பி.பி.சி. நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஒரு நீதிமன்றத்தால் இந்தியாவில் ஒளிபரப்ப தடை செய்யப்பட்ட இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை இணைய தளத்தில் உலாவந்தபோது பார்க்க நேர்ந்தது.
மருத்துவக் கல்லூரி மாணவியான ஜோதி தன் நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு பேருந்து ஒன்றில் வரும்போது நிகழ்ந்த அந்தக் கொடூரமான பாலியல் வன்கொடுமை யார் யாரால் எந்த மாதிரியான சூழ்நிலையில் நடந்தது என்பதனைச் சொல்லும் ஒரு ஆவணப் படம் அது.
பொருளாதாரத்தில் நடுநிலையில் உள்ள குடும்பம் ஒன்றில் பிறந்த ஜோதியின் விருப்பத்தினை நிறைவேற்றத் துணிந்த அவள் தந்தை தன்னிடம் இருந்த சிறிய பங்கு நிலத்தினை சகோதரர்களின் அறிவுரையையும் மீறி விற்று மருத்துவப் படிப்பில் சேர்க்கிறார்.
அந்தப் பணமும் போதாது என்ற நிலையில் இரவில் (இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை) கால்சென்டரில் வேலைக்குச் சென்று தனது மருத்துவப் படிப்பை முடித்தார் ஜோதி. அடுத்த நாளிலிருந்து Internship என்று சொல்லக்கூடிய பயிற்சி மருத்துவராகச் செல்லவேண்டிய நிலையில் இருந்த ஜோதியை, தன் கிராமத்தில் மருத்துவமனை நிறுவி உதவிபுரிய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கினை தன்னிடத்தில் கொண்டிருந்த ஜோதியை, ஒருமுறை கடைவீதியொன்றில் தன்னிடம் இருந்த பணப்பையை திருடிச் சென்ற சிறுவனை, காவலர் ஒருவர் பிடித்து அடித்தபோது அவனை அவரிடமிருந்து விடுவித்து அவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து இனிமேல் இந்த மாதிரி திருட்டு வேலைகளைச் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தி அவன் தேவைகளை நிறை-வேற்றியதாக அவருடைய நண்பரால் புகழப்படும் ஜோதியைத்தான் பாலியல் வன்புணர்வு செய்தார்கள் என்ற உண்மையைக் காட்டுகிறது பி.பி.சி.
இந்(திய)துச் சமூகம் பெண்களை வீட்டைவிட்டு வெளியில் செல்ல அனுமதிக்காது. அப்படிச் செல்லும் இன்றைய பெண்கள் சினிமாக் கலாச்சாரத்தினைப் பின்பற்றுகிறார்கள்.
என் பெண் இப்படி வெளியில் சென்றால் நான் என் உறவினர்கள், சமூகத்தினர் முன்னிலையில் என் பெண்ணை எரித்து விடுவேன் என்று ஒரு வழக்குரைஞர் சொல்கிறார். பெண்கள் பூ போன்றவர்கள் அழகு, மென்மை உடைய இவர்கள் வீட்டில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் கோவிலில் வைக்கப்பட்ட மலர்போல் பூஜிக்கப்படுவார்கள், தெருவிற்கு வந்தால் மிதித்து நாசம் செய்யப்படுவார்கள் என்றும், வைரம் போன்றவர்கள் வீட்டிற்குள் இருந்தால் மதிக்கப்படுவார்கள். வெளியே கிடந்தால் நாய்கள் தூக்கித்தான் செல்லும் என்றும் இன்னொரு வழக்குரைஞர் சொல்கிறார். கொஞ்சம்கூட வெட்கமோ குற்ற உணர்ச்சியோ இன்றி மிக்க பெருமையுடன், இங்கு இருபது சதவீதம் பெண்களே நல்லவர்கள். இதற்கு (பாலியல் வன்கொடுமைக்கு) அந்தப் பெண்ணே முழுக் காரணம் என்று இவ்வழக்கில் குற்றம் புரிந்த ஒருவர் கூறுகிறார். இவையெல்லாம் இந்த ஆவணப் படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் 20 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறாள் என்ற புள்ளி விவரம் அனைத்து நாடுகளும் அறிந்த ஒன்றுதான். இதுபோன்று இந்தியாவின் பல இடங்களில் குழு வன்புணர்வுக் குற்றங்கள் நடைபெற்றிருந்தாலும் நாட்டின் தலைநகரமான டெல்லியில் நடைபெற்றதால் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தெரிந்து, நாறிப்-போன நிகழ்ச்சியாகி விட்டது என்பது நமக்கும் தெரிந்ததுதான். இருந்தாலும் எதற்காக இந்தப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டது?
தடை ஏன்?
ஒரு பெண்ணின் குடல் பகுதியின் ஒரு துண்டு, பிறப்புறுப்பின் வழியாக வெளியேறும் அளவிற்கு குழுவாக வன்புணர்வு செய்யும் மிருகத்தனமான வலிமையுள்ள இளைஞர்-களைக் கொண்டது எங்கள் பாரதம் என்பதை மற்ற நாடுகளில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளக் கூடும் என்பதனாலா? மருத்துவக் கல்லூரிக்குச் சென்று படிக்கும் அளவிற்கு பெண்களுக்கு வாய்ப்பளித்தாலும் அவளை பாலுறவுப் பண்டமாகவே பார்க்கும் உயர்ந்த நோக்கினை மற்ற நாடுகளும் பின்பற்றினால் வல்லரசாக மாற நடக்கும் போட்டியில் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்ற நோக்கிலா?
எங்கள் நாட்டில் வழங்கப்படும் கல்வி வருமானத்தைப் பெறுவதற்காக மட்டுமே _ மற்ற மனிதர்களை மதிக்கும் நோக்கில் அல்ல; குறிப்பாக பெண்களை! கல்வியறிவு பெற்றவர், பெறாதவர், உயர்பதவிகளில் இருப்பவர், உயர் பொறுப்புகளில் உள்ளவர் என்று யாராக இருந்தாலும் பெண்களைப் பற்றிய பார்வையில் _ உடல், நிறம், உடை போன்ற கருத்துகளில் ஒரே மாதிரிதான் சிந்திப்போம் என்பதனை குற்றம் செய்தவன் என்று நீதிமன்றத்தால் காட்டப்பட்டு சிறையில் இருப்பவன் கூறுவது மட்டுமல்லாமல், வழக்குரைஞராகப் பணியாற்றும் இருவரும் அதே முறையில் கூறுவதை மற்ற நாட்டவர் மட்டும் அல்லாது இங்கு உள்ள கொஞ்சம் உணர்ச்சி உள்ள பெண்கள் சிலரும் உணர்ந்துவிட்டால் இவர்கள் கட்டிக்காக்க நினைக்கும் பாரதப் பண்பாட்டுப் பெருமை சிதைந்துவிடும் என்ற காரணத்தாலா?
பதினாறு வயதுள்ள ஓர் ஆண் இந்த வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டபோது, சட்டப்படி அவன் ஒரு சிறுவன். அவனுக்கு வழங்கப்படும் தண்டனை சிறுவர்களுக்கானதாக இருக்க வேண்டும் என்ற வாதம் சிலரால் எழுப்பப்பட்டது. 12, 13 வயதில் சட்டப்படி (இந்து தர்மப்படி வடநாட்டில் இன்னும் குறைந்த வயதுத் திருமணங்கள் நடக்கின்றன) திருமணம் நடத்தப்படுகிறதே, அது சரி என்றால் 15-_16 வயதுடைய பையன் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு அல்லது துன்புறுத்தியதற்கு ஏன் தண்டிக்கப்படக் கூடாது? என்று ஜோதியின் தாய் எழுப்பும் கேள்வி இந்து தர்மத்தின்மீது கேட்கப்படும் கேள்வி என்பதாலா?
இவர்கள் கூறுவது போல ஒழுக்கமுள்ள பெண் இரவில் ஆண் நண்பருடன் தனியாக(!) வரமாட்டாள்.
ஆண் நண்பருடன் சென்றதுதான் காரணம் என்றால் ஒருவேளை கூடச் சென்றவர் ஆண் நண்பர் இல்லை; அவர் அப்பெண்ணின் மாமா, சகோதரர், கணவர், தாத்தா என்பதற்கு சான்றிதழ் அளித்து-விட்டால் இத்தகைய கொடுமைகள் நிகழ்த்தப்படாதா? எத்தனையோ பெண்களின் கணவன், தாத்தா, சகோதரனை அடித்துப் போட்டுவிட்டு அவர்களின் கண் எதிரே பாலியல் சித்திரவதைக்கு ஆளாவதில்லையா?
இவர்கள் கூறும் உறவினர்கள் எனப் படுபவர்களாலேயே வீட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்-படுவதில்லையா? போன்ற வினாக்கள் எழும் என்பதனாலா?
ஒரு பெண்ணை அசிங்கப்படுத்த வேண்டும் என்றால், அவளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க வேண்டும் என்ற கலாச்சாரம் அங்கே நீண்டகாலமாக இருந்து வருகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கெப்லெ கல்லூரியின் வரலாற்றாளரும், எழுத்தாளரு-மான முனைவர் மரியா மிஸ்ரா எடுத்துரைக்கிறார். ஓர் ஆணை அடிப்பதில்லையா அப்படித்தான் இதுவும் என்கிறார் குற்றவாளிகளின் வழக்குரைஞர். இது தான் இந்திய மனநிலை. இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக 71 வயது கன்னியாஸ்திரி பாலியல் வன்கொமைக்கு உள்ளாக்கப்படுவதையும் இதனோடு இணைத்துப் பார்த்தால் நம்மால் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
பெயர் வெளியே தெரியவேண்டாம் என்பதற்காக நிர்பயா என்று பரவலாக அழைக்கப்பட்ட ஜோதி சிங் பாண்டே மீதான கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கும், கொலைக்கும் காரணம் அந்த அறுவர் மட்டும் தான் என்று இந்த ஆவணப்படம் குற்றம் சாட்டவில்லை; மாறாக, ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் மீதும், பண்பாடு – பழக்கவழக்கம் – ஒழுக்க நெறிமுறைகள் மீதும் கேள்வி-யெழுப்புகிறது. (அதைத் தான் & அதனால் தான் இப்படம் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசுவதாகப் பலர் திரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.) அந்த அறுவரின் பின்னாலும் ஒளிந்திருக்கும் இந்திய சமூகத்தை, அவர்களுக்கு இந்த மனநிலையைத் தந்த பண்பாட்டு வரலாற்றை எடுத்துக்காட்டுகிறது என்பதுதான் இந்த ஆவணப்படம் தடை செய்யப்பட்டதற்கான காரணம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், பூனை தன் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டு என்று சொல்வதைப் போலத்தான் அது. இந்தப் படத்தின் மீதான தடையெல்லாம் நடப்பிலும், வருங்காலத்திலும் நிகழும், நிகழவிருக்கும் பாலியல் கொடுமைகளைத் தடுக்க எள்ளளவும் பயன்படாது. இந்த ஆவணப்படம் சுட்டிக் காட்டும் இந்து – சனாதன தரும – மனுதர்ம _ ஆணாதிக்க _ இந்திய மனநிலையை மாற்றும்வரை எந்த மாற்றமும் நிகழாது.
– இறைவி