ஊன்றிப் படிக்க உண்மையை உணருக!
வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
தெய்வம் தெய்என் கிளவி கொள்ளலும் கோறலும் என்பதொரு நூற்பா பிங்கலந்தைப் பழம் பதிப்பில் காணப்பட்டது.
இதே நூற்பா தெய்யென் கிளவி கோறலும் தெய்வமும் என்று வேற்றுமையுடன் வேறு பதிப்பில் காணப்படுகின்றது. ஆதலின், தெய் என்பதற்குக் கொல்லுதல், தெய்வம் என்பன பொருளாகக் கொண்டால் இழுக்கில்லை. இதனால் நாம் அறியக் கிடக்கும் செய்தி என்ன எனில் கூறுவோம். அறிவு நிரம்பாத பண்டை நாளில், பெருங் காற்றையும், கனலையும், காட்டாற்றையும், துன்புறுத்தும் வெங்கதிரையும், பெருமழையையும், விலங்குகளின் எதிர்ப்பையும் தெய் என்று சொல்லி வந்தார்கள்.
அறிவு நிரம்ப நிரம்ப அவற்றின் பெரும் பயனை அறிந்து அவற்றைப் பயன்படுத்துவாராயினர். அறிவு நிரம்பாத போது வெறுப்புப் பொருளில் வழங்கப்பட்ட தெய் அறிவு நிரம்பிய பிறகு விருப்புப் பொருளில் வழங்கலாயிற்று. தெய் என்ற சொல் அம் இறுதி நிலையும் வ் என்ற இடைநிலையை பெற்றுத் தெய்வம் என்று சுருங்கிற்று.
(தெய்+வ்+அம்) அறிவு நிரம்பாதபோது வெப்புறுத்திய ஞாயிற்றையும், நிலவுறுத்திய திங்களையும், துன்புறுத்திய தீயினையும் அறிவு நிரம்பிய காலத்து எவ்வாறு போற்றினார் என்பது நோக்கத்தக்கது. கொடி நிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே. என்ற இந்தத் தொல்காப்பிய நூற்பாவால் ஞாயிறு, தீ, திங்கள் ஆகிய மூன்றையும் வடுநீங்கு சிறப்புடைய தெய்வங்கள் என்று வாழ்த்தியது புலனாகிறதன்றோ! மழையைத் தெய்வமாகக் கொண்டனர்; போற்றினர்.
புனலைத் தெய்வமாகக் கொண்டனர்; போற்றினர். இங்கு அறியத்தக்க மற்றோருண்மை என்னெனில், தெய்வம் என்ற சொல்லால் இந்நாள் சொல்லப்படுவன பயன் பொருள்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்ற பொருள்களும் ஆம். பசு தெய்வம், நிலம் தெய்வம், நீர் தெய்வம், சொல் தெய்வம், பெரியவர் அருளிய நூல் தெய்வம் பிறவும் தெய்வங்கள்.
சமயக் கணக்கர் இத் தெய்வங்களை எல்லாம் மேல் நின்று நடத்துவதோர் பெரிய பொருள் உண்டென்றும் அது கடவுள் இயவுள் என்றெல்லாம் பெயர் என்றும் கூறினாராக. அச் சமயக்கணக்கு முற்றிய வழித்தாம் தாம் கண்ட கடவுள் இப்படி இப்படி என்று கூறுவாராகி, உலகில் கலம் பல விளைத்து வருவாராயினர். தெய்வம் தூய தமிழ்ச்சொல் என்பதில் தமிழர்க்கு ஏதேனும் அய்யமிருக்க முடியுமா? முடியாதன்றோ! ஆனால், பார்ப்பனனும் அவன் வால் பிடித்துத் திரியும் சில தமிழர்களும், தெய்வம் வடசொல் என்று உளறி வருகிறார்கள்.
தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு வருமாறு: தொல்காப்பிய நூன்மரபு 29-வது நூற்பா, ய்,ர்,ழ், என்னும் மூன்று மெய்யின் முன், க,த,ந,ம,ச,வ,ஞ,ய,ப என்ற ஒன்பது எழுத்துகளும் தனித்தனி வந்து நிற்கும் என்று கூறுகையில் ய் முன் வா வருவதற்கு எடுத்துக்காட்டாக தெய்வம் என்ற சொல் காட்டப்பட்டுள்ளது. எனவே தெய்வம் தூய தமிழ்ச் சொல் என்பதை எவராலும் மறுக்க முடியாதன்றோ?
– (குயில், 17.6.58)