காட்சியமைப்புகளின் மூலம் இயக்குநர் சைதன்ய தம்ஹானே மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.

கோடை விடுமுறைக் காலத்தைக் கழிக்க பிக்னிக் போன நீதிபதி உட்கார்ந்தபடியே உறங்கிக் கொண்டிருக்க, சிறுவர்கள் பெருங்குரலெடுத்துச் சிரிக்கிறார்கள். அந்தச் சிறுவர்களில் ஒருவனை ஓங்கி அறைந்து அழச் செய்துவிட்டு, மீண்டும் உறங்குகிறார் நீதிபதி. இந்த இறுதிக் காட்சியில், சிரிப்பும் அழுகையும், விரவிக்கிடக்கும் இந்த நாட்டில் நீதித் துறை எப்படி உறங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சைதன்ய திம்ஹானே.

மும்பை புறநகர் நீதிமன்றச் செயல்பாடுகள், ரமாபாய் காலனி மக்களின் வாழ்க்கை, இடதுசாரி கவிஞர் விலாஸ் கோக்ரேவின் வாழ்க்கை ஆகியவற்றை மக்களிடமும் சமூக செயற்பாட்டாளர்களிடமும் பேட்டிகளாகப் பதிவு செய்து, அது தொடர்பாக ஆய்வை ஓராண்டு செய்து, ஆறு மாதங்கள் புதுமுக நடிகர்களைத் தேடித் தேர்வு செய்து, எட்டு மாதங்கள் கதைக்குத் தேவையான இடங்களைத் தேர்வு செய்து கோர்ட் படத்தை இயக்குநர் சைதன்ய தம்ஹானே உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் கதையைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்வதிலும், திரைக்கதையைச் செழுமைப்படுத்தி வடிவமைப்பதிலும் உறுதுணையாக இருந்த சைதன்ய தம்ஹானேவின் நண்பர் விவேக் காம்பேர், முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்றான எதிர்த் தரப்பு வழக்குரைஞராக நடித்திருப்பதுடன், படத்தை அவரே முதலீடு செய்து தயாரித்திருக்கிறார்.

சேரிப் பகுதி, நீதிமன்றம், காவல்நிலையம், அரசுப் பேருந்து, நாடக தியேட்டர், அரசு மற்றும் எதிர்த் தரப்பு வழக்குரைஞர்களின் வீடு, துப்புரவுத் தொழிலாளியின் வீடு ஆகியவற்றை எந்த அலங்காரமும் இல்லாமல் அவற்றின் இயல்புடனேயே ஒளிப்பதிவாளர் மிர்னால் தேசாய் காட்சிப்படுத்தியுள்ளார்.

எடிட்டிங் என்ற பெயரில் காய்கறிகளைப் போல காட்சிகளைத் துண்டுதுண்டாக நறுக்கி, மிளகாய்ப் பொடியை அதிகமாகத் தூவி பார்வையாளர்களின் கண்களை வலிக்க வைக்கும் அளவுக்கு கோர்ட் படத்தின் எடிட்டர் திகாவ் தேசாய் தனது திறமையைக் காட்டாமல் காட்சிகளை அதன் போக்கிலேயே விட்டு, அழகாக படத் தொகுப்பைச் செய்திருக்கிறார்.

நாராயண் காம்ளே மேடையில் பாடும்  அரே ராண ராண ராண சலா… எனத் தொடங்கும் ஒரு பாடல் மட்டுமே கோர்ட் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு யார் எதிரி என்பதை அடையாளம் தெரிந்துகொள்ள வற்புறுத்தும் கருத்துகளைக் கொண்ட அந்தப் பாடல் நாட்டுப்புற மெட்டில் இருப்பதால் நெஞ்சைத் தொடுகிறது. அது, கேட்போரின் மனதை வீறுகொள்ளச் செய்யும் வலிமைமிக்கதாக இருக்கிறது. பின்னணி இசை என்ற பெயரில் காதுகளில் ஓங்கி அறையாமல் படத்தைக் கொடுத்தற்காக இயக்குநர் சைதன்ய தம்ஹானேவையும், இசை அமைப்பாளர் சம்பஜி பகத், இசைக் கோர்வையாளர்கள் அம்ரித் பிரீதம், அனிதா குஷ்வாஹா ஆகியோரை மனமுவந்து பாராட்டலாம்.

நடிகர்கள் அனைவரும் கொஞ்சமும் நடிக்காமல் யதார்த்த மனிதர்களாக காட்சிகளோடு பொருந்திப் போகிறார்கள்.  குறிப்பாக, தலித் கவிஞர் பாத்திரத்தை ஏற்றிருக்கும் வீர சதிதர், நடித்த மாதிரித் தெரியவே இல்லை. துப்புரவுத் தொழிலாளியின் மனைவியாக நடித்திருக்கும் உஷா பேன், நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களின் கேள்வி-களுக்குப் பதிலளிக்கும்போதும், பணம் தருவதாக காம்ளேவின் வழக்குரைஞர் கூறும்போது சட்டென மறித்து பணம் வேண்டாம், வேலை வாங்கிக் கொடுங்கள் என சொல்லும்போதும் எந்தச் சூழலிலும் கலங்காத தைரியமான மனம் கொண்ட தாழ்த்தப்பட்ட பெண்களின் இயல்பை அப்பட்டமாக கண்முன் நிறுத்துகிறார். மும்பை புறநகரில் சாக்கடை அள்ளும் பணியின்போது உண்மையாகவே உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளி  ஒருவரின் மனைவியையே அந்தக் கதாபாத்திரத்தில் இயக்குநர் சைதன்யா தம்ஹானே  நடிக்க வைத்திருக்கிறார் என்பது தகவல்.

நாராயண் காம்ளேவின் வழக்குரைஞராக நடித்திருக்கும் விவேக் காம்பேர், அரசு தரப்பு வழக்குரைஞராக நடித்திருக்கும் கீதாஞ்சலி குல்கர்னி,  நீதிபதி கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் பிரதீப் ஜோசி,  நாராயண் காம்ளேவின் கலைக்குழுவில் இருக்கும் சுபோத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிரிஷ் பவார் உள்ளிட்ட அனைவருமே கச்சிதமாகப் பொருந்துகிறார்கள். இவர்கள் தொழில்முறை நடிகர்கள் இல்லை. சினிமாவுக்கு முற்றிலும் புதியவர்கள்.

28 வயது இளைஞர் சைதன்ய திம்ஹானே மிகுந்த துணிச்சலோடு, தலித் அரசியல் களத்தை சினிமாவாக்கி, கலைச் சேவை-யாளருக்குப் பாடம் கற்பித்திருக்கிறார். இதைவிட விருது பெற வேறென்ன அளவீடு தேவை. இதனாலேயே உலகம் முழுவதும் 18 விருதுகளை வென்றிருக்கிறது கோர்ட் திரைப்படம். சைதன்யா திம்ஹானே உள்ளிட்ட கோர்ட் திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

– முருகசிவக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *