தமிழ்நாட்டின் உயிருக்கு நிகரான தொழில் விவசாயம் இதில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களுமேயாவார்கள்.
அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களே பெரும்பாலும் விவசாயத்தில் அடிப்படைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த விவசாயம் மட்டும் உயர் ஜாதிக்கார்களின் தொழிலாக இருந்திருக்குமேயானால் இத்தொழில் இந்த அளவுக்கு நசிந்து போயிருக்காது என்பது தந்தை பெரியார் அவர்களின் கருத்துக் கணிப்பு!
1975ஆம் ஆண்டு முதலே தமிழ்நாடு பெரும் அளவுக்கு வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
சட்டத்திற்கோ, நீதித்துறைக்கோ நியாயத்திற்கோ, மரபுகளுக்கோ _- எந்த வகையிலும் கட்டுப்படாத தான் தோன்றித்தனமாக கருநாடக அரசும், அரசியல் கட்சிகளும் அவர்களால் தூண்டி விடப்பட்ட மக்களும் நடந்து கொண்டு வருகிறார்கள்.
சட்டமும் நீதித்துறையின் தீர்ப்புகளும் தமிழ்நாட்டுக்குச் சாதகமாக இருந்தாலும் பாதிக்கப்படுவது என்பது மட்டும் தமிழ்நாடாகவே இருந்து வருகிறது.
2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் காவிரி நதிநீர் ஆணையம் அமைத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டது. 2013 பிப்ரவரி 19ஆம் தேதி மத்திய அரசிதழில் (கெசட்டில்) அத்தீர்ப்பும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி ஒழுங்கு முறை ஆணையத்தையும் உடனடியாக அமைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
மத்திய அரசு கண் துடைப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தற்காலிகமாக காவிரி கண்காணிப்புக் குழு அமைத்தது. அதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கருநாடக மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இது ஒரு தற்காலிகக் குழுவே!
கருநாடக அரசு மேக தாதுவில் புதிய அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தவும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை
மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தின் கவலையையும், நிலைப்பாட்டையும் எடுத்துரைக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினர் ஒத்துழைப்போடு ஒரு மனதாக தீர்மானம் (27.3.2015) நிறைவேற்றப்பட்டது சட்டமன்றத்தில். நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சட்டப்படி செயல்பட வேண்டிய மத்திய அரசு கருநாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சொல்கிறபடி நடந்து கொள்ள வேண்டிய நிலைக்குப் மோடி ஆளாகிவிட்டார்.
இதற்கிடையில் கருநாடக மாநில அரசோ நீதிமன்றத் தீர்ப்புகளையும் புறக்கணித்து மேகதாது அணைகட்டுவது தொடர்பாக திட்டம் தீட்டி அதை மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நிதி நிலை அறிக்கையில் ரூ.25 கோடி ஒதுக்கியும் அறிவித்துவிட்டது.
தமிழக முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தபடி, நாடாளுமன்ற இரு சபைகளையும் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் 54 பேர் டெல்லியில் நாடாளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான மு.தம்பிதுரை தலைமையில் குழுவாகச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்கள். இவர்களில் 48 பேர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். 4 பேர் தி.மு.க.வையும், ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியையும் (டி.கே.ரங்கராஜன்), மற்றொருவர் பாட்டாளி மக்கள் கட்சியையும் (டாக்டர் அன்புமணி ராமதாஸ்) சேர்ந்தவர்கள். புதுச்சேரியைச் சார்ந்த ராதாகிருஷ்ணன் எம்.பி.யும் (என்.ஆர்.காங்கிரஸ்) இந்தக் குழுவினருடன் சென்று இருந்தார். அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 55 எம்.பி.கள் பிரதமரைச் சந்தித்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.யான அம்பேத்ராஜனும் தமிழக எம்.பி.க்கள் குழுவினருடன் சென்று இருந்தார். இவர் தமிழர் ஆவர். எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் மோடியுடன் 25 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மேலும் தமிழக சட்டசபையில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டியும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட மேற்கொண்டு வரும் நடவடிக்கையைத் தடுப்பது குறித்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி விளக்கிக் கூறினார்கள். அந்தத் தீர்மானத்தையும் அவரிடம் வழங்கினார்கள். அப்போது ஒவ்வொரு கட்சியின் சார்பில் ஒருவரைப் பேசுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். அதன்படி மு.தம்பிதுரை (அ.தி.மு.க.), கனிமொழி (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.) உள்ளிட்டோர் பேசினார்கள்.
கர்நாடகம் அணைகள் கட்டும் பிரச்சினைக்குத் தீர்வுகாண தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில முதல் அமைச்சர்களையும் அழைத்துப் பேசுமாறு அப்போது பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழக எம்.பி.க்கள் கூறியதைக் கேட்டறிந்த பிரதமர் மோடி, சம்பந்தப்பட்ட துறையிடம் தற்போதைய நிலை குறித்த அனைத்து விவரங்களையும் சேகரிக்க ஏற்கெனவே அறிவுறுத்தி இருப்பதாகவும் மற்றும் இதுகுறித்து மேலும் பரிசீலிப்பதாகவும் உறுதி அளித்தார்.
இந்தச் சந்திப்பின் போது தி.மு.க.வின் சார்பில் பிரதமரிடம் தனியாக ஒரு மனுவும் கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை போர்க்கால அடிப்படையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மேகதாது பகுதியில் கர்நாடகம் புதிதாக இரு அணைகளைக் கட்ட முயற்சிப்பது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும், இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தையும் மீறும் செயல் என்பதால் அந்த முயற்சியை உடனடியாக நிறுத்தும்படி அந்த மாநிலத்துக்கு அறிவுறுத்துமாறும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறினாலும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் பிரதமரைச் சந்தித்தாலும் உனக்கும் பேப்பே _ உன் அப்பனுக்கும் பேப்பே! என்கிற முறையில்தான் மத்திய மாநில அரசுகள் நடந்துகொண்டு வருகின்றன.
கருநாடக மாநிலத்தில் ஆட்சியைப் பறி கொடுத்த நிலையில், மீண்டும் அங்கு தமது கட்சி ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற அப்பட்டமான அரசியல் நோக்கத்தில்தான் _- பி.ஜே.பி.யைச் சேர்ந்த மோடி அரசு இந்தப் பிரச்சினையில் ஓடி ஒளிந்து விளையாடிக் கொண்டு இருக்கிறது. தேசியம் பேசும் கட்சிகள்கூட மாநிலத்திற்கு ஒரு முடிவை எடுக்கின்றன.
சட்ட ரீதியான தீர்வுதான் இதற்கு ஒரே பரிகாரம்! தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் எழுந்து மத்திய பி.ஜே.பி. அரசின் தமிழக விரோதப் போக்கினை பெரும் பாய்ச்சலாகப் பொங்கி எழுந்து அம்பலப்படுத்த வேண்டும்.
காவிரி பிரச்சினையில் உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், ஒரு கட்டத்தில் விவசாயத் தொழிலையே நினைத்துப் பார்க்க முடியாத பரிதாப நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுவிடும்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்தும் அந்தக் கடமையை தமிழக அரசு செய்யத் தவறுவதன் மூலம் மீளாப் பழியை அது ஏற்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை வேண்டியதும் எங்களது கடமையாகும்.
– கி.வீரமணி,
ஆசிரியர்