– புனித பாண்டியன்,
ஆசிரியர், தலித் முரசு
நாம் ஒரு தேசிய இனம் என்று நம்புவதே மிகப் பெரியதொரு மாயை என்று நினைக்கிறேன். பல்லாயிரக்கணக்கான ஜாதிகளாகப் பிளவுண்டு கிடக்கும் மக்கள் எப்படி ஒரு தேசிய இனமாக முடியும்? இச்சொல்லின் சமூக மற்றும் உளவியல் ரீதியான பொருளில் நாம் இன்னும் ஒரு தேசிய இனமாக உருவாகவில்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அந்தளவுக்கு நல்லது.
அப்பொழுதுதான் நாம் ஒரு தேசிய இனமாக மாற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அந்த இலக்கை அடைவதற்குத் தீவிரமாகச் சிந்திப்போம்.
இந்த இலக்கை அடைய நினைப்பது அமெரிக்காவில் நடைபெற்றதைவிட மிகவும் கடினமானதாக இருக்கும். அமெரிக்காவில் ஜாதிப் பிரச்சினை இல்லை. இந்தியாவில் ஜாதிகள் உள்ளன. ஜாதிகள் தேசிய இனத்திற்கு எதிரானவை. முதலில் சமூக வாழ்நிலையில் அவை பிளவுகளை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு ஜாதிக்கிடையிலும் அவை வெறுப்பையும் பொறாமையையும் உருவாக்குவதால் அவை தேசவிரோதமானவையாகின்றன. நாம் ஒரு தேசிய இனமாக உருவாக வேண்டுமெனில் இந்தத் தடைகளை எல்லாம் நாம் கடந்து வரவேண்டும்.
– டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 13, பக்கம்: 1217.
ஒரு தேசிய இனமாக உருவெடுப்பதற்குத் தடையாக இருப்பதாக அம்பேத்கர் சுட்டிக்காட்டும் ஜாதித் தடைகளை தமிழ்ச் சமூகம் (தன்னை தேசிய இனமாகக் கருதிக்கொள்ளும் வேறு எந்த சமூகமும்) கடந்து விட்டதா என்பதுதான் மிகமிக அடிப்படையான கேள்வி. இன்று தமிழ்த் தேசியம் குறித்து தீவிரமாக விவாதிப்பவர்கள் அம்பேத்கர் சுட்டிக்காட்டிய ஜாதித் தடைகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. மாறாக, திராவிடம்தான் தமிழ்த் தேசிய உருவாக்கத்திற்குத் தடையாக இருப்பதாகப் பரப்புரை செய்கிறார்கள். இதற்குப் பதில் சொல்பவர்களில் சிலரும் திராவிடக் கருத்தியல் தடையாக இல்லை என்பதற்குச் சான்றுகளைப் பகர்கிறார்களே தவிர, ஜாதிய முரண்களைச் சுட்டிக்காட்டத் தவறுகிறார்கள். பல நூறு ஜாதிகளாலான தமிழ்ச் சமூகத்தை ஜாதி நீக்கம் செய்யாமல் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம் என்பது சாணிக் குவியலின் மீது கட்டடம் எழுப்புவதற்கு ஒப்பானது.
தமிழ்நாட்டின் எல்லைப் பிரச்சினை, அண்டை மாநிலங்களிடையேயான நதிநீர்ப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை, ஈழப்பிரச்சினை, மாநில தன்னாட்சிப் பிரச்சினை என அரசியல் ரீதியாக அவ்வப்போது தமிழின உணர்வுகளைத் தட்டியெழுப்பும் வகையில் நடைபெறும் போராட்டங்களை வைத்து தமிழினம் ஓர்மை பெற்றுவிட்டதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இது தற்காலிகமானது. அரசியல் போராட்டம் முடிந்ததும் ஓர்மை காணாமல் போய்விடுகிறது. அரசியல் ரீதியாக கட்டமைக்கப்படும் தமிழின ஓர்மை குடும்பம் _ சமூகம் _ பண்பாடு என்ற எல்லைக்குள் கடத்தப்படுவதில்லை என்பதை உணர வேண்டும்.
அண்டை மாநிலத்தின் முரண்களை முன்வைத்தோ, இந்திய ஆட்சி அதிகார முரண்களை முன்வைத்தோ _ தன்னைத் தமிழனாக அடையாளப்படுத்திக் கொள்பவன் _ சக தமிழனிடம் ஜாதிக்காரனாக அடையாளப்படுத்திக் கொள்கிறான். அரசியல் அரங்கில் எழுச்சி பெற்ற ஓர்மை சமூக அரங்கில் நீர்த்துப் போய்விடுகிறது.
மொழிப் பிரச்சினையை முன்வைத்துப் போராடும் தமிழர்கள், ஏன் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பாகுபாட்டையும் வன்கொடுமைகளையும் கட்டவிழ்த்து விடுகிறார்கள்? தமிழக அரசே ஒப்புக் கொண்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, எட்டாயிரம் கிராமங்களில் ஆதிதிராவிட தமிழனுக்கு மட்டும் ஏன் இன்னும் தனிக்குவளையில் தேநீர் வழங்கப்படுகிறது? தமிழன் ஓர்மை பெற்றது உண்மை எனில், ஏன் நாள்தோறும் லட்சக்கணக்கான திருமணத் தகவல்கள் _ தமிழன் என்ற அடையாளத்துடன் அறிவிக்கப்படாமல் _ தனித்தனி ஜாதிகளாக அறிவிக்கப்படுகின்றன? ஆதித்தமிழன் பேசும் மொழி ஏன் மீதித் தமிழர்களால் எள்ளி நகையாடப்படுகிறது? தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் அண்டை மாநிலத்தவர்களால் அபகரிக்கப்பட்டது பற்றியும் தமிழ் மண்ணின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கூக்குரல் எழுப்புகின்றவர்கள், பல நூறு ஆண்டுகளாக சேரித் தமிழர்களை தமிழனின் ஊர் எல்லையிலிருந்து ஏன் அன்னியப்படுத்தி வைத்துள்ளனர்? ஆதிக்க மொழியான சமஸ்கிருதம் பேசுபவனைக் கோவில் கருவறைக்குள் அனுமதிக்கும் தமிழர்கள், தொல்குடித் தமிழனை மட்டும் கோவிலுக்கு வெளியே நிறுத்தும் இனப் பாகுபாட்டைக் கடைப்பிடித்துக் கொண்டிருப்பதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியமா? புறக்காரணிகளைக் கண்டு பொங்கி எழுகின்றவர்கள் தமிழனின் அகக் காரணிகளைக் கண்டு வெட்கப்பட வேண்டாமா? பல நூற்றாண்டுகளாகத் தொடரும் இத்தகைய முரண்பாடுகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டாமா? இத்தகு ஜாதிய முரண்பாடுகளை எல்லாம் தீர்ப்பதற்காகப் போராடும் பெரியார் இயக்கங்கள் மீது அவதூறுகளை வீசிவிட்டு, ‘தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்கும் போது ஜாதிய முரண்கள் எல்லாம் காணாமல் போய் விடும்’ என்று பிதற்கிறார்கள்.
ஜாதியத்தை அழித்தொழிக்காமல் எந்த தேசியத்தையும் வென்றெடுக்க முடியாது என்பதுதான் அம்பேத்கரியலின் அரிச்சுவடி. ஜாதிய முரண்பாடுகளைத் தீர்க்காமல் கட்டப்படும் தேசியம் கண்டிப்பாக தமிழ்த் தேசியமாக இருக்காது; அது ஜாதி இந்து தேசியமாகத்தான் இருக்கும்.
தமிழனின் அகமுரண்பாடுகளுக்குக் காரணமான இந்து உளவியலைத் தகர்த்து பகுத்தறிவை விதைத்து மாபெரும் இயக்கம் கண்டவர்தான் தந்தை பெரியார். தன்னை இந்துவாகக் கருதும்வரை தமிழன் ஓர்மை பெற முடியாது என்பதால்தான் இந்து கடவுள்கள், கோவில்கள் முதல் அதற்கு ஆதாரமான அனைத்து நூல்களையும் புனிதமானவை என்று சொல்லப்பட்ட வேதங்களையும் வேரறுக்க தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் அவர். தமிழனுக்கென ஒரு தேசத்தை உருவாக்குவதல்ல பெரியாரின் இலக்கு. அவனை ஜாதியொழிந்த தமிழனாக (சூத்திர அடையாள மறுப்பு) மாற்றுவதற்குத்தான் அவர் இறுதிவரை போராடினார். தமிழன் அல்லது திராவிடன் என்ற இனவரைவியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதல்ல பெரியார் இயக்கம். தமிழர்களைச் சமத்துவமிக்க மக்களாக மாற்ற வேண்டும் என்ற மனிதநேயக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே பெரியார் இயக்கம்.
இந்திய நாடு அன்னியர்களிடமிருந்தபோது உருவானதற்குப் பெயர் நாட்டுப் பற்று. அது தேசிய உணர்வன்று. நாட்டுப்பற்றும்கூட ஆங்கிலேயர்கள் வெளியேறியவுடன் காணாமல் போய்விட்டது. அந்த அதிகாரத்தை இந்நாட்டின் ஆளும் வகுப்பினரான பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொண்டனர். அதனால்தான் இன்றளவும் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு அதிகாரமும் பொது வளங்களும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கப்படவில்லை. தன்னாட்சி மற்றும் அதிகார மாற்றம் போன்றவை தேசிய உணர்வை வளர்த்தெடுக்கப் பயன்படாது. ஆங்கிலேயர்கள் வெளியேறி அரை நூற்றாண்டு கடந்தும் எவ்விதப் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இங்கு நேர் செய்யப்படவில்லை. இந்நிலையில்தான் மனுதர்மத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமூக அரசியல் பொருளாதார நிர்வாகத்தை அடியோடு வீழ்த்த அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் தீவிர அக்கறை செலுத்தினார் அம்பேத்கர். இதை ஓர் அரிய வாய்ப்பாகக் கொண்டு எந்தப் பாகுபாடுகளுமற்ற ஒரு தேசத்தைக் கட்டமைப்பதற்காக அவர் அடித்தளமிட்டார். இது மொழி அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ, இன அடிப்படையிலோ இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால்தான் _
மதச்சார்பற்று இருக்கும் வகையில் _ அதை வடிவமைத்தார். அதுமட்டுமல்ல, சுதந்திரம் _ சமத்துவம் _சகோதரத்துவம் என்ற உயரிய கொள்கையின் அடிப்படையில் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு தேசமாகத் திரண்டெழ வேண்டும் என்று அவர் விரும்பினார்.
அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதோடு அம்பேத்கரின் பணி நிறைவடைந்துவிடவில்லை. அதற்கு முன்பும் பின்பும் ஜாதிகளாலான சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்காகத்தான் அவர் போராடினார். அவர் உருவாக்கிய ஜாதியை அழித்தொழிக்கும் செயல்திட்டமும் இந்து மதத்தை முற்றாக மறுதலித்து பவுத்த பண்பாட்டு இயக்கத்தை அவர் மீட்டுருவாக்கம் செய்ததும் – இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பெண்கள் _ சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்ற உன்னதமான லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைச் செய்யும் பொழுதுதான் 2000 ஆண்டுகளைக் கடந்தும் உயிர்ப்போடு வாழும் ஜாதியையும் அது உருவாக்கியிருக்கும் பாகுபாடுகளையும் இழிவுகளையும் வேரறுக்க முடியும். வெறும் தேசிய உணர்வை ஊட்டுவதன் மூலம் இது சாத்தியமாகாது. ஆனால் இங்கு முன் வைக்கப்படும் தமிழ்த் தேசியம் மொழியை அடிப்படையாகக் கொண்டது. சிக்கல் என்னவெனில், தமிழ் ஜாதி காப்பாற்றும் மொழியாக இருக்கிறது. மொழியே ஜாதி காப்பாற்றும் மொழியாக இருக்கும் போது – அதை ஜாதி நீக்கம் செய்யாமல் _ அதன் அடிப்படையில் உருவாக்கப்படும் தேசியம் என்னவாக இருக்கும் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை.