சாத்தானா? கர்த்தரா?
ஓர் அறிவியல் அமைப்பில் அவரும் அங்கம் வகித்தபோது, ஏனைய உறுப்பினர்கள் தங்களை தாங்கள் சார்ந்த மதம், அரசியல் கொள்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
புரோடஸ்டன்ட், ரோமன் கத்தோலிக்க, பாசிடிவிஸ்ட் என்று அவரவரும் கூறிக் கொண்டனர். இவரது முறை வந்தபோது, மேற்கண்ட அடையாளங்கள் ஏதும் அற்றவரான ஹக்ஸ்லி தம்மை அக்னாஸ்டிக் என்று கூறிக்கொண்டார். ஆக்ஸ்போர்டு அகராதி அளிக்கும் அர்த்தத்தில் இச்சொல்லை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அந்த அகராதி இச்சொல்லுக்கு, கடவுள் என்பது புரியாத அல்லது புரிந்துகொள்ள முடியாத ஒன்று என நினைப்பவர் எனப் பொருள் தருகிறது.
இதனை ஹக்ஸ்லி மறுத்தார். மாறாக, கடவுள் என்பதை அறிந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகிய GNOSTIC என்பதற்கு எதிர்ச் சொல்லாக A சேர்த்து AGNOSTIC எனப் பயன்படுத்தினார் எனும் விளக்கத்தையும் தெரிவித்தார்.
விளங்கிக் கொள்ள முடியாதது என்பதைக் குறித்திட UNKNOWABLE என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்றாலும் முதல் எழுத்தாகிய “U’’ என்பதைப் பெரிய எழுத்தில் குறித்திருக்கக் கூடாது என்றும் பிறகு குறிப்பிட்டார். GOD என்றும், HE என்றும் எழுதிக் கடவுளைக் குறிக்கும் பழக்கம் இங்கிலீஷ் மொழி பேசும் பக்தர்களுக்கு உண்டு. ஆனால், பகுத்தறிவாளர்களாகிய நாம் GOD என்றும் he/it என்றும் குறிப்பிடுவதுதான் தற்போதைய நடைமுறை. அதுபோலவே, UNKNOWABLE என இயல்பாகத்தான் எழுதவேண்டுமே தவிர இறைத்தன்மையை ஏற்றிப் பெரிய U என்பதோ G என்பதோ போடக்கூடாது. அந்தவகையில் புரட்சியைத் தொடங்கி வைத்தவர் ஹக்ஸ்லி. தமது SPECTATOR (பார்வையாளன்) எனும் இதழில் 29-.5.1869 இல் எழுதப்பட்ட கட்டுரையொன்றில் இதுபற்றி விளக்கம் தந்தார்.
ஆன்மா பற்றி…
ஆன்மா (SOUL) என்ற ஒன்று உள்ளது எனும் நம்பிக்கையாளர்களின் வாதத்தை எள்ளி நகையாடுவதைப் போல, தவளைகளுக்கு ஆன்மா உள்ளதா? என்ற தலைப்பில் (HAS A FROG A SOUL) கட்டுரை எழுதினார். மருத்துவ மாணவர்கள் தவளையைத் தினந்தோறும் அறுத்துத்தான் பாடம் படிக்கிறார்கள். அவற்றின் ஆன்மா என்ன ஆனது என்பது வினா? ஆன்மா அழியாததா? எனும் தலைப்பில் விளக்கக் கட்டுரை எழுதி ஆன்மா மோசடியை அம்பலப்படுத்தினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக உயிர்த்தெழுந்தது (RESURGECTION) தொடர்பான அவரது கட்டுரை, கிறித்துவப் பக்தர்களின் மீது சம்மட்டி அடியாக விழுந்து யேசுவின் கடவுள் தன்மையைப் பொடிப் பொடியாக்கியது. சிலுவையில் பிணைக்கப்பட்டு, இருகைகளிலும் கால்களிலும் ஆணியால் அறையப்பட்டு, சிலமணிநேரங்களுக்குப் பிறகு கல்லறையில் புதைக்கப்பட்ட யேசு, சாகவில்லை என்றும் சாகாத நிலையில் மயங்கி இருந்தவர் கல்லறையில் இருந்து வெளிக்கொணரப்பட்டார் என்பதால் அதனை உயிர்த்தெழுந்ததாகக் கருதவோ, கூறவோ கூடாது என்றும் அறிவியல் பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
அற்புதங்களா…..
வெறும் நீரை ஒயின் மதுவாக யேசு மாற்றினார் என்பன போன்ற அற்புதங்களின் பித்தலாட்டங்களையும் அவர் தோலுரித்துக் காட்டினார். அவரது ஆணித்தரமான, அறிவியல்பூர்வ வாதங்களை மறுத்து உரைக்கும் சக்தி கிறித்து மதப்பீடங்களுக்கு அன்றும் இருந்ததில்லை; இன்றும் இருக்கவில்லை.
இந்த அளவுக்கு கடவுள் மறுப்பாளராக இருக்கின்ற இவர் ஏன் தம்மை நம்பிக்கை அற்றவர் எனப் பொருள்தரும் INFIDEL என்று அழைத்துக் கொள்ளக் கூடாது? அம்மாதிரித் தம்மை அழைத்துக்கொள்ளத் துணிவில்லாதவர்கள்தான் புரிந்துகொள்ள முடியாதோர் என அழைத்துக் கொள்வார்கள் என்ற குற்றச்சாற்று அன்றும் இருந்துள்ளது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நம்பிக்கை அற்றவர் என்று எங்களை அழைப்பதில் ஆட்சேபணை ஏதும் கிடையாது என்று அறிவித்துவிட்டார். எனக்குத் தெரியாத பல பொருள்கள் உள்ளன; அவற்றை அறிந்தவனாக என்னை நான் காட்டிக் கொள்ள மாட்டேன், (எல்லாம் தெரிந்தவராக பக்தர்கள் தங்களைக் காட்டிக் கொள்வர்) எனத் தெரிவித்தார்.
சாத்தானா? கர்த்தரா?
பைபிளிலும் சரி, கிறித்துவத்திலும் சரி, சாத்தான் எனும் கதாபாத்திரத்தின் பங்கு மிக முக்கியமானது. முதன்முதலில் படைக்கப்பட்டவர்களுக்கு கடவுளால் விதிக்கப்பட்ட கட்டளையை மீறிச் செயல்படும்படியான துணிவைத் தந்து கடவுளுக்கு எதிராகச் செயல்பட வைத்த சக்தி சாத்தானுக்கு (பைபிள்படி) இருந்துள்ளது. அப்படி ஒரு சாத்தான், அதற்கான சக்தி, அதற்கான ஓர் உலகம், கடவுளுக்கான சக்தி போன்றவை தனித்தனியாக இருக்கின்றனவா, இயங்குகின்றனவா என்பது பற்றிய அய்யங்கள் எழுவதுதான் அக்னாஸ்டிசம் என்றார் ஹக்ஸ்லி! இப்படிப்பட்ட இரு வேறுபட்ட ஆற்றல்களால் இயக்கப்படும் பொருளா இந்த உலகம்? உலகத்தின் உயிர்கள்? இந்த வினாக்களுக்கு என்ன விடை? எனவே, இவற்றிற்கெல்லாம் பொறுப்பான ஆள் யார்? பைபிள் எழுதப்பட்ட நாள் முதல் இதுவரை யூகங்களே எஞ்சியுள்ளனவே தவிர, உண்மைகள் அறியப்படவேயில்லை. பைபிளை எழுதிய நான்கு பேர்களான, மாத்யூ, மார்க், லூக், ஜான் ஆகியோர் குறித்துள்ள சம்பவங்கள் இவற்றை விளக்கப் போதுமானதாக இல்லை. யேசு நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் அற்புதங்கள் சர்ச்கள் செய்துவரும் மோசடிகளுக்குத் துணைபோகும் சாட்சியங்களாகவே அமைகின்றன.
ஆகவே அக்னாஸ்டிக்
ஆகவே, மனிதனுக்கும் கடவுளுக்குமான உறவோ, சாத்தானின் செல்வாக்கோ பற்றிய அறிவு மனிதனுக்குப் போதுமான வகையில், புரியாத வகையில் இருப்பதால் அதனை அக்னாஸ்டிசம், (அய்யுறவு) என்று அழைக்கிறேன் என்றும் ஹக்ஸ்லி தெளிவுபடுத்தினார்.
தேடிவந்த பெருமைகள்
இந்த அளவுக்குப் பகுத்தறிவாளராக இருந்த ஹக்ஸ்லி இங்கிலாந்து அரசின் சுரங்கத்துறையில் பேராசிரியராகவும் பல்வேறு பாடமுறைகளிலும் பேராசிரியராகவும் 31 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அரசு நியமித்த ஆணையங்களில் (ROYAL COMMISSION) எட்டுமுறை இடம்பெற்ற சிறப்புக்குரியவர்.
ராயல் மெடல் எனப்படும் அரசவிருதினை சார்லஸ் டார்வினுக்கு முன்பாகவே 1852இல் பெற்றவர். தொடர்ந்து காப்லி மெடல், டார்வின் மெடல், ஒல்லாஸ்டன் மெடல், லின்னியன் மெடல் போன்ற பல்வேறு விருதுகள் இவரைத் தேடி வந்தன.
சுவீடன் நாட்டு மன்னர் 1873 இல் மிக உயரிய விருது அளித்துப் பெருமைப் படுத்தினார். 1892 இல் பிரிவுக் கவுன்சிலர் ஆக நியமிக்கப்படும் கவுரவத்தையும் பெற்றார்.
1855 இல் அவரது 30 ஆம் வயதில் ஆனி ஹீதான் எனும் சமவயதினரை மணந்து கொண்டு 5 மகள்கள் 3 மகன்கள் எனப் பெரிய குடும்பஸ்தராகவும் இருந்தார்.
அவரது வழித்தோன்றல்களும் அவரைப் போலவே அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கினர். மகன் சர் ஜூலியன் ஹக்ஸ்லி யுனெஸ்கோவின் முதல் இயக்குநரானவர். சிறந்த உயிரியல் அறிஞரும் மானுடப் பற்றாளராகவும் விளங்கிய பகுத்தறிவாளர். மற்றொருவரான ஆல்டஸ் ஹக்ஸ்லி சிறந்த நூலாசிரியர். மற்றொரு மகன் சர் ஆன்ட்ரூ ஹக்ஸ்லி 1963 ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். தம் தந்தையாரைப் போலவே ROYAL SOCIETY இன் தலைவராகும் சிறப்பையும் பெற்றவர்.
மதம் மண்டியிடும்
மதக் கருத்துகளா, அறிவியல் உண்மைகளா என்ற மோதல் வந்தபோதெல்லாம், அறிவியலே வென்று வந்துள்ளது. அறிவியலின் முன் மதம் மண்டியிட்டே வந்துள்ளது. அந்த வகையில் அறிவியலின் முன் அசிங்கமான வகையில் தோற்றுப் போகச் செய்து மதத்தை விரட்டியடித்த பெருமையைப் பெருமளவில் சாதித்துக்காட்டிய சாதனையாளர் ஹக்ஸ்லி என்று ஆக்ஸ்போர்டு பேராசிரியர் டயான்புர்கிஸ் கூறியது முற்றிலும் நிதர்சனமாகியுள்ளது.
மதக் கருத்துகளில் முதன்மையானது என்பதே கடவுள் மனிதனைப் படைத்தது எனும் படைப்புக்கொள்கைதான். அந்தக் கொள்கையின் முதுகெலும்பை முறித்து நடமாடமுடியாமற் செய்தது டார்வினின் பரிணாமக் கொள்கை. அக்கொள்கைபற்றிக் கொஞ்ச நஞ்சம் இருந்த அய்யங்களை எல்லாம் அகற்றி, அறிவுலகம் ஏற்குமாறு செய்த பெருமைக்குரியவர் ஹக்ஸ்லி.
அப்பேர்ப்பட்ட அறிஞர் தம்மை (கடவுள் பற்றிய நம்பிக்கை கொள்ள இயலாதவர் எனும் பொருள்படும் அக்னாஸ்.) டிக் என்று அழைத்துக் கொண்டாலும்; பிறர், குறிப்பாக மதவாதிகள், அவரை கடவுள் நம்பிக்கை அற்றவர் எனப் பொருள்படும் INFIDEL என்று அழைப்பதைப்பற்றிக் கவலைப்படாதவர்.
– சு.அறிவுக்கரசு