கும்பிடுறேன் சாமி
ஏய்.. புள்ளைய சீக்கிரம் கிளப்பி விடடி.. நேரம் ஆயிட்டு.. ராவுத்தர் கடையில முட்டாயி, சீனி சர்க்கரை எல்லாம் வாங்கிட்டுப் போகனும்.. என்று அவசரப்படுத்தினான் ஓடையன்.
இந்தாளு ஒரு கூறுகெட்டது.. கடைசி நேரத்துலதான் கெடந்து பறக்கும், புள்ள மொத மொதலா பள்ளிக்கொடம் போவப்போவுது.. கொஞ்சம் நல்லபடியா அனுப்ப வேணாம்.. நம்ம பொளப்புதான் நாயிப் பொளப்பவிட கேவலமாப் போச்சு. கண்ணு, நீனாலும் படிச்சு பெரிய ஆளா வரணும்.. முழுக்கால் ட்ரவுசர் போட்டுக்கிட்டு பெரிய பெரிய பொஸ்தக மெல்லாம் தூக்கிக்கிட்டுப் போவணும், செருப்புப் போட்டுத் தெருவுல நடக்கணும். செய்வியா கண்ணு.. என்றாள் செவனம்மா.
அப்பாவும் பிள்ளையுமாய் பள்ளிக்கூடம் கிளம்பினர். பள்ளிக்கூடம் நுழைந்தவுடன்.. ஏல அந்தாள கண்ணாடி போட்டுக்கிட்டு ஒக்காந்துருக்காருல அவருதான் பெரிய சாரு.. அவரப் பாத்ததும் வணக்கம் போடணும் என்றான்.
சார்.. வணக்கம் சார். வாப்பா ஓடையா.. என்ன இந்தப் பக்கம், இது யாரு ஓம்பையனா என்று சார் கேட்டவுடன்.. ஆமாம் சார் என் பயதான் ஒன்னாவதுல பேரு சேர்க்கணும்.. அதான் அழச்சிட்டு வந்தேன்.
அப்படியா.. நல்லது, டேய் தம்பி வலது கையால காத தொடு, சரி ஸ்பெசல் கலரு வாங்கி எல்லா சாருக்கும் கொடுத்துரு. இருபத்தஞ்சு ரூபா பீஸ் கட்டணும். பேரு எழுதின பிறகு, அந்த கேசவன் வாத்தியாரு க்ளாசுல ஒக்கார வச்சிடு. சரி பேரு என்ன சொல்லு.
பேர் சொன்னான்
தூக்கிவாரிப் போட்டது..! என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்க.. பள்ளிக்கூடமுனா என்னனாலும் செய்யலாம் என்கிற திமிரா.. இதுமாதிரி பேர் வச்சா நாங்கெல்லாம் எப்படிக் கூப்புடறது.. இப்படியெல்லாம் சேர்க்கக் கூடாது.
இல்லைங்கய்யா.. பேரு வைக்கிறது எங்களோட சொதந்தரம். எங்களுக்குப் புடிச்ச பேர்தான் நாங்க வைக்கமுடியும். நீங்க சேர்க்கலைன்னா, நான் கோர்ட்டு, கேசுன்னு போக வேண்டி வரும். இல்லேன்னா எங்க பிரச்சினையைப் பேசுறதுக்கும் கட்சி, தலைவரு இருக்காங்க என்றான் ஓடையன்.
சரி கொஞ்ச நேரம் வெளில இரு என்று சொல்லிவிட்டு பிரெசிடெண்டுக்குப் போன் பண்ணி வரச் சொன்னார். அவரு சொன்னாத்தான் இவன் அடங்குவான்.. அந்தாளு வரட்டும்.
பிரெசிடெண்ட் வந்தவுடன், தலைமையாசிரியர் அவரிடம் தனியாகப் பேசினார். இப்படியெல்லாம் பேரு வெச்சா, வாத்தியாருங்க எப்படி அவனக் கூப்பிடுவாங்க.. சரி வாத்தியார விடுங்க.. நீங்களுந்தான் எப்படிக் கூப்புடுவிங்க. நான் எவ்வளவோ சொல்லியும் ஓடையன் பிடிவாதமா இருக்கான். கட்சி, கூட்டம் அது இதுன்னு போறாங்கள்ல, அந்த மெதப்புதான், என்றார் தலைமையாசிரியர்.
சரி.. சரி நான் ஓடையன் கிட்ட பேசுறேன் என்றார்.
என்னப்பா ஓடையா.. நாகரிகமான பேரெல்லாம் எவ்வளவோ இருக்கு.. ஒனக்குத் தெரியலன்னா நான் ஒரு நல்ல பேரா வைக்கிறேன். அத விட்டுட்டு.. ஏன் இப்படிப் பிடிவாதமா இருக்கே.. பேருல என்னப்பா இருக்கு என்றார் பிரெசிடெண்ட்.
பேருல என்ன இருக்கு.. அப்படின்னு இப்பச் சொல்றீங்க. பேருலதான் எல்லாம் இருக்கு.. அப்படின்னு எனக்கு உணர்த்தியதே ஒங்கப்பாதான். எங்காளுவ, பேருலனாலும் சாமி இருக்கட்டும்ன்னு கந்தசாமி, ரெங்கசாமின்னு பேரு வப்பாங்க.. ஆனா நீங்க எங்க பேருல உள்ள சாமிய எடுத்துட்டு கந்தன், ரெங்கன்னுதான் கூப்பிடுவிங்க
அவ்வளவு ஏன்.. எனக்கு ராஜதுரைன்னுதான் பேரு வச்சாங்க. ஒங்கப்பா பேரு ராஜதுரைன்னு இருந்ததால எனக்கு அந்தப் பேர வைக்கக்கூடாதுன்னு எங்கப்பாவ அடிச்சாங்க. ஊருக் கூட்டம் போட்டு எங்கப்பாவுக்கு அவதாரம் போட்டீங்க. ஓடக்கரை வயலில் கள எடுக்கும்போது நான் பொறந்ததுனால, எனக்கு ஓடையன்ங்கிற பேருதான் பொருத்தமா இருக்குமுன்னு வெச்சீங்க. இது எங்க அப்பா காலம் இல்ல.. எங்களோட காலம். நீங்க செஞ்ச ஒன்னுஒன்னுக்கும் பதில் சொல்லித்தான் ஆகனும், நான் சொன்ன பேர வச்சி எம் புள்ளையை நீங்க சேர்க்கலைன்னா.. இங்க பேரு சேர்க்க முடியாதுன்னு எழுதிக் கொடுங்க.. நான் எங்க பேசணுமோ அங்கே பேசிக்குறேன் என்றார்.
தலைமையாசிரியரும் பிரெசிடெண்ட்டும் விக்கித்து நின்றனர்.
தலைமையாசிரியர் தொண்டையைச் செருமிக்கொண்டு சொன்னார். சரி.. அந்த கேசவன் வாத்தியாரு க்ளாசுல போய் உக்கார வெச்சுட்டுப் போ என்றார்.
ஓடையன் பையன வகுப்புல விட்டுட்டு வரும்போது கேசவன் வாத்தியார் அட்டென்டன்ஸ் எடுக்க ஆரம்பித்தார்… ஓடையன் நின்னு நிதானமா ஒரு வெற்றி மெதப்போடு கேசவன் வாத்தியார் குரல காது கொடுத்துக் கேட்டார். கேசவன் வாத்தியார் அட்டென்டன்ஸ்ல உள்ள கடைசிப் பெயரைக் கூப்பிட்டார்.
கும்பிடுறேன் சாமி
உள்ளேன் அய்யா
– கலைபாரதி