– சு.அறிவுக்கரசு
புத்தியை வளர்த்துக் கொள்வதற்குப் பதில் பக்தியை வளர்க்கும் தீண்டத்தகாத மக்களைப் பார்த்துச் சொன்னார், உங்கள் கழுத்தில் சூட்டிக் கொண்டுள்ள துளசிமாலை வட்டிக் கடைக்காரர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றாது. ராம நாம பஜனை பாடுவதாலேயே உங்கள் வீட்டுச் சொந்தக்காரர் வாடகையைக் குறைக்க மாட்டார். பண்டரிபுரக் கோவிலுக்குப் போய் வருவதாலேயே உங்களுக்கு மாதக் கடைசியில் சம்பளம் கொடுக்க-மாட்டார்கள்.
சமுதாயத்தின் பெரும்பகுதி மக்கள் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பதால், குதர்க்கமான சுயநலங் கொண்டவர்கள் இவர்களை ஏமாற்றித் தங்களின் சமூக விரோதச் செயல்களை அரங்கேற்றிக் கொள்கிறார்கள். எனவே, உங்களுக்கு நான் சொல்வதெல்லாம், சிறிதளவு அரசியல் அதிகாரம் கிடைத்தாலும் பயன்படுத்திக் கொண்டு முன்னேற முயல வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் துன்பங்களும், துயரங்களும் உங்களைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சக்திகள் வளர்ந்துகொண்டேதான் இருக்கும் என்ற அறிவுரை எத்தனைபேர் காதுகளில் தைத்து மனதில் மாற்றத்தை, விழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது?
வரைவுக்குழு முழு சுயேச்சை பெற்ற அமைப்பாக இல்லை. தொடக்கத்திலிருந்தே பல வகைகளில் எங்கள் பணிக்கு ஊனங்கள் உருவாக்கப்பட்டன. அவர்கள் சில வரையறைகளை எங்களுக்குக் கொடுத்து அதன் நான்கு மூலைகளுக்குள் அடங்குமாறு அரசமைப்புச் சட்டத்தை எழுதித் தருமாறு சொன்னார்கள். வரைவுக் குழுவில் 7 பேர், அரசியல் நிர்ணய சபையில் 308 பேர்கள் வரைவுக்குழுவுக்கு மேல் அதிகாரம் பெற்ற சக்திகள் இருந்தன. அவற்றிற்குத் தக்காற்போல வரைவுக்குழு செயலாற்ற வேண்டி நேரிட்டது. வரைவு அரசமைப்புச் சட்டம் ஏழு முறைகளுக்குமேல் அடித்து, மாற்றி எழுதப்பட்டது. அரசாங்க அமைச்சரவையைச் சேர்ந்தவர்களும் காங்கிரசு பார்லிமெண்டரிக் கட்சியைச் சேர்ந்தவர்களும் சொன்ன மாதிரியெல்லாம் எழுத வேண்டி நேரிட்டது; அவர்கள்தானே அரசமைப்புச் சட்டத்தை சபை அங்கீகரிப்பதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் பெற்றவர்கள்? அவர்கள் சொன்னதையெல்லாம் சட்டப்பூர்வ வார்த்தைகளில் எழுதும் பணி வரைவுக் குழுவுடையதாகிவிட்டது.
* * *
2.9.1953இல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின்போது அரசமைப்புச் சட்டத்தின் குறைகளுக்குக் காரணம் அம்பேத்கர்தான் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவ்விவாதத்தின் முடிவில் டாக்டர் அம்பேத்கர் பிரகடனப்படுத்தினார். அய்யா, நான்தான் அரசமைப்புச் சட்டத்தை எழுதினேன் என என் நண்பர்கள் சொல்கின்றனர்; ஆனால் நான் கூற விரும்புகிறேன், அதைக் கொளுத்தும் முதல் ஆளாகவும் நானே இருப்பேன். எனக்கு அச்சட்டம் வேண்டாம். அது யாருக்குமே பொருந்துவதாக இல்லை
SIR, MY FRIENDS TELL ME THAT I HAVE MADE THE CONSTITUTION. BUT I AM QUITE PREPARED TO SAY THAT I SHALL BE THE FIRST PERSON TO BURN IT OUT. I DO NOT WANT IT; IT DOES NOT SUIT ANYBODY…”)
நேர்மையானவர்கள் ஆட்சியில் இருந்தால் அரசமைப்புச் சட்டம் தவறாகப் பயன்-படுத்தப்பட மாட்டாது. நேர்மையற்றவர்கள் ஆண்டால்…? அவரே மிகக் குறுகிய காலத்தில் பார்த்துவிட்டார், பார்ப்பன பனியா கூட்டாட்சியால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்-பட்ட மக்கள் ஒரு நன்மையையும் பெற முடியாது என்பதும் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற முடியாது என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இந்து சீர்திருத்தச் சட்ட முன்வரைவு (HINDU REFORM BILL) பண்டித நேரு, பாபு ராஜேந்திர பிரசாத், கோவிந்த வல்லப பந்த் ஆகியோரால் எந்த அளவுக்கு எதிர்க்கப்பட்டது என்ற விஷயமும் அவரது கருத்தை உறுதி செய்தன.
* * *
பதினான்காம் பிள்ளையாக அவர் பிறந்தார் என்றாலும் பாதிக்கு மேற்பட்ட பிள்ளைகளை அவர் தந்தை பறிகொடுத்தார் என்பதற்குக் காரணம் வறுமைதான். இவரும் தமக்குப் பிறந்த குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் வளர்க்க வசதியற்று இருந்ததால்தான், இறப்புக்கு ஆளாக நேரிட்டது. அத்தகைய கொடுமையான வறுமைச் சூழலிலும், வளமாக வாழ்ந்திட எண்ணினாரில்லை. தாம் படித்த படிப்புக்குப் பெரும் பெரும் பதவிகள் அவரை அடைந்திடும் வாய்ப்பு உண்டு. ஆனாலும் அவர் அதனை விரும்பவில்லை, நாடிப் போகவும் இல்லை. மாறாக, தாம் எழுந்த சமுதாயத்தின் மேன்மைக்காக உழைப்பதையே கடமையாகக் கொண்டார்.
வறுமையோடு வாழ்ந்த நிலையில் கார்ல் மார்க்சின் வாழ்க்கையோடு ஒப்பிடக் கூடியவாறு வாழ்ந்தவர் அம்பேத்கர். தம் குழந்தைகளை வறுமைக்கு வாரிக் கொடுத்தவர்கள் இருவருமே! அதிலும் அம்பேத்கரின் நிலை சற்றுக் கூடுதல். மார்க்சுக்கு உதவிட மனமும், பொருளும் படைத்த எங்கல்ஸ் கிடைத்திருந்தார். இவருக்கு யாரும் இல்லை. ஆனாலும் அவர் வளமையை நாடி ஓடிப் போகவில்லை.
இங்கே, எவ்வளவு பேர் அவரால் உயர்ந்தார்கள். எவ்வளவு பேர் அதிகாரம், அந்தஸ்து பெற்றார்கள்! அத்தனை பேரும் சமுதாயத்திற்குச் செய்தது என்ன? தன் பெண்டு, பிள்ளை, சம்பாத்தியம், தானுண்டு என்கிற வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தானே! ஆட்சி அதிகாரிகளாக வந்தவர்கள்கூட, பிரதிலோம விவாகம் (புறமணம்) செய்து கொண்டு அவாள் ஆகிப்போய்த் தொலைந்தவர்கள்தானே!
நூல்: அம்பேத்கர் வாழ்வும் பாடமும்