கேரளாவின் அதிரபள்ளியில் நீர்மின் நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக்-கூடாது. இதனால் சுற்றுச்-சூழலுக்குப் பெரும் கேடு ஏற்படும். இந்த விசயத்தில் முடிவு எடுப்பதற்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நீர்மின் நிலையம் அமைக்கப் போவதாகக் கூறப்படும் இடத்துக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும்.
– ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் மூத்த தலைவர்.
குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கக்-கூடிய சட்டம் நம் நாட்டில் இப்போது இல்லை. தற்போது உள்ள சட்டம் 14 வயது வரை உள்ள குழந்தைகள் அபாயகரம் இல்லாத தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதை அனுமதிக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சிறுவர் நீதிச் சட்டத்திற்கு முரண்பாடாக குழந்தைத் தொழிலாளர் சட்டம் உள்ளது.
– கைலாஷ் சத்யார்த்தி, நோபல் பரிசு பெற்ற இந்தியர்.
பெண்கள், குழந்தைகள் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதியை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் முறையாகச் செலவிடாமல் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வது பெரும் கவலையளிக்கும் விஷயம்.
– மேனகா காந்தி, மத்திய அமைச்சர்
நாட்டின் முன்னேற்றத்தில் பல்கலைக்கழகங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. ஒவ்வொரு பல்கலையும் குறைந்தபட்சம் 5 கிராமங்களையாவது தத்தெடுக்க வேண்டும். அவற்றை முன்மாதிரி கிராமங்களாக மாற்ற வேண்டும். ஜனநாயக நாட்டின் உரிமைகளைப் பெறும் நாம் நம் கடமைகளையும் சரிவர ஆற்ற வேண்டும். மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.
– பிரணாப் முகர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர்.
உணவு தானியத்தில் தன்னிறைவு பெற்ற நாடாகவும் ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிலும் இந்தியா வளர்ந்துள்ளது. இருந்தபோதும் குறைந்த நீர் இருப்பு, நிலம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட கடுமையான சவால்களையும் இந்தியா சந்தித்து வருகிறது. உலக அளவில் 17 விழுக்காடு மக்கள் தொகையையும் 15 விழுக்காடு கால்நடைகளையும் கொண்டுள்ள இந்தியாவில் உற்பத்திக்குப் பிந்தைய இழப்பைக் குறைக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.
– எஸ்.அய்யப்பன், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத் தலைமை இயக்குநர்.