அந்தச் சவாலை தொடர்ந்து செய்வோம்

ஏப்ரல் 01-15

 

– வே.மதிமாறன்

ஜாதி வெறியர்கள், சமூக விரோதிகள், கிறிஸ்துவ (தலித் அல்லாத) இந்து மத வெறியர்கள் போன்ற பிற்போக்காளர்களால் கடுமையாக நேரடியாக வெறுக்கப் படுகிறவரும், இந்தக் கும்பல் என்ன காரணங்களுக்காக வெறுக்கிறதோ, அதே காரணத்திற்காகவே பல முற்போக்காளர் களாலும் புறக்கணிக்கப்-படுகிறவர் அநேகமாக இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே.

தலித் விரோதம் கொண்ட, ஜாதி வெறியர்களின் அம்பேத்கர் மீதான வெறுப்பை, சிலை உடைப்பு போன்ற நடவடிக்கைகளால், நேரடியாக உணர முடிகிறது. ஆனால், இந்த முற்போக்காளர்களின், இலக்கியவாதிகளின் அம்பேத்கர் புறக்கணிப்புதான் மிக நுட்பமானதாக, அவர்களைவிட ஆபத்தானதாக இருக்கிறது.

அம்பேத்கரின் கருத்துக்களில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று அம்பேத்கரை விடத் தங்களை மிக முற்போக்கானவர்களாகச் சொல்கிறவர்கள், இன்னொருபுறம் கை தேர்ந்த சந்தர்ப்பவாதிகளையும், பிற்போக் காளர்-களையும், ஜாதி வெறியர்களையும் ஆதரித்துத் தங்களை அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள். தலித் அல்லாதவர்களிடமும் அம்பேத்கரை கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஒரு புறம் முயற்சி செய்து கொண்டு இருக்கும்போதே, இன்னொரு புறம் அம்பேத்கரை தலித் மக்களிடம் இருந்தே அப்புறபடுத்துகிற வேலையும் அதிகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பை போலவே, அவரின் கிறிஸ்துவப் புறக்கணிப்பும் மிக முக்கியமானது. இந்தியாவில் கிறிஸ்துவ மதமாற்றத்தில் தலித் மக்களின் பங்களிப்பு மிக அதிகமானது.

தலித் மக்களிடம் அம்பேத்கரின் எழுச்சி உருவாக்கி இருக்கிற அலை, அம் மக்களை இந்து மத எதிர்ப்புற்கும், கிறிஸ்துவப் புறக்கணிப்புக்கும் தான் கொண்டு செல்லும். இந்து மத எதிர்ப்பை ஆதரிக்கிற அல்லது ஒத்துக் கொள்கிற கிறிஸ்துவ நிறுவனங்கள் மற்றும் அவைகளிடம் பணம் வாங்கிச் சேவை செய்கிற என்.ஜி.ஓ அமைப்புகள் ஒரு போதும் தலித் மக்களின் கிறிஸ்துவப் புறக்கணிப்பை ஒத்துக் கொள்ளாது. பல தலித் அல்லாத கிறிஸ்துவ அறிவாளிகள்கூட அம்பேத்கரின் கிறிஸ்துவப் புறக்கணிப்பை பற்றியும் அவரின் பவுத்தம் குறித்தும் மவுனம்தான் காக்கிறார்கள். அவர்களின் அந்த மவுனத்திற்கு பின் சம்மதமாக மறைந்திருப்பது அம்பேத்கர் மீதான வெறுப்பே. தமிழர்களுக்கு எதிராக ராஜாபக்சே தலைமையில் சிங்கள இனவாதம் கொலை-வெறியில் செயல்பட்டபோது, அதோடு பவுத்தத்தை முடிச்சு போட்டு பவுத்த மதவெறி என்று சபித்த, தலித் அல்லாத கிறிஸ்துவ முற்போக்காளர்கள்; ஈராக் மக்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்திய புஷ், இது இஸ்லாமுக்கும் கிறிஸ்துவத்திற்குமான போர் என்று பகிரங்கமாக அறிவித்துத் தனது ஏகாதிபத்திய வெறிக்குக் கிறிஸ்துவர்களிடம் ஆதரவு திரட்ட முயற்சித்து, ஈராக் மக்கள் மீது கொலைவெறி தாக்குதலை செய்தான். ராஜபக்சேவோடு இணைத்துப் பவுத்தத்தைச் சபித்த, தலித் அல்லாத கிறிஸ்துவ அறிவாளிகள், கிறிஸ்துவத்துடன் முடிச்சு போட்டு, இது கிறிஸ்துவ மதவெறி என்று கொந்தளிக்கவில்லை.

அதை மட்டும் தெளிவாக, சரியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறையாக உணர்ந்துதான் அதைக் கண்டித்தார்கள். இந்த நடவடிக்கைகளில் அம்பலமானது தலித் அல்லாத கிறிஸ்துவர்களின் மதவெறி மட்டுமல்ல; பவுத்த வெறுப்பின் வழியாக அம்பேத்கரின் மீதான காழ்ப்புணர்ச்சியும்தான். இன்று இந்தியா முழுக்க இனவாதம் பேசுகிறவர்களின் ஒப்பற்ற முன் மாதிரி, மராட்டிய மண் மராட்டியர்களுக்கே என்று முழுங்கிய பால்தாக்கரே என்கிற பயங்கரவாதிதான்.

இன்றைய இனவாத தத்துவத்தின் தலைவர் பால்தாக்கரே, தமிழர்-களுக்கு எதிராக, இந்திக்காரர்களுக்கு எதிராகப் பல வன்முறைகளை நடத்தியிருக்கிறார். ஆனால், மராட்டிய மாநிலத்தையே பற்ற வைத்து, ஸ்தம்பிக்க வைத்த வன்முறையைப் பல ஆண்டுகளுக்கு முன் நடத்தினார். அது போன்ற வன்முறையை அதற்கு முன்னும் பின்னும் இப்போதும் நடத்தியது இல்லை. அது, மராட்டிய மண் மராட்டியர்களுக்கே என்பதற்கான போராட்டம் அல்ல; மராட்டியத்தில் உள்ள மரத்வாடா பல்கலை-கழகத்திற்கு, மராட்டிய மண்ணின் மைந்தன் உலகம் வியக்கும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறை. நெருக்கிப் பிடித்தால் மண்ணின் மைந்தர்கள் ஜாதியின் மைந்தர்-களாக, தலித் விரோதிகளாகத்-தான் பிதுங்குகிறார்கள்.

அப்பட்டமான ஜாதி வெறியர்களை மட்டுமல்ல, நுட்பமான ஜாதி உணர்வாளர்-களையும் அம்பலப்படுத்துவதற்கு அண்ணல் அம்பேத்கரைவிடக் கூரிய அறிவாயுதம் வேறு எது? டாக்டர் அம்பேத்கரின பிறந்த நாளை ஒட்டி அவரின் சிந்தனை வழிகளில் ஜாதி ஒழிப்பிற்கான போராட்டத்தைத் தொடர்ந்து செய்வோம். மிகக் குறிப்பாகத் தலித், தலித் அல்லாத முற்போக்காளர்கள், ஜாதி வெறியர்களிடம் டாக்டர் அம்பேத்கரை கொண்டு சேர்ப்பது மிக முக்கியமானது மட்டுமல்ல, சவாலானதும்கூட. அந்தச் சவாலை தொடர்ந்து செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *