உற்சாக சுற்றுலாத் தொடர் 5

மார்ச் 16-31

உற்சாக சுற்றுலாத் தொடர் 5

கிழக்கின் சங்கமம் – ஆங்கோர் வாட்

மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்

அடுத்து நாங்கள் சென்றது மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஆகும்.
கம்போடியா நாட்டில் சயாம் ரீப் நகரத்து விமான நிலையத்தில் மாலை 4 மணிக்கு வந்து இறங்கினோம். அனைவரும் ஊர் சுற்றிப் பார்க்க விசா வாங்கிக் கொண்டோம்.

அங்கிருந்து நேராக ஆங்கோர்   கண்காட்சியகம் சென்றோம். அங்கு என்ன சிறப்பு என்றால், 1970ஆம் ஆண்டுகளில் இராணுவக் கட்டிடமாக இருந்த கட்டிடம் தற்போது கண்காட்சியகமாகிவிட்டது.

இன்னொரு சிறப்பு, இங்கு பல வித உலோகத்தினால் செய்யப்பட்ட ஆயிரம் புத்தர் சிலைகள் உள்ளன. கல்லில் செதுக்கப்பட்ட புத்தர் சிலைகள் தலை இல்லாமல் இருந்தன. மதங்களுக்குள்  நடந்த போட்டியும் போராட்டமும்தான் இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

கண்காட்சியகத்தைப் பார்த்த பிறகு லீ கிராண்ட் என்ற விடுதிக்குச் சென்றோம். அந்த விடுதி பிரெஞ்சு பாணியில்  கட்டப்பட்டிருந்தது. அறைகள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு வசதியாக இருந்தன.

அறையில் தங்கிய  ஆண்களுக்கு கம்போடிய சட்டையும், பெண்களுக்கு அழகிய பட்டுப் பாவாடையும் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். அன்று இரவு அவற்றை அணிந்து கொண்டு வரவேற்பு விழாவில் கலந்து கொண்டோம்.

கம்போடிய உணவு சைவ அசைவ வகைகளாக இருந்தன. கொழுக்கட்டைகள், அரிசி உணவு நம் ஊரை நினைவுப்படுத்தின.

கேமர் மிகவும் புகழ் பெற்ற கிழக்கு இனம். நம்மைப் போன்றே பழம்பெருமையினைப் போற்றுபவர்கள். அங்கே மதம், மொழி, கலை இவற்றின் சங்கமமாகத் திகழ்கிறது “ஆங்கோர் வாட்”. அங்குள்ள கற்கள் எகிப்தின் பிரமிடுகளைவிட மிகுதியானவை.

பல்லவ, சோழ மன்னர்களின் தாக்கமும், சமஸ்கிருத இந்து, புத்த மதங்களின் கலவையும் நன்கு வெளிப்படுகின்றன. அன்றிருந்த கடல் வணிகத்தினால் பல முக்கியப் பொருள்கள் மட்டுமன்றி கலை, மதம், சிற்பங்கள் போன்றனவும் இந்து, புத்த மதக் கலப்பைக் காட்டுவதாக அமைந்திருந்தன.

தந்தை ஒரு மதத்தையும், மகன் ஒரு மதத்தையும் போற்றிப் படைத்துள்ள கலவையான இந்த உலகப் பெரிய கோவில், பூங்கா என்ற பாரிசு மாநகரத்தைவிடப் பெரிதான அமைப்பில் உள்ளது.

மேற்கு  நாடுகள் இருளடைந்த காலத்தில் இருந்த போது கிழக்கு நாடுகள் நாகரிகத்தின் உச்ச கட்டத்தில் இருந்ததை பல கட்டிடங்களும், கலையினை வெளிப்படுத்தும் சிற்பங்களும் காட்டுகின்றன.

ஆங்கோர் காலகட்டம் என்பது கி.பி.802லிருந்து கி.பி.1432 வரை ஆகும். இந்தக் காலத்தில் கம்மர் அரசாட்சி  தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் வலிமையாக இருந்தது.  இரண்டாம் செயவர்மன் என்ற அரசன் கி.பி. 802_-50 வரை அரசாண்டான். இந்த அரசன் பல சிற்றரசுகளை ஒன்றுபடுத்தி கைமர் பேரரசினை உண்டாக்கினான்.

இவன் தன்னையே தேவஅரசன் என்று சொல்லிக் கொண்டு மேரு மலைக்கோவில் போல பல பெரிய கோவில்களைக் கட்டினான். இந்திரவர்மன் (877_-89) முதன்முதலாக நீர்த்தேக்கம் கட்டினான். முதலாம் சூர்யவர்மன் (கி.பி.1002_-49) ராச்சியத்தின்  எல்லையை லாவோச், தாய்லாந்து வரை விரிவுபடுத்தினான்.

இரண்டாம் சூரியவர்மன்- (1112_-52) ஆங்கோர் வாட் என்ற பெரிய நகரத்தை உண்டாக்கினான். இந்த நகரத்தில் பல அரசர்களால் கட்டப்பட்ட மாபெரும் கோவில்கள் உள்ளன. கோவில்-களைச் சுற்றி சிற்றாறுகள் போல அகழிகளைத் தோண்டி வைத்திருக்கிறார்கள்.

கோவில் கட்டிடங்கள் பெரிய பெரிய கற்களை அடுக்கி மிக உயரமாகக் கட்டப்பட்டவை. கி.பி.1177இல் சாம்ச் என்ற தென் வியட்நாம் அரசு கைமர் ராச்சியத்தைக் கைப்பற்றியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஏழாம் செயவர்மன் (1181_-1219) சாம்ச் இனத்தை விரட்டியடித்தான்.

இந்த அரசன் அவன் முன்னோர்கள் போன்று சிவ, விச்ணு பக்தி மார்க்கத்தை விட்டு புத்த மதத்தைத் தழுவினான். புத்த சிலைகள்  ஏராளமான கோவில்களில் வைக்கப்பட்டன.

செயவர்மன் நாட்டு மக்களுக்காக நிறையத் திட்டங்களை வகுத்தான். சாலைகள், விவசாயத்திற்குப் பாசனக் கால்வாய்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் பெரிய பாலங்கள் போன்றவற்றைக் கட்டினான். .செயவர்மன் மறைவுக்குப் பிறகு கி.பி. 1219இல் கைமர் அரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

அரசும் புத்த மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியது. கோவில்களில் உள்ள புத்த சிலைகள் உடைக்கப்பட்டன, அல்லது அகற்றப்பட்டன. ஆங்கோர் நகரம் கைவிடப்பட்டது. காடுகளால் அந்த நகரமே மறைக்கப்பட்டது.

சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரெஞ்சு நாட்டின் அறிஞர் கென்ரி மொகூட் என்பவரின் ஆர்வத்தால் 1860இல்  காடுகளால் மூடிக் கிடந்த “ஆங்கோர்” நகரம் பக்கம் உலகத்தின் பார்வை திரும்பியது. தொடர்ந்து போர்த்துக்கீசு, சப்பான், ஸ்காட்லாந்து போன்ற நாடுகளும் ஆர்வம் காட்டத் தொடங்கின.

அதன் விளைவாக சுற்றுலாப் பயணிகள் உலகத்தின் பல்வேறு திசைகளிலிருந்தும் பல நாடுகளி-லிருந்தும் வந்து குவிய ஆரம்பித்தார்கள். கோவில்களும், புத்த மடங்களும் சுத்தம் செய்யப்பட்டு மக்கள் எளிதாகப் பார்க்க வகை செய்யப்பட்டது.

ஆங்கோர் கோவில்கள் உலக அதிசயங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. இதனால் கம்போடியப் பொருளாதாரம் உயர்வடைந்தது.

கோவில்களில் உள்ள அதிசயம் என்ன வென்றால், மிக உயரமான (300 அடிக்கு மேல் உயரம், 30 அடிக்கு மேல் சுற்றளவு) மரங்கள், அவற்றின் பலமான வேர்கள் (10 அல்லது 20 மலைப்பாம்புகள் பிணைந்த மாதிரி) காட்சி அளித்தன. அவற்றின் பக்கம் நாம் நின்றால் சிறு கடுகு மாதிரி தெரிவோம்.

இந்த அரசனுக்குப் பிறகு ஒன்பது அரசர்கள் கி.பி.1219 வரை ஆண்டுள்ளனர்.

அலங்கரிக்கப்பட்ட யானையின் மீதமர்ந்து அங்கு சுற்றி வந்தபோது அமர்வதற்குக் கடினமாக, ஆனால் நெஞ்சுக்கு இதமாக இருந்தது. அதில் அமர்ந்து சென்ற உழைப்பாளி-களையும், போர் வீரர்களையும் நினைத்தபோது, அவர்களின் அருமையையும், பெருமையையும் புரிந்துகொள்ள முடிந்தது.

யானைகள் வாழ்க! அடுத்து “பாண்டா கரடிகள்” பார்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *