அய்.அய்.டி.யின் அவலநிலை
ஆயிரம் கனவுகளுடன் அய்.அய்.டி.யினுள் படிக்க நுழையும் மாணவர்கள், பிராமின் அல்லது தெலுங்கு பிராமினாக இருந்தால் மட்டுமே எளிதில், நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற முடியும் என்பது அய்.அய்.டி. மாணவர்களின் மனக் குமுறலாக உள்ளது.
அண்மையில், அய்.அய்.டி.யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் படித்துவந்த நிதின் குமார் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு அனூப் என்ற மாணவர் தூக்கில் தொங்கிய நிகழ்ச்சியை மறப்பதற்குள் அடுத்த தற்கொலை….
கேம்ப்பஸ் இன்டர்வியூவில் பெங்களூரில் நல்ல வேலையில் சேர இருந்த மாணவர் ஏன் தற்கொலை செய்து கொள்ளவேண்டும்? புராஜெக்ட் சமர்ப்பித்த நிதினிடம், உன் புராஜெக்ட் சரியில்லை, அதனால இன்னும் 6 மாதம் இருந்து உன் புராஜெக்ட்டை முடித்துக் கொடுத்துவிட்டுப் போ என்று பேராசிரியர்கள் சொன்னதாலேயே, மனமுடைந்து நிதின் தற்கொலை செய்து கொண்டதாக சகமாணவர்கள் கூறுகின்றனர்.
மேலும், எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் நன்றாகப் படித்தாலும், அவர்களைப் பெரும்பாலான பேராசிரியர்கள் மட்டம் தட்டிப் பேசுவார்களாம். தனக்கு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் இருப்பதாக, பெற்றோருக்குத் தகவல் சொல்லிய காரணத்துக்காக அந்த மாணவனை டிஸ்மிஸ் பண்ணிவிட்டார்களாம். தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களில் 99% பிராமின் அல்லாதவர்களே என்று மன வருத்தத்துடன் மாணவர்கள் கூறுகின்றனர்.
இங்கு நடைபெறும் முறைகேடுகளுக்கும், பிராமணர் அல்லாத ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பக்கபலமாக இருந்து அவர்களது உரிமையைப் பெற போராடிவரும் அய்.அய்.டி. கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி, 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பார்ப்பனர்கள்தான் ஆசிரியர்களாக… மாணவர்களாக இருக்கமுடியும் என்கிற அவலநிலை இங்கு நிலவுகிறது. இப்படி தொடர்ந்து பார்ப்பனர்கள் அல்லாத மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க காவல் துறை அதிகாரிகளும் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும், அய்.அய்.டி.யின் நிலம் மட்டுமல்ல… அதன் இயக்குநர் எம்.எஸ். ஆனந்தும் பல்வேறு சிக்கலில் சிக்கியிருக்கிறார். தலித் மாணவர்களுக்கான கல்வி உரிமைகளை வழங்காமல்… சுகபோகமாக வாழும் அய்.அய்.டியின் பார்ப்பன ஆதிக்கம் அழியப்போகும் நாள் நெருங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.
எம்.பி.யை அவமானப்படுத்திய நரேந்திர மோடி
குஜராத்தின் கோத்ராவில் உள்ள தாகூ கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான விழா ஒன்றில் முதல் அமைச்சர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ்காரர்களுள் பழங்குடியின பெண் எம்.பி. பிரபாபென் தவியாத் மட்டும் மேடையில் அனுமதிக்கப்பட்டார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அனுமதியளிக்காததை எதிர்த்து, மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி, கொடும்பாவி எரித்தனர். எனவே, காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
மேடையிலிருந்த பிரபாபென் தவியாத், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் அனுமதியளிக்கவில்லை, கைது செய்தவர்களை விடுதலை செய்யுங்கள் என்று மோடியிடம் கேட்டுள்ளார்.
இதனைப் பார்த்த பெண் காவல்துறையினர் எம்.பி.யைக் கட்டாயப்படுத்தி மேடையிலிருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர். மோடியும் இதனைப் பற்றிய அக்கறை சிறிதுமின்றி இருந்திருக்கிறார். நடப்பது அரசு விழா, அரசின் செலவில்தான் நடைபெறுகிறது. பா.ஜா. கட்சியினர் கொண்டாடும் விழா அல்ல, பொதுவிழாவில் எந்தக் கட்சியினரும் கலந்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளார்.
எம்.பி.யை அவமானப்படுத்திய மோடி, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அர்ஜூன் மோஹோத் வாடியா கூறியுள்ளார்.