இவ்விடம் அரசியல் பேசலாம்
கடவுள்களின் பேரன்கள்
-கல்வெட்டான்
(தோழர் சந்தானத்தின் சவரக்கடையில் மீண்டும் கச்சேரி களை கட்டியது!)
“என்ன தோழர், நம்ம முத்து இருக்காரா?” என விசாரித்தபடியே தோழர் மகேந்திரன் உள்ளே நுழைந்தார்.
“இதோ இவர்தான் முத்து! நீங்க இம்புட்டு நாளா தேடிட்டு இருந்தவர் இன்னைக்குத்தான் நீங்க வர்ற நேரத்துல கடையில் இருக்கிறார்!” என்றபடியே முத்துவை அறிமுகம் செய்தார் சந்தானம்.
“வணக்கம் சார்” என்று சங்கோஜமாகக் கும்பிட்டு வரவேற்ற முத்துவிடம், “என்ன கூச்சம்… வெடிப்பா வணக்கம் சொல்லுங்க! என்னவோ மக்கள் முதல்வரைப் பார்த்த மாதிரி எதுக்குப் பம்முறிங்க!” என்றார் மகேந்திரன்!
“இவரு எப்பவுமே அப்படித்தான் சார்… ஆனால் அதுக்காக தன்னைத்தானே சிலுவையில் அடிச்சுக்கல்லாம் மாட்டாரு!” என்றார் சந்தானம்!
“அதானங்க… என்ன ஒரு பைத்தியக்காரத்தனமா இருக்கு! இவ்வளவு நாளா கராத்தே என்றால் மனவலிமை தரும் தற்காப்புக் கலைன்னு நம்பின மக்கள், அந்தாளு பண்ணின கூத்தால கராத்தே கத்துக்கிட்டால், அடிமைப் புத்தி வந்திடும்னும், மனப்பிறழ்வு வந்திடும்னும் நினைக்கத் தொடங்கிட்டாங்க!”
“அந்த ஹூஷைனி இப்படி ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு தோழர்! ஏற்கெனவே அந்தாளோட ரத்தத்தோட கூட இருந்தவங்களோட ரத்தத்தையும் உறிஞ்சி எடுத்து, அதை வைத்து ஜெயலலிதாவோட உருவத்தைச் செய்து பரிசா கொடுத்தது என்ன ஒரு கொடூரமான கோமாளித்தனம்ல!”
“கண்டிப்பா! பச்சைக் குழந்தைகள் பாலுக்காகக் காத்துகிட்டிருக்கறப்ப தன்னோட தலைவனின் கட் அவுட்ல பாலாபிஷேகம் பண்றேன்னும், சாமிக்கு ஆறு வேலை பாலாபிஷேகம் பண்றேன்னும் பாலை வேஸ்ட் பண்ற மாதிரிதான் இந்தாளு ரத்தத்தை உறிஞ்சி எடுத்து வீணடிச்சாரு… அவனவன் இந்த ரத்தத்துக்காக அல்லாடுறான்!”
“கராத்தேல ஸ்டண்ட் பண்றதை விட்டுட்டு நிஜ வாழ்க்கையில் அடிமைப்புத்தியைக் காட்டுறதுல ஸ்டண்ட் பண்ற ஆளுதான் சார் இவரு” என்றபடி முத்துவும் இவர்களின் விவாதத்தில் கலந்து கொண்டார்.
“சரியா சொன்னீங்க முத்து… ரத்தம்னு சொன்னதும்தான் எனக்கு அந்தாளு சிலுவையில் அறைந்துக்கிட்ட ஸ்டண்ட்ல ஒரு விஷயம் நினைவுக்கு வருது. அவரு ஆணி அடிச்சப்ப ஒரு சொட்டு ரத்தம்கூட வெளியேறல பார்த்தீங்களா?”
“அந்த ஆணியேகூட ஆணி மாதிரி இல்லாமல் கோணூசி மாதிரி, என்னவோ இந்த ஒரு நிகழ்வுக்காகவே ஆர்டர் கொடுத்து செஞ்சி வாங்கின மாதிரி இருந்தது பார்த்திங்களா தோழர்?”
“ஆமா தோழர், அந்தாளு, கொஞ்சம் ஒரு மாதிரியோ அல்லது ஸ்டண்ட் பார்ட்டி மாதிரியோன்னுதான் முதலில் நினைச்சிருந்தேன், ஆனால், ஜெயலலிதாவுக்காக வேண்டிக்கிட்டு முதலில் விமானத்தைத்தான் கடத்தலாம்னு திட்டம் போட்டேன்னு கொடுத்த பேட்டியைக் கேட்ட பிறகு, அந்தாளை வேற மாதிரித்தான் பார்க்கத் தோனுச்சி!”
“அடக்கொடுமையே, விமானத்தைக் கடத்தவா?” என முத்து வாயைப் பிளக்க,
“ஆமா… அப்படியே இந்தாளு மேல காணாம போன மலேசிய விமானத்தைக் கடத்துனதா கேஸ் போட்டு, ஆயுள் தண்டனையா அப்படியே உள்ள தள்ளிடணும்! இல்லைன்னா அடுத்த வருஷ பிறந்த நாளுக்கு விமானத்தையோ, ரயிலையோ கடத்தி பரபரப்புக் காட்டினாலும் காட்டுவாரு!
“இந்தாளு ஒருபக்கம் பீதியைக் கிளப்பினாருன்னா, இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சி சீமான் பீதியக் கிளப்புறாரு பார்த்திங்களா?”
“ஆமா, ஆமா, இம்புட்டு நாளா ஈழத்தை வச்சு அரசியல் பண்ணிக்கிட்டு இருந்தாரு. இப்போ ஈழ அரசியலோட மவுசு குறைஞ்சுட்டதால கையில வேலைத் தூக்கிட்டு முருகனோட ஞானப்பழத்துக்கான போராட்டத்துல இறங்குறாரு!”
“ஓ! அப்படி ஒன்னு இருக்குல்ல? இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால, இனியும் ராஜபக்க்ஷேவைத் திட்டி அரசியல் பண்றது எடுபடாதுன்னு முடிவுக்கு வந்துட்டாரோ?”
“அதே! அதே! ஆனால் அவருக்கு எதாவது பிரச்சினை கையில இருந்தால்தான் அரசியலே பேச முடியும்… பிறகென்ன, சிவன் குடும்பத்துல இருக்குற பிரச்சினையைக் கையிலெடுத்துட்டார்!”
“அதுசரி, சர்க்கரையில்லாத ஊருல இலுப்பம்பூ சர்க்கரைங்கற மாதிரி, சிவன் குடும்பத்துலயே புகுந்துட்டாரா?!”
“அதுவும் பிஞ்சு மூஞ்சி மாதிரி இருக்குற முருகனை யுத்த கடவுள் மாதிரி கோபக்கார சாமியா காட்டுறதுக்கு இவரு விடுற டயலாக்குகள்தான் கண்ணுல கண்ணீர் வர்ற அளவுக்குச் சிரிக்க வைக்கும்!”
“அப்படியென்ன சொல்லிட்டாருன்னு சொல்லுங்க தோழரே!” என முத்து கேட்க,
அதற்கு சந்தானம், “திருவிளையாடல் திரைப்படத்தில் ஏ.பி.நாகராஜன் எழுதின டயலாக்கை, என்னவோ முருகனே சொல்லச்சொல்லக் கேட்டு அவரு எழுதின மாதிரி
“முருகன் அந்தக் காலத்துலயே தனிநாடு வேணும்னு போராடினாரு! அந்த நாட்டை அவரே ஆட்சி செய்தாருன்னு அக்மார்க் போராளி ரேஞ்சுல முருகனைப் பற்றின தகவல்களை அள்ளிக்கொட்டுறாரு சீமான்!”
“இப்படி படத்துல இருக்குற வசனமெல்லாம் உண்மைன்னு சொல்லி உளறிக்கிட்டிருந்தால் சீமான் சொல்றபடி பார்த்தால், அடுத்ததா வில்லனா நடிச்ச எம்.ஆர்.ராதாவிலிருந்து, நம்பியார், சத்யராஜ், ஆனந்தராஜ், பிரகாஷ்ராஜ்னு அத்தனை பேரையும் கற்பழிப்பு கேஸ்ல ஜெயிலுக்குள்ள தள்ளணும்னு சொல்வாரோ?!”
“அதுமட்டுமா, ரோபோ படத்துல வர்ற சிட்டி ரோபோவை திரும்பவும் அசெம்பிளிங் பண்ணி இந்திய ராணுவத்துல சேர்க்கணும், அதை உருவாக்குன ரஜினிக்கு ராணுவத்துல உயர்பதவி தர்றதோட, விஞ்ஞானிகள் அய்ன்ஸ்டைன்,
தாமஸ் ஆல்வா எடிசன் மாதிரி ரஜினியையும் தலைசிறந்த விஞ்ஞானிகளோட பட்டியலில் சேர்க்கணும்னும் போராட்டத்துல இறங்கிடுவாரு! அதைக் கேட்டு டைரக்டர் சங்கரே மெர்சலாயிடுவாருன்னா பாருங்களேன்!”
“திருவள்ளுவரை முப்பாட்டன்னு சொன்னாரு சரி, அதோட நிறுத்தாமல், முருகனையும் முப்பாட்டன்னு சொல்றாரு, சிவனையும் முப்பாட்டன்னு சொல்றாரு… அவரு நடத்துறது வீரத்தமிழர் முன்னணியா,
இல்ல முப்பாட்டனார்கள் முன்னேற்ற முன்னணி-யான்னே தெரியல! அவரு வேலைக் கையில புடிச்சிருக்குற தோரணையப் பார்த்தாலே சிரிப்புதான் வருது! அந்தப் பழனி முருகன்தான் அவருக்கு நல்ல புத்தி கொடுக்கணும்!”
“ஆமா, ஆமா, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு சொல்ற மாதிரி, உமாசங்கர் அய்.ஏ.எஸ்., ஏசு கூட பேசினேன், சுனாமி வந்தது ஏசுவுக்குத் தெரியும், அப்படி இப்படின்னு கதை விட ஆரம்பிச்சாரு, அடுத்து ஹூஷைனி,
நான் அல்லா கூட பேசினேன், நான்தான் அல்லாவோட பேரன்னு சொல்லி பீதியைக் கிளப்பினாரு! அடுத்து இப்போ நான்தான் முருகனோட பேரன்னு சொல்லி சீமான், சிவனோட குடும்பத்திலேயே கோல்ஃப் விளையாடுறாரு!
ஆக மொத்தம் அம்புட்டுப் பேரமாரும் ஒன்னு கூடிட்டாய்ங்க!” “முப்பாட்டனுங்க எந்தக் காலத்திலும் அவதரிக்கப் போறதில்லைங்கற உண்மை தெரிஞ்ச வெவரமான பேரனுங்களாச்சே!”
“மாட்டுக்கறிக்கு மஹாராஷ்ட்ராவுல தடையாமே பார்த்திங்களா?”
“அவங்களோட உயிர்நேயமெல்லாம் இஸ்லாமிய, கிறித்தவ மக்களைச் சீண்டிப் பார்க்கறதும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டு, ஓட்டரசியல் நடத்துறதும்தான்…
நான் ஏற்கெனவே சொன்னேனே, கடவுளுக்கு அபிஷேகம் பண்றதுன்னு சொல்லி, கன்னுக்குட்டியோட பாலை முழுக்கத் திருடுறதே இந்தப் பயலுகதான்! பண்ற திருட்டெல்லாம் பண்ணிட்டு உயிர்நேயம் பேசுவானுங்க!”
“சரியாச் சொன்னீங்க தோழர், இந்த ப்ளூகிராஸ்காரங்களும் நாய்க்காக இரக்கப்-படுவாங்க, சர்க்கஸ்ல இருக்கற புலி கரடிக்காக குரல் கொடுப்பாங்க, ஆனால் இந்தப் பாலைத் திருடி அபிஷேகம் பண்ற கூட்டத்தைக் கண்டுக்க மாட்டாங்க,
கோவிலில் யானையைப் பிச்சையெடுக்க வைக்கிற கொடூர வதையைப் பற்றிக் கேள்வியெழுப்ப மாட்டாங்க. யாரு என்ன சாப்பிடணும்னு அவங்கவங்கதானே முடிவு பண்ணணும்?”
“கண்டிப்பா, நம்மூருல, தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள், தேங்காயைப் பறிச்சுப் போட்ட பிறகு, தென்னை மரத்திலிருக்கும் எலிகளையும் வேட்டையாடுவாங்க கேள்விப்பட்டிருக்கீங்களா?”
“அப்படியா?” என முத்து வியக்க, தோழர் மகேந்திரன் தொடர்ந்தார்…
“ஆமா, ஒரு தென்னந்தோப்புல ஒரு எலி இருந்தால்கூட நூற்றுக்கணக்கான தேங்காயைச் சேதப்படுத்திடும். அதனால அந்த எலிகளை விரட்டி, அடிச்சுப் பிடிப்பாங்க. அப்படிப் பிடிச்ச எலிகளுக்குத் தேங்காயையே கூலியா வாங்கிப்பாங்க.
அதோட அந்த எலிகளைத் தீயில சுட்டுச் சாப்பிடுவாங்க, நானும் கூட சாப்பிட்டிருக்கேன்… இதெல்லாம் ஒவ்வொருத்-தவங்-களோட பழக்கவழக்கம். இதுல தலையிடுறதெல்லாம் சர்வாதிகாரம்தான்”
“நீங்க சொல்றதும் சரிதான், சீனாவுல நாய், பாம்பு, தேள், பூரான்னு அம்புட்டையும் ரோஸ்ட் பண்ணிச் சாப்பிடுறாங்க, கொரியாவுல ஆக்டோபஸ அப்படியே உயிரோட சாப்பிடுறாங்க, அட, அது ஏன்,
இந்தக் காலத்து பிராமின்களே வீட்டுக்குள்ள மட்டும்தான் கறி சாப்பிடுறதில்ல, வெளில வந்துட்டால் ஃபாஸ்ட் ஃபுட்ல அத்தனையும் சாப்பிடுறாங்க! காலம் எவ்வளவோ மாறிட்டு வருது!”
“ஆமா, ஆமா, அய்.டி கம்பெனி, வெளிநாட்டில் வேலைன்னு உலகமே ஒரே குடைக்குள் வரத்தொடங்கிய பிறகு அவங்களும் நான்வெஜ்ல அப்படி என்ன இருக்குன்னு டேஸ்ட் பண்ணத்தொடங்கிட்டாங்கதான்! கேஎப்சில ஆர்டர் பண்றதும், பீச்சுக்குப் போனால் மீன்வறுவல் சாப்பிடுறதும் சகஜமாயிடுச்சு!”
“அப்போ பிராமின் இல்ல, பிராமீன்னு சொல்லுங்க!”
“யூ மீன் மைக்கேல் மதனகாமராஜன்?! ஹஹஹ!” என்றபடி அனைவரும் சிரிக்க அரட்டைக் கச்சேரி நிறைவடைந்தது!