மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே?
தேசியக் கட்சிகள் எனச் சொல்லப்படுகிற காங்கிரஸ், பா.ஜ.க., பொதுவுடைமைக் கட்சிகள் ஆகியவை, மாநிலங்களின் தனித்தன்மையை மறுக்கக் கூடியவையாக உள்ளன. அதுதான் இந்தத் தேசம் வளராமல் போனதற்கும் அந்தக் கட்சிகள் வளராமல் போனதற்கும் காரணம். தேசிய இனங்களின் சிக்கலை அவை அங்கீகரிக்காமல், அதற்கான தீர்வையும் அலட்சியப்படுத்துகின்றன. மாட்டு இறைச்சியைப் பயன்படுத்தத் தடை விதிப்பது இந்திய தேசத்தின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவது போன்றது. கொழுப்பா தின்ற கூர்ம்படை மழவர் என, சங்க இலக்கியப் பாடல் சொல்கிறது.
கொழுப்பான பசு மாட்டைத் தின்றதற்கான சாட்சி வார்த்தைகள் இவை. இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கான புரதம், மாட்டு இறைச்சியில் இருந்துதான் கிடைக்கிறது. அதற்குத் தடைவிதிப்பது, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கை.
ஜாதிக் கட்டமைப்பின் பலம் என்ன…
அது ஒழிய என்ன செய்ய வேண்டும்? ஜாதி என்பது என்ன?
எதுவரை நீங்கள் திருமண உறவு வைத்துக் கொள்ளலாமோ… அதுதான் உங்கள் ஜாதி எல்லை. அந்தத் திருமண உறவுக்கான கட்டமைப்புதான் ஜாதியின் பலம். ஜாதிகள் ஒழிய வேண்டும் என்பது நமது விருப்பம். ஆனால், அது அவ்வளவு எளிது அல்ல என்பதுதான் அடிமட்ட யதார்த்தம். நம்பிக்கையான, சுயநலமற்ற தலைவர்கள் நம்மைத் தொடர்ந்து வழிநடத்தாதது ஒரு குறை. ஜாதியை ஒழிக்க, தொடர்ச்சியான போராட்டம் தேவை. பெரியாரின் அதிர்ச்சி மதிப்பீடுகள் அதைச் செய்தன. ஆண்தான் தாலி கட்ட வேண்டுமா? ஆணுக்கு, பெண் தாலி கட்டட்டும் என்றார். அப்படித்தான் சில திருமணங்-களை அவர் நடத்திவைத்தார். அவருடைய உறுதி, அவர் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை எல்லாம் அவரை ஏற்றுக்-கொண்டு, அவரைப் பின்தொடரவைத்தன. மன உறுதிமிக்கவராக இருந்தார்.
அவருடைய அதிர்ச்சி வைத்தியங்களுக்கு ஆதரவு இருந்தது. பெரியாரின் கட்டளையை ஏற்று, தேவதாசிப் பெண்களை பல பெரிய மனிதர்கள் மணந்தனர்.
குத்தூசி குருசாமி, பூவாலூர் பொன்னம்-பலனார், நெ.து.சுந்தரவடிவேலு போன்ற பெரியவர்கள் எல்லாம் தேவதாசிஇனப் பெண்களை மணந்தனர். திருமண உறவுகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஒரு ஜாதியை, திருமண உறவுக்குள் மாற்றியதில் பெரியாருடைய பங்களிப்பு எத்தகையது என்பதைப் பாருங்கள். அப்படியான தொடர்ச்சியான அதிர்ச்சி மதிப்பீடுகளை முன்னெடுத்துச் செல்வதில், நம் தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, ஓட்டுக்காக ஜாதியை வளர்த்தார்கள்.
நன்றி: ஆனந்தவிகடன், 8.4.2015