ஆசிரியர் பதில்கள்

ஏப்ரல் 16-30

கேள்வி : பி.ஜே.பி.யின் கூட்டணி அரசில் பிரதமராயிருந்த வாஜ்பாய்க்கும் தற்பொழுது அக்கட்சியில் வலுவான நிலையில் ஆட்சி நடத்தும் மோடிக்கும் கொள்கை அடிப்படையில் ஏதேனும் வேறுபாடுகள் உள்ளனவா?
– கோ.சுருதி, திருச்சி

பதில் : அணுகுமுறையில் _ (அடிப்படையில் அல்ல) _ நிறைய வேறுபாடுகள் உண்டு. அவர் (வாஜ்பாய்) ஆட்சியை முழுக்க ஆர்.எஸ்.எஸ்.சிடமே விட்டுவிடவில்லை; தனது பிடிப்பில் வைத்திருந்தார். ஏன் ஒரு கட்டத்தில் குஜராத் கலவரத்தில் முதல்வர் மோடி அரசு இராஜதர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி பதவி விலகும்படிச் செய்ய முனைந்து (உள்ளே தடுப்பு காரணமாக) நிறுத்திக் கொண்டார்.

இவரின் (மோடி) நிலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அப்படியே ஆடும் நிலை தொடர்கிறது! அது தொடருவது அவரது ஆட்சிக்கு மிகப்பெரிய சோதனையாக முடியும்; எதிர்த்தால் ஆர்.எஸ்.எஸ். இவரை இன்னொரு அத்வானியாக ஆக்கிவிடும்!

கேள்வி : காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாகத் தடுப்பணைகளைக் கட்டியே தீருவோம் என்ற கர்நாடக மாநில அரசின் பிடிவாதப் போக்கும் மத்திய அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற நடைமுறையை மீறுவதும், பரஸ்பரம் மாநில நலன்களைக் காப்பது என்ற கோட்பாட்டினைத் தகர்ப்பதும் நல்ல அறிகுறியாகத் தெரியவில்லையே? – நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்

பதில் : அங்குள்ள அரசியல் கட்சிகளின் ஒருமித்த வெறி _ அங்கு எந்த அரசு (கட்சி) வந்தாலும் மாறாது என்று நினைக்கவே தோன்றுகிறது! மத்திய அரசு தன் கடமையைச் செய்யத் தவறுவதால்தான் இந்நிலை!

கேள்வி : தமிழக அரசு நிர்வாகப் பிரிவுகளில் ஊழல் சாம்ராஜ்யம் பல்கிப் பெருகி வருவது மிகவும் மோசமான நிதி நிர்வாகச் சீரழிவு ஏற்பட்டு வருவதற்கான அறிகுறியாகத் தெரியவில்லையா? – ப.வேந்தன், ஆனையூர்

பதில் : சுவரெழுத்து _ கொட்டை எழுத்துகளில்! ஒரு மந்திரியின் லஞ்சப் பேராசை ஒரு உயிர்க் கொலைக்குக் காரணம் என்ற நிலை! பனிப்பாறையின் முனை மட்டுமே _ ஊழலை யாகங்களால் மறைக்க முடியாது!

கேள்வி : தாழ்த்தப்பட்டோரிலேயே உயர்பிரிவினர், அதிலேயே தாழ்த்தப்பட்டோர் மீது ஜாதிவெறி காட்டினாலோ, வன்கொடுமை செய்தாலோ பெரியார் இயக்கங்கள் போராட முன்வருவ-தில்லை என்று சொல்லப்படுகிறதே ஏன்?
– கி.கதிரவன், மும்பை

பதில் : இது திட்டமிட்டுப் பரப்பப்படும் பார்ப்பன, விஷமப் பிரச்சாரம். நம்மைப் பொருத்தவரை ஒடுக்கப்பட்டவர்களை இப்படிப் பிளவுபடுத்தி அங்கும் ஒரு அடுக்குமுறை ஜாதிப் பிரிவு நீடிப்பதே தவறானதாகும்.

வாய்ப்பற்றவர்களுக்கு முன்னுரிமை தருவதே கழகத்தின் முக்கியக் கொள்கை.

அருந்ததியினருக்கு இடஒதுக்கீடு தி.மு.க. சட்டம் வருமுன் நடந்த அரசு ஆலோசனைக் கூட்டத்தில் அதை முக்கியமாக வலியுறுத்த அச்சட்டத்தை கலைஞர் அரசு கொண்டுவர முழு ஆதரவு, காரணமாக அமைந்தது திராவிடர் கழகம். மிக மிக அடியில் உள்ளவருக்கே முன்னுரிமை என்பதுதான் கழகத்தின் அணுகுமுறை. எனவே விஷமப் பிரச்சாரத்தை ஒதுக்கி, உண்மையை உணருங்கள்.

கேள்வி : தாலி அகற்றும் விழாவுக்கு ஆண்கள்தான் பெரும்பாலும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களே தவிர, பெண்கள் இதில் கருத்துத் தெரிவிக்க முன்வரவில்லையே ஏன்? – அ.ம.வேலவன், பூவிருந்தவல்லி

பதில் : அதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய உண்மை – இன்றைய தலைமுறை வரவேற்கிறது. எல்லா ஆண்களும்கூட அல்ல – மதம் பிடித்த ஆண்கள் மட்டும்தான் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்! இன்னமும் ஆண் ஆதிக்க சமுதாயம்தான், தாலியை அகற்றிக் கொள்ள முன்வரும் பெண்களிடம் உங்கள் வாழ்விணையர் வற்புறுத்தலால்தான் இதைச் செய்கிறீர்களா? என்று கேட்டு அவர் பதிலைப் பெற்ற பிறகே இதைச் செய்கிறோம்.

கேள்வி : ஊடகங்களின் இருட்டடிப்பையும் தாண்டி தாலி அகற்றுதல், மாட்டுக்கறி விருந்து ஆகியவை அறிவிப்பு என்ற அளவிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறதே. இது எதைக் காட்டுகிறது? – சா.தமிழரசன், திருவண்ணாமலை

பதில் : ஊடகங்களில் இந்த விவாதமே நடைபெறக் கூடாது என்று மிரட்டி, தடுப்பதில் அந்த ஊடகத்தைப் பொருத்தவரையில் நடந்தது. ஆனால் அதை உலகமே விவாதிக்கும் அளவுக்குச் செய்து திராவிடர் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது!

கேள்வி : தாங்கள் அறிவித்து வேகவேகமாக நடத்திவரும் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றிக் குறிப்பிட முடியுமா? – கோ.பொற்கொடி, விருதுநகர்

பதில் : நல்ல எழுச்சி _ அத்தனை முற்போக்காளரும் அணி திரளுகின்றனர். காவிச் சாயம் வெளுக்கிறது; கிழக்கும் வெளுக்கிறது!

கேள்வி : ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினம் எனப் பெயர் வரக் காரணம் என்ன? இதை முதன்முதலில் கொண்டாடிய முட்டாள்களின் முன்னோடி யார்? இது உலக அளவிலா (அ) இந்திய அளவில் மட்டும்தான் முட்டாள்கள் தினமா? இதுகுறித்து தங்கள் கருத்து?
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : இதற்கு ஒரு வரலாறே இருக்கிறது. ஏடுகளில் காண்க!

கேள்வி : தமிழக சட்டமன்றத்தில் தொடர்ந்து நடந்துவரும் ஜனநாயகப் படுகொலைகளையும் கேலிக்கூத்துகளையும், தமிழகப் பத்திரிகைகளும் ஊடகங்களும் பயமின்றி விமர்சிக்கத் தவறுவதன் _ தயங்குவதன் உள் நோக்கம் என்ன? – கோ.நளினி, பெரியார் நகர்.

பதில் : முழுக்க விளம்பரங்கள் என்ற கையூட்டு; அல்லது அச்சுறுத்தல், சட்ட நடவடிக்கை என்ற அடக்குமுறை _ அணுகுமுறை, ஆளும் கட்சியின் போக்கு.
கேள்வி : காங்கிரஸ் இல்லாத பாரதம்தான் பி.ஜே.பி.யின் குறிக்கோள் என்ற அக்கட்சியின் கனவுத் திட்டம் நிறை-வேறும் என நினைக்கிறீர்களா?
– க.அருள்செல்வன், திருவாரூர்

பதில் : ஒருபோதும் நடக்காது; இன்று காங்கிரஸ் தோற்றிருக்கலாம்; காங்கிரஸ் அமைப்பு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உண்டு. பா.ஜ.க. அப்படியா? இப்போதுதானே நுழைகிறது சில மாநிலங்களில். யானை படுத்தால் குதிரை மட்டம் _ மறந்துவிட வேண்டாம்!

கேள்வி : நிலம் கையகப்படுத்தும் திருத்தச் சட்டம் விவசாயிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என மோடி மீண்டும் மீண்டும் தவறான தகவலை நாட்டு மக்களுக்கு அளித்து வருவதன் உள்நோக்கம் என்ன?
– கா.வேணுகோபால், திண்டிவனம்

பதில் : 1. வீம்பு, 2. கார்ப்பரேட் முதலாளிகளை எப்படியும் திருப்தி செய்திடும் அவரது ஆட்சியின் அணுகுமுறை.

கேள்வி : பகுத்தறிவுவாதியாக, தலைவர்களாக இருந்தாலும், என் போன்ற தொண்டர்களாக இருந்தாலும் அவரவர் குடும்ப உறுப்பினர் இடையே உள்ள மூடப்பழக்க வழக்கங்களை ஒரு சிலரால் ஒழிக்க முடிவதில்லையே அது ஏன்? இதுகுறித்து தங்கள் கருத்து?
– ம. இராவணன், திருச்சி

பதில் : குடும்பத்தினரையும் கழக நிகழ்ச்சிகள், கழக ஏடுகளைத் தொடர்ந்து படிக்க வைத்தல், மாநாடுகள், தலைமை நிலையம், நம் கல்வி நிறுவனங்களைக் காட்டுதல் போன்றவற்றைச் செய்யாமல் ஆண்கள் மட்டும் கொள்கை பேசுவதால் இந்நிலை. மதம் வேரூன்றி இருப்பதற்கே மூலகாரணம் அது குடும்பத்தினரி-டையே வேர் ஓடி இருப்பதுதானே!

கேள்வி : அறிவியல் அடிப்படையிலான ஆராய்ச்சி முடிவுகளை ஏற்பதில்லை என முடிவு செய்து கொண்டு பா.ஜ.க.வின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியைச் சார்ந்தோரும் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது குறித்து?

– ஆ.ஆளவந்தான், நாகர்கோவில்

பதில் : உலக அறிவியல் அறிஞர்களின் கண்டனத்திற்கு மோடி அரசு ஆளாகியுள்ளதே _ 10 மாதத்தில் எவ்வளவு விமர்சனங்கள் பொது மனிதர்களிடமிருந்து.

கேள்வி : அடுத்த 20 ஆண்டுகளுக்கு மத்தியில் பா.ஜ.க. ஆட்சிதான் என அமித்ஷா என்ற ஜனநாயகவாதியின் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளதே?
– செ.உமா, பெரம்பலூர்

பதில் : ஆசையிருக்கு தாசில் செய்ய… …….. என்ன செய்வது பேராசை! பிறகு அது பெருநட்டமாகும். சர்வாதிகாரியாக மாறினால்கூட அது நிலைக்காது; நீடிக்காது _ இன்றைய விழிப்புணர்வுக் காலகட்டத்தில்.

கேள்வி : அண்மையில் வெளிவந்த கருத்துக் கணிப்புகளில் மோடியின் செல்வாக்கு கணிசமாக சரிந்துள்ளதைத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே?
– பா.கனியமுது, பேரம்பாக்கம்

பதில் : அது வெளிப்படையானது. கைப்புண்ணுக்குக் கண்ணாடியா தேவை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *