நண்பர் ஒருவர் சென்னைக்குச் செல்ல வாடகைக் கார் ஒன்றை ஏற்பாடு செய்து தரச்சொல்லிக் கேட்டார். அவரை அழைத்துக் கொண்டு திண்டிவனம் டாக்சி ஸ்டாண்டு போனேன்.
நான் வர்றேன், நான் வர்றேன் நான் வர்றேன் என்று ஒரே போட்டி. மனதுக்குள் இன்றைய நிலைமையையும் அன்றைய நிலைமையையும், இன்றைய நிலைமை வருவதற்குக் காரணமானவர்களையும் நினைத்துப் பார்த்தேன்.
பச்சிளம் பாலகன் என்றும் பாராமல் அண்ணல் அம்பேத்கரை சிறுவயதில் மாட்டு வண்டிக்காரன் குடைசாய்த்துக் குப்புறத்தள்ளி விழ வைத்ததை நினைத்துப் பார்த்தேன்.
பிரசவ வலியால் துடித்த அருந்ததி இனப் பெண்ணை கலெக்டர் ஆஷ்துரை தன் குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு அக்ரகாரம் வழியே செல்ல முற்பட்ட போது வண்டி தடுக்கப்பட்டதையும் ஆஷ்துரையின் சாட்டை சுழன்றதையும் நினைத்துப் பார்த்தேன்.
தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தை நினைத்துப் பார்த்தேன்.
சௌதார் பொதுக்குளத்தில் ஜாதிவெறியர்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நீர் அருத்த பொதுமக்களோடு சென்ற போராட்டத்தை நினைத்துப் பார்த்தேன்.
அப்பப்பா… எத்தனைத் தடைகற்களைக் கடந்து வந்திருக்கிறோம்!
நான் வர்றேன் என்று கூவிய ஓட்டுநர்கள் எல்லாம் வெவ்வேறு ஜாதியினராக இருந்தும் எங்கும் எவரையும் அழைத்துச் செல்லத் தயாராக இருந்தனர்.
இந்த நிலைமைக்குக் காரணமான மகத்தான மாமனிதர்களையும், அவர்களின் போராட்டங்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
– முகநூலில் யுவான்சுவாங்