பெண்ணியப் புரட்சிக்கு யார் காரணம்?

மார்ச் 16-31


பெண்ணியத்தின் முக்கியக் கூறுபாடுகளான,  பாலின சமத்துவம், பாலின சமவாய்ப்பு, சம படிப்புரிமை, உத்தியோக உரிமை, சம சொத்துரிமை எல்லாவற்றிற்கும் மேலான சம பிறப்புரிமை ஆகிய பலவற்றுக்கும் இன்னமும் போராடி வெற்றி பெறவேண்டிய இந்தப் பெண்  சமுதாயத்தில்,

 

அவற்றை அடைய எவை தடைகளாக உள்ளனவோ அவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசி, எழுதி கண்டிக்கும் துணிவைப் பெற்றால் ஒழிய, உண்மையான விடுதலை, மக்கள்தொகையில் சரிபகுதியாக உள்ள மகளிர்க்கானது எளிதில் கிட்டாது!

வயதுவந்த எல்லோருக்கும் வாக்குரிமை முதலில் 21 வயது; பிறகு 18 வயது என்று குறைக்கப்பட்டு, ஆண்_பெண், ஏழை_பணக்காரன், கற்றவன்_கல்லாதவன் என்ற எந்தப் பாகுபாடும் இன்றி தரப்பட்டுள்ளது உள்ளபடியே முந்தைய காலத்தினை ஒப்பிடுகையில் ஒரு அமைதிப் புரட்சிதான்!

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு வயது இப்போது 67-_68 ஆகிறது!

என்றாலும் இன்னமும் சமூகத்தில் உயர் ஜாதியினர் _ பார்ப்பனர் ஆதிக்கம் எப்படிப் பரவலாக உள்ளதோ, அதேபோல் நடைமுறையில் பெண்கள் சரிபகுதியாக இருப்பினும்கூட _ ஆண் ஆதிக்க நுகத்தடியின் கீழ் பூட்டப்பட்டவர்களாகவே மகளிர் இருக்கிறார்கள் என்ற பரிதாப நிலை தொடரவே செய்கிறது!

பெண்கள் உரிமைக்குப் பெரிதும் தடையாக இருப்பது ஹிந்துமதம் (பெரும்பான்மையாக உள்ள 87 சதவிகித மதத்தின் தாக்கம்) மற்ற மதங்களும் பெண் உரிமை பறிப்பு என்றாலும் இதன் அளவுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவாகவே உள்ளது!

எடுத்துக்காட்டாக பழைய நிலையிலிருந்து மாறுதல் செய்ய ஹிந்து மதத்தவர் சனாதனத்தவர் பலத்த எதிர்ப்புக் காட்டி எளிதில் சட்டங்கள் நிறைவேறச் செய்யவிடவில்லை.

எளிதில் மணவிலக்குச் சட்டம் (Law of  Divorce) நிறைவேற்ற விடவில்லையே! வெறுப்புடனும் வலியுடனும் கணவன் என்ற எஜமானனுடன் சேர்ந்து வாழ்ந்து தீரவேண்டும்; காரணம் ஹிந்து திருமணம் ஒரு புனிதக் கட்டு (Sacrament). விதவை மறுமணம், பால்ய மணத்தடை எளிதில் வரவில்லையே!

கத்தோலிக்க கிறிஸ்துவம், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதால் மணவிலக்கு கூடாது. மதநெறிகளுக்கு விரோதமான பாவமாகும் என்றது!

பகவத்கீதையோ, எல்லாப் பெண்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் என்கிறது! (ஆண்கள் மட்டும் வேறு எப்படிப் பிறக்கிறார்கள் என்று கேட்காதீர்கள்).

முன்பு பெண்கள் சொந்தப் பெயரில் வங்கியில் பணம் போட்டுக் கணக்கு வைக்க முடியாத நிலையும் இருந்தது!

1930 முதல் சட்டப் போராட்டம்… 1941இல் அரசு இந்து சட்டக் கமிட்டி (Hindu Code Committee) ஒன்று நியமிக்கப்பட்டது மத்திய அரசால். இரண்டு மசோதாக்களைத் தயாரித்தது. ஆனால், வைதீக உலகம் _ சனாதனம் எதிர்த்து வெள்ளைக்கார அரசினைப் பயமுறுத்தி, மிரட்டி நிறைவேற்றவே விடவில்லை!

1943இல் திருத்தப்பட்ட மசோதா பி.என்.இராவ் தலைமையில் இந்தியப் பாராளுமன்றத்தில் தாக்கல் ஆனது. ஆனாலும், சிக்கல் தொடர்ந்தது.
பிறகு டாக்டர் அம்பேத்கரின் வழி-காட்டுதலில் சில மாறுதல்களுடன் கொண்டுவரப்பட்டது.

புதிய மசோதா 1948 ஆகஸ்ட் 16இல் தாக்கல் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளாக மூச்சுப் பேச்சின்றி கிடந்தது. பிறகு காரசார எதிர்ப்பு _ விவாதங்கள் எழுந்தன.

ஷியாம் பிரசாத் முகர்ஜி என்ற ஹிந்துமகா சபைத் தலைவர் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்தார். (இந்து மதத் தலைவர் _ ஆர்.எஸ்.எஸ்.காரர்.).

புயலும் பூகம்பமும் வெடிக்கும் இந்தப் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் நிறைவேறினால்… என்றார். (இவர்தான் பா.ஜ.க.வின் முன்னோடியான பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர்.) ஹிந்து சாமியார்கள், சாதுக்கள் திரண்டு ஊர்வலம் வந்து எதிர்க்குரல் கொடுத்தனர்.

195—1 செப்டம்பர் 18, பாராளுமன்றத்தில் விவாதம். கடைசியாக அம்பேத்கரின் இந்துப் பெண்கள் சொத்துரிமை மசோதா தோற்கடிக்கப்பட்டது நாடாளுமன்றத்தில்!

இராஜேந்திர பிரசாத் போன்ற முதல் குடியரசுத் தலைவரே எதிர்க்குரல் _ சனாதனக் குரல் கொடுத்தார்! என்னே கொடுமை!

பிரதமர் நேருவே கைபிசைந்து, வெறும் வேடிக்கை பார்த்தார். சட்ட அமைச்சர் அம்பேத்கருக்குத் தந்த வாக்குறுதியை மீறினார்.

மனம் நொந்து தமது சட்ட அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து அமைச்சரவையிலிருந்து இதற்காக வெளியேறினார் டாக்டர் அம்பேத்கர்.

கொள்கைக்காகப் பதவியை இராஜினாமா செய்து பெரும்புகழ் எய்தினார் இதன்மூலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்! பிறகு வரலாறு திரும்பியது.

ஆனால் தி.மு.க. இடம் பெற்ற அய்க்கிய முன்னணி அரசில் பெண்களுக்கு ஆணுக்கு நிகரான சம சொத்துரிமைச் சட்டம் 2006இல் நிறைவேறி வரலாறு படைத்தது!

(The Hindu Succession Act 1956) 130 of 1956 as amended by The Hindu Succession (Amendment Act 2005) 39 of 2005 (Effective 9th September, 2005) இந்து வாரிசுரிமைச் சட்டத்திருத்தம் (39 of 2005) நடைமுறைக்கு வந்தது 9-.9.2005 முதல்) தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நடத்திய முதல் சுயமரியாதை மாநாடு 1929இல் செங்கற்பட்டில் நடைபெற்றது. நீதிக்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அதில் நிறைவேற்றப்பட்ட இத்தகைய பெண்ணுரிமைத் தீர்மானங்கள் பின்னாளில் சட்டங்களாக காய்த்துக் கனிந்தன!

உலகப் பெண்கள் நாளில் பெரியாரின் பெரும்பங்கு, சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கத்தின் முயற்சிகள், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் அரிய முயற்சிகள் – இவற்றையெல்லாம் மறக்காது மக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையான இந்த இணைய(Internet) தலைமுறை இளம் பெண்களுக்கும் சொல்லி நினைவூட்ட வேண்டும்.

வேரின் பெருமை அறியாவிட்டால் விழுதுகள் ஒருபோதும் நிலைக்கமாட்டா! மறவாதீர்!

கி.வீரமணி, ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *