கேள்வி : தமிழகத்தில், காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்திலிருந்து இன்றைய திராவிடக் கட்சி ஆட்சி வரை, தேர்தலில் தோல்வி அடைந்த கட்சி எதுவாக இருந்தாலும், ஜனநாயகம் தோற்றது. பணநாயகம் வென்றது என சொல்வது இன்னும் நின்றபாடில்லையே. இப்படி ஓலமிடுவது எப்போது நிற்கும்? இதுபோன்று, பிற மாநிலங்களில் தேர்தலில் தோல்வி அடைந்த கட்சியினர், இப்படிச் சொல்வது உண்டா? இதுகுறித்து தங்கள் கருத்து?
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : பிற மாநிலங்களில் இவ்வளவு பணம் தேர்தலில் விளையாடியதே இல்லை. முன்பு இங்கேகூட சில கட்சிகள் சில்லரையாக ஒரு ஓட்டுக்கு (சில பகுதிகளில்) 1 ரூபாய், 2 ரூபாய் கொடுத்த சம்பவம் எங்கோ கொஞ்சம் இருந்தது.
அப்படி பணம் கொடுத்தும், கொடுத்தவர்கள் ஜெயித்ததில்லை. வடமாநிலங்களில் ஆதிக்கவாதிகள் எஜமானத்தனத்திற்கு வாக்களித்தனர்; பிறகு ஜாதி, மதம் வந்தது. இப்போது மெல்ல மெல்ல அங்கே விழிப்புணர்வு வந்தது. இங்கே வரவழைக்க சில நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட அனைத்து நண்பர்களும் ஒன்றுசேர வேண்டும்.
கேள்வி : மத்திய பா.ஜ.க. அரசின் பொருளாதாரக் கொள்கை எந்தத் திசை நோக்கிச் செல்கிறது என்பதற்கு இந்தியப் பங்குச் சந்தையின் போக்கைக் குறியீடாகக் கொள்ளலாமா? – நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்.
பதில் : நிச்சயமாக. கார்ப்பரேட்களும் பணக்காரர்களும்தான் பங்குச் சந்தை நிலவரத்தைப் பார்த்து நடந்து கொள்பவர்கள்.
எளிய மக்கள் தொலைக்காட்சி செய்தியில்கூட இதைக் கேட்டாலும் புரிந்துகொள்வோர் மிக மிகக் குறைவு. கிராமச் சந்தைக்குப் போவதற்குக் கையில் காசில்லையே என்று கவலைப்படும் எளிய மக்களே பெரும்பான்மையினர்.
கேள்வி : மத்திய காங்கிரஸ் தலைமை அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான தோல்வியிலிருந்து தகுந்த பாடம் கற்றுக்-கொண்டதாக அவர்களது நடவடிக்கைகளி-லிருந்து எந்த அறிகுறியும் தெரியவில்லையே?
– நா.மணிமாறன், வேலூர்
பதில் : அதற்கு நாம் என்ன செய்வது? ஒரு நல்ல, வீரியத்துடன் செயல்படும் எதிர்க்கட்சியாக இயங்க வாய்ப்புகள் ஏராளம் ஆளுங்கட்சியால் தரப்படுகின்றதே!
கேள்வி : உலகு போற்றும் அறிவும் ஆற்றலும் நமக்கு இருந்தும், நம் நாடு முன்னேற முடியவில்லையே?
– வே.சொர்ணம், ஊற்றங்கரை
பதில் : காரணம் ஜாதிவெறி, மதவெறி, பதவி வெறி ஆகியவையே!
கேள்வி : இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்களைச் சுட்டுத்தள்ள கடற்படைக்கு முழு உரிமை உள்ளது என இலங்கைப் பிரதமர் ரனில் மீண்டும் மிரட்டல் விடுத்திருப்பது அண்மையில் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் சரியான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறதா?
– ஜி.சுருதி, பெரியார் நகர்
பதில் : அதுபற்றி கடும் கண்டனத்தை அல்லவா நமது பிரதமர் தெரிவித்து (மன்னிப்பு) வருத்தம் தெரிவிக்க வைத்திருக்க வேண்டும்! செய்யவில்லை. ராஜபக்சேவையும் சந்தித்து அல்லவா குசலம் விசாரித்துத் திரும்பியுள்ளார்! ஆட்சி மாறியதே தவிர, காட்சி மாறவில்லையே என்ன செய்வது?
கேள்வி : அரசின் திட்டங்களை நடை-முறைப்படுத்துவதில் உள்ள முட்டுக்-கட்டைகளை அகற்ற மக்களுக்கு இருக்கும் உரிமைகள் யாவை? – அ.முகில், ஊற்றங்கரை
பதில் : பேச்சுரிமை, கருத்துரிமை, நீதிமன்றம் மூலம் சட்டப் பரிகாரம் தேடும் உரிமை ஆகிய உரிமைகள்.
கேள்வி : ஓட்டளித்து ஆட்சியில் அமர்த்திய மக்களை முற்றிலும் மறந்துவிட்டு அதற்கு மாறாக கடவுள்களுக்குத் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தீவிரம் காட்டும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரின் பைத்தியக்காரத்தனமான போக்குக் குறித்து?
– பா.செங்குட்டுவன், திருவள்ளூர்
பதில் : நீங்களே அருமையாகக் குறிப்பிட்டுள்ள வாசகம் பைத்தியக்காரத்தனமான போக்கு. வாஸ்து முதல் பல்வேறு வக்கிர வேலைகளைச் சந்தித்து அங்கே கேலிக்கூத்தான ஆட்சி நடக்கிறதே!
கேள்வி : தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளது நடைமுறையில் சாத்தியமா? – வே.அன்பரசன், திருச்சி
பதில் : பேசுவார்கள்; பேசுகிறார்கள். தீர்வு அவ்வளவு எளிதில் எப்படிக் கிடைக்கும் என்பதுதான் மிகப் பெரிய கேள்வி!
கேள்வி : 1000 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பது _ காமராசரின் கல்விப் புரட்சியின் அடித்தளம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது என கணிக்கலாமா?
– மா.வேல்முருகன், திருவண்ணாமலை
பதில் : அதைக் கண்டித்து அறிக்கை தந்துள்ளோம். அப்படிப்பட்ட செய்தி உண்மை நடைமுறையானால், பெருங் கிளர்ச்சி வெடிப்பது நிச்சயம். நிச்சயம்!
கேள்வி : இலங்கை அதிபர் தேர்தலில் என்னுடைய தோல்விக்கு இந்தியாவே காரணம் என முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறியுள்ள கருத்து ஏற்புடையதா? – கி.மாசிலாமணி, மதுராந்தகம்
பதில் : அதற்குப் பிறகு நம்ம பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளாரே இராஜபக்சே. எதற்கு? புரியவில்லையே! வெங்கடாஜலபதி கிருபை என்னவானது?
கேள்வி : நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆதரித்ததற்கு ஜெயலலிதா கூறியுள்ள காரணங்கள் சரியானவையா? – நீ.மதியழகன், சைதை
பதில் : உண்மைக் காரணம் உலகறிந்த ஒன்று. அவர் கூற்றை எவரும் நம்பமாட்டார்கள்!
கேள்வி : இந்து பண்பாட்டில் பெண்களுக்கு இடமே இல்லை என்று நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர் கூறியுள்ளாரே? இதைக் கண்டு பெண்கள் பெரிதாக எதிர்க்கவில்லையே ஏன்?
– ஆ.கி.பிரியா, கோவை
பதில் : பெண்கள் உள்ளபடியே போராடும் உணர்வுடன் செயல்பட்டால்தானே, நீங்கள் கூறுவது புரியும். இப்போது பலரும் விளம்பரத்திற்குத்தானே!
கேள்வி : மாட்டுக்கறி விருந்து -_ இந்துத்துவாவிற்கு மருந்து ஒரு புதிய பொன்மொழியாக மாறியிருக்கிறதே. இந்தத் திருவிழா, சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் நடத்தப்படுமா? – நா.கவுதமன், உடுமலைப்பேட்டை
பதில் : மருந்து எங்கே தேவைப்படுகிறதோ அங்கே மக்களே தானே முன்வந்து நடத்துவார்கள்!
அது மாட்டுப் புத்திரர்கள் நிலைப்பாட்டைப் பொறுத்தது!