தமிழ் வளர்ச்சி : நீங்கள் செய்தது என்ன?

ஏப்ரல் 16-30

தமிழ் வளர்ச்சி : நீங்கள் செய்தது என்ன?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

வெண்ணெய் வாழைதான் ஆனால் குலை தள்ள வேண்டும்

சட்டாம் பிள்ளைச் சண்முகம் எனது பாடசாலை நண்பர்.

நான் ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போனேன். அப்போது அவர் தமது வீட்டுக்குப் புறத்திலிருந்த தோட்டத்தில் இருந்தார். நான் வந்தது அவருக்குத் தெரிந்தது. என்னை அவர் தோட்டத்திற்கு அழைத்துப் போனார். மரம், செடி, கொடிகள் தோட்டத்தில் அடர்ந்திருந்தன. நான் அவைகளைச் சுற்றிப் பார்த்து வரும்போது நண்பர் என்னை ஓர் இடத்தில் நிறுத்திக் கீழ்வருமாறு சொன்னார் : பழம் ஒன்று முக்கால்முழ நீளமிருக்கும்; பச்சை நாடானை ஒத்த நிறம், வாட்டம். அதை வாழைப்பழமென்றே சொல்வதற்கில்லை. அதன் தோலை உரித்துக் கீழே போட்டபின் கையில் வெண்ணெய்தான் மீதியிருக்கும். அந்த உரித்த பழத்தைச் சுடு சோற்றில் போட்டால் உருகி விடும். இனிப்பில் தேன்; ஒருவித நறுமணம்!

பழுத்திருப்பதை நண்பர் அடுக்குப் பானையிலிருந்து எடுத்துவரப் போகிறார் என்றுதான் நான் நினைத்தேன். அவர் அந்த மரந்தான் இது என்று தரையைக் காட்டினார். நான் தரையைக் குனிந்து பார்த்தேன். அகலத்தில் மாவிலையையும் நீளத்தில் பலா இலையையும் ஒத்த அய்ந்தாறு வாழையிலைகள் தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டிருந்தன. இதுதானா வெண்ணெய் வாழைமரம்!

என்ன நண்பரே! இதுதானா குலை தள்ளிற்று? அதுவும் பழுத்ததா? நீரும் தின்றீரா? என்று கேட்டேன். சண்முகம் சிரித்தார். வாழையைப் பற்றி நான் சொன்னதில் ஒன்றும் பொய்யில்லை; ஆனால் வளர வேண்டும் பழம் தரவேண்டும் என்று கேலி பேசினார்.

அந்த வெண்ணெய் வாழையைச் சண்முகம் சுண்ணாம்புக் கற்களுள்ள தரையில் நட்டிருந்தார். அதனால் அதை நட்டு ஒரு வருஷம் ஆகியும் அது வளரவில்லை. அதை நட்டபோது வேறிடத்தில் நட்ட வாழைகள் நல்ல பலன் அளித்தன. வெண்ணெய் வாழை வளர்ச்சியடைந்து நல்ல பலன் கொடுக்க வேண்டுமானால் அதைப் பெயர்த்து வேறு நல்ல இடத்தில் வைக்க வேண்டும்.

பல்லாவரத்தில் கூடியிருக்கும் பண்டிதர்களே, தமிழ் இனிமையானது, ஆக்ஷேபமில்லை. ஆனால் அது வளர்ச்சியடையவில்லை. குலை தள்ளவில்லை. மக்கட்கு நலன் அளிக்கவில்லை. அதை நீங்கள் நட்டிருக்கும் இடம் தீயது. ஜாதி மதம் மூடப் பழக்க வழக்கங்கள் ஆகிய சுண்ணாம்புக் கற்கள் உள்ள தரையில் நட்டிருக்கிறீர்கள். அவ்விடத்தினின்று அதைப் பெயர்த்தெடுங்கள். வேறு பொது இடத்தில் நடுங்கள்! அப்போது தமிழ் தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டிராமல் வளர்ச்சியடையும். குலை தள்ளும். பழம் தரும். மக்கள் நலன் அடைவார்கள்.

தமிழ் தற்கால நிலையில் இனிக்கிறதென்று நீங்கள் சொல்லுகிறீர்களா? வளர்ச்சியடையாமல் கல்லுப் பிள்ளையார் போலிருக்கும் தமிழ் வளர்ச்சியடைந்து வரும் மக்களுக்கு இனிமை தருவதெப்படி? சொல்லுங்கள்! தமிழ் இனிக்கவில்லை யாதலால்தான் நீங்கள் அதை இனியது இனியது இனியது என்று எப்போது பார்த்தாலும் வேலையற்றுப் போய் உளறிய வண்ணமிருக்கிறீர்கள். அது வளர்ச்சியடையாத-தால்-தான், நீங்கள் பழைய விஷயத்தையே பணம் சம்பாதிக்கத் திரும்பத் திரும்பச் சொல்லுகிறீர்கள். அது குலை தள்ளாததால்-தான் நீங்கள் படித்ததாய்ச் சொல்லிக் கொண்டாலும் ஒன்றுமறியாத முட்டாள்கள் என்று பிற பாஷைச் சிறுவர்களால் இகழப்படுகிறீர்கள்.

நீங்கள் தமிழின் அதிகாரிகளாக ஆசைப்படுகிறீர்கள். சைவப் பெரியாராகவும் பிரியப்படுகிறீர்கள். சைவத்தோடு தமிழை ஒட்டி விடுகிறீர்கள்.

அதனால் சைவரல்லாத பிற மதத்தவர் உங்கள் சைவத்தை ஓச்சும் கோடாலி தமிழின் கிளைகளையும் குறைக்கின்றது. வைஷ்ணவத்துடன் தமிழ் ஒட்டப்-பட்டிருக்கிறது. அதனால் வைஷ்ணவத்தை நோக்கிப் பிற மதத்தினர் கொட்டும் நெருப்பானது தமிழின் வேரிலும் படுகிறது. புத்த மதத்தை அறுக்கப் போகும்போது அதனோடு ஒட்டிய தமிழ் அறுபடுகிறது. மதங்களுக்கு அப்பால் தமிழ் இல்லாதபடி செய்த _ செய்கின்ற தமிழ்ப் பண்டிதர்களே! தமிழுக்கு நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய வேலைகளில் ஒன்றாவது செய்ததுண்டா!

மத நூல்களைப் புகைப்படம் பிடிப்பதுண்டு; வெளியிடுவதுண்டு.

மதத்தின் அப்புறத்தில்தான் விசால எண்ணங்கள், விரிந்த தத்துவங்கள், அறிவு வளர்ச்சிக்குரிய திட்டங்கள், போகப் பொருள்களை விளைக்கும் நுட்பங்கள் உண்டு என்பதை நீங்கள் அறியவில்லையானால், உங்களை என்னவென்று சொல்லுவது? தமிழை அரிக்க வந்த பண்டிதச் செல்லுப் பூச்சிகளே! இந்தியனாகிய மகம்மதியனும், இந்தியனாகிய கிறிஸ்தவனும் தமிழை வெறுக்க வைத்தது எது தெரியுமா? அதனோடு சம்பந்தப்படுத்தி வைத்திருந்த மதம். மதக்காரர்கள் மூலபலஞ் சண்டையிடுகிறவர்கள்.

அதற்குள்ளே சிக்கலாகிக் கிடக்கும் தமிழும் அழிந்து போகிறது. வளர்ச்சி அடைவது எப்படி?

புது இலக்கணம், புது இலக்கியங்கள், புதிய நிகண்டுகள், அகராதிகள், தமிழின் நடையில் ஓர் புதுத்திறன்! இவ்வரிசையில் எதிலாகிலும் உங்கள் கவனம் சென்றதுண்டா? இன்னும் யோசியுங்கள்.

– புதுவை முரசு, 16.2.1931

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *