சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகளின் நியமனத்தில் சமூக நீதி கோரிய சிறப்புப் பொதுக் கூட்டம் ஆசிரியர் அவர்களின் தலைமையில் மார்ச் 3 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது.
வழக்குரைஞர் த. வீரசேகரன் வரவேற்புரையுடன் வழக்குரைஞர் அ. அருள்மொழி அறிமுக உரை ஆற்ற, வழக்குரைஞர் வீரமர்த்தினி இணைப்புரை வழங்கினார். பல்வேறு வழக்குரைஞர்கள் அமைப்புகளைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, எஸ்.பிரபாகரன்,ஆர்.சி.பால் கனகராஜ், கே.பாலு, பேராசிரியர் எஸ்.உதயபானு, வி.நளினி, எஸ்.ரஜினிகாந்த், ராஜா முகமது ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆசிரியர் அவர்கள் ஆற்றிய தலைமையுரையில்,
இன்றைக்கு நடைமுறை அரசியலில் மூன்று பிரிவுகள் உண்டு.
1.நிர்வாகத் துறை 2.சட்டத்துறை 3.நீதித்துறை நிர்வாகத் துறை உத்தரவு போட்டு, சட்டமன்றம், நாடாளுமன்றம் சட்டத்தை நிறைவேற்றுவது. சட்டம் நிறைவேற்றுகிற இடத்தில், சமூகநீதி அடிப்படையில் விரும்-பினாலும்,
விரும்பாவிட்டாலும் எல்லாருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும். எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்கின்ற சூழல் வந்திருக்கிறது.
ஆனாலும், இந்த நீதித்துறை இருக்கிறது பாருங்கள், இது மட்டும் தனியே நிற்கிறது. இவர்கள் நாடாளுமன்றத்திலே நம்மால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பிரதிநிதிகள், அவர்கள் விவாதித்து சட்டம் நிறைவேற்றிய பிறகு, அந்தச் சட்டத்தைச் செயல்படுத்துவது நிர்வாகத் துறை.
ஆனால், இவர்கள் கஷ்டப்பட்டு இவ்வளவையும் செய்த பிறகு, ஒரு சிவப்பு மையை வைத்துக்-கொண்டு, இது செல்லும், இது செல்லாது என்று எளிதில் அதை அடித்துத் திருத்தக் கூடிய இடத்தில் இருப்பவர்கள் நீதிபதிகள்.
ஆக, இந்த நாட்டை யார் ஆளுகிறார்கள் என்று சொன்னால், உண்மையில், நீதிபதிகள்-தான்.
அவ்வளவு பெரிய முக்கியத்துவமான இடத்தில் சமூகநீதி என்பது மிக முக்கிய-மல்லவா! JUSTICE, social, economic and political; இதுதான் அரசியல் சட்டம் வலியுறுத்தக் கூடியவை.
அதிலும்கூட, முதல் உரிமையாகச் சொல்லப்பட்டிருப்பது எது? சமூகநீதி, பிறகுதான் பொருளாதார நீதி, அதற்குப் பிறகுதான் அரசியல் நீதி.
எனவே, இந்த மூன்றையும் குழப்ப வேண்டாம். பொருளாதார நீதியையும், சமூக நீதியையும் ஒன்றாகச் சொன்னார்கள். அதற்கெல்லாம் இடம் என்று சொல்லித்தான், அரசியல் சட்டத்தை உருவாக்கும்பொழுதே, மூன்றாகப் பிரித்துவிட்டார்கள்.
சமூகநீதி என்பது ஒரு இடத்தில் அல்ல, பல இடங்களில் வரக்கூடிய வாய்ப்புகள் அரசியல் சட்டத்தில் இருக்கிறது என்பதை வழக்குரைஞர்களுடைய மாமன்றமாக இருக்கக்கூடிய இந்த அவைக்கு நான் விளக்கவேண்டிய அவசியமில்லை.
ஆனால், உலகத்திலுள்ள வேறு எந்த அரசியல் சட்டத்திலும் இல்லாத ஒரு சிறப்பு இந்த அரசியல் சட்டத்தில் இருக்கின்றது. காரணம், நம்முடைய சமுதாயத்தினுடைய நிலையை, அது பிரதிபலிக்கின்ற காரணத்தினால்-தான், அது தெளிவாக இருக்கிறது என்று சொல்லும்பொழுது, இதை உங்களுக்குச் சுட்டிக்காட்டக் கடமைப்-பட்டிருக்கின்றோம்.
Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State. பிற்படுத்தப்பட்ட மக்களிடையே, அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை மிகுந்த அக்கறையோடு அமல்படுத்தவேண்டும்.
சமூக அநீதிகளிலிருந்தும், எல்லா வகையான சுரண்டல்களிலிருந்தும் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கப்பட வேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டம் 16(4).
இதனை நாம் சட்டப்பூர்வமாகவே எடுத்துக்காட்டி, வாதாடுவதற்கு, மக்கள் மன்றத்திலும் சரி, நீதிமன்றத்திலும் சரி வாதாடுகிறோம்.
அரசியல் சட்டத்தின்மீதுதானே பதவிப் பிரமாணம் எடுக்கிறார்கள், நீதிபதிகளானாலும். அந்த அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுவது முக்கியமானது அல்லவா!
அரசியல் சட்டத்தில் இருக்கிறபடிதான் இவர்கள் வாதாடுகிறார்கள். உலகத்திலேயே, இப்படி ஒரு வேண்டுகோள் வைத்து, சட்டத்தை அமல்படுத்து என்று சொல்வதற்கு ஒரு கூட்டம்; சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று சொல்வதற்கு இன்னொரு கூட்டம்.
எல்லாவற்றையும்விட முக்கியமான ஒன்றை அவர்கள் செய்யலாம்; செய்யவேண்டும். துணிச்சலுள்ளவர்கள் யாராவது இருந்தால், ஏற்கெனவே அதிகமாக இருக்கிற எந்த ஜாதியிலிருந்தும், மற்றவர்கள் சமமாக ஆக்கப்படுகிற வரையில், இனிமேல், நியமனத்தைச் செய்ய முடியாது என்று சொல்வதற்கு அரசியல் சட்டம் ஆணையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
அரசியல் சட்டத்தைச் சரியாகப் படித்துத் தெளிவாகப் புரிந்துகொண்டால், 16(4) இருக்கின்ற வாக்கியம் இருக்கிறதே, adequately representation. What is adequately representation? அதாவது, மற்றவர்கள் போதுமான அளவிற்கு சமப்படுத்துகின்ற அளவிற்கு,
சட்டநாதன் அவர்கள் தலைமையில், கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, தமிழ்நாட்டில், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை அமைத்த பொழுது, அதில் அவர் கொடுத்த அறிக்கையில் மிக அழகாக ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
எத்தனையோ மாறுபட்ட கருத்துகள் எல்லாம் உண்டு அதில். அரசியல் சட்ட 16(4) பிரிவுக்கு ஒரு விளக்கம் எழுதியிருக்கிறார். மிகத் தெளிவான, பாராட்டவேண்டிய ஒரு நுட்பமான விளக்கம் அது.
அது என்னவென்றால், What is adequately representation? என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று சொல்லும்பொழுது, அந்த வார்த்தையின்மூலம் எதிலிருந்து வந்தது என்றால், adequatus என்ற இலத்தின்மொழி வார்த்தையிலிருந்துதான், அந்த ஆங்கிலச் சொல்லாக்கம் வந்தது.
அதற்கு என்ன பொருள்? அகராதியின் பொருள் என்று எடுத்துக்காட்டும்பொழுது, Till it equalize என்று அதற்குப் பொருள். மற்றவர்களோடு சமப்படுத்துகின்ற வரையில். என்றால், adequately representation மற்றவர்கள் முன்னே சென்றிருக்கிறார்கள் பாருங்கள், அவர்களோடு சமப்படுத்துகின்ற வரையில்.
Till it equalize என்று வரக்கூடிய அளவிற்கு வரும்பொழுது,adequately representation என்றால், ஏற்கெனவே பார்ப்பன சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்லது முன்னேறிய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் எவ்வளவு இருக்கிறார்களோ, அவர்களுக்குச் சமமாக மற்றவர்கள் நிரப்பப்படவேண்டும் என்பதுதான் அதற்குப் பொருள்.
அப்படி என்றால், அதற்கு அர்த்தம் என்ன? முன்னேறியவன் இருக்கின்ற வரையில், அதே ஜாதிக்காரனை அனுப்பக்கூடாது என்பதுதான் அதற்கு அர்த்தம்.
மற்றவர்களையும் சமப்படுத்த-வேண்டும் என்று பல தீர்ப்புகளை எடுத்துக் காட்டியும், பல வினாக்களை எழுப்பி அனைவரையும் சிந்திக்க வைத்தும் ஆசிரியர் உரையினை நிறைவு செய்தார்கள்.
இந்தப் பணியை முன்னெடுத்துச் சென்று ஆசிரியர் வழிகாட்ட வேண்டும் என்று உரையாற்றிய வழக்குரைஞர்கள் கேட்டுக் கொண்டனர்.