சிறப்புச் சிறுகதை
விட்டு விடுதலையாகி
-கவின் மலர்
உனக்குப் புரியாது கவிதா. ஒரு நாள் பேசலைன்னாலும் ரொம்ப கஷ்டம். ஹூம். என்னைக் காப்பாத்திக் கொண்டு வந்து வச்சிருக்கான், அவன் இல்லேன்னா நான் என்னிக்கோ தற்கொலை பண்ணிக்கொண்டு செத்துருப்பேன் தெரியுமா? சொல்லும்போதே கண்களின் பயமும் மிரட்சியும் தெரிந்தன அவளுக்குள்.
ஏன் இவள் இப்படிச் சொல்கிறாள். அவள் வீட்டில் அப்படியென்ன கொடுமை அவளுக்கு? அன்றைக்கு அண்ணனைக்கண்டு அப்படிப் பயந்து நடுங்கினாள். இன்றைக்கு இப்படிச் சொல்கிறாள். பெற்ற பெண்ணை அப்படி யாராவது கொடுமைப்படுத்துவார்களா? கவிதா அவள் முகத்தையே பார்த்தாள்.
பால்வடியும் இந்த முகத்தைப் பார்த்தால் எப்படிக் கொடுமைப்படுத்தத் தோன்றும்? என்ன மனிதர்கள்?
என்னதான் ஆச்சு உன் வீட்டுல? சொல்லேன்!
இப்போ வேணாம். அப்புறமா சொல்றேன்.
அந்த அப்புறமா அவள் பிரான்ஸ் புறப்படும்வரை வரவேயில்லை. ஆனால் தினமும் ஏதோ சொல்ல எத்தனிப்பதுமாய் சொல்ல இயலாமல் உள்ளுக்குள் விழுங்குவதுமாய் அவள் தவிப்பதாய்ப் பட்டது கவிதாவுக்கு.
ஆனாலும் புறப்படும் நாள்வரை அவள் எதுவும் சொல்லவேயில்லை. விமான நிலையத்தில் நிற்கையில் அடக்கவியலாமல் கண்ணீர் விட்டனர் இருவரும். சுதாவை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தபின்னர் கவிதாவிற்கு அறை வெறுமையாய்த் தெரிந்தது. சாப்பிடப் பிடிக்கவில்லை.
மறுநாள் அருகிலிருந்த எஸ்.டி.டி.பூத்திற்கு சில்லரை மாற்றச் சென்றபோது அங்கிருந்த பையன் கேட்டான் உங்களத்தேடி ரெண்டுபேர் ஹாஸ்டலுக்கு வந்திருப்பாங்களே? அவங்களைப் பார்க்காம நீங்க இங்கே வந்துட்டீங்களேக்கா? யாரு? என்னை யாரு பாக்க வந்தாங்க?
சுதாக்கா போட்டோவைக் காமிச்சு கடையாண்ட வந்து ஒரு அம்மாவும் இன்னொருத்தரும் கேட்டாங்கக்கா. அவங்க எங்கேயோ வெளிநாடு போயிட்டாங்க. கூட ஒரு அக்கா எப்பவுமிருக்கும். அத்தப் போயிப் பாருன்னு உங்க பேரு சொல்லி அனுப்பிச்சேன். இந்த ஹாஸ்டல்தான்னு சொல்லியனுப்பினேன். வரலயா?
கவிதாவிற்கு ஒரு நொடி உலகமே ஸ்தம்பித்தது. ஹாஸ்டல் நோக்கி ஏறத்தாழ ஓடினாள். அவள் உள்ளே நுழைந்தபோது விசிட்டர்ஸ் ரூமில் ஓர் அம்மாளும், இன்னுமொரு பெரியவரும் நின்றிருந்தனர். சுதாவின் அதே சாயல். பார்த்தவுடன் சொல்லிவிடலாம் அது சுதாவின் தாயென்று.
இதோ.. இவதான் கவிதா, -மஞ்சு அடையாளம் காண்பித்துவிட்டு அலுவலகம் கிளம்பினாள்.
அந்த அம்மாள் மெல்ல இவளை நெருங்கினாள். அம்மாடி! நீதான் சுதாவோட ஃபிரண்டாம்மா? ஆமாம்.. நீங்க..?
நான் சுதாவோட அம்மா. அவ இப்போ எங்கேம்மா? சொல்லு! அதட்டலாய் கேட்டாள் அந்த அம்மாள். கவிதாவுக்கு எரிச்சல் வந்தது. அமைதியாய் தெரியாது என்றாள்.
இங்கே யார்கிட்ட கேட்டாலும் எனக்குத் தெரியாதுங்குறாங்க.. பேசி வச்சிருக்கீங்களா சொல்லக்கூடாதுன்னு அந்தம்மாள் கத்தினாள்.
இங்க பாருங்கம்மா! இது ஹாஸ்டல். இங்க கத்தி கூப்பாடு போடாதீங்க
நான் திருநெல்வேலிலேர்ந்து கௌம்பி வந்துருக்கேன்மா. அவ எங்கே? எங்கேயோ வெளிநாடு போயிட்டதா அந்த எஸ்.டி.டி.பூத் பையன் சொன்னான். கட்டையில போறவ.. நாறச்சிறுக்கி.
இப்படிப் பண்ணிட்டுப் போயிட்டாளே… எங்க போனா அவ? சொல்லும்மா சொல்லு! எங்க குடும்ப மானத்தையே வாங்கிட்டு அவ எங்க போனா?
அவ பண்ணின காரியத்துக்கு அவ கையில் கிடைச்சா கண்டந்துண்டமா வெட்டிப் போட்ருப்பான் அவ அண்ணங்காரன் என சொல்லும்போது அழுதுகொண்டே சொன்னாலும் குரலில் வன்மம் தெறித்தது.
அந்த ஓடுகாலி சிறுக்கி ஓடுனாளே.. பெத்த புள்ளையை விட்டுட்டுல்ல ஓடிட்டா… அதெப்புடி ஒரு தாய்க்கு இப்புடிச் செய்ய மனசு வரும்?
அதிர்ந்து நின்றாள் கவிதா. அவளுக்கு அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை தான் சரியாகப் புரிந்து கொண்டோமா அல்லது அந்த அம்மாள் வேறு ஏதாவது சொல்லி தன் காதில் வேறு மாதிரி விழுந்துவிட்டதோ என்று குழப்பமாய் இருந்தது.
என்ன சொல்கிறாள் இந்த அம்மாள்? அம்மா! என்ன சொல்றீங்கம்மா? யாரு குழந்தை? குழந்தை இருக்கா? சுதாவுக்கா?
அந்தம்மாள் ஒரு புகைப்படத்தை எடுத்து வீசினாள். கழுத்தில் தாலி. கையில் குழந்தை. சுதாவேதான். குழந்தை… இது.. இது.. அவள் அண்ணன் குழந்தை சுகி என்றல்லவா சொன்னாள்?
இந்தக் குழந்தையின் படத்தைத்தானே அவள் எடுத்து வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பாள். அருகில் யார்? இந்த முகம் கவிதாவுக்குத் தெரிந்த முகமாகத் தோன்றியது… யாரிது? அம்மா! இது யாரு? என்றாள் சன்னமான குரலில்.
அவ புருஷன் என்றாள் அம்மாள். சட்டென்று நினைவுக்கு வந்தது. இந்த முகத்தைத்தான் தி.நகரில் பார்த்து அன்றைக்கு மிரண்டாள் சுதா. அவளால் நம்ப முடியவில்லை. ஆனால் அவர்கள் நிச்சயமாக கணவன் – மனைவிதான் என்பதை படத்தில் தெரிந்த அவர்களின் நெருக்கம் சொல்லியது.
அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். சில நொடி மௌனத்திற்குப் பிறகு அந்தம்மாள் கேட்டாள். அவ எங்கேம்மா போயிருக்கா? அட்ரஸ் தர்றியா? போன் நம்பர் ஏதாச்சும் இருக்கா? அம்மா! அவ ஏன் வீட்டைவிட்டு வந்தா?
அந்தம்மாள் அழ ஆரம்பித்தாள். கிளி மாதிரி வளர்த்தேன் எம்பொண்ணை. ஒரு குரங்கு கையில புடிச்சுக் குடுத்தேன். அவ அப்பவே இந்த மாப்பிள்ளை வேணாம்னா. ஆனால் நல்ல வசதியான எடம்னு சொல்லி கட்டி வச்சோம்.
அந்தப் படுபாவி அவளைப் படாதபாடு படுத்தினான். சிகிரெட்டால மார்ல சுட்டுருக்கான். அவ மேல எப்பவும் சந்தேகம்தான். யார்கிட்டப் பேசினாலும் சந்தேகந்தான். தினமும் குடிதான். கண்ணு-மண்ணு தெரியாம அடிப்பான்.
எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டா குழந்தைக்காக. ஒரு தடவ அவளை அடிச்சதுல கை ஒடஞ்சு பிராக்சர் ஆயிடுச்சும்மா.. நான் எதச் சொல்வேன்… எத விடுவேன்.. என்புள்ளய சின்னாபின்னாப் படுத்திட்டான்மா.
அடிச்சு அவள வீட்டை விட்டுத்தள்ளி கதவச் சாத்திட்டான். அப்போ அந்த வழியா போன ஒருத்தன்தான் அவளைக் கூட்டிட்டுப் போயி ஆஸ்பத்திரில சேத்தான். அப்படித்தான் அந்தப் பையனோட பழக்கம் அவளுக்கு.
ஒரு நா திடீர்னு மாப்பிள்ளை குடிச்சிட்டு வந்து அவளை அடிச்சப்போ அடிவயித்துல பட்டு மயங்கிட்டா. அன்னைக்கு அவளுக்கு உயிர்ப்பயம் வந்துடுச்சு. செத்துப்போயிட்டா என்ன செய்றதுன்னு நெனச்சுக் கௌம்பிட்டா.
குழந்தை அவ மாமியார் ரூம்ல இருந்துச்சு போலிருக்கு அன்னைக்கு. போய் எடுத்துட்டுப் போறதுக்கு அவளுக்குப் பயம், மாட்டிப்போமோன்னு. அப்படியே கிளம்பிட்டா.. கிளம்பினவ இங்கே எங்க வீட்டுக்கு வரவேண்டியதுதானே?.. நேரா அவனைப் பார்க்கப் போயிட்டா.
கண்ணீர் வழியப் பேசிக்கொண்டிருந்த அந்தம்மாள் திடீரென ஆவேசமானாள். ஆனா அதுக்காக அவன் பின்னாடி போயிரலாமா? ..அந்த நாறநாயை இந்த மூதேவிக்குப் பிடிச்சிருச்சி. கல்யாணம் ஆயிடுச்சே; புள்ளை வேற இருக்கேன்னு யோசிக்க வேணாமா? அந்தப் பயதான் ஆம்பள பல்ல இளிச்சுக்கிட்டு வருவான்.
இவளுக்கு எங்க போச்சு புத்தி.? களவாணிச் சிறுக்கி!… வாயில் வரக்கூடாத கெட்டவார்த்தை சொல்லித் திட்டினாள் அந்தம்மாள்.
அதுவரை அமைதியாய் இருந்த கூட வந்திருந்த அந்த மனிதர் கோபம் கொப்பளிக்கப் பேசினார். ஜாதிசனம் முன்னாடி தலகுனிய வச்சுட்டாம்மா! அவளை ஒனக்கு இப்பத்தானே தெரியும். இந்தக் கதையெல்லாம் சொன்னாளா உங்கிட்ட?
இல்லை..! கல்யாணம் ஆனதெல்லாம் எனக்குத் தெரியாது. சொல்லலை. ரொம்ப ஷாக்கா இருக்கு
எப்புடிச் சொல்வா? இதெல்லாம் தெரிஞ்சா மூஞ்சி குடுத்துப் பேசுவீங்களா யாராச்சும். அதான் சொல்லியிருக்கமாட்டா.
அவள எந்த ஊர்ல கட்டிக்குடுத்தீங்க? குழந்தை எங்க இருக்கு?
இந்த மெட்ராஸ்லதான். ஆவடியிலதான் வீடு. ஓடுகாலி பெத்ததா இருந்தாலும் நம்ம குடும்ப வாரிசாச்சேன்னு… இவ போனபிறகு நான் போய்க் கேட்டேன். குடுக்கலை. இவளும் போன் பண்ணி புள்ளயைக் கேட்டிருக்கா… குடுக்க மாட்டேன்னுட்டாங்க. அந்தாள் மறுகல்யாணம் ஒடனே பண்ணிக்கிட்டான்.
இவளத் தேடாத எடமில்ல. அவ அண்ணங்காரன் ஆத்திரத்துல குதிக்கிறான். எங்க இருக்கான்னே தெரியல. எங்க சொந்தக்காரரு ஒருத்தர் இந்த ரோட்டுல அவள ஆட்டோவுல பாத்ததா நேத்துச் சொல்லி அட்ரஸ் சொன்னாரு.
சனியன அடிச்சு இழுத்துக்கிட்டுப் போயிருவோம்னு நெனச்சு வந்தோம். ஆனா நாட்டை விட்டே அவன்கூட ஓடிட்டா!…. மறுபடி கெட்ட வார்த்தை.
அம்மா! நீங்க பாத்துக் கல்யாணம் பண்ணிவச்ச ஆளுதான் அத்தனை கொடுமக்-காரனாயிருக்கானே.. அதான் இப்ப அவளா பாத்துக்கிட்டா… நீங்க அதுக்கு ஏன் அவளத் திட்டுறீங்க?
அவனோட வாழப்புடிக்கலைன்னு ரத்து பண்ணிட்டு வந்தா எங்க ஜாதியில நாங்க கல்யாணம் பண்ணி வச்சிருப்போம்ல.
கவிதா அவர்கள் இருவரையும் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
எங்கதான் போயிருக்கா அவ! சொல்லும்மா!
தெரியாது! எனக்குத் தெரியாது அழுத்தமாகச் சொன்னாள்.
அந்த அம்மாள் பட்டென்று அவள் காலில் விழுந்தாள். பதறி பின்வாங்கினாள் கவிதா. என்னதிது! இவ்வளவு பெரியவங்க… என் காலில் விழுந்துக்கிட்டு.. எழுந்திருங்கம்மா!
அட்ரஸ் போன் நம்பர் ஏதாச்சும் குடும்மா… இந்தக் காரியம் பண்ணிட்டுப் போயிருக்காளே… அவள…. கவிதாவின் காலைப் பிடித்துக் கண்ணீர்விட்டுக் கெஞ்சினாள் அந்தம்மாள்.
கண்களிலிருந்து மாலை மாலையாய் நீர் வழிந்தோட கெஞ்சிக்கொண்டே இருந்தாள் அவள். அந்த அம்மாள் பேசியது எதுவுமே அவள் காதில் விழவில்லை. அழுத முகம் மட்டுமே தெரிந்தது.
ஒருகட்டத்தில் தாங்க முடியாமல் அம்மா! ப்ளீஸ் என்றாள் சத்தமாக. இவ்வளவு பெரியவங்க நீஙக. உங்கள யாருன்னே தெரியாத என் கால்ல விழ வச்சுட்டாளே அவ. நீங்க உங்க நம்பர் குடுங்க.. ஊருக்குப் போங்க இப்போ.
அவ எனக்கு நிச்சயமா போன் பண்ணுவா. பண்ணினா அவளோட நம்பர் வாங்கி உங்களுக்குத்தர்றேன். சரியா?
அந்த அம்மாளின் முகம் பிரகாசமாகியது. கவிதா தன் கைப்பையைத் திறந்து ஒரு சின்ன டைரியை எடுத்துக் கொடுக்க அந்த அம்மாள் தன் செல்பேசி எண்ணை எழுதிக் கொடுத்தாள்.
உன் நம்பர் சொல்லும்மா! அந்த மனிதர் கேட்டார். அவள் சொல்ல தன்னுடைய செல்பேசியை எடுத்து அதிலிருந்து இவள் எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் செய்தார்.
என்னை நம்புங்கம்மா! அவ கண்டிப்பா கூப்பிடுவா.
கூப்பிட்டா நான் பேசி அவள் அட்ரஸும் போன் நம்பரும் வாங்கித்தரேன்
அவ எந்த ஊருக்குப் போயிருக்கா?
சிங்கப்பூர்.
சிங்கப்பூரா! சொந்தக்காரங்கள்ளாம் இருக்காங்க. பாத்துருவோம். கண்டுபிடிச்சுரு-வோம். போன் நம்பர் இருந்தாக்கூட போதும். ஒன்ன நம்பிப் போறேம்மா அவ போன் பண்ணினா நாங்க வந்துட்டுப்போனதைச் சொல்லாதே. உஷாராயிடுவா..
அந்தம்மாள் கையெடுத்துக் கும்பிட்டாள்.
சரிம்மா! நீங்க போயிட்டு வாங்க……!
அந்தம்மாளும், அவரும் புறப்பட்டனர். அறைக்குள்ளிருந்து நிர்மலா வந்து கேட்டாள். யார் கவிதா அவங்க? ஏதோ சத்தமா பேசினமாதிரி இருந்துது. காதுல சரியா விழலை. என்ன விஷயம்?
எனக்கு தூரத்துச் சொந்தம். சும்மா என்னப் பார்க்க வந்தாங்க. சொந்தக்காரங்க சண்டைதான். வேறென்ன. இவங்களுக்கு வேற வேலையில்ல. நகர்ந்தவள் நின்றாள். அப்புறம் நிம்மி! என் ஆபீஸ்மேட்ஸ் 3 பேரு வீடு எடுத்துத் தங்கியிருக்காங்க.
ஹாஸ்டலைக் காலி பண்ணிட்டு அங்க வரச்சொல்லிக்கிட்டு இருந்தாங்க ரொம்ப நாளா. கவிதாவும் போயிட்டா இல்லையா? அதனால நான் நாளைக்குக் காலைல ஹாஸ்டலை வெகேட் பண்றேன் சொல்லிக்கொண்டே வெளியேறிய கவிதா தன் செல்பேசியிலிருந்த சிம்கார்டைக் கழற்றிக் குப்பைத்தொட்டியில் எறிந்தாள்.
செல்பேசியினைக் கைப்பைக்குள் வைக்கையில் கண்ணில் தட்டுப்பட்டது அந்தப் புகைப்படம். கவிதாவும் சுதாவும் ஒரு மாலைப் பொழுதில் ஹாஸ்டல் மொட்டைமாடியில் எடுத்துக்-கொண்டது.
கலைந்த தலையுடனும், வியர்வை வழிந்த முகத்துடனும் இருக்கும் அந்தப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் இந்தப் படத்தில் நான் நல்லாவே இல்ல.
வேற போட்டோ ஒன்னு எடுப்போம் கவிதா என்று சொல்லிக்கொண்டேயிருப்பாள் சுதா. ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது.
அப்படத்தை இப்போது உற்றுப்பார்த்தாள் கவிதா. சுதா இப்பொழுது எப்போதையும்விட அழகாக இருப்பது போல் தோன்றியது
அன்று இரவு.. கவிதாவுக்கு லேண்ட்லைனில் அழைப்பு வந்தது. மறுமுனையில் சுதா.
சுதா! நல்லபடியா போய்ச் சேர்ந்தியா? ஒன்னும் பிரச்சினையில்லையே?
இல்ல கவி! இந்த ஊர் பிடிச்சிருக்கு. ராஜூ மட்டும்தான் இங்க எனக்குத் தெரியும். ஆனாலும் பிடிச்சிருக்கு. இவன்கூட இருக்குறதே எனக்கு சந்தோஷமா இருக்கு. நீ எப்பிடி இருக்கே?
இருக்கேன். உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..
என்ன?
உங்கம்மாவும் அப்பாவும் ஹாஸ்டலுக்கு வந்தாங்க
இரண்டு விநாடிகள் மௌனத்திற்குப் பிறகு துண்டிக்கப்பட்டது இணைப்பு.
அதன்பின் சுதாவிடமிருந்து ஒருபோதும் கவிதாவுக்கு தொலைப்பேசி அழைப்பு வரவேயில்லை.