இந்து ராஜ்யம் என்ற ஒன்று அமைந்தால் அது பெரும்சோகமாக முடியும் அம்பேத்கரின் கணிப்பு

ஏப்ரல் 01-15

இந்துத்வ கொடுங்கோன்மை ஆட்சிக்கான வித்து தேர்தல்  என்னும் அமைப்பு முறையின் வழியாக மத்தியில் நிறுவப்பட்டிருக்கிற நிலையில், அம்பேத்கரை இன்னும் ஆழமாகக் கற்றுணர்வதும், அவரைக் காவிகளுக்கெதிரான கூர்மையான ஆயுதமாகப் பயன்படுத்தவல்ல அறிவாற்றல் கொண்டவர்களாக மாற வேண்டியதும் நம் கடமையாகிறது. அதற்கு அம்பேத்கரைப் புரிந்து கொள்வது மிகவும் அடிப்படைத் தேவை. ஆனால், அம்பேத்கரை ஜாதியாகப் பார்க்கும் மனோபாவத்தால் அம்பேத்கர்  என்றாலே பலருக்கும் இந்தியாவில் ஒவ்வாமை, சிலருக்குக் கடவுள், சிலருக்குப் புரட்சியாளர், சிலருக்கு ஜாதித் தலைவர், சிலருக்கு அவர் மராத்தியர், தமிழ்த்தேசிய மணியரசன்களுக்கு இந்துக் கலாச்சாரவாதி.  உண்மையில் அம்பேத்கர் யார்?

நாம் இதில் குறிப்பாக தமிழ்த்தேசியத்தின்  பெயரால் அண்ணல் அம்பேத்கர் மீது மணியரசன் வகையறாக்கள் அள்ளி வீசும் அவதூற்றை எதிர்கொள்வதோடு, சமகாலத்தில் நாம் சந்திக்கும் இந்துத்வ பெரும்பான்மை-வாதத்தைச் சந்திப்பது தொடர்பாக அம்பேத்கர் முன்வைக்கும் உத்தியைப் புரிந்து கொள்ள முயலலாம்  என்று நினைக்கிறேன்.

பௌத்தம் இந்திய மதமென்பதால் மதமாற்றத்திற்கு அதைத் தேர்வு செய்தார் என்பதும், இந்தியத் தன்மையையும் திணிக்கும் முயற்சி அது  என்னும் அவதூறு குறித்து…

அண்ணல் அம்பேத்கர் மதமாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும், அதற்கு முன்னரும், பின்னரும் சனாதன இந்து மதத்தை மிகக்கடுமையாகச் சாடினார். அதை எதிர்கொள்ளத் துணி-வில்லாமல் இன்றைய இந்துத்வவாதிகள் போலவே, இஸ்லாத்தை விமர்சிக்கும் துணிச்சல் இருக்கிறதா? கிறிஸ்துவத்தை விமர்சிக்கும் துணிச்சல் இருக்கிறதா? என்று  என் ஏரியாவுக்கு வா, என் வீட்டுப் பக்கம் வந்து பார்  வகையிலான வடிவேலு பாணியிலேயே அண்ணல் அம்பேத்கரை நோக்கி சாவர்க்கர் சவடால் அடிக்கிறார்.

கூடவே, மணியரசன் போலவே, இந்துத்வ எல்லையை அம்பேத்கரால் மீற முடியவில்லை என்று சமாதானப்பட்டுக் கொண்டு,   தொடக்கத்திலிருந்தே, இப்படியான மதமாற்றம் போன்ற பிரிவினைவாத இயக்கங்கள் குறித்து, நாம் மீண்டும் குருட்டுத்தனமாக தவறுகள் செய்யாதிருக்கும்படிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதை ஒரு பேரிடராகக் கருதி எதிர்க்க வேண்டும். வெளிநாட்டில் ஊக்குவிக்கப்படும் அரசியல்வாதி இங்கே வந்து, புத்தனைத் தோண்டி எடுத்து, அம்பேத்கர் அவன் பாதத்திலிருந்து வளர்த்-தெடுப்பதைக் குறித்து நாம் மத மற்றும் தேசியக் கண்ணோட்டத்தோடு தீர்க்கமாக ஆராய வேண்டும். அந்நியப் படையெடுப்பாளர்களோடு ஒரு கூட்டு நடவடிக்கையாகச் சேர்ந்து கொண்டு இந்திய நாட்டுக்கு இந்த பௌத்த ஆட்சியாளர்கள் துரோகம் செய்தார்கள். புத்தனின் வரலாற்றை மீளாய்வு செய்ய வேண்டும். பரிசோதனைக்கு அப்பாற்பட்டு இது நஞ்சுதான், அதை விழுங்காமல் இருப்பதே சிறந்தது. (சாவர்க்கர்-1956)

இந்துத்வ பிதாமகர் என்று இன்றளவும் மோடி கும்பலால் போற்றப்படும்  சாவர்க்கர் அம்பேத்கரின் முடிவை நஞ்சென்கிறார். ஆனால், தனஞ்செய் கீர் என்னும் நபர் அண்ணல் அம்பேத்கரின் வரலாறு  என்னும் பெயரில் தேவையே இல்லாது அண்ணல் அம்பேத்கரை நூலெங்கும் சாவர்க்கரோடு ஒப்பிட்டு எழுதிய ஒரு நூலிலிருந்து ஒரு மேற்கோளை அதுவும் 1936இல் நடந்த சந்திப்பை வைத்து மணியரசன் ஜாதிய இந்து மனநிலையிலிருக்கும் தமிழ்த்தேசிய இளைஞர்களிடம் ஆள் பிடிக்கும் வேலையைச் செய்கிறார். 1938ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி கண்டேஷ் மாவட்டத்தில் அம்பேத்கர் முதன்மைப் பேச்சாளராகக் கலந்து கொண்ட ஒரு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று இந்து மகாசபை, காங்கிரஸ், ஆரிய சமாஜம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியது. அண்ணல் அம்பேத்கர் இந்து மகாசபை உள்ளிட்ட இந்துத்வ கோஷ்டிகளின் இந்துத்வ முழக்கத்தைக் குறித்து இந்துஸ்தான் இந்துக்களுக்கே என்று இந்து மகாசபைத் தலைவர் முன்வைத்த கோஷம் தான்தோன்றித்தனமானது மட்டுமல்ல, பெரும் கேடு விளைவிக்கும் அறிவீனமான கோஷமாகும். அதேபோல, 1935 அக்டோபர் 13 அன்று அண்ணல் அம்பேத்கர் யோலா மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் இந்துவாகப் பிறந்தேன், இந்துவாகச் சாக மாட்டேன் என்று முழங்கியதையும், பின்னர் 10 லட்சம் மக்களோடு இணைந்து இந்து மதத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கையை மேற்கொண்டதையும், அதன் பொருட்டுதான் சாவர்க்கர் போன்ற இந்துத்வ ஆசான்கள் கொதித்திருப்பதையும் லாவகமாக மறைக்கிறார். கேட்டால் திறனாய்வு செய்கிறாராம். திறனாய்வுக்கு உட்படுத்தாது கொண்டாடும் தலைவர்களைக் கொண்டிருப்-பதும், அவர்களின் புகழைத் தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருப்பதையும் குறித்து அவருடைய கட்சியிலிருந்து கலகக் குரல் எழுப்ப ஒருவருமா இல்லை?

இப்போதும்  எடுத்துக் கொள்ளுங்கள் சாவர்க்கர், அருண்ஷோரி, தாக்கரே வகையறாக்களை வைத்து அம்பேத்கரை அவதூறாகப் பேசிவிட்டு, அம்பேத்கரைத் தங்களது வந்தனப் பாடலில் சேர்த்துள்ளது ஆர்.எஸ்.எஸ். ஆனால், அம்பேத்கர் வலியுறுத்தியது இந்து பண்பாடுதான் என்கிறார் மணியரசன். அது இந்து பண்பாடாக இருந்தாலும், அண்ணல் அம்பேத்கரின் பார்ப்பனியத்திற்கு  எதிரான போராட்டத்தை அங்கீகரிக்கிறாராம். இந்த அங்கீகாரத் தெனாவட்டுதான் இந்துத் தன்மை என்பதே நமது குற்றச்சாட்டு. அடுத்து அம்பேத்கரியத்தில் பொதிந்திருப்பது இந்திய ஏகாதிபத்திய ஆதரவு கருத்துகள், அதன் தொடர்ச்சிதான் தலித்தியம்  என்பது…

அண்ணல் அம்பேத்கர் இந்தியாவை ஒற்றை நாடாகக் கருதினார்  என்பதே பெரும் மோசடி. அண்ணல் அம்பேத்கர் இந்தியாவை  எப்படி ஒரு நாடாகக் கருதவில்லையோ, அப்படியே தேசிய இனம் என்று கருதத்தக்க தகுதியோடு இன்றுவரை இந்தியாவில் ஒற்றை தேசிய இனம் இல்லை என்பது என் கருத்து. இது சர்ச்சைக்குள்ளாகலாம். விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால், அதுதான் உண்மை. அம்பேத்கரின் மொழியில் சொல்வதானால், இங்கே ஒவ்வொரு ஜாதியும், ஒரு தேசமாக இருக்கிறது. நாம் என்ற உணர்வு இங்கே தம்பட்டம் அடிக்கும் தேசிய இனங்களில் இல்லை. காஷ்மீரிலோ, வடகிழக்கு மாநிலங்களிலோ இராணுவத்தின் அச்சுறுத்தலின் காரணமாக ஒற்றை உணர்வு இருக்கலாமேயொழிய, மற்றபடி ஜாதி குறிப்பிடத்தக்க பாத்திரம் வகிக்கும் இந்தச் சமூகத்தில் தேசிய இன வாய்ச்சவடால் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். அம்பேத்கர் கூறுகிறார் கேளுங்கள்:

நாம் ஒரு தேசமாக இருப்பதாக நம்பினால், நாம் மிகப்பெரியதொரு மாயையில் இருப்பதாகப் பொருள். பல்லாயிரம் ஜாதிகளாகப் பிரிந்திருக்கும் மக்கள் எப்படி ஒரு தேசமாக முடியும்? நாம் சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு தேசமாக இல்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது… அமெரிக்காவில் ஜாதிப் பிரச்சினை இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் தேசியத்திற்கு எதிரானவை. முதலில் அவை சமூக வாழ்க்கையில் பிளவை ஏற்படுத்துகின்றன; அவை தேசியத்திற்கு எதிரானவை. ஏனெனில், அவை ஜாதிகளுக்கிடையே பொறாமையையும், பகைமையையும் உருவாக்குகின்றன. ஆனால், நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இவை அனைத்தையும் வென்றாக வேண்டும்.”  (டாக்டர் அம்பேத்கர், ஆங்கில நூல் தொகுப்பு 13, பக்கம்: 1217).

ஆனாலும், அண்ணல் அம்பேத்கர் இந்திய தேசிய மயக்கத்தில் இருந்தார் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முனைவதன் மூலம், தமிழ்த்தேசிய மயக்க ஊசியை சேரியில் பரவலாக்கி, இன்றளவும் சேரிகளின் கடவுச்சீட்டாக இருக்கக் கூடிய அண்ணல் அம்பேத்கரை களநீக்கம் செய்ய முனைகிறார் என்ற சந்தேகம்தான் ஆழமாக எழுகிறது. இந்த சந்தேகம் மேலும் வலுக்கக் காரணம் இன்றைய தலித் அரசியலோடு அம்பேத்கரின் கண்ணோட்டத்தை இணைத்திருப்பது. தலித் அரசியல் அடிப்படையிலேயே ஏகாதிபத்திய  எதிர்ப்புணர்வு கொண்டது, அதுதான் ஜாதியத்தை வீழ்த்த வல்லது  என்ற நம்பிக்கையில் நானில்லை என்றாலும், அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  எழுந்த தீண்டப்படாத மக்களின் எழுச்சியை ஆளும் வர்க்கம் தலித் அரசியல்  என்னும் சிமிழுக்குள் அடைக்க முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், இதற்கும் அம்பேத்கரின் சிந்தனைக்கும்  என்ன தொடர்பு? தொடர்பே இல்லையென்றாலும், தொடர்பிருப்பதாகத் திரிக்க வேண்டிய  அவசியம் என்ன வந்தது.  எடுத்துக்காட்டுக்கு, அண்மையில் இந்தியாவின் மிகப்பெரிய தலித் கட்சி ஒன்று பா.ஜ.க. கும்பலின் மக்கள் விரோத சீர்திருத்தங்களை ஆதரித்து நிற்கிறது. ஆனால், அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதான இரண்டு எதிரிகளில் ஒன்றாக முதலாளித்துவத்தை அடையாளம் காட்டினார். ஆனாலும், தொடர்புபடுத்தும் அவசியம் வருவதற்கு காரணத்தைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனை கடினமானதல்ல. சொந்தச் சகோதரர்களை வதைத்துக் கொண்டு, சேரியில் முடக்கிவைத்துக் கொண்டு விடுதலை கோருவதற்கு 1947க்கு முந்தைய தேசிய-வாதிகளுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று அண்ணல் அம்பேத்கர் கேட்டார்.

அந்த அலைவரிசைக்கு வெகு அருகில் நின்று கொண்டு ஜாதியத்தின் விளைநிலமாக இருந்து கொண்டு தேசிய விடுதலை கோருவதற்கு  உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று கேட்பது அவர்களுக்குக் குத்துது, குடையுது.  அதனால், இந்தக் கேள்வியே ஏகாதிபத்திய சதித்தன்மை கொண்ட தன்மை கொண்டது என்று அவதூறு பரப்புவதன் மூலம், அந்தக் கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று மணியரசன் வகையறாக்கள் நினைக்கிறார்கள். தேசியத்தைக் கருவிலேயே சிதைக்கும் ஜாதியத் தீச்சட்டியின் மீது அமர்ந்து கொண்டு தேசிய விடுதலை அடைந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பதால், பின்விளைவுகளையே அவர்கள் சந்தித்துத் தொலைவார்கள். அவர்களை நாம் விட்டுத் தொலைத்துவிட்டு, அம்பேத்கரை மணியரசனின் இந்திய உறவான இந்துத்வக் கும்பல் அம்பேத்கரைத் திரிப்பதைக் குறித்து கொஞ்சம் அலசி உண்மை அறிய முனைவோம்.

அம்பேத்கர் இஸ்லாமியர்களுக்கு  எதிராக இருந்தார், இந்திய தேசியவாதத்தின் ஆதரவாக இருந்தார். ஆகவே, இந்து ராஜ்யத்திற்கு ஆதரவாக இருந்தார்  என்பது போன்ற பரப்புரைகளை எப்படி எதிர்கொள்வது?

அதை அறிந்து கொள்வதற்கு, அம்பேத்கர் இந்திய இஸ்லாமியர்கள் குறித்து என்ன கண்ணோட்டம்  கொண்டிருந்தார்  என்பது மிக, மிக அவசியமானது. பிற நாடுகளில் இஸ்லாமியர்களிடையே நடந்த சீர்திருத்தங்களை அங்கீகரிக்கும் அம்பேத்கர், இந்தியாவில் அப்படி நடக்காமல் இருப்பதைக் குறித்துப் பேசும்போது மிகுந்த கருணையோடும், அக்கறையோடும்தான் அணுகுகிறார். இந்துக்கள் மிகப்பெரும்பான்மையாக இருக்கும் சமூகச் சூழலில் வசித்து வரும் சூழலில் இஸ்லாமியர்கள் மீது  எப்போதும் இச்சூழல் ஆக்கிரமிப்பு நிகழ்த்தி வருகிறது. அது தன்னை இஸ்லாமியனல்லாதவனாக மாற்ற முயற்சி செய்து வருகிறது என்று இஸ்லாமியர்கள் அச்சம்   கொள்கிறார்கள். இந்துக்கள் படிப்படியாக தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவன் தீவிரமாக முனைகிறான்; இஸ்லாம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் பேணிப் பாதுகாக்கும் உணர்வை அது அவனுக்கு  ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக, அரசியல் ரீதியிலும் இந்துக்களே மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சூழ்நிலையில் இந்திய முஸ்லீம்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் தாங்கள் ஒடுக்கப்படுவோம் என்று இஸ்லாமியர்கள் அஞ்சுகிறார்கள்.- (தொகுதி 15, பக்கம் 338, 339)

இன்று இஸ்லாமியர்கள் கொள்ளும் அச்சத்தின் வேரை, அவர்கள் மூடுண்ட சமூகமாக இருக்கும் வேரை எவ்வளவு கச்சிதமாகக் குறிவைத்து கண்டறிகிறார் பாருங்கள். இதே கண்ணோட்டத்தோடுதான் இஸ்லாமியர்களுக்கு தேசப்பற்றைவிட, மதப்பற்றுதான் பிரதானம் என்று கூறுகிறார். இதை இஸ்லாமியர்களே மறுக்க மாட்டார்கள். இதன் பொருள் தான் வாழும் பிரதேசத்தை ஏகாதிபத்திய நலன்களுக்காக, மதப் பற்றிற்காக விட்டுக் கொடுப்பார்கள் என்பது கிடையாது. ஆனால், அம்பேத்கர் அப்படித்தான் சொல்லியிருக்கிறார் என்று அவருடைய சொற்களுக்குப் பொருளேற்றி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்துத்வ வெறியேற்ற முனைகிறது இந்துத்வ கும்பல்.

இன்னும், சொல்லப்போனால் இஸ்லாமியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நண்பர்களாக இருக்க முடியாது என்று அண்ணல் அம்பேத்கர் கூறியதாக பரப்புரை செய்வதோடு, தங்கள் காலாட்படையாக மதக்கலவரங்களில் பயன்படுத்துகிறார்கள். பதவியின் பொருட்டு, இந்தக் காலாட்படையின் தலைமை முகவர்களாக, ராம்விலாஸ் பஸ்வான், ராமதாஸ் அதாவ்லே போன்ற தலித் கட்சிகளின் தலைவர்கள் இருப்பதுவும் சமகாலச் சான்று.

ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இஸ்லாமியர்கள் நண்பர்களாக ஆக முடியாது என்று அண்ணல் அம்பேத்கர் கருதினாரா? அண்ணல் அம்பேத்கரைத் திரிக்கப் பயன்-படுத்தும் பாகிஸ்தான் தொடர்பான நூல் தொகுதி 15இன் இறுதியில் அண்ணல் அம்பேத்கர் என்ன கூறுகிறார் என்பதனைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.

இந்து சமுதாயத்தில் பல கீழ்மட்டப் பிரிவுகள் உள்ளன. அவர்களுடைய பொருளாதார அரசியல், சமூகத் தேவைகள் பெரும்பாலான முஸ்லீம்களின் தேவைகளைப் போன்றவையேயாகும். பல நூற்றாண்டுகளாக தங்களுக்குச் சாதாரண மனித உரிமைகளை மறுத்தும், பறித்தும் வந்த உயர்ஜாதி இந்துக்களுடன் இணங்கிப் போவதைவிட பொதுவான இலக்குகளை எய்துவதற்காக முஸ்லீம்களுடன் ஒரு பொதுவான லட்சியத்தில் இணைவதற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள். இத்தகைய ஒரு போக்கைப் பின்பற்றுவதை அபாயகரமான செயல் என்று கருத முடியாது. இப்பாதை நன்று பழகிய பாதைதான். பெரும்பாலான மாநிலங்களில் மாண்டேகு- செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் கீழ் முஸ்லீம்களும் பிரமாணர் அல்லாதோரும் ஒடுக்கப்பட்ட  வர்க்கத்தினரும் ஒன்றாக இணைந்து 1920 முதல் 1937 வரை ஒரே குழுவின் உறுப்பினர்களைப் போன்று சீர்திருத்தங்-களுக்காகப் பாடுபட்டது உண்மை-யில்லையா? என்று கேட்டுவிட்டு, கூடுதலாக ஒரு விசயத்தைக் குறிப்பிடுகிறார்.

அது  என்னவென்றால், முஸ்லீம்களுக்கென்று தனிக்கட்சி அமைப்பதைத் தவிர்த்துவிட்டு, இந்துக்களும் முஸ்லீம்களும் கலந்த ஒரு கட்சியை உருவாக்குவதுதான் இந்து ராஜ்யம் என்ற ஒரு பூதத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்கான, ஒரு பயனுறுதியுள்ள வழியாகும் என்கிறார்.

கூடவே, தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட இந்நாட்டு உழைக்கும் மக்களுக்கு அவர் விடுக்கும் செய்தி இந்து ராஜ்யம் நிஜமாகும் பட்சத்தில் அது இந்த நாட்டில் மிகப்பெரிய சோகமாக அமையும் என்பதில் அய்யமில்லை. இந்துக்கள்  என்ன சொன்னாலும், இந்து மதம் விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு ஒரு பேரிடராகவே இருக்கும். இந்த விசயத்தில் அது ஜனநாயகத்துக்கு  ஏற்புடையதல்ல. இந்து ராஜ்யம் எந்த விலை கொடுத்தேனும் தடுக்கப்பட வேண்டும்.

– மகிழ்நன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *