அய்யாவின் அடிச்சுவட்டில்…. 129 ஆம் தொடர்

மே 01-15

தகுதி மதிப்பெண்ணைக் கூட்டுவதா?

தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான மதிப்பெண் வரம்பு 60 சதவிகிதம் என்று இருந்ததை திடீரென்று 70 சதவிகிதம் என்று உயர்த்தி பிற்படுத்தப்பட்டோருக்கு மிகவும் பேரிடி போன்றதொரு அறிவிப்பு வெளியிட்டது.

நான் அடுத்த நாளே இதனைக் கண்டித்து விளக்கமாகவும் விரிவாகவும் விடுதலையில் (14.06.1978) என்ஜினியரிங் மார்க் கூட்டுவது கூடாது! என்று தலைப்பிட்டு அறிக்கை எழுதியிருந்தேன்.

அந்த அறிக்கையில், அதிக மார்க் என்று கூறுவது அக்கிரகாரத்தின் தகுதி, திறமைப் பாட்டிற்கு அப்பட்டமாக இரவல் குரல் கொடுப்பது போன்றதொரு அக்கிரமமான செயலாகும் என்றும், படிக்க விரும்பும் எல்லோருக்கும் அதிகபட்சம் படிக்க வாய்ப்புக் கொடுப்பது எப்படி என்பதுதான் ஒரு நல்ல மக்கள் அரசாங்கத்தின் லட்சியமாக இருக்க வேண்டுமே தவிர, எப்படிச் செய்தால் எந்த வரம்பு வைத்தால் அதிகபட்சம் பேர்களை வடிகட்டலாம்; தடுக்கலாம் என்பதாக இருக்கக்கூடாது.

50 சதவிகிதம் என்றால் முதல் வகுப்பு (I Class) என்று பொருள்; அப்படி முதல் வகுப்பு மார்க் வாங்கிய மாணவனுக்குக்கூட, மனுபோடத் தகுதியில்லை என்பது மிகவும் கேலிக்குரிய ஒன்று; அல்லது வெட்கமும் வேதனையும் அடையக்கூடிய கல்விக் கொள்கையாகும்.

மனம் ஒடிந்த ஒரு மாணவரின் கடிதம் ஒன்றையும் இதே பக்கத்தில் வெளியிட்டுள்-ளோம். இன்றைய கல்வி அமைச்சர் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். அவரது காலத்தில் பிற்படுத்தப்பட்டவர்-களுக்குப் பெருவாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை நாசமாக்கும் வண்ணம் இப்படி திடீர் திடீர் என்று மார்க்குகளை உயர்த்துவது என்றால் எதிர்பார்த்ததற்கு இது நேர் எதிர் விளைவையல்லவா உண்டாக்குகிறது!

அதுபோலவே பாலிடெக்னிக்குகளில் சேரும் மாணவர்கள் மாணவிகளுக்கும் மார்க், மார்க் என்று கூறி பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கிடும் கோட்டாவினைப் பூர்த்தி செய்யும்போதுகூட 100க்கு 75 சதவிகித மார்க்குள்ளவர்களே தேர்வு செய்யப்படுகிறார் என்ற செய்தியும்கூட மிகவும் சங்கடமான செய்தியாகும்.

எதற்காக நேரிடைப் போட்டி

இப்படி மார்க்குகளை அரசினர் தம்மிஷ்டம்-போல் ஒதுக்கிச் சரி செய்வதைவிட, அதிக மார்க் வாங்கியவர்களுக்கு மேல் மார்க்கிலிருந்து கீழ்வரை போட்டுவிடலாம். இதற்கு செலக்ஷன் கமிட்டியே தேவை இல்லை. சில குமாஸ்தாக்கள், அல்லது கம்ப்யூட்டர் இயந்திரங்களே அந்த வேலைகளைச் செய்திடக் கூடுமே -_ சமூகநீதி என்னவாகும்?

தேர்வுக் கமிட்டியின் நேரிடைப் போட்டி வாய்ப்பு வைப்பது எதற்காக? கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

வெறும் மார்க் அடிப்படை மட்டுமே கூடாது; பொது அறிவு, உடற்கட்டு இவை எல்லாவற்றிற்கும் மேலாக அம்மாணவனின் குடும்பச் சூழ்நிலை (அவன் பியூன் மகனா? முதல் தலைமுறையில் படித்தவரா? என்றெல்லாம் ஆய்வது மிகவும் முக்கியம்) என்பதற்காகத்-தானே!

இதைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாது, அதிக மார்க் என்று பேசுவது மிகப்பெரிய சமுதாயக் கொடுமையை மக்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்வதாகத்தான் பொருள்!

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களில் பலர் இப்போதெல்லாம் ஏராளமான மார்க் வாங்கியவர்கள் உள்ளனரே என்ற ஒரே ஒரு வாதத்தைத்தான் நமது அதிகாரிகள் சிலர் முதலமைச்சருக்கோ, அல்லது அமைச்சர்களுக்கோ எடுத்துக்கூறி, அவர்களை இப்படி மார்க்குகளை உயர்த்துவதற்கு ஒப்புக்கொள்ளச் செய்திருக்கக் கூடும்.

பிற்படுத்தப்பட்டவர்களில் சிலர் இப்போது நன்றாகப் படிக்கிறார்கள் என்பது ஓரளவுக்கு உண்மை என்றாலும் அவர்கள் விதிவிலக்கு (Exemption)  ஆவார்கள்.

சமூக நீதிக் கண்ணோட்டம்

பல்லாயிரக்கணக்கான ஆண்டு அடிமைத்தனத்தி-லிருந்தும் தற்குறித்தனத்தி-லிருந்தும் வெளியே வந்து முதல் தலைமுறையாக, இரண்டாவது தலைமுறையாக கிராமாந்தரங்களி–லிருந்து படிக்கும் மாணவர்கள் ஏழ்மையும், கிராமியச் சூழ்நிலையும், தற்குறிப் பெற்றோர்களும் உள்ள மாணவர்கள் 60 மார்க் வாங்குவது என்பது பரம்பரை பரம்பரையாகப் படித்த குடும்பத்தினைச் சார்ந்த மாணவன் வாங்கும் 90 சதவிகித மார்க்கினைவிட சிறப்பானதல்லவா? மேலான மதிப்புள்ள-தல்லவா?

இதைப் பார்ப்பதுதானே சமூக நீதிக் கண்ணோட்டம்?

அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமையில்கூட “Socially and educationally backward classes” (சமூக அந்தஸ்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட மக்கள்)  என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது!

சமூக அந்தஸ்து என்பதில் என்ன முக்கியத்துவம்? கல்வியில் பரம்பரை பரம்பரையாகப் படித்த குடும்பமா என்று பார்க்கப்பட வேண்டும் என்பதுதான் சமூகநீதிக் கண்ணோட்டத்தில் முக்கியம்.

அய்யா வழி, அண்ணா வழி என்று கூறிக்கொண்டே மார்க்குகளை மனம்போன போக்கில் உயர்த்துவது என்பது அசல் ஆச்சாரியார் வழியாகும்.

தந்தை பெரியார் அவர்களும் பேரறிஞர் அண்ணா அவர்களும், மார்க்கினை அடிப்படையாகக் கொண்டு பாடும் தகுதி, திறமை ஒப்பாரியைக் கண்டித்துப் பேசியதும், எழுதியதும் மலைபோல உள்ளன.

இதைத் தமிழக அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. 1967இல் அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தவுடன் 50 சதவிகிதம் என்று இருந்த எம்.பி.பி.எஸ். மாணவர் தேர்வுக்கு மனுச் செய்யும் தகுதி மார்க்கை 55ஆக உயர்த்தி மனுக்களும் அச்சாகிவிட்ட நிலையில், விடுதலையில், நாம் எழுதிய தலையங்கம் கண்டு உடனே தனது ஆட்சியின் முடிவு தவறானது என்று அண்ணா அவர்கள் கண்டு, அவ்வளவு அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் வீணானாலும் பரவாயில்லை; பழையபடியே மார்க்கு தகுதி இருக்கட்டும் என்றார்.

பட்டணத்தில் லயோலா, கிறிஸ்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவன் வாங்கும் 80சதவிகிதம், தர்மபுரி, ராசிபுரம், ஆத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பூண்டி கல்லூரிகளில் படிப்போர் வாங்கும் 60 சதவிகிதத்தையும்விட உயர்ந்ததல்ல என்பதை, சமூகநீதிக் கண்ணோட்டத்தில், இப்பிரச்சினையை அனுதாபத்துடன், மக்கள் பற்றுடன் அணுகுகின்றவர்களால் மட்டுமே பார்க்க முடியும்.

மேலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 என்றாலும், பட்டியலும் பெருகிவிட்டதால் அதிகப்படுத்தப்பட்ட இடங்கள் முன்புபோல மிக மிகப் பிற்படுத்தப்பட்டவர்களான வன்னியர், வலையர், ஜங்கம பண்டாரம், குறும்பர், சலவையாளர், முடிதிருத்துவோர் (இன்னும் இதுபோல் எவ்வளவோ உண்டு; உவமைக்கு இவை சில.) இவர்களில் எவரும் அதிகமாக இடங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டதையும் அரசு மனதிற்கொண்டு அந்தக் கோணத்தில் இதனை ஆராய வேண்டும்.

எனவே, பழையபடி 60 சதவிகிதம் என்றே மார்க்கு தகுதியை வைப்பதுதான் பொருத்தம்.

அப்படி வைத்தால்தான் இதுவரை படிக்க வாய்ப்பற்றவர்களும் மனு போட முடியும்.

எடுப்பிலேயே கதவடைப்பா?

எடுத்த எடுப்பிலேயே கதவைச் சாத்தி விட்டால் பிறகு அவர்களில் எவரும் என்ஜினியரிங் படிப்பையே நினைக்க முடியாது!

மற்றொரு சட்டப் பிரச்சினையையும் அரசு கவனிக்க வேண்டும்.

சென்ற ஆண்டு 60 சதவிகிதம் என்று வைத்துவிட்டு இவ்வாண்டு பி.யு.சி. பரிட்சை எழுதும்போது 60 சதவிகிதத்தை எதிர்பார்த்து எழுதிய மாணவருக்கு திடீர் என்று 70 சதவிகிதம் இருந்தால்தான் மனு போடலாம் என்று கூறுவது கோர்ட்டுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் செல்ல வாய்ப்பளிப்பதாகும்.

இதை ஏதோ மிரட்டல் அல்லது ஒரு பூச்சாண்டியாக அரசு எடுத்துக் கொள்ளாமல், சிக்கல்கள் எவ்வளவு வரலாம் என்பதைச் சுட்டிக்காட்டவே நாம் எழுதுவதாக நல்ல உணர்வில், எடுத்துக்கொண்டு அரசு தனது திட்டத்தை ஆழ்ந்த மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கல்வித்துறையில் நாம் இதற்குமுன்பு சுட்டிக்காட்டிய, மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு வேண்டாம் என்பது, விவசாயக் கல்லூரி இடக்குறைப்பு ரத்து போன்ற முடிவுகளைப் பாராட்டத்தக்க வகையில் செய்துள்ள முதல்வரும், அமைச்சர் பெருமக்களும் இப்பிரச்சினையிலும் மறுபரிசீலனை செய்து பழைய 60 சதவிகித மார்க்கினையே வைப்பது அவசரம்! அவசியம்! அவசியம்!!

இல்லையென்றால் இது அய்யாவை, அண்ணாவைப் புறக்கணித்த கட்சியாகத்தான் மக்கள் மத்தியில் இருக்கும் என்பதை மெத்த பணிவன்புடன் 4 கோடி தமிழர்களின் கல்விக்கண் பெறும் அக்கறையுடன் அயராது ஈடுபடுவோர் என்ற உரிமையுடன் நமது அரசுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். விரைந்து மறு பரிசீலனை செய்க! என்று குறிப்பிட்டிருந்தோம். இதனைக் குறித்து ஆசிரியருக்குக் கடிதம்  ஒன்றும் வந்தது. அதனையும் அன்றே இரண்டாம் பக்கத்தில் முதலமைச்சர் பார்வைக்கு என்று  விடுதலையில் வெளியிட்டிருந்தோம் அந்தக் கடிதத்தில்.

* * *
ஆசிரியருக்குக் கடிதம்
அய்யா,

நான் கடந்த 1977 மார்ச்சில் நடைபெற்ற புகுமுக வகுப்புத் தேர்வில் முதல் வகுப்பில் தேறியுள்ளேன். இந்த ஆண்டு என்ஜினியரிங் கல்லூரிக்கு மனுப் போடலாம் என்று எண்ணியிருக்கின்றேன். கணிதத்தில் 190/200, பௌதீகம் 109/200, வேதியியல் 125/200 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். இவ்வாண்டு அரசு, பௌதீகம், வேதியியலில் அறுபது விழுக்காடுகள் பெற்று இருக்க வேண்டும் என்று அறிவித்து உள்ளது. சென்ற ஆண்டு அய்ம்பது விழுக்காடுகள் தேவை என்று அறிவித்து இருந்தது. புதிய தகவல்படி எனக்கு பௌதீகம், வேதியியலில் 58.5 விழுக்காடுகள் உள்ளதால் 1.5 விழுக்காடுகள் குறைகின்றன. என்னைப்-போல் ஏராளமானவர்கள் குறிப்பாகப் பிற்படுத்தப்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய மாணாக்கர்-களுக்கு இது ஒரு பேரிடியாக உள்ளது.

தாங்கள் இச்சமுதாயத்திற்காக ஓயாது பாடுபட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனவே, பார்ப்பனீயத்தை வளர வழி வகுக்கும் இந்த அரசின் தகவலை மறுபரிசீலனை செய்து சென்ற ஆண்டைப் போலவே மதிப்பெண் அளவை மாற்ற தீவிர முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டுமாய் மிகவும் பணிவன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
இங்ஙனம்,

த.செங்குட்டுவன்,
42, திரௌபதி அம்மன் கோவில் தெரு,
கீழ்ப்பெரும்பாக்கம், விழுப்புரம்.

* * *

27.06.1978 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஏ.எஸ்.கே. அவர்கள் மறைவு குறித்து விடுதலையின் முதல் பக்கத்தில் கட்டம் கட்டி அவருக்கும் பெரியாருக்கும் உள்ள தொடர்பைக் குறித்து முக்கியச் செய்தி இரங்கல் செய்தியாக வெளிவந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், தந்தை பெரியார் அவர்களிடம் மிகுந்த பற்றுக் கொண்டவரும், பிரபல தொழிற்சங்கத் தலைவருமான தோழர் ஏ.எஸ்.கே. அவர்கள் நேற்று இரவு மூன்று மணிக்கு போர்ட் டிரஸ்ட் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். பொதுவுடைமை இயக்கத்தில் தீவிரமானவர்  என்றாலும் பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடையே பரவச் செய்ய வேண்டிய பணியைத் தீவிரப்படுத்திட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர் அவர்.

பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா. என்ற நூலை தந்தை பெரியார் பற்றி எழுதி வெளியிட்டார். தங்கம்மா என்ற நாவலை எழுதி, அதை தந்தை பெரியாருக்கு அர்ப்பணித்தார்.

தோழர் ஏ.எஸ்.கே. திருமணம் செய்து கொள்ளாதவர். ஒரு குடும்பஸ்தன் குடும்பத்துக்காகச் செலவிடும் தனது சக்தியை ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்தினால் நல்ல முறையில் நடைபெறும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் என்று தான் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை அவர் விளக்கியுள்ளார். 1937ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்தது முதல், அய்யாவிடம் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொள்ளத் தொடங்கினார்.

* * *

தந்தை பெரியார் காலத்திலிருந்து கோடையில் ஈரோட்டில் திராவிட மாணவர் பயிற்சி முகாமை அவர்களே வகுப்பு எடுத்து நடத்துவார்கள். எங்களைப் போன்றவர்கள் பலரும் அதனால் பயன் அடைந்துள்ளோம்.

குற்றாலத்தில் 25.6.1978 முதல் 01.07.1978 அன்றுவரை பகுத்தறிவு இயக்க _ பகுத்தறிவுப் பிரச்சார பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. குற்றாலம் பயிற்சி முகாம் குறித்து 04.07.1978 அன்று விடுதலையில் இரண்டாம் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டேன். அதில் இரண்டு இடங்களில், இரண்டு பயிற்சி முகாம்கள் நடைபெற்றுள்ளன, இதற்கு முன்பெல்லாம் ஆண்டுக்கொரு முறைதான் கோடையில் மாணவர் பிரச்சாரப் பயிற்சி முகாம் நடைபெறுவது வழக்கம்.

அண்மைக்காலத்தில் நமது இயக்கக் கொள்கைகள்பால் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் _ மாணவர்கள் ஈர்க்கப்படும் ஒரு புதுத் திருப்பத்தை நாடு முழுவதிலும் நம்மால் காண முடிகிறது. புதுப்புது இளைஞர்கள் புதுமிடுக்குடன் உழைக்கப் புறப்படும் தோழர்களை, போகும் இடங்களில் எல்லாம் சந்திப்பது நாம் புதுத்தெம்புடன் பணியாற்ற உதவுகிறது.

இயக்கத்தில் நீண்ட நாள் தோழர்களாக _காவலர்களாக இருக்கும் நமது முதுபெரும் பெரியோர்களும் தோழர்களும்தான் இந்தத் திருப்பத்தைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகின்றனர். நம்மிடம் நேரிலும் தெரிவித்தனர். காரணம், எங்கே தங்கள் தலைமுறையோடு இது தொடராமல் நின்று விடுமோ என்ற அச்சம் இதுநாள்வரை அவர்களை உலுக்கிற்று; இன்றோ அய்யாவின் கொள்கைகளும் லட்சியங்களும் ஆயிரங்-காலத்துப் பயிர்கள். அந்தப் பண்ணையில், உழைத்திட ஆயிரமாயிரம் இளைஞர்கள் புதுவரவுகளாக வந்துவிட்டனர் என்று புது நம்பிக்கையுடன் இன்று அவர்களும் இயக்க நடவடிக்கையில் துடிப்புடன் செயலாற்றுகின்ற காட்சியின் மாட்சி நம்மை நெக்குருகச் செய்கிறது என்று குறிப்பிட்டேன்.

இந்தப் பயிற்சி முகாமில் 26.6.1978 அன்று கடவுள் என்ற தலைப்பில் ஆற்றிய உரையில், கடவுள் மறுப்பு ஏன்? என சிலர் கேட்கிறார்கள், நீங்கள் கூறுவதிலே மீதம் எல்லாம் சரிதான். இந்தக் கடவுளர் கொள்கை அவசியமா? இதை விட்டுவிடலாமே என்று கேட்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

நம்மிலே சிலருக்குக் கூட அப்படி ஒரு சந்தேகம் தோன்றலாம். இது அவசியமா? கடவுள் மறுப்பு ஏன்? பகுத்தறிவு இயக்கத்தின் அடிப்படையே மூடநம்பிக்கைகளை அடியோடு அழித்தொழிப்பதாகத்தான் இருக்க முடியும். இந்த மூடநம்பிக்கைகளின் உற்பத்தி ஸ்தானம் எது? கடவுள் கொள்கைதானே!

அறிவு வளர வளர இதுபோன்ற நம்பிக்கைகள் அழிவதுதானே இயல்பு! என்று பல்வேறு சம்பவங்களை எடுத்துக் கூறினேன். 28.6.1978இல் பிற்பகல் நிகழ்ச்சியின் முதற்பாட வேளையாக பேராசிரியர் இறையனார் இனநலத்தின் பிற்பகுதியை நடத்தி முடித்தார்.

அடுத்த பாடவேளையில் உணவுக்குப்பின் பேய், பிசாசு, பித்தலாட்டம் எனும் தலைப்பில் பேராசிரியர் குமாரசாமி அவர்கள் நிறைய எடுத்துக்காட்டுகளுடன் சிறந்த தெளிவுரை ஆற்றினார். வாழ்க்கையில் சோதிடத்தின் தாக்கம் என்ற பொருளை தஞ்சைத் தோழர் இராமலிங்கம் அவர்கள் எடுத்து விளக்கினார்.

கடைசியாக, 29.06.1978 அன்று கழக வரலாற்றின் இறுதிப் பகுதியை நகைச்சுவை ததும்ப எடுத்துரைத்தேன்.

மேலும், புலவர் ந.இராமநாதன் அவர்கள், புரட்சிக்கவிஞர் என்னும் பொருளில் இனநலம், பொதுவுடைமை, பகுத்தறிவு ஆகிய துறைகள் அடங்கிய நயமுள்ள பாடல்களைச் சுவைபட எடுத்துரைத்தார்.

30.06.1978 காலை முதல் பாடவேளையாக பேராசிரியர் இறையனார் அவர்கள் வகுப்புரிமை என்னும் தலைப்பில் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.

பயிற்சி முகாமின் இறுதி நிகழ்ச்சியாக பயிற்சி பெற்ற மாணவர், மாணவியர், மகளிர் மற்றும் கழகத் தோழர்கள் கொடியுடன் கொள்கை ஒலிமுழக்கங்களுடன் பாசறையில் பயிற்சி பெற்ற படைவீரர்கள் போல் அணிவகுத்து அருவிக்குச் செல்லும் வழியும் குற்றாலநாதனின் கோவில் நுழைவு வாயிலும் அமைந்த இடத்தில் கழகக் கொடியுடன் கடவுள் இல்லை, அய்யா வாழ்க!, அம்மா வாழ்க! என்ற இடிமுழக்கத்தோடு நான் கொடி ஏற்ற, பயிற்சி முகாம் நிறைவடைந்தது.

கூட்டத்தில் திராவிடர் மாணவர் பிரச்சாரப் பயிற்சி முகாம் தோழர் மோகனசுந்தரம், பொன்.துரைசாமி, ஓவியர் நெல்லை மாவட்ட மகளிர் கழக அமைப்பாளர் திருமதி ஜெயகோபால் அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கதிரவன் உள்பட பலரும் கலந்துகொண்டு பயிற்சி முகாமிற்குப் பெருமை சேர்த்தனர்.

இன்றும் பல்வேறு சிறப்பான பேச்சாளர்கள் இத்தகைய பயிற்சிகளால் பக்குவப்படுத்தியவர்-களாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அய்யா மறைந்த பின்பு குற்றாலம் பயிற்சி முகாம் அன்னையார் தலைவராக ஆனநிலையில் தொடங்கி நடைபெற்று வந்தது.

அன்னையார் மறைந்த பிறகு தொடர்ந்த இந்தப் பயிற்சி முகாம் இளைஞர்களை ஈர்த்துப் பயிற்சி தரும் அரும் வாய்ப்பு, தொய்வின்றிப் பணிகள் தொடருகின்றன என்பதை நிரூபித்தது!

நினைவுகள் நீளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *