ஆஃப்டர் ஆல் பொம்பளை!

ஏப்ரல் 01-15

சிறப்புச் சிறுகதை

ஆஃப்டர் ஆல் பொம்பளை!

– அதிஷா

அந்த அறையிலிருந்து அவசரமாக வெளியே வந்தான் அருண். வியர்த்திருந்த நெற்றியை கர்சீப்பால் துடைத்துக் கொண்டான்.

இடமும் வலமுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அவசரமாக அங்கிருந்து நடக்கத் தொடங்கினான். யாரோ பின்னாலிருந்து அவனை அழைப்பது போலிருக்க திரும்பிப் திரும்பிப் பார்த்தபடியே விடுவிடுவென எதிரில் வந்தவர்களின் முகம் பார்க்கவும்கூட முடியாமல் உரசிக்கொண்டே வெளியே நடந்தான்.

அந்த மாபெரும் துணிக்கடையின் வாசலுக்கு வந்ததும்தான் நிம்மதியாக இருந்தது. திரும்பி நிமிர்ந்து பார்த்தான். அது விழுங்கக் காத்திருக்கும் டைனோசரைப்போல கண்சிமிட்டிக் கொண்டு நின்றிருந்தது. அப்படியே அவசரமாக ஓடிப்போய் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான். காலை வீட்டிலிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது இப்படியெல்லாம் ஆகும் என அவன் நினைக்கவேயில்லை. ரம்யாவின் முதல் குறுஞ்செய்தியிலிருந்துதான் அவனுக்குப் பித்தேறியது.

போதும் அருண் இனி இது எப்போதும் வேண்டாம், என்னால் உன்னோடு வாழ முடியாது, பிரிந்துவிடலாம் என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியிருந்தாள் ரம்யா. அருண் அதைப் படித்த அடுத்த நொடியிலிருந்து அவனுடைய இதயம் திரியில் தீப்பட்ட நாட்டு வெடிகுண்டாக வெடிப்பதற்குக் காத்திருந்தது.

அந்த நொடியில் ரம்யா எதிரிலிருந்தால் அவளுடைய முடியைக் கற்றையாகப் பிடித்து இழுத்துப்போய் சுவற்றில் இடித்துக் கொலை செய்திருக்கக்கூடும். அல்லது ஒரு சுத்தியலால் அவளுடைய மண்டையைப் பிளக்கவும் செய்திருக்கலாம். அவனுக்கு அந்த நொடி அவளுடைய கதறலை_அழுகையைக் கேட்கவேண்டும் போல் இருந்தது. அவனுடைய விரல்கள் நடுங்குவதையும், முட்டிகளின் இணைப்புகள் சிலிர்ப்பதையும், மூக்கின் நுனிகள் வெடிப்பதையும் உணர்ந்தான்.

ரிசப்ஷனில் காத்திருந்தான். ரம்யா வெளியே இரண்டு கைகளில் காபியோடு வந்து எதிரில் அமர்ந்தாள். அருண் அவளை நேரில் பார்த்துவிடக்கூடாது என்பதில் உறுதியாயிருந்தான். ஆனால் ரம்யா எப்போதும் போல அதே மாறாத புன்னகையோடு கண்களில் அமைதி நிறைந்திருக்க காபி சாப்பிடு, லைட்டா சக்கரை கூடுதலா போட்டிருக்கேன் என்று நீட்டினாள்.

பரவக்காத்திருக்கும் காட்டுத்தீயென உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தான். ரம்யாவைப் பார்க்காமல் காபியை மட்டும் வாங்கி எதிரில் வைத்தான். நிமிரவில்லை. மெசேஜ் பார்த்தியா என்றாள். அருண் தலையை ஆட்டினான். பதில் பேசவில்லை. என்னால உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க முடியாது அருண். நீ எதிர்பார்க்குற மாதிரி என்னால இருக்க முடியாது என்று கூறிவிட்டு காபியை உதட்டருகில் கொண்டு சென்றாள். அவளுடைய பார்வை நேராக இருந்தது. உடல் நிமிர்ந்திருந்தது. அவள் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தாள். அந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் அருண் நடுங்கிக் கொண்டிருந்தான். எதிரே-யிருந்த கண்ணாடியில் தன்னுடைய விரல்-களால் அழுந்தத் தேய்த்துக் கொண்டிருந்தான்.

காதலை எப்படி ஏத்துக்குறோமோ பிரிவையும் அதே மாதிரி ஏத்துக்கப் பழகிக்கணும் அருண். நீ என்ன டீன்ஏஜ் பையனா, பலமுறை சொல்லிட்டேன் நீ விரும்புற வாழ்க்கைக்கு நான் செட் ஆகமாட்டேன். என்னால அப்படி ஒரு வாழ்க்கையை வாழமுடியாது.

நான் உனக்கு நல்லதோழியா இருக்கணும்னு நினைக்கிறேன், ஒரு நல்ல பார்ட்னரா இருக்கணும்னு விரும்பறேன், உன்னோட பழகும்போதே ராஜீவையும் என்னால காதலிக்க முடியுது, வித்யாசாகரையும் விரும்பறேன். அதுக்குக் காரணம் எங்கிட்ட இன்னமும் மிச்சமிருக்கிற இந்தச் சுதந்திரம் மட்டும்தான், ஆனா உன் காதல் விலையா கேக்குறது அதைத்தான் என்று கூறிவிட்டு அருணையே பார்த்துக் கொண்டிருக்க, அருண் உனக்கு அசிங்கமா-யில்ல, ஒரு பொம்பள இரண்டு பேரை ஒரே நேரத்துல காதலிக்கறேனு கூசாமச் சொல்றியே வெக்காம இல்ல என்று திட்ட ஆரம்பித்தான்.

அவனுடைய சப்தம் நான்கு டெசிபல் அதிகமானதை ஆங்காங்கே இருந்தவர்களின் திடீர் பார்வை உணர்த்தியது. அதனால் அவன் தன்னுடைய சப்தத்தை உடனடியாகக் குறைத்துக்கொண்டு தொடர்ந்து பேசினான். உனக்குக் கண்டவனோடல்லாம் படுக்கணும், அதுக்கு நான் இடைஞ்சலா இருக்கக் கூடாது அதானே என்றான். ரம்யா புன்னகைத்தாள்.

காதல்னா என்ன அருண். ஒரே ஒருத்தனை மட்டும் நினைச்சுக்கிட்டு அவனையே வாழ்க்கை முழுக்கத் தெய்வமா நினைச்சு நினைச்சு ஏங்கிக்கிட்டு அவன் செத்துப்போகும்போது நாமளும் அவன் மடியிலேயே விழுந்து பிராண நாதானு சாகறதா! இப்போ நீ என்னை எவ்வளவு காதலிக்கிறியோ அதே மாதிரிதானே எனக்கு முன்னால நீ காதலிச்ச பிரேமாவைக் காதலிச்சிருப்ப, பிரேமாவுக்கு முன்னால காதலிச்ச திவ்யாவையும் எனக்குத் தெரியும், உன்னால எப்படி ஒவ்வொரு காதலா மாறி மாறி வரமுடிஞ்சது? நான் அதைச் செய்யக்-கூடாதா.. காதல்ன்றது உள்ளத்துக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு உணர்வுதான் அருண்! அது யாரையும் யாரும் அடிமைப்படுத்தக்கூடிய விலங்கா இருந்துடக்கூடாது. எனக்கு உன்னோட காதல் முழுமையான விலங்காதான் மாறிடுச்சு என்றாள். உன் வியாக்கியானத்தெல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சிக்கோ, ஒருத்தன் பத்தல உனக்கு, இன்னும் பத்துப் பேர் வேணும் அதானே! என்று கெட்ட வார்த்தைகளில் திட்டத் தொடங்கினான்.

ரம்யா புன்னகையோடு அமர்ந்திருந்தாள்.

நீ அதை அப்படித்தான் புரிஞ்சிக்கிட்டேனா நான் ஒன்னும் செய்யமுடியாது. உண்மைல எனக்குப் பத்துபேர் வேணும்னாலும் அதுல என்ன தப்பிருக்கு. அது என்னோட உடல் தேவை. எனக்கு நிறையப் பசிக்கும்போது விரும்பினதச் சாப்பிட எனக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே உரிமை நான் விரும்பினவங்களோட அவங்க அனுமதியோட செக்ஸ் வச்சிக்கவும் இருக்கு அருண்! உனக்கும் அந்த உரிமை இருக்கு. நீ இதுவரைக்கும் பத்துப் பேரோட-வாவது அப்படி இருந்திருக்கக் கூடியவன்தானே! நாளைக்கு நமக்குக் கல்யாணம் ஆனாலும் ஏகபத்தினி விரதனா எந்தப் பொண்ணையும் ஏறெடுத்துப் பாக்காம இருந்துடுவியா?

அப்படியே இருந்தாலும் நீ அப்படி இருக்கன்றதுக்காக நானும் அப்படி இருக்-கணும்னு கட்டாயமா? நீ பண்ணும்போது சரியா இருக்கிற ஒரு விஷயம் நான் பண்ணும்போது எப்படித் தப்பாகுது அருண் என்றவள் காபியை ஒருமுறை குடித்துவிட்டு அருணின் பதிலுக்குக் காத்திருக்காமல் பேச ஆரம்பித்தாள்.

காதல்ன்றது எனக்குக் காதலாதான் இருக்கணும், காதலை ஏன் காமத்தோட நீ கனெக்ட் பண்ணிக்கறேனு எனக்குப் புரியல அருண். காமம் வேற காதல் வேற. காமத்திற்-கான காரணங்களும் அதற்கான தேவைகளும் ஆளுக்கு ஆள் மாறுபடும். எனக்கு எத்தனையோ ஆண்கள் மேல க்ரஷ் வந்திருக்கு, அவங்களோட இருக்க ஆசைப்பட்டிருக்கேன். சிலரோட அப்படி இருந்தும் இருப்பேன். அது வேற விஷயம். ஆனா காதலிச்சது சிலரை மட்டும்தான் அதுல நீயும் ஒருத்தன். ஏன்னா அது உணர்வு சம்பந்தப்-பட்டது. காதலில் ஒரு சின்ன இலவச இணைப்பு-தான் காமம்! நீ தேவையில்லாம இரண்டையும் போட்டுக் குழப்பிக்கற, நீ என்னைக்காவது என்கிட்ட கேட்டப்ப நான் முடியாதுனு சொல்லியிருக்கேனா, இத்தனைக்கும் எனக்கு ஒருமுறைகூட தோனினதே இல்ல. இருந்தாலும் உன் மேல இருந்த காதலாலதான் ஒத்துக்கிட்டேன் என்று சொல்லிவிட்டு அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அருண் தன்னுடைய மூச்சை ஒருமுறை இழுத்துவிட்டுக்கொண்டு கடைசியா என்னதான் சொல்ல வர என்று கரகரப்பான குரலில் கொலைகாரனைப்போலக் கேட்டான்.

இது வேண்டாம், அவ்ளோதான். இதை இத்தோட முடிச்சிக்குவோம். நாம இனி நண்பர்களா தொடரலாம். நீ விரும்புறபடி பொண்ணுங்க இங்கே நிறைய கிடைப்பாங்க, நாட் மீ! என்னை விட்ரு, அதுமாதிரி ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளோட ஹேப்பியா இரு, நான் நிச்சயமா உன்னைத் தொந்தரவு பண்ணமாட்டேன், முடிஞ்சா என்னையும் கூப்பிடு நானும் வந்து அட்சதை போட்டு வாழ்த்திட்டுப் போறேன் என்று காபியின் கடைசி சொட்டையும் உறிந்துவிட்டு டேபிளில் வைக்க, அருணின் காபி அப்படியே இருந்தது.

ப்ளீஸ் ரம்யா, என்னால உன்னை விடமுடியாது, நீ இல்லாத வாழ்க்கைய என்னால யோசிக்கவே முடியாது. என்னோட உயிர் நீதான். ப்ளீஸ்மா புரிஞ்சிக்கோ என்று திடீரென்று கெஞ்சத் தொடங்கினான்.

இங்க பாரு அருண், நான் ரொம்ப நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவெடுத்தேன். இங்கே உள்ள ஒவ்வொரு பொண்ணுக்கும் கல்யாணத்தை-விட காதலன்கள்தான் அதிகத் தடைகளைப் போடறவனா இருக்கான். நீயே யோசிச்சுப் பாரு, நான் ஸ்லீவ்லெஸ் போட்டுக்கிட்டா உன்னால அதை ஏத்துக்க முடியுமா, ஏன் இன்னைக்குத் துப்பட்டா போடாம வந்தனு எத்தனை முறை சண்டை போட்டிருக்க, ஸ்கூட்டில தனியா போகக் கூடாது, நைட் பத்துமணிக்கு மேல வெளிய சுத்தக்கூடாது, நைட் ஷிப்ட் பாக்கக்-கூடாது, பாய்பிரண்ட்ஸோட அவுட்டிங் போகக் கூடாது, செலவுக்குக் கணக்குச் சொல்லணும், நைட் ரொம்ப நேரம் வாட்ஸ்அப் பாக்கக் கூடாது, ஆனா நீ கூப்பிட்டா எப்போ வேணா நான் தயாரா இருக்கணும், எனக்கு உடம்பு சரியில்லைனு காரணம் சொன்னாக்-கூட அதுக்காக நீ கோபப்படுவ, என்னால அப்படி ஒரு வாழ்க்கைய வாழவே முடியாது என்று மீண்டும் அழுத்தமாகச் சொன்னாள்.

அருண் அப்புறம் என்ன மயித்துக்குடி என்னைக் காதலிச்ச என்று எரிச்சலோடு கத்தினான். ரம்யா தன்னுடைய இருக்கையைச் சரிசெய்துகொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

ஆமா காதலிச்சேன் அதுக்காக, நீ எப்படி இருந்தாலும் கல்லானாலும் காதலன்னு சகிச்சிக்கிட்டு வாழணுமா? இது ஓவர். இனி இதை ஒட்டவைக்க முடியாது ப்ளீஸ் என்று சொல்ல, அருண் கண்கலங்க ஆரம்பித்தான். ப்ளீஸ்மா, என்னால இதுலருந்து வெளிய போகவே முடியாதும்மா, போனா செத்துடு-வேன்மா.. உன்னோட நினைவுகளே என்னைக் கொன்னுடும்மா.. யோசிச்சுப்பாரு நான் எத்தனையோ பொண்ணுங்களக் காதலிச்சிருந்-தாலும் நீ மட்டும்தான் _ நீ ஒருத்தி மட்டும்தான் என் வாழ்க்கையையே மாத்தினவ, அம்மா இல்லாத எனக்கு அரவணைப்பையும் அன்பையும் கொடுத்தது நீதானம்மா என்று பேசும்போதே காலில் விழுந்துவிடுவதற்கும் தயாராயிருந்தான்.

இந்த சென்டிமென்ட் நான்சென்ஸ்லாம் வேண்டாம் அருண்.

ப்ராக்டிக்கலா திங்க் பண்ணிப்பாரு, இது நிச்சயமா சரியா வராது. எனக்கும் இப்படி ஒரு லைஃப் வேண்டாம். நாம பிரண்ட்ஸா இருக்கலாம், அப்பக்கூட என்னால உனக்கு உன்னோட அம்மாவோட அன்பையும், அரவணைப்பையும் முழுமையாத் தரமுடியும். அதுக்கு நான் உன் காதலியாவோ மனைவியாவோ இருக்கணும்னு அவசியமில்லை.

கடைசியா நீ என்னதான் சொல்ற, என்னையும் காதலிப்ப எவன்கூட வேணா போவ, ஆனா நான் கேக்கக் கூடாது, இதுக்கு என்ன பேர் தெரியுமா? அழகாருக்-கோம், சொடுக்குப்போட்டா பசங்க வந்து விழுவாங்கன்ற திமிருடி, ஒரு பாட்டில் ஆசிட் போதும் அழிச்சிருவேன், உன்னை மாதிரிப் பொண்ணுங்களையெல்லாம் ரேப் பண்ணி கொன்னு எரிச்சிடணும்டி என்று மிரட்டும் தொனியில் கடுமையான குரலில் கத்த ஆரம்பித்தான்.

ரம்யா புன்னகைத்தாள். பதிலேதும் பேசாமல் எழுந்து நின்றாள். இப்படியெல்லாம் சொன்னா பயந்துடுவேனு நினைச்சியா அருண், நீ இப்போ பேசின அத்தனையும் என் மொபைல்ல ரெகார்ட் பண்ணி வச்சிருக்கேன். அதை என்னோட கூகிள் ட்ரைவ்க்கும் சேவ் பண்ணிட்டேன். நாலு வருஷம் உள்ள தள்ளிடுவாங்க, தேவையில்லாம இதுமாதிரி மிரட்டற வழிய மறந்துட்டு, எப்படி பிரேமா, திவ்யா இவங்களையெல்லாம் மறந்துட்டு என்னை லவ் பண்ணத் தொடங்கினியோ அதேமாதிரி என்னையும் மறந்துட்டு இன்னொரு வாழ்க்கையைத் தேடிக்கோ. அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது என்றாள். அருண் அந்த இடத்திலேயே ரம்யாவைக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப்-போகவும் தயாராயிருந்தான். ஏதோ ஒரு அச்சத்தில் அங்கிருந்து உடனே கிளம்பினான்.

வழியெல்லாம் வண்டி ஓட்டும்போது ரம்யாவின் வார்த்தைகள் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அவள் சொல்வதில் உண்மை இருப்பதாகவே அவனுக்குப் புரிந்தது.

காமத்தையும் காதலையும் ஏன் நம்முடைய மனது போட்டுக் குழப்பிக் கொள்கிறது. பெண்கள் ஏன் நமக்குக் கட்டுப்பட்டு நம்முடன் மட்டும் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டியவர்-களாக இருக்கவேண்டும்? அவர்களுக்கு உரிமை இல்லையா என்றெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தான்.

ஆனால் அவனுடைய சிந்தனையை அவன் அதுவரை கற்றுக்கொண்ட கற்பிதங்கள் போட்டு அழுத்தின.

அப்படிப்பட்ட எண்ணங்களை அவசரமாக அழித்தன.

ஆஃப்டர் ஆல் பொம்பளை அவளுக்கே அவ்ளோனா நான் ஆம்பளைடி என்கிற எண்ணம் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே-யிருந்தது.

சினிமாவில் வருவதைப்போல அவளைப் பிடித்து இழுத்துவைத்து நாலு அறை விடவேண்டும். அவளிடம் வீராவேசமாக சவால்விட்டுக் காட்டவேண்டும். அல்லது தமிழ் சினிமாவில் வருவதைப்போல தனியாக மலைமேலிருக்கிற பங்களாவில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ய வேண்டும் என்-றெல்லாம் நினைத்துக்கொண்டே சென்றான். அவளைக் கற்பழிக்க வேண்டும். அவளுடைய யோனியில் கம்பிகளை நுழைத்துக் கிழிக்க வேண்டும் என்றெல்லாம் வெறிகொண்டான்.

இவ்வளவு கேவலமான பெண் உயிரோடே இருக்கக்கூடாது அவளைக் கொல்லத்தான் வேண்டும். எப்படிக் கொல்வது?

கொன்றால் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டியிருக்கும். இவளுக்காக நாம ஏன் ஜெயிலுக்குப் போகணும், அவளுக்குச் சரியான பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தான்.

நேராக அந்த மாபெரும் கடையின் ஆண்களுக்கான உடை பிரிவுக்குச் சென்றான். அங்கேயிருக்கிற உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தான்.

அங்கே ஏற்கெனவே நிறைய ஆபாச வாக்கியங்களும் சில செல்போன் எண்களும் எழுதப்பட்டிருந்தன. தன்னுடைய பேகிலிருந்து பர்மெனென்ட் மார்க்கரை எடுத்தான். அதைச் சுவற்றில் வைத்து ரம்யாவின் எண்ணை எழுத முற்பட, கதவு தட்டும் சப்தம் கேட்டது. ஏய் ஜல்தியா என்று வெளியிலிருந்து குரல்.

அருண் அதிர்ச்சியாகி அதிர்ந்துபோய் திரும்பினான். அவளுடைய எண்ணைக் கரகரவென சொரசொரப்பான அந்தச் சுவற்றில் எழுதினான். மேலே அய்ட்டம் ரம்யா குட் கம்பெனி என எழுதிவைத்தான். அங்கே இதுபோல எண்ணற்ற எண்கள் இருந்தன. அதையெல்லாம் பார்த்தபோது நாட்டில் எத்தனை ரம்யாக்கள் என்று நினைத்து அந்தக் காதலன்களுக்காகவும் வருந்தினான்.

அவளுடைய வாழ்க்கையையே சீரழித்துவிட்ட திருப்தி எழுதி முடிக்கும்போது அருணிடம் இருந்தது. அவமானம் தாங்காமல் ரம்யா தற்கொலை செய்துகொள்ளட்டும். இவளுக்-கெல்லாம் இப்படித்தான் செய்ய வேண்டும். எழுதிவிட்டு வெளியே வந்து அப்படியே பைக்கை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குச் சென்றான். அங்குள்ள கழிவறையில் எழுதினான். அங்கிருந்து ஒரு திரையரங்க வளாகத்திற்குள் நுழைந்தான்.

அங்குள்ள கழிப்பறையிலும் இதையே எழுதினான். பேருந்துநிலையத்தில், கடற்கரை கழிவறையில் என எங்கெங்கோ அலைந்தான்.

சென்ற இடங்களிலெல்லாம் அவளுடைய எண்ணை எழுதி வைத்தான்.

ஒவ்வொரு முறை எழுதும்போதும் ரம்யாவை விபச்சாரியாகவே மாற்றிவிட்ட திருப்தியுடன் குரூர மகிழ்ச்சியை அவனுடைய உள்ளம் எட்டியது. அன்றைக்கு இரவு நிறையக் குடித்துவிட்டு காற்றில் மிதந்து ஜனசமுத்திரத்தில் கரைந்தான்.

அடுத்த நாள் காலை ரம்யா தன்னுடைய சிம்கார்டைத் தூக்கிக் கழிவறையில் போட்டு தண்ணீரை ஊற்றினாள். ஊற்றும்போதும் புன்னகையோடுதானிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *