மக்கள் விரும்பிய கல்வி

ஜூன் 01-15

எல்லார்க்கும் எல்லாம் என்றிருப் பதான இடம் நோக்கி நடக்கிறது இந்த வையம் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.அந்த இலக்கை அடையவே சுயமரியாதை இயக்கம் பிறந்தது.குறிப்பாக எதிர்காலத்தை உருவாக்கும் கல்வியில் சம நிலை இல்லை என்ற குரலைக் களைய கடந்த தி.மு.க.ஆட்சி சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தது. கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாண வர்கள், பத்திரிகை யாளர்கள் என எல்லாத்தரப்பினரின்  ஆலோசனைகளோடு தரமான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு நூல்கள் அச்சிடப் பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன. பல பள்ளிகளில் சமச்சீர் கல்வி நூல்களை இணையத்திலிருந்து தரவிறக்கி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் மூலமாக பாடங்களே நடத்தப் பட்டுவிட்டன.

பள்ளிகளும், ஆசிரியர்களும், மாணவர்களும் சமச்சீர் கல்விக்குத் தயாராகிவிட்டார்கள். இந்நிலையில் மே 16 அன்று பொறுப்பேற்ற அ.தி.மு.க.அரசு திடீரென இந்த ஆண்டு சமச்சீர் கல்வி இல்லை என அறிவித்துள்ளது. இதனால் பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், தனியார் பள்ளி நிருவாகிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர்கள் அரசை வாழ்த்தி விளம்பரங்கள் கொடுத்துள்ளனர். ஏன் தெரியுமா? சமச்சீர் கல்வித்திட்டத்தின் மூலம் தாங்கள் அடித்துவந்த புத்தக விற்பனைக் கொள்ளை தடுக்கப்பட்டிருந்தது. அரசே புத்தகங்களை அச்சிட்டு நியாயமான விலைக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது. இதனால் 40 சதவீத அளவிற்கு புத்தக விற்பனையாளர் களிடம் கழிவு பெற்று வந்த தனியார் பள்ளி நிறுவனங்கள்  கலக்கமடைந்தன.ஆனால், புதிய அரசு சமச்சீர் கல்வி இல்லை என்று அறிவித்திருப்பதால் மீண்டும் புத்தக விற்பனை மூலம் பணம் பார்க்கலாம் என்ற மகிழ்ச்சியில் உள்ளன. இது ஒருபுறம் இருக்க தமிழக அரசின் இந்த அறிவிப்புக்குத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷியாம் சுந்தர் என்ற வழக்குரைஞர் பொது வழக்கு தாக்கல் செய்துள்ளார்.மறுபுறம் கல்வியாளர்கள், மாணவர் சங்கங்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்களில் சிலரின் கருத்துகள் இதோ:-

 

 

மக்கள் கல்வி இயக்க அமைப்பாளர் பேராசிரியர் கல்யாணி:-

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 4_ஆவது, 6_ஆவது வகுப்புப் புத்தகங்களுக்கு மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.  இதை, குழந்தைகளைக் கொண்டாடுவோம் என்ற அமைப்பின் மூலம் நடத்திய ஆய்வில், புள்ளிவிவர அடிப்படையில், எங்களால் சொல்ல முடியும்.  இந்தப் பொதுப் பாடத்திட்ட முறை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்குத்தான் சொந்தமானது என்று சொல்வது அபத்தம்.  கல்வியாளர்கள், சமூக ஆய்வாளர்கள், மாணவர் அமைப்புகள் உள்பட பல தரப்பினரின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகே, சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்பட்டது.  இவ்வளவு பெரிய உழைப்பை ஒன்றுமே இல்லை என மறைக்க முயற்சிக்கின்றனர்.  சமச்சீர் பாடத் திட்டமானது தரம் குறைவானது, ஆறு மாதங்களில் இதைக் கற்பித்துவிடுவோம் என தனியார் கல்விக் கொள்ளையர் சொல்கின்றனர்.  கல்விச் சரக்கைப்பற்றிப் பேசுவதற்கு இவர்களுக்குத் தகுதியே இல்லை.  ஏராளமான தனியார் பள்ளிகளில் 9,11- ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தாமல், 10, 12_ஆம் வகுப்புப் பாடங்களை இரண்டு ஆண்டுகளுக்கு நடத்திவிட்டு அதிக மதிப்பெண் பெறவைக்கிறார்கள்.  இதுதான் இவர்களுடைய தரத்தின் லட்சணம்.  கொள்ளை லாபம்தான் இவர்களின் குறிக்கோள்.  அதற்காகத்தான் சமச்சீர் கல்வியின் முதற் பயணத்துக்கே முட்டுக்கட்டை போடுகின்றனர்.  இதை, மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து முறியடிக்க வேண்டும்!.

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு

இப்போது அமலில் உள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைகள் இருந்தால் நீக்க நடவடிக்கை எடுக்கலாம்.  ஆனால், திட்டத்தையே நிறுத்துவது பொருத்தமானதாக இல்லை.  பழைய பாடத்திட்டத்தில் புதிதாக புத்தகங்களை அச்சிடுவதற்கு மூன்று மாதங்களாகும்.  அதுவரை பாடப்புத்தகங்கள் இல்லாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமப்படுவார்கள்.  தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை மாற்றி சமச்சீர் கல்விமுறையை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த வேண்டும்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:

தமிழக அரசின் முடிவால் ரூ.200 கோடி செலவால் அச்சிடப்பட்ட 6.5 கோடி புத்தகங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  அதேபோல், பழைய பாடத்திட்டத்தின்படி, பாடப்புத்தகங்களைப் புதிதாக அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்க தேவையற்ற காலதாமதமும், பொருள் செலவும் ஏற்படும்.

1,6 வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு 2, 7 வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

மாணவர்களின் கல்வி நலன் கருதியும், ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே தரமான, சீரான கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும் சமச்சீர் கல்வி முறையை அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பாண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும். மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்:

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஜனநாயக இயக்கங்கள் நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்துள்ளனர்.

இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாடு அரசு சமச்சீர் கல்வியை ஏற்றுக்கொண்டு முதல்கட்டமாக 1, 6 வகுப்புகளில் அறிமுகப் படுத்தியது.

கல்வித் தரத்தை உயர்த்துவதும் பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளைக் களைவதும் வரவேற்கத்தக்கவையே.

ஆனால், இதற்காக சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நிறுத்தி வைத்திருப்பது, ரூ.200 கோடிக்கும் மேல் செலவிட்டு அச்சிட்டுள்ள பாடப்புத்தகங்களை முழுமையாகக் கைவிடுவது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு அமலாக்கிக் கொண்டே கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான பணிகளை நிறைவேற்றுமாறும்,  பாடப்புத்தகங்களில் உள்ள குறைபாடுகளைக் களையும் வகையில் சில பாடங்களை நீக்கியோ அல்லது பிழைதிருத்தம் செய்தோ அரசு உத்தரவு மூலம் சரிசெய்யுமாறு வேண்டுகிறோம்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு பொதுச் செயலாளர் பிரின்ஸ்

கஜேந்திரபாபு:

நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டுதான் சமச்சீர் கல்வியை தி.மு.க. அரசு அறிமுகப்படுத்தியது.  ஆசிரியர்கள், கல்வியாளர்கள், துறை சார் வல்லுநர்கள் அடங்கிய குழு முடிவு செய்த பின்னர்தான், இந்தப் பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது.  புதிதாகப் பதவி ஏற்றுள்ள இந்த அரசு, வல்லுநர் குழுவின் பரிந்துரை எதுவும் இல்லாமல், சமச்சீர் கல்வி முறையை நிறுத்திவைப்பது நியாயம்அல்ல!

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன்:

ஆட்சி மாறுவதற்கும் பள்ளிப் புத்தகத்துக்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது.  சமச்சீர் கல்விக்காகப் பொதுக் கல்வி வாரியம் ஒன்று ஏற்கெனவே அமைக்கப்பட்டு உள்ளது.  தேவையானால் அந்தக் குழுவில் மாற்றம் செய்துகொள்ளலாம்.  ஆனால், அந்தக் குழுவுக்குத் தலைவராக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அல்லது இயக்குநரை நியமிக்கக் கூடாது.  கல்வியாளர்களின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஓர் அமைப்பாக அது இயங்க வேண்டும்.  சமச்சீர் கல்வி முறையைக் கொண்டுவருவதற்கு, அரசுப் பள்ளிகளில் போதுமான வசதிகளை முழுமையாகச் செய்து தர வேண்டும்.  இவை இல்லாமல், சமச்சீர் கல்வி என்று சொல்வது பொருத்தம் ஆகாது.  எனவே, இதை முழுமையாகச் செய்தால்தான், சமச்சீர் கல்வியை உண்மையிலேயே நடைமுறைப்படுத்த முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *