ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள்

ஏப்ரல் 01-15

டாக்டர் அம்பேத்கர் 125வது பிறந்த நாள்

ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள்

– கவிஞர் கலி.பூங்குன்றன்

பார்ப்பனர் பற்றி…………..

தந்தை பெரியார் பேசுகிறார்!

ஆங்கிலோ – இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களும். ஆங்கிலோ இந்தியர்கள் நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள் தாமே! ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்தால் டேய், டமில் மனுஷா என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்?

எந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வரலாற்றை அறியாமல், தான் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு குடியேறியதுபோல ஜாதி ஆணவத்துடன் அல்லவா நடக்கிறார்கள்?

அதைப் போலவே இந்நாட்டுப் பார்ப்-பனர்களும் மேல்நாட்டில் இருந்து வந்து குடியேறிய ஆரியர்களுக்கும், நம் நாட்டவர்-களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும்கூட ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் ஜாதிகளாக, அடிமைகளாக மதித்து நடத்துகிறான்.

– (குடிஅரசு 28.6.1949)

அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!

தனது மூதாதையர்கள் உருவாக்கிய பார்ப்பனீய தத்துவத்தை ஒவ்வொரு பார்ப்பானும் நம்புகிறான். இந்து சமுதாயத்திலே அவன் ஒரு அன்னியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி, மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல்நாட்டினரைப் போல்தான் தோன்றும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரெஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ, அதுபோலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.

(காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதோருக்குச் செய்தது என்ன? என்ற நூலின் பக்கம் 215)


 

பார்ப்பான் புரட்சியாளனா?………..

தந்தை பெரியார் பேசுகிறார்!..

‘அரசியலமைப்பு’ என்ற நூலை எழுதிய புரபசர் டிசே என்பவர் புரட்சி மனப்பான்மை உடையவன் போப் ஆக மாட்டான். போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்று கூறி இருக்கிறார். அதுபோலவே பார்ப்பானாகப் பிறந்தவன் புரட்சிக்காரனாக ஆகவே மாட்டான். (விடுதலை 29.8.1961)

அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!

புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகமாட்டான். போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான். இந்த அபிப்பிராயம் இந்தியப் பார்ப்பனர்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்றே நம்புகிறேன். போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால் பார்ப்பனராகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது நிச்சயம்! (ஜாதியை ஒழிக்க வழி பக்கம் 83)

தாழ்த்தப்பட்டவர்களுக்கு………

நீங்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) மனித சமூகத்தில் கீழானவர்களாய் இழி மக்களாய் கருதப்படுகிறீர்கள். அந்தக் காரணத்தாலேயே உங்கள் சமூகத்துக்கு முதலில் சுயமரியாதையையும் மனிதத் தன்மையையும் ஏற்படுத்த வேண்டுமென்று சொல்லுகிறேன். – (குடிஅரசு 13.10.1935 )

உடல் நலம் பற்றிய இலாபங்களைவிட சுயமரியாதையே மிகவும் முக்கியமானது. தாழ்த்தப்பட்டவர்களுடைய போராட்டம் கவுரவத்திற்காக, சுயமரியாதைக்காகத்தான்.(“Thus spoke Ambedkar” என்ற நூலிலிருந்து.)

பார்ப்பனத் தன்மை……….

தந்தை பெரியார் பேசுகிறார்!..


என்பது வாயில்_நாக்கில் குற்றம் இருந்தால் ஒழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது, பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத் தின்னாது. ஆடு மனிதனைத் தின்னாது. அதுபோலவாக்கும் நமது பார்ப்பனர் தன்மை. (சென்னை உயர் நீதிமன்றில் தந்தை பெரியார் அறிக்கை 23.4.1957)

அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!


நான் உங்களைக் கேட்கிறேன். எலியும் பூனையும் ஒன்றுசேர்ந்து வாழமுடியுமா? அது ஒன்றையொன்று அழித்துக்கொள்ளும். பாம்பும் கீரியும் ஒன்றாக வாழக் கூடுமா? பார்ப்பனர்கள் _ தீண்டப்படாதாருக்கும் உள்ள நிலைமையும் இதுபோன்றதுதான். ஒரு பார்ப்பனன் ஒரு தீண்டப்படாதவனை முடிந்த வரையிலும், எவ்வளவு கீழான நிலையில் வைத்திருக்க முடியுமோ, அதைச் செய்திட முயற்சிப்பான். தீண்டப்படாதவன் மனித உரிமையைக் கூடப் பெற முடியாதபடி அவன் பார்த்துக் கொள்வான். – அண்ணல் அம்பேத்கர்

சுதந்திரம் வந்தால்…..

தந்தை பெரியார் பேசுகிறார்!..

சுயராஜ்யம் வந்த காலத்திலும் இந்தப் பார்ப்பனர்கள் தாமே இந்த நாட்டு மக்களாக இருக்க முடியும்? இவர்களது பிரதிநிதிகள் தாமே ஜனநாயக ஆட்சி செலுத்துவார்கள்? ஆகவே இந்த நிலையில் என்ன மாறுதலை ஏற்படுத்திவிட முடியும்? – (குடிஅரசு 12.7.1931)

அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!

இந்த நாடு சுதந்திரம் பெறுவதை நாங்கள் எதிர்ப்பவர்களல்ல. ஆனாலும் சுயராஜ்யத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை என்னவாயிருக்கும் என்று காந்தியாரிடமிருந்து நான் தெரிந்துகொள்ள வேண்டும். காந்தியோ மற்றவர்களோ என்னுடைய கேள்விக்குத் தகுதியான பதிலை அளிக்கவில்லை. – அண்ணல் அம்பேத்கர்

இந்தியா ஒரு தேசமா?……

தந்தை பெரியார் பேசுகிறார்!..

இந்தியா ஒரு நாடு ஆனால் தானே இந்தியா முழுமையும் பற்றிப் பேச நமக்கு உரிமையுண்டு. இப்பொழுது இந்தியா ஒரு நாடாக இருக்கிறதா? நீங்கள் யோசித்துப் பாருங்கள். ஜாதிகள் காட்சிச்சாலையாக, மதங்கள் காட்சிச்சாலையாக, சாமிகள் காட்சிச்சாலையாக இருக்கிறதே யொழிய வேறு என்னவாயிருக்கிறது? – தந்தை பெரியார், குடிஅரசு 1.6.1930

அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!

அரசியல் சட்ட விவாதங்களின்போது இந்திய மக்கள் என்ற வாசகங்களை எடுத்துவிட்டு, இந்தியத் தேசியம் என இட வேண்டும் என பல உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனை அம்பேத்கர் மிகக் கடுமையாக எதிர்த்தார். ஆயிரக்கணக்கான ஜாதிகளாய் பிளவுண்டு கிடக்கும் மக்களை நீங்கள் எப்படி ஒரு தேசம் என்று அழைக்க முடியும்? இந்தியா என்ற ஒரு தேசம் இல்லை; இந்து மதம் என்ற ஒரு மதமும் இல்லை என்றார் அம்பேத்கர். நீங்கள் கடவுளை நம்பி பல தலைமுறைகளைத் தொலைத்தீர்கள். இப்பொழுது எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள். இந்தத் தலைமுறையை என்னிடம் கொடுங்கள். 20 ஆண்டுகளுக்குத் தியாகம் செய்யுங்கள். – அண்ணல் அம்பேத்கர்

பார்ப்பனரை அழையாதீர்!……..

தந்தை பெரியார் பேசுகிறார்!..

பார்ப்பான் வந்து திருமணம் செய்து வைப்பதுதான் புனிதமானது, பார்ப்பான் மேல் ஜாதி என்று கருதியே நாளாவட்டத்தில் கூப்பிடத் தொடங்கிவிட்டார்கள். இப்படிப் பார்ப்பானைக் கூப்பிடுவதும் நாம் கீழ்ஜாதி அவன் உயர்ந்த ஜாதி என்பதை உறுதிப்படுத்தவே கூப்பிடுகின்றோம். இந்தத் திருமண முறைக்கும் பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும். – (விடுதலை 3.10.1961)

ஒரு அய்ந்து நிமிஷ காரியங்களுக்காக 4 வரி ஒப்பந்தத்துக்காக ஆயிரக்கணக்காகவும், பதினாயிரக்கணக்காகவும் செலவழிக்க அனுமதிக்கப்படலாமா? என்று கேட்கிறேன். இப்படி செலவு செய்வது கிரிமினல் குற்றமாகாதா? நான் ஒரு நிமிஷம் அரசனாக இருந்தாலும் முதல் முதல் இம்மாதிரியான பொருள் விரயத்தைத் தடுக்கவே தூக்குத் தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். – தந்தை பெரியார் (காஞ்சிபுரத்தில் 23.4.1943)

அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!

பார்ப்பனப் பூசாரிகளைத் திருமணத்திற்கு அழைக்கக் கூடாது. திருமணத்திற்காக அதிகம் செலவழிக்காதீர்கள். நேரத்தையும் பணத்தையும் சேமியுங்கள்.

– அண்ணல் அம்பேத்கர் (The Prisons we broke – baby hamble, ‘ தலித் முரசு –_ சனவரி 2009)

இந்து மதத்திலிருந்து வெளியேறுக!….

தந்தை பெரியார் பேசுகிறார்!..

இந்து மதம் என்றைக்கு அழிக்கப்படுகிறதோ அல்லது அதிலிருந்து நம் மக்கள் என்று வெளியேறுகின்றனரோ அன்றே பார்ப்பான் இருக்க மாட்டான்; பறையன் இருக்க மாட்டான்; உயர்ஜாதிக்காரன் இருக்க மாட்டான்.

பார்ப்பனீயத்தால் உண்டாக்கப்படும் முதலாளித்துவம் இருக்காது. இந்நாட்டில் மனிதர்களே இருப்பார்கள். மனித ஆட்சியே நிறுவ முடியும். – விடுதலை 9.2.1959

அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!

இந்துக்களின் பார்வையில் மட்டும் நாம் தாழ்ந்தவர்கள் அல்லர். இந்தியா முழுமையிலும் நாம் தாழ்த்தப்பட்டவர்கள். ஏனென்றால், ஜாதி இந்துக்கள் நமக்குத் தாழ்ந்த நிலையை அளித்திருக்கிறார்கள். இந்த மானங்கெட்ட நிலையிலிருந்து நீங்கள் விடுதலை பெற்று, செழுமையான வாழ்நிலையை அடைய வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழிதான் உண்டு. உங்களைப் பின்னிப் பிணைந்துள்ள இந்து மதச் சங்கிலியை அறுத்தெறிந்து விட்டு வெளியேறுவது ஒன்றே சிறந்த வழி என்று உறுதியாகக் கூறுவேன். – அண்ணல் அம்பேத்கர்

மாட்டுக்கறி….

தந்தை பெரியார் பேசுகிறார்!..

இந்தப் பார்ப்பனர்களின் முன்னோர்கள் ஆடு மாடு மாத்திரமல்லாமல் பன்றி, கழுதை, குதிரை, எருமை, மனிதன் வரை சாப்பிட்டதாக இவர்களே உண்டாக்கி வைத்திருக்கும் வேத, சாஸ்திர, மத ஆதாரங்களை மறந்துவிட்டு வக்கனை பேசுகிறார்கள். –  தந்தை பெரியார், (விடுதலை 13.1.1964)

அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!

வேத காலத்தில் பசு புனிதமானதாகவே கருதப்பட்டு வந்தது. பசுவின் இந்தப் புனிதத்தன்மை காரணமாகவே அதன் இறைச்சியைச் சாப்பிட வேண்டும் என்று வாஜசனேயி சம்ஹிதையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 14, பக்கம் _133, 134)

 

———————–

 

அம்பேத்கர் – பெரியார் சந்திப்பு……

சென்னையில்…

இந்திய மத்திய அரசாங்க நிருவாக அங்கத்தினர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கிப் பெரியார் ஈ.வெ.ராமசாமி சென்னை சென்று தனது வரவைத் தெரிவித்துக் கொண்டார்.

டாக்டர் அவர்கள் 12 மணிக்கு வந்து சந்திப்பதாகத் தெரிவித்து விட்டு, சரியாக 12 மணிக்குப் பெரியார் ஜாகைக்கு வந்து சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டுச் சென்றார்.

பேச்சின் முக்கிய சாரம்

சேலம் மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்பதாகவும், அதற்கு ஆகவும், அவை யாவும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டதற்கு ஆகப் பெரியாரைப் பாராட்டுவதாகவும், பட்டம், பதவி ஆளர்களும், பணக்காரர்களும் பதவியைக் கருமமாய்க் கருதுபவர்களும் முன்னணியிலிருந்து நடத்தப்படும் கட்சி எதுவும் இக்காலத்தில் பலன் தராதென்றும், அவர்களைப் பின் அணிக்குத் தள்ளியது இக்கட்சிக்குப் புத்துயிரளித்தது போல் ஆயிற்றென்றும், பார்ப்பனரல்லாதார் கட்சி என்பதன் திட்டங்களில் நம் வகுப்பில் பார்ப்பனருக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? எதை ஒழிப்பதற்கு அல்லது என்ன நடப்பை மாற்றுவதற்கு என்று குறிப்பிட்டும் திட்டங்கள் நடைமுறைகள் இல்லாததாலேயே பாமர மக்களிடத்திலும் அறிவாளிகளிடத்திலும் ஜஸ்டிஸ் கட்சிக்கு மதிப்பில்லாமல்போனதோடு பார்ப்பனர், அக்கட்சியாளரை உத்தியோக வேட்டைக்காரர் என்று சொல்லுவதைப் பாமர மக்களும் வெளியிலுள்ள அறிஞர்களும் நம்பும்படி ஏற்பட்டுவிட்டதென்றும், இதனாலேயே கட்சி 1937இல் வீழ்ச்சியுற வேண்டியதாயிற்று என்றும் சேலம் தீர்மானம் ஜஸ்டிஸ் கட்சியை இந்தியக் கட்சியாக ஆக்கக் கூடியதாகுமென்றும் எதிர்காலத்தில் இது தலைசிறந்து விளங்கக்கூடியதாக ஆகிவிட்டதென்றும் கூறினார்.

சேலம் தீர்மானம் பிடிக்காததால் கட்சியை விட்டுப் போகிறேன் என்பவர்களைப் பற்றியும், வீண்குறை கூறிக்கொண்டு தங்கள் காரியம் பார்த்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றியும் கவலைப்படாமல், பாமர மக்களுடையவும், வெளிநாட்டு மக்களுடையவும் ஆதரவு பெறவும் சர்க்கார் கவனிக்கவும் உருப்படியான காரியம் செய்யவும் நீங்கள் பார்க்க வேண்டும் என்றும் சந்தர்ப்பப்பட்டால் மற்ற ஆள்களுக்கும் இதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டுப் போகிறேன் என்றும் சொன்னார்.

ஜஸ்டிஸ் கட்சி எல்லா இந்தியக் கட்சியாக ஆக இப்போது நல்ல சமயமும் நல்ல வேலைத் திட்டத் தீர்மானங்களும் இருப்பதால், துணிந்து தைரியமாகவும் இந்தியா பூராவும் சுற்றி வேலை செய்யும்படியும், ஆங்காங்குள்ள தம்முடைய நண்பர்களுக்கு எழுதியும் தம்மால் ஆன அளவுக்கு ஒத்துழைத்தும் ஆதரிப்பதாகவும் சொன்னார்.

கடைசியாக திராவிடஸ்தானையும், பாகிஸ்தானையும் ஒன்றாகக் கருதியது தப்பு என்றும், அதன் தத்துவம் வேறு; இதன் தத்துவம் வேறு என்றும், அது முஸ்லீம் மெஜாரிட்டி உள்ள இடத்திற்கு மாத்திரம் பொருத்தமானதென்றும், பிராமணியம் இந்தியா முழுமையும் பொருத்த விஷயமென்றும் திராவிடஸ்தானில் தங்களையும் வேறு மாகாணக்காரர்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் சொன்னார் என்பதாகத் தெரிகிறது. – குடிஅரசு 30.9.1944

இந்த நிகழ்ச்சி 1944ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் சென்னையில் நடைபெற்றது. இதற்கு முதல் நாள் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தை பெரியாருக்கு எதிராகத் தங்களுக்குத் தாங்களே ஜஸ்டிஸ் கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு சிலர் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு விருந்தொன்றும் கொடுத்தனர்.

விருந்துக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பெரியாருக்கு விரோதமாக நடப்பதைக் கண்டித்தார். தலைவரை மதித்துக் கட்டுப்பாடாக நடக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

தந்தை பெரியார் அவர்களை டாக்டர் அம்பேத்கர் எப்படி மதித்தார் என்பதற்கு இது ஓர் அரிய எடுத்துக்காட்டு அல்லவா? இது குறித்து சோறு போட்டு உதை வாங்கின கதை என்று குடிஅரசு எழுதியது. – குடிஅரசு 30.9.1944

பம்பாயில்…..


தந்தை பெரியார் அவர்கள் எப்படியும் ஒருமுறை பம்பாய்க்கு வரவேண்டும் என்று பம்பாய் வாழ் தமிழர்கள் விரும்பினார்கள். தந்தை பெரியாரும் இசைந்து, 5.1.1940 அன்று காலை சென்னை – சென்ட்ரல் புகைவண்டி நிலையத்திலிருந்து புறப்பட்டார். அவரைக் குமாரராஜா முத்தையா செட்டியார், ஜெனரல் கலிபுல்லா சாகிப் உள்பட பல தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர். தந்தை பெரியார் அவர்களுடன் சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியும், ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.ஏ.நாதன், கே.எம்.பாலசுப்பிரமணியும், அறிஞர் அண்ணா, டி.பி.எஸ்.பொன்னப்பா, சி.பஞ்சாட்சரம் ஆகியோர் பயணம் செய்தனர்.

6ஆம் தேதி காலை 10 மணிக்குத் தந்தை பெரியார் அவர்கள் தோழர்களுடன் பம்பாய் _ தாதர் புகைவண்டி நிலையம் வந்தடைந்தார்.

அன்று இரவு 9 மணிக்கு டாக்டர் அம்பேத்கர், பெரியார் அவர்களைத் தமது மாளிகைக்கு அழைத்து விருந்தோம்பினார். இரவு 10.30 மணிவரை பல்வேறு அரசியல் சமுதாயப் பிரச்சினைகள் பற்றி பெரியாருடன் அம்பேத்கர் உரையாடினார்.

மறுநாள் காலை 4 மணிக்குத் தந்தை பெரியாரின் வருகையைக் கொண்டாட வேண்டி, டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அவ்விருந்து கோகலே கல்வி நிலையக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்துக்கு வந்திருந்த பிரமுகர்களைப் பெரியார் அவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

எஸ்.சி.ஜோஷி, எம்.எல்.சி., ஆர்.ஆர்.போலே எம்.எல்.ஏ., ஜாதவ் எம்.எல்.ஏ. போன்ற ஏராளமான பிரமுகர்கள் அதில் கலந்து கொண்டனர்.

9.1.1940 அன்று இரவு 9 மணிக்கு டாக்டர் அம்பேத்கர் தந்தை பெரியார் அவர்களுக்கு மீண்டும் ஓர் அரிய விருந்து அளித்தார். பம்பாய் சென்டினல் நிருபர் ஜெகெல், டைம்ஸ் ஆஃப் இண்டியா தலைமைச் செய்தியாளர் ராவ், பிரபல பத்திரிகை ஆசிரியர் பால்சாரர், பி.என்.ராஜ்போஜ், சென்னை மாநில முன்னாள் அமைச்சர் முத்தையா முதலியார் அவர்களின் மகன் வழக்குரைஞர் சொக்கலிங்கம் போன்ற பிரமுகர்களும் பத்திரிகையாளர்களும் இவ்விருந்தில் கலந்துகொண்டு பெரியாரிடம் உரையாடினர். இரவு 11 மணிக்கு விருந்து நிகழ்ச்சி முடிவுற்றது.

ஜின்னாவுடன் சேர்ந்து சந்திப்பு

8.1.1940 மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை ஜனாப் ஜின்னா _ தந்தை பெரியார் ஆகியோரின் சந்திப்பு ஜின்னா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தோழர்கள் சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம், ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன், வழக்குரைஞர் கே.எம்.பாலசுப்பிரமணியம், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

காங்கிரசின் சுயநலப் போக்குகள், இந்தி எதிர்ப்பின் அவசியம், நாட்டுப் பிரிவினை ஆகியவை இச்சந்திப்பில் முக்கிய இடம்பெற்றன. இந்தித் திணிப்பு என்பது பார்ப்பன மதத்தையும், கலைகளையும் பயன்படுத்தி விரிவுபடுத்தும் குறுகிய நோக்குள்ள ஒரு திட்டம் என்பதைப் பெரியார் அவர்கள் எடுத்துச் சொன்னபோது ஜின்னா அவர்களும், அம்பேத்கர் அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.

மீண்டும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் துவக்க இருப்பதாக  பெரியார் அவர்கள் அங்கு எடுத்துச் சொன்னபொழுது, ஜனாப் ஜின்னா அவர்கள் நீங்கள் என் பூரண ஆதரவைப் பெறுவீர்கள் என்று கூறினார்.

சென்னை மாகாண காங்கிரஸ் ஆட்சியின் தன்மைகளைத் தந்தை பெரியார் அங்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அப்பொழுது ஜனாப் ஜின்னா அவர்களும் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சியின்கீழ் சகிப்புத் தன்மையோடு நடந்து கொண்டதைப் பாராட்டுகிறோம். நீங்கள் இதர மாகாணங்களிலும் சுற்றுப் பிரயாணம் செய்து, அங்குள்ள பொது மக்களுக்கு இவ்வுண்மையை உணர்த்த வேண்டும் என்று பெரியாரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர்.

ஜனாப் ஜின்னா அவர்களும், டாக்டர் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியாரின் அழைப்பை ஏற்று, 15 நாள்கள் தமிழ்நாட்டில் மீண்டும் சுற்றுப் பிரயாணம் செய்து, அங்குள்ள பொது மக்களுக்கு இவ்வுண்மையை உணர்த்த வேண்டும் என்றும் பெரியாரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

இரங்கூனில்… பர்மாவில், இரங்கூன் நகரத்தில் நடைபெற்ற உலகப் புத்த அறநெறி மாநாட்டில் கலந்துகொள்ள வந்த தந்தை பெரியார் அவர்களும், டாக்டர் அம்பேத்கர் அவர்களும் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.

மாநாட்டு அலுவலகத்திலேயே 5.12.1954 காலை 10.30 மணிக்குச் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு அதிகமாகத் தனிமையில் பல செய்திகள் குறித்து அளவளாவினார்கள். தன்னைவிட நல்ல திடகாத்திர நிலையில் பெரியார் இருப்பதற்கு, டாக்டர் அம்பேத்கர் மகிழ்ச்சி தெரிவித்தார். உலகப் புத்த மாநாடு குறித்தும், எதிர்காலத்தில் தாங்கள் இருவரும் எப்படி மாநாட்டிற்கு வழிகாட்ட வேண்டும் என்பவை பற்றியும் பேசினார்கள்.

மேலும், தான் பவுத்த மதத்தில் சேர முடிவு செய்துவிட்டதாகக் கூறி பெரியாரையும் பவுத்த மதத்தில் சேர அழைத்தார். இந்த மதத்தை விட்டுப் போய்விட்டால், இந்து மதத்தைப் பற்றிப் பேசவோ அதன் பிடியில் அல்லல்படும் மக்களை விடுதலை செய்யவோ இயலாது போகுமென்றும் இந்து மதத்தில் இருந்து கொண்டே அதன் கொடுமைகளை எதிர்த்துப் போராடுவேன் என்றும் கூறி தந்தை பெரியார் மறுதலித்து விட்டார்.

அம்பேத்கர் அவர்கள் புத்த மார்க்கத்திற்குச் செல்ல விரும்பினால், பெருங்கூட்டத்தோடு இந்து மதத்திலிருந்து வெளியேறி அதில் இணைய வேண்டும் என்ற தனது கருத்தையும் தந்தை பெரியார் தெரிவித்தார்.

—————-

ஜாதியை ஒழிக்க வழி

லாகூரிலுள்ள ஜாட்-பட் தோடக் மண்டலத்தார் (ஜாதி ஒழிப்புச் சங்கத்தார்). லாகூரில் நடைபெறும் மேற்படி மண்டலத்தின் வருடாந்திர விழாவிற்குத் தலைமை வகிக்கும்படி தோழர் அம்பேத்கரைக் கேட்டுக் கொண்டனர். தோழர் அம்பேத்கரும் தலைமை வகிப்பதாக ஒப்புக் கொண்டார். பின்னர் தோழர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய தலைமைப் பிரசங்கத்தில் மதத்தைப் பற்றியும், ஜாதி யொழிப்பைப் பற்றியும் கூறியிருக்கும் அபிப்பிராயங்கள் சில மேற்படி மண்டலத்தாருக்குத் திருப்தி அளிக்காததால், அவைகளில் சிறிது பாகத்தை மாற்ற வேண்டியது அவசியமென்றும், அவ்விதம் மாற்றா விட்டால் மேற்படி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுமென்றும், மேற்படி மண்டலத்தார் அம்பேத்கருக்கு அறிவித்தார்கள்.

தோழர் அம்பேத்கர் அவர்கள் – ஜாதி ஒழிப்புச் சங்கத்தில், ஜாதியை ஒழிக்கும் முறைகளைப் பற்றிக் கூறுவதும், ஜாதிக்கு ஆதாரங்களாக உள்ளவை களைப் பற்றிக் கூறுவதும் இன்றியமையாத தென்றும், மேற்படி மாநாட்டுக்குத் தலைமை வகிப்பதற்காக தம் அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள முடியா தென்றும் தெரிவித்து விட்டார்கள். அதன் பயனாய் அம்மாநாடு நடைபெறாது நின்றுவிட்டது.

அதன் பின்னர் தோழர் அம்பேத்கர் அவர்களை அந்தப் பிரசங்கத்தைப் புத்தக ரூபமாக அச்சடித்துப் பிரசுரிக்குமாறு பலர் வேண்டிக் கொண்டனர். அதனை அனுசரித்துத் தமது தலைமைப் பிரசங்கம் பலருக்கும் பயன்படுமாறு புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்துக்களிடையே ஒற்றுமையும் நல்லுணர்வும் ஏற்பட்டு முன்னேற்ற மடைவதற்குத் தடைக் கற்களா யிருப்பவைகளில் முக்கியமானது ஜாதியாகும்.

எனவே, அத்தகைய ஜாதியொழிப்பிற்குரிய மார்க்கங்களையும், அதனால் விளையும் கெடுதியையும், உயர்ஜாதிக்காரர்கள் என்பவர்கள் தாழ்ந்த ஜாதியார் என்பவர்களுக்குச் செய்து வரும் கொடுமைகளையும் தக்க ஆதாரங்களுடன் விரிவாகவும், விளக்கமாகவும், தைரியமாகவும் இப்பிரசங்கத்தில் எடுத்துரைத்த தோழர் அம்பேத்கருக்குத் தமிழுலகம் என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.

இப்புத்தகம் ஆங்கிலத்திருப்பதால் பெரும் பாலாருக்குப் பயன்படாதென்று கருதி, எல்லோருக்கும் பயன்படுமாறு தமிழில் மொழிபெயர்த்து இதனை வெளியிட்டிருக்கிறோம்.

1936இல் வெளியிடப்பட்ட இந்த நூல் இதுவரை 17 பதிப்புகள் (2014) வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

—————–

அம்பேத்கர் பெற்ற பேறு


07.01.1940 மாலை 4.00 மணிக்கு கோகலே கல்வி நிலைய கழகத்தில் பெரியார் அவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் தேநீர் விருந்து அளித்தார். விருந்தில் பம்பாய் கவுன்சில், அசெம்பிளி மெம்பர்களும், பத்திரிகை ஆசிரியர்களும், நகர முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். 7ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு தாராவி _காலே கில்லா என்ற இடத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் சுயேச்சைத் தொழிலாளர் கட்சித் தலைவர் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் நடைபெற்றது. பார்ப்பனீயத்தை ஒழிப்பதில் தாமும் பெரியார் கொள்கையை ஒத்துக் கொள்வதாகவும், அன்று முதல் இன்று வரை பார்ப்பனீயத்தை எதிர்த்துப் போராடியும், பார்ப்பனீயத்தை அறைகூவி அழைத்து வருபவருமான ஒப்பற்ற தலைவர் பேசும் கூட்டத்திற்குத் தலைமை வகிக்க தமக்குக் கிடைத்த பாக்கியமே தமது வாழ்க்கையில் தாம் சிறந்த பாக்கியமாகக் கருதுவதாகவும் தலைவர் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டார். அம்பேத்கர் பேச்சை அண்ணா அவர்கள் தமிழில் மொழி பெயர்த்தார். பம்பாயிலுள்ள தலைவர் களுக்காக பெரியார் பேச்சை அண்ணா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அறிஞர் அண்ணாவின் இருமொழி ஆற்றலுக்கு இதைவிட நல்ல சான்று வேறு இருக்க முடியுமா? பெரியார் பேசும்போது, நான் பார்ப்பன ஆதிக்கத்தை முற்றிலும் வெறுக்கிறேன்.

அது மக்களின் மாபெரும் உணர்ச்சி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி அவர்களையும் மதம், பொருளாதாரம், சமூகம், அரசியல், கடவுள் பெயரால் அழுத்தி வைத்திருக் கின்றது. பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்லர். அவர்கள் தமிழர்களுக்கு அந்நியராகும். பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுபட பர்மாவைப் போன்று தமிழ்நாடு தனி மாகாணமாக வேண்டும். இங்கிலாந்தில் எவ்வளவு மக்கள் இருக்கின்றார் களோ அவ்வளவு மக்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள். தமிழ்நாடு ஜெர்மனியின் அளவு பரவியிருக்கின்றது. தமிழ்நாட்டிற்கு கலை, மொழி, சரித்திரம் இவை தனியானவை. இந்த நாடு பார்ப்பனீய ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *