அய்யாவின் அடிச்சுவட்டில் 126
பெரியார் செய்த கருத்துப் புரட்சி
-கி.வீரமணி
1978 ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் வெள்ளம்போல் திரண்டு இருந்த கும்பகோணம், திருச்சி, சேலம், கோவை, கரூர் உள்ளிட்ட நகரங்களில் கழகத் தோழர்களையும், தோழியர்களையும், சந்தித்து _ நெஞ்சு படபடத்த நிலையிலே, இருதயம் பலவீனப்பட்ட நிலையிலே உடலிலே வலு குறைந்தாலும்,
உள்ளத்திலே உரம் குறையவில்லை என்ற உணர்வோடு எங்கள் அய்யா மற்றும் அன்னையார் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கும் அன்னையாக, பகுத்தறிவுப் பாலூட்டும் தாயாக, கசப்பு மருந்தினை மக்கள் மத்தியிலே எவ்வளவு கண்டனத்திற்கு இடையிலேயேயும் தரம் கொஞ்சம்கூடத் தயங்காத தாயாக அவர்கள் பாசத்தோடு,
பரிவோடு இந்த தமிழ்ச் சமுதாயத்தை நடத்திக் கொண்டு சென்ற பாதையில் நானும், அந்த ஒப்பற்ற தாயை இழந்த நிலையிலே ஒவ்வொரு மாவட்டமாக பொறுப்பைச் சுமந்து கொண்டு கழகத்தின் அரிய பெருமைகளை,
வரலாற்று ரீதியாக விளக்கி வந்த முக்கிய நிகழ்வுகளை மட்டும் இங்கே அய்யாவின் அடிச்சுவட்டில்…. பகுதியில் எடுத்துக்காட்டி வருகின்றேன். அதில், தந்தை பெரியார் செய்த கருத்துப் புரட்சி மிகப் பெரியது.
தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள் பார்ப்பானுக்கு இருக்கின்ற கல்மனம் எப்படிப்பட்டது? ஈவிரக்கம் புத்தி எப்படிப்பட்டது;
ஆரியத்திற்கு இருக்கின்ற அணுகுமுறை எப்படிப்பட்டது என்பதனைச் சொல்லிக்கொண்டு வரும் நேரத்தில் அவர்கள் யாகம் எப்படிச் செய்கின்றார்கள் என்பதனைப் பற்றிக் கூறும்போது,
அவர்கள் ஆட்டினை யாகத்தில் போட்டுப் பொசுக்க அந்த ஆட்டின் உயிர்நிலை இருக்கின்றதே அதனைக் கையாலே பிடித்துப் பிசைந்து அதனைச் சித்திரவதை செய்து கொஞ்சம் கொஞ்சமாக உயிரைப் போக்கி பிறகு நெருப்பிலிடுவார்கள்.
அவர்கள் இரக்க உணர்ச்சியே சிறிதும் அற்றவர்கள் என்பதற்கு இதைவிட வேறு நல்ல உதாரணம் இருக்க முடியாது.
அவ்வளவு கொடுமைமிக்க கூட்டம் அந்தக் கூட்டம். அந்தக் கூட்டத்தை சரித்திரத்திலே 2500 ஆண்டு காலத்துக்கு முன்பு எதிர்த்த ஒரே ஒருவர் புத்தர் ஆவார். அந்த புத்தருக்குப் பிறகு ஒரு புத்தர், களத்திலே தந்தை பெரியார்தான் வெற்றிபெற்றார். வேறு யாரும் கிடையாது.
காந்தியார் தங்களுக்குச் சாதகமாக இருக்கின்ற வரையில் சாதாரண காந்தியை மகாத்மாவாக ஆக்கிக் காட்டினார்கள். பெரிதாக விளம்பரப்படுத்திக் காட்டினார்கள்.
ஒரு சமயம் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் கல்லூரிகளிலே எங்களுக்குப் படிக்க இடம் கிடைக்கவில்லை என்ற புகார் மனுவினை காந்தியாரிடம் கொடுக்க, காந்தியார் அன்று முதல்மந்திரியாக ஆண்டுகொண்டு இருந்த ஓமந்தூராரிடம் இதுபற்றிக் கேட்க,
அதற்கு ஓமந்தூரார் பதில் கொடுக்கின்ற வகையிலே என்ன சொன்னார் தெரியுமா? நீங்களே பாருங்கள்.
100க்கு 3 பேராக உள்ள இந்தப் பார்ப்பனர்கள் கல்வி உத்தியோகங்களிலே எவ்வளவு சதவிகிதம் அனுபவிக்கின்றார்கள், 97 பேராக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக் கிட்டாத மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டாமா? என்று தமது கருத்தினைத் தெளிவாகச் சொல்லி புள்ளி விவரங்களையும் காந்தியார் கையில் அளித்தார்.
மகஜர் கொடுத்த பார்ப்பனர்கள் மீண்டும் காந்தியாரிடம் தங்களுக்குச் சாதகமாக நியாயம் வழங்குவார் என்ற நினைப்பில் சென்றார்கள்.
காந்தியார் அவர்களைப் பார்த்து, உங்களுக்கு ஏன் கல்லூரிப் படிப்பு எல்லாம், வேதம் ஓதுதல்தானே வேதியர்களுக்கு அழகு என்று தெளிவாக எடுத்துச் சொல்லி அனுப்பினார்கள்.
இப்படிச் சொன்ன நிலையிலேதான் வெளியே வந்த பார்ப்பனர்கள், இனி காந்தியால் தங்கள் சமுதாயத்திற்கு நன்மை ஒன்றும் ஏற்படாது தீமைதான் வரும் என்று உணர்ந்து கோட்சே என்ற பார்ப்பான் மூலம் 3 குண்டுகளைப் போட்டுக் கொன்றுவிட்டார்கள்.
இது சரித்திரச் சம்பவம். அதே பார்ப்பனர்கள் எவ்வளவு கல் நெஞ்சத்தோடு நடந்து கொண்டார்கள் என்பதற்கு உதாரணமாக நமது கழகத் தலைவர் அன்னையார் அவர்கள் மறைவு ஏற்பட்ட நிலையிலே,
ஆளும் கட்சி எதிர்க்கட்சி இரு தரப்புத் தலைவர்களும் வந்து மரியாதை செய்தார்கள். சட்டமன்றத்தை ஒத்திவைத்து மரியாதை செய்தார்கள். அனைத்துக் கட்சித் தலைவர்களும் இரங்கல் கூட்டத்திலே கலந்து கொண்டார்கள்.
அப்படிப்பட்ட நமது தலைவர் மறைவினை பார்ப்பன ஏடான இந்து பத்திரிகை எங்கோ ஒரு மூலையிலே மரணக்குறிப்பு (Obituary) என்ற தலைப்பின் கீழ் இரண்டாவதாக வெளியிட்டது.
ஆரியம் எப்படிப்பட்டது, அதனுடைய விஷமம் எப்படிப்பட்டது என்பதனை உணர இது ஒன்றே போதும். உணர்வுள்ள தமிழர்கள் இதனை உணருதல் வேண்டும்.
ஆரியம், அம்மா அவர்கள் மறைந்த ஒரு நாளிலே இப்படி நினைத்தது என்று சொன்னால் ஒரு வார காலத்திலே வழக்கு என்று நீதிமன்றத்திற்கு, உசுப்பிவிட அது தயங்குமா? தயவுசெய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அவ்வளவு கொடூரமாக இந்த இயக்கத்தினைப் பார்க்கின்றது என்றால் என்ன காரணம்? அய்யா அவர்கள் ஆரியத்தினுடைய உயிர் நிலை எங்கே இருக்கின்றதோ அங்கே கை வைத்தார்கள்.
ஆரியத்தை எதிர்க்கின்றேன் என்று யார் யாரோ சொன்னார்கள். சித்தர்கள், மற்றவர்கள் எல்லாம் நிழலோடுதான் போராடினார்கள். ஆளோடு போராடவில்லை. தந்தை பெரியார் ஒருவர்தான் ஆளோடு போராடினார்கள்.
மூலபலம் எங்கே இருக்கின்றது என்று தெரிந்து அங்கே கை வைத்தார். கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளைப் பரப்புகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்னார்களே, அதனை மறுக்க யாருக்காவது தைரியம் இருக்கிறதா?
காரணம், நமது வாதம் அறிவு வாதம், அவர்கள் யாரும் நம்மிடம் வாதத்துக்கு வரமுடியாத அளவுக்கு நம்மை முழுக்க முழுக்க தந்தை பெரியார் அவர்கள் அறிவு வயப்பட்டவர்களாகப் பக்குவப்படுத்தி வைத்து இருக்கின்றார்கள்.
இதற்கு எங்களுடைய துணிச்சல் காரணம் அல்ல. அய்யா அவர்களின் அயராத உழைப்புத்தான் காரணம். அதுதான் மிக முக்கியம். அய்யா அவர்கள் அவ்வளவு சுலபமாக ஆக்கிவைத்து விட்டுப்போய் இருக்கின்றார்கள்.
தார் ரோடினை அமைத்துக் கொடுத்து, காரையும் வாங்கிக்கொடுத்து, காருக்கு ஸ்டேரிங் பிடிப்பது எப்படி என்றும் காட்டி, குறுக்கே தடை ஏதும் வந்தால் அந்தத் தடைகளை எப்படித் தாண்டுவது என்றும் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போன பிற்பாடு, கார் ஓட்டுவதில் என்ன சிரமம்?
இன்றைக்கு கழகத் தலைவர் அம்மா அவர்களைப் பற்றி இவ்வளவு கேவலப்-படுத்துகின்ற ஆரியம், அன்று தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது அவரோடு இந்த இயக்கம் ஒழிந்துவிடும் என்று கனவு கண்ட ஆரியம்,
தந்தை பெரியார் அவர்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கி அது உச்சக்கட்டத்தில் நடந்து வந்தபோது இந்த இயக்கம் எதிர்காலத்திலே தங்களுக்கு மிகப் பெரிய சவாலாக அமையும் என்று உணர்ந்த காரணத்தாலே புகழ்ந்து இந்த இயக்கத்தை அழிக்கலாம் என்று ஒரு காலகட்டத்தில் எண்ணியது.
அந்தக் கட்டத்தையும் தந்தை பெரியார் அவர்கள் புரிந்துகொண்டு அதனையும் தாண்டினார் என்பதுதான் முக்கியமாகும்.
ஹர்டில் ரேஸ் (Hurdle Race) என்று சொல்லக்கூடிய தடை ஓட்டம் இருக்கின்றதே, அதில் ஈடுபடுபவர்கள் எங்கெங்கெல்லாம் தடைகள் இருக்கின்றதோ அவற்றை எல்லாம் தாண்டித் தாண்டி ஓடவேண்டுமோ அதுபோல எங்களுடைய லட்சியப் பயணத்தில் தடை ஓட்டமாக இருந்தாலும் அது தொடர் ஓட்டமாக இருக்குமே ஒழிய அது ஒன்றும் தடைப்பட்ட ஓட்டமாக இருக்காது.
தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது 1925லேயாகும். அய்யா அவர்கள் தொடங்கிய நிலையில் சுயமரியாதை இயக்கத்தினுடைய கருத்துப் புரட்சி,
ரத்தம் சிந்தாத மாபெரும் புரட்சி, உலகில் எங்கும் இதுவரையிலே ஏற்பட்டிராத மிகப்பெரிய மவுனப்புரட்சி எப்படிப்பட்டது என்பதனை நீங்கள் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பாருங்கள்.
சோவியத் ரஷ்யாவின் ரஷ்யப் புரட்சியை-விட, மாவோவின் புரட்சியைவிட, பிரெஞ்சுப் புரட்சியைவிட, தந்தை பெரியார் அவர்கள் செய்த கருத்துப் புரட்சி இருக்கின்றதே அது மாபெரும் புரட்சியாகும். ஈடு இணையற்ற ஒப்பிடமுடியாத புரட்சியாகும்.
எப்படி தந்தை பெரியார் அவர்கள் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவரோ அதுபோல அவர் செய்த கருத்துப் புரட்சியும் மிகப் பெரியது. 5000 ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயத்தில் அவர் நடத்திய புரட்சி இருக்கின்றதே அது வரலாற்றின் வைர வரிகளிலே நிலைத்து இருக்கக்கூடிய புரட்சி. இந்தப் புரட்சிக்கு இன்னொரு புரட்சியை ஒப்பிட்டுக் காட்ட முடியாத புரட்சி.
இதற்கு வேண்டுமானால் விளம்பரம் இல்லாமல் இருக்கலாம். பாஷ்ய கர்த்தாக்கள் சொல்லி வியாக்யானங்கள் எழுதாமல், சொல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்தக் குறைகூட எதிர்காலத்தில் இருக்காது.
தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழா காலத்திலே உலகத்தினுடைய ஒவ்வொரு மூலையிலும் தந்தை பெரியார் அவர்களின் பல்வேறு கருத்துகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு அனுப்பப்படும், பரப்பப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எங்களுடைய பணி தமிழ்நாட்டில் உள்ள மூடத்தனத்தை மட்டும் ஒழிப்பது அல்ல. இந்தியா முழுவதற்கும் தந்தை பெரியார் இயக்கத்தினை _ கொள்கையினை கலங்கரை விளக்கம் போல காட்டுவது மட்டும் அல்ல.
உலக சரித்திரத்தின் நாயகராம் தந்தை பெரியார் எப்படிப்பட்டவர், அவராலே தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கம் எப்படிப்பட்டது, அவருக்குப் பிறகு அன்னையாரால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம் எவ்வளவு மாபெரும் மவுனப்புரட்சி இயக்கமாக,
சபலங்களுக்கு இடம் தராமல் உறுதியான லட்சியங்களோடு பெரிய சமுதாயப் புரட்சி இயக்கமாக, உலகில் ஈடு இணையற்ற இயக்கமாக எப்படித் திகழ்ந்தது என்பதனைச் சொல்லிக் கொடுப்பதற்கு, சுட்டிக் காட்டுவதற்கு நாங்கள் பயன்படுத்துவோம்.
தந்தை பெரியார் அவர்களது இந்த இயக்கம் ஆரம்ப காலத்தில் செய்த மகத்தான பணியினைக் கண்டு மிரண்டார்கள் பார்ப்பனர்கள். இருட்டடித்து ஒழிக்க முடியாது,
அணைத்தாவது ஆரம்பத்திலேயே ஒழித்துவிடலாமா என்று கருதி சங்கராச்சாரியாரே தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதின காலமும் உண்டு. இதனை முன்பே விளக்கியுள்ளேன்.
எங்களை யாரும் ஏமாற்றிவிட முடியாது என்பதற்காகவே இதனைச் சொல்லுகின்றோம். எங்களது தலைவர் தந்தை பெரியார் எப்படிப்பட்டவரோ, அப்படிப்பட்டவர்கள் அவரது தொண்டர்கள் நாங்களும்.
நாங்கள் மிக சாமான்யர்கள்; தந்தை பெரியார் தலைவர்களுக்கெல்லாம் தலைவர். நாங்களோ தொண்டர்களுக்கெல்லாம் தொண்டர்கள் என்றாலும், இந்த இயக்கத்தினை நடத்தக்கூடிய நிலை இருக்கின்றது என்று சொன்னால்,
எல்லோருடைய உழைப்பும் உறுதியும், கட்டுப்பாடும் கொண்ட ஒரே குடும்பமாக நாங்கள் இருக்கின்றோம் என்று சொன்னால் தந்தை பெரியார் அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையை எங்களுக்குத் தந்து இருக்கின்றார்கள்.
எதிர்நீச்சல் அடிக்கக்கூடிய உணர்ச்சியினை எங்களுக்குத் தந்து இருக்கின்றார்கள்; உணர்வினை _ பலத்தினை எங்களுக்குத் தந்து இருக்கின்றார்கள்.
நாங்கள் மீன் குஞ்சுகள். எங்களுக்கு யாரும் நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் யானைக் குட்டிகள். எங்களுக்கு அடித்தளம் போட்டுப் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
எங்களுடைய செயல்திறனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் காலம் வரப் போகின்றது. தந்தை பெரியார் அவர்களின் நுற்றாண்டு விழாவில் மிகத் தெளிவாகக் காணலாம். யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
அதே ஆரியம் எவ்வளவு சாகசத்தில் இறங்கியது என்பதற்கு உதாரணம், கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை என்கின்ற சங்கதி தந்தை பெரியார் அவர்களுக்கு எவ்வளவு உறுதியாகத் தெரியுமோ அது மாதிரி உறுதியாகத் தெரிந்த இன்னொருவர் நாட்டிலே உண்டென்றால் அவர்தான் சங்கராச்சாரியார்.
கடவுள் இல்லை என்கின்ற இந்த சங்கதி இந்த இரண்டு பேருக்கும்தான் உறுதியாகத் தெரியும். ஆனால் இரண்டு பேர் முறையிலும் வித்தியாசம் உண்டு. தந்தை பெரியாருக்குத் தெரிந்ததை அவர் நமக்குத் தெரிந்தது மக்களுக்கு எல்லாம் தெரிய வேண்டும் என்று நினைத்தார்.
சங்கராச்சாரியாருக்கும் தெரியும் கடவுள் இல்லை என்பது. ஆனால் நமக்குத் தெரிவது மற்றவர்களுக்கு எல்லாம் நாட்டில் தெரியக் கூடாது என்று கவலைப்படுகின்றவர்.
தந்தை பெரியார் அவர்களே, சங்கராச்சாரியார் தமது இன எதிரியாய் இருக்கக்கூடியவர். எவ்வளவு புகழ்ந்து பாராட்டினாலும்கூட அங்கு வரமாட்டேன் என்று சொல்லி அதற்குப் பிறகு 1930இல் இருந்து 1973ஆம் ஆண்டுவரை அதாவது 43 ஆண்டுகாலம் இந்த நாட்டில் தொண்டாற்றி இருக்கின்றார் என்றால் சாதாரணமான தொண்டா?
ஏன் இதனைச் சுட்டிக்-காட்டுகின்றோம் என்று சொன்னால் ஆரியம் மிக நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தலைவரிடத்திலே நாங்கள் பயிற்சி பெற்று இருக்கின்றோம்.
எங்களை எதிர்த்தும் நீங்கள் அகற்ற முடியாது அல்லது நீங்கள் பாராட்டியும் நாங்கள் ஏமாந்து கொள்கையினை விட்டுவிடுவோம் என்று நினைக்காதீர்கள்.
இன்னும் கேட்டால் தந்தை பெரியார் அவர்கள் சொல்லிக் கொடுத்து இருப்பதே திட்டுகின்றவனைப் பற்றிக் கவலைப்படாதே; புகழுகின்றவனைப் பற்றி கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு என்றுதான் சொல்லிக் கொடுத்து இருக்கின்றாரே தவிர வேறு ஒன்றுமே கிடையாது.
அப்படிப்பட்ட நிலையிலே நாங்கள் பயிற்சி பெற்று இருக்கக்-கூடியவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த இயக்கம் அவ்வளவு ஆழமான இயக்கம். எனவே இந்த இயக்கத்தை யாராலும் அழித்து ஒழித்துவிட முடியாது.
ஏன் சங்கராச்சாரியாருக்கு அவ்வளவு கவலை, தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கிய இந்த இயக்கம் சனாதனத்தினுடைய ஜாதி அமைப்பினுடைய ஆணிவேரைப் பிடித்து ஆட்டி அசைக்கின்ற நிலை கண்டுதான் ஆகும்.
எனவே தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க, மூடநம்பிக்கைகளை, குருட்டுத்தனங்களை வீழ்த்த ஜாதியற்ற சமுதாயத்தினை நிலைநாட்ட பாடுபட்டுவரும் ஒரே சமுதாய இயக்கமாகும்.
தமிழர்தம் நல்வாழ்வுக்காக, மான வாழ்வுக்காக நடைபெறும் இயக்கமாகும் என்று கூறி என் உரையை நிறைவு செய்தேன்.
இக்கூட்டத்தில் கழக முன்னணித் தோழர்கள், தோழியர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து-கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(நினைவுகள் நீளூம்)