குரல்

ஜூன் 01-15
  • கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் வருகின்றன.  அவர்களால் ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.  நீதிபதிகளை மக்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்.  80 சதவிகித நீதிபதிகள், ஊழல்வாதிகள் என்று பேசப்படுகிறது.  இது வெட்கக்கேடானது.  இத்தகைய ஊழல் நீதிபதிகளை நீதித்துறையிலிருந்து தூக்கி எறிய வேண்டும்.

மார்க்கண்டேய கட்ஜூ, கியான் சுதா மிஸ்ரா, நீதிபதிகள், உச்ச நீதிமன்றம்

  • அரபு நாடுகளில் பாலியல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை பொது இடத்தில் வைத்து பிறப்புறுப்பைத் துண்டித்து விடுகிறார்கள்.  என்னைப் பொறுத்தஅளவில், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.  பெண்ணை வெறும் பாலியல் குறியீடாக மட்டுமே பார்க்கும் இந்தியா போன்ற நாடுகளில் தனி மனிதனைக் குற்றம் சொல்லிப் பிரயோசனம் இல்லை.  பெண்கள் மீதான வன்முறையைப் பார்க்கும்போது இந்தச் சமூகமே நோய்வாய்ப்பட்டுக் கிடப்பது தெளிவாகத் தெரிகிறது.  எனவே, சம்பந்தப்பட்ட நபர்களைச் சிறையில் அடைப்பதன் மூலம் படிப்படியாக அவர்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.  திருந்துவதற்கு வாய்ப்பளிக்காமல் ஒரேயடியாக ஆண்மையைப் பறிப்பது நல்ல தீர்வாகாது.

கவிஞர் சல்மா,

  • சுதந்திரத் தமிழீழ அரசை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக மக்களின் சார்பில், இந்திய அரசிடம் முன்வைத்து அதை வென்றெடுக்க வேண்டும். தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்து உள்ள ஈழத் தமிழ் மக்களின் கௌரவமான, பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தப்படுவதுடன், இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள திபெத் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும், ஈழத் தமிழ் மக்களுக்கும் வழங்கப்படுவதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புப்படுத்தி, இந்தியச் சிறைக்கூடங்களிலும் சிறப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க, மாநில, மத்திய அரசுகளைத் தூண்டவேண்டும்.

உருத்திரகுமாரன், பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு

  • ஈழத்தமிழ் உறவுகளின் விடிவிற்காக, எதிர்காலத்தில் எங்கள் கட்சி உரத்துக் குரல் கொடுக்கும் வகையில் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பேன்.  கனடாவில் தமிழ் இனத்தின் விடிவுக்கான குரலாக, கனடிய பாராளுமன்றத்தில் என்றும் என் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

– ராதிகா சிற்சபேசன், கனடா நாடாளுமன்ற உறுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *