கண்டுபிடித்தது… கடவுள் அல்ல!

மார்ச் 16-31

– மதிமன்னன்

சகலமானவற்றையும் படைத்தது கடவுள் எனும் நம்பிக்கை பலரிடத்தில் இருக்கிறது. உலகின் பலநாட்டு மக்களிடமும் இருக்கிறது. உலகின் பெரிய மதங்கள் எனப்படும் ஆறு மதத்தைச் சேர்ந்த மக்களிடமும் இந்த நம்பிக்கை இருக்கிறது.

நம்புங்கள் என்பதுதான் எல்லா மதங்களின் ஆரம்ப வாக்கியம். எதையும் நம்பி ஒருவன் தொடங்கினால் இறுதியில் அவனுக்குச் சந்தேகங்களே மிஞ்சும்; ஆனால் சந்தேகங்களுடன் தொடங்கினால், இறுதியில் உறுதியான கருத்து கிடைக்கும்.

இந்தக் கருத்தைத்தான் சாக்ரடீஸ், தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற அறிஞர் பெருமக்களின் வாழ்வும், செயலும், தத்துவக் கருத்துகளும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.

 

 

எதையும் சந்தேகி என்ற மார்க்சின் சொற்களும், எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள் என்ற மேற்கத்திய சாக்ரடீசும் கிழக்கத்திய பெரியாரும் சொன்ன சொற்களும் எண்பித்துக் கொண்டிருக்கின்றன.

வள்ளுவரும் புத்தரும் இதையேதான் உலகுக்கு அறிவித்தனர். ஆனால், குள்ள மனிதர்கள் நம்பு எனக் கூறி மக்களை மாக்களாகவே வைத்துவிட்டனர். எல்லாம் கடவுள் செயலாலே என அறிவித்து, மனிதனால் ஆவது எதுவுமே இல்லை என்ற எண்ணத்தை விதைத்துவிட்டனர்.

ஆனால், எல்லா மனிதர்களும் இதை ஏற்கவில்லை. ஆதாமும் ஏவாளும் அம்மணமாகத் திரிந்தது போல பின்னிட்ட சந்ததியினர் இருக்கவில்லை. வேட்டையாடிக் கொன்று தின்ற விலங்குகளின் தோலைக் கொண்டு ஆடை என்ற பெயரில் எதையோ அணிந்தனர்.

சாக்ரடீஸ்

மானத்தை மறைப்பது என்ற எண்ணம் இல்லாத நிலையில், குளிரில் இருந்து தம்மைக் காத்துக் கொண்டனர். தோலைத் தைப்பதற்கு எலும்பு ஊசிகளையும் ஆக்கினர். இத்தகைய கண்டுபிடிப்பு எண்ணம் எப்படி ஏற்பட்டது? மதப் போதனைகளைப் போலவே வாழ்ந்திருந்தால் இது முடிந்திருக்குமா?

தந்தை பெரியார்

அந்தக் காலத்தில் கடவுளும் இல்லை, அதைக் கட்டிக் காப்பாற்றிக் காசு பார்க்கும் மதங்களும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இவை இரண்டும் பிற்காலப் பித்தலாட்டங்கள்!

இவை இல்லாத காலத்தில் கல் கருவிகள், தோல் ஆடைகள், நெருப்பில் வதக்கி உண்ணுதல் போன்றவை-யெல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டவை; கடவுளால் அல்ல, இதற்கான தூண்டுதல் மனித மூளையின் செயல்பாடுகளால் விளைந்தவை.

கார்ல் மார்க்ஸ்

இத்தகைய தூண்டுதலை முதலில் புரிந்து செயல்பட்டவன் பாராட்டுக்குரிய மனிதன். இவனுக்கு வழிகாட்ட மோசே வரவில்லை. யேசு வரவில்லை. முகம்மது வரவில்லை. முப்பத்துமுக்-கோடி தேவன்களும் வரவில்லை.

தாமஸ் ஆல்வா எடிசன்

பின் எது வந்தது? மனிதனின் தேவை வந்தது. தேவைதான் கண்டுபிடிப்பின் தாய். குளிரிலிருந்தும் பனிப் பொழிவிலிருந்தும் காத்துக் கொள்ள வேண்டிய தேவை, தோலாடையைக் கண்டுபிடித்தது.

வேட்டைச் சமூகத்தின் வயிற்றுப் பசி, பசி ஆற்ற வேண்டிய தேவை விலங்குகளைக் கொல்லும் கல் கருவிகள், ஆயுதங்களைக் கண்டுபிடித்தது. தற்செயலாக ஏற்பட்ட காட்டுத் தீயில் வெந்த இறைச்சியின் சுவையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அதுவே நெருப்பைக் கடைந்து ஏற்படுத்தும் சக்கிமுக்கிக் கல்லைப் பயன்படுத்தும் நுட்பத்தைக் கண்டுபிடிக்க உதவியது.

இப்படிக் கூறிக்-கொண்டே போகலாம். போதும் என்ற மனமே, பொன்செய்யும் மருந்து எனப்படுவதுபோலவே எல்லா மனிதர்களும் இருந்திருந்தால் கண்டுபிடிப்புகளே வந்திருக்காது.

எனவே, தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், தந்தை வேண்டுமே! மதிநுட்பம் தந்தை எனலாம். மதி அனைவருக்கும் உண்டுதான். மதிநுட்பம் சிலர்க்கு மட்டுமே இருக்கிறது. இவர்கள் மதியைப் பயன்-படுத்துகிறார்கள். நுட்பம் சேர்கிறது. விதியை நம்பாததால், மதிநுட்பம் வளர்கிறது.

மதிநுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டவை, கருவிகளாகவோ பொருட்களாகவோ இருக்க வேண்டியது இல்லை. புதிய எண்ணம், புதிய கொள்கை, பாட்டு, நாட்டியம், இசை என்றும் இருக்கலாம்.

சமதர்மம், பொது உடைமை போன்ற புதிய எண்ணங்கள், மக்களாட்சி போலும் புதிய அரசமைப்புக் கொள்கைகள் கூட கண்டுபிடிப்புகளே எனலாம். தொல் பழங்காலக் கண்டுபிடிப்புகளான ஆடை, நெருப்பு, கூரிய கருவிகள், ஈட்டி போன்றவையும் ஆதிகாலக் கண்டுபிடிப்புகளே!

ஏழு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலைபெற்று இருந்த மெசபடோமிய நாகரிகத்தில், சக்கரம், அச்சு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. சக்கரம், அச்சு போன்றவற்றைக் கண்டுபிடித்தவன்தான் முதல் விஞ்ஞானி! அவனது கண்டுபிடிப்புகளால்-தான் மனிதன் இடம் பெயரவும் புதிய இடத்தில் வாழவும் தொடங்கினான்.

முதல் அறிவியல் கண்டுபிடிப்பு எனச் சக்கரத்தைக் கொண்டாடும் நோக்கம் இதுதான்! அய்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிலைபெற்றிருந்த சிந்துவெளி நாகரிகம் நீர்ப்பாசன முறைகளைக் கண்டுபிடித்தது.

இதுவே எகிப்து நாட்டின் நைல் நதிக்கரையில் சீன நாட்டின் மஞ்சள் ஆற்றின் கரையில் பரவிப் பெருமை பெற்றது. கட்டற்று ஓடும் காட்டாற்று நீரைக் கட்டுப்படுத்திப் பாசனம் செய்து வேளாண்மை செய்யும் கண்டுபிடிப்பு இன்றைய மானுட குலத்துக்குச் சிறப்பான கொடை.

2500 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியதரைக் கடல் பகுதி நாடுகளில், குறிப்பாக கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளில் தோன்றிய கணிதம், தத்துவம், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.

ஆர்கிமிடிஸ் கண்டுபிடித்த மிதவைத் தத்துவம் நீர்வழிப் பயணத்திற்கு உதவும் கப்பல், படகுகள் போன்றவை கண்டுபிடிப்பதற்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. சிந்துவெளிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை வெளி-உலகுக்குத் தெரியாமலே இருக்கின்றன.

ஆனால், சீன நாட்டின் முக்கிய நான்கு கண்டுபிடிப்புகள் அனைவர்க்கும் பயன்படுகின்றன; வெடிமருந்து, காகிதம், காம்பஸ் எனப்படும் திசைகாட்டும் கருவி, அச்சுத் தொழில்முறை ஆகிய நான்கும் மிகப் பெரிய கண்டுபிடிப்புகள் எனலாம்.

அய்ரோப்பிய நாடுகளில் 14ஆம் நூற்றாண்டுக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ஆடி (மைக்ராஸ்கோப்) தொலைநோக்காடி (டெலஸ்கோப்) ஆகியவை மனிதர்களின் அறிவியல் ஆய்வுகளுக்குப் பல வகையிலும் ஆற்றிய பங்கு அளவிட்டுக் கூறமுடியாதது.

16ஆம் நூற்றாண்டு பகுத்தறிவின் காலம் என வருணிக்கப்பட்டாலும், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் வானவியல், உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவற்றின் வளர்ச்சி சிறப்பான வகையில் அமைந்தது.

பலப்பல கருவிகள் -_ தெர்மா மீட்டர், ஹைட்ரோ மீட்டர் போன்றவை கண்டுபிடிக்கப்-பட்டதன் விளைவாக இயற்பியலில் பல சாதனைகளை மனிதன் செய்தான். மின்சாரம், காந்தசக்தி ஆகிய இரு முக்கிய சக்திகளை மனிதன் கண்டுபிடித்ததும் இந்தக் காலத்தில்-தான்.

நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்பை உருக்கி எடுக்கவும் புதிய பொறிகளை உருவாக்கவும் மனிதன் கற்றான். தொழில் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்த தொழில்நுட்பம் இதுதான். இதனால் பெரும்பலன் அடைந்தது இங்கிலாந்து நாடு.

தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காக ஏராளமான மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து குடியேறியதும் இத்தகைய கண்டுபிடிப்புகளால்தான்.

பெரும்பாலான கண்டுபிடிப்புகளைச் செய்து சாதித்த மனிதர்கள் நிறைந்த நாடாக அமெரிக்கா விளங்குகிறது. பல நாடுகளி-லிருந்தும் வந்து குடியேறிய மக்கள் நிறைந்த நாடு அது.

அந்நாட்டின் தாமஸ் ஆல்வா எடிசன் என்பார் 1000 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். இது எப்படி? யேவா கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களினத்தைச் சேர்ந்தவரா அவர்? அல்லவே! மனித அறிவை, ஆற்றலைப் பயன்படுத்திடக் கற்றவர், பயன்படுத்தியவர்! அவ்வளவே!

இப்படி எண்ணற்றவை! ஆற்றல்மிக்க இந்த மனிதர்கள் தம் அறிவைப் பயன்படுத்திக் கண்டுபிடித்துத் தந்த கண்டுபிடிப்புகளால் மனித குலம் முழுவதும் பயன்படுகிறது.

மனித குலத்துக்கு இத்தகைய மனிதர்களால் விளைந்த பயன்களில் ஒரு சிலவற்றையாவது நாம் அறிவது நலம்.

அதை விட்டுவிட்டு இந்தியத் தலைமை அமைச்சர் மோடி கூறுவதைப் போல பிளாஸ்டிக் சர்ஜரி பாரதத்தில் இருந்தது என்பதற்கு அடையாளம் விநாயகன் பொம்மை என்று பேசிக் கொண்டிருந்தால் மிஞ்சுவது என்ன?

மூடப் பைத்தியம் எனும் பட்டம்தான்! குந்தி குழந்தை பெற்றது, சோதனைக் குழாய்க் குழந்தை முறை இந்தியாவில் இருந்ததற்கான அடையாளம் என்று மோடி கூறியுள்ளதைத் திருப்பிக் கூறினால் சிரிப்பு பின்பக்கத் துளை வழியேதான் வருமே தவிர, புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கம் வரவே வராது!

குளோரஃபார்ம், அனஸ்தீசியா (மயக்க மருந்துகள்) கண்டுபிடிப்பதற்கு முன்னமேயே மயக்க மருந்து கொடுக்காமலே, ஆணின் விலா எலும்பை எடுத்து அதைக் கொண்டு ஏவா எனும் பெண்ணைப் படைத்தது எங்கள் கர்த்தர் என்றானாம் கிறித்தவன்.

ஒருவன், போடா போ! எங்கள் சிவன், தன் மகன் தலை காணாமல் போய்விட்ட நிலையில் யானைத் தலையை மனிதக் கழுத்தில் ஒட்டவைத்து மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையே செய்தது என்று சவடால் அடித்தானாம் இந்து ஒருவன்!

இவர்கள் இருவர் பேச்சைக் கேட்கும் ஒருவருக்கு என்ன நினைக்கத் தோன்றும்? இந்த இரண்டும் எந்தப் பைத்தியக்கார விடுதியிலிருந்து தப்பித்து வந்தன? என்ற அய்யம்தானே ஏற்படும்!

அதைப்போல பாரதப் பிரதமர் பேச்சைக் கேட்டுக் குழப்பிக் கொண்டிருக்காமல் நடைமுறை உலகுக்கு வருவோம்! நமக்குப் பலவற்றையும் கண்டுபிடித்துக் கொடையளித்த அறிவியல் அறிஞர்களை அறிந்து கொள்வோம்.

பல இலட்சக்கணக்கான அறிவியல் பட்டதாரிகள் இருக்கும் இந்தியாவில், அறிவியல் மனப்பான்மை கொண்ட, அறிவியல் வாழ்க்கை வாழும் மனிதர்களைக் காணோம்! அவர்களை உருவாக்க உதவிடும் சில செய்திகளை அடுத்த இதழில் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *