சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்
நவீன அய்ரோப்பாவின் நாத்திகர்கள்
புரட்சிகர சிந்தனையாளர் பேராசிரியர் அருணன் கடவுளின் கதை என்ற தலைப்பில் ஆறு தொகுதி நூல்கள் – ஆய்வு வரலாறுகளாக எழுதியுள்ளார். அதில் மூன்றாம் தொகுதியில் உள்ள நவீன நாத்திகர்கள் என்ற தலைப்பில் வரும் சிறந்த பகுதி இதோ: படியுங்கள் – சுவையுங்கள். – ஆ-ர்
ஒரு டேயிஸ்டாக வால்டேர் வலம்வரத் துவங்கிய அந்தக் காலத்தில் அவரையும் தாண்டி நாத்திகத்தை முன்மொழிந்த அறிஞர்கள் அய்ரோப்பாவில் எழுந்தார்கள். ஆதிகாலத்து கிரேக்கத்து ஞானிகளில் சிலர் நாத்திகம் பேசியதை அறிவோம். அவர்களையும்விட இவர்கள் இடையில் கிடைத்த விஞ்ஞான அறிவையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு இன்னும் வலுவாகப் பேச ஆரம்பித்தார்கள். நிலப்பிரபு யுகத்தில் இப்படிப் பேசவே முடியவில்லை. முதலாளியுகத்தை நோக்கிய இந்தக் காலத்திலும் அதற்குக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதையும் மீறி இதைப் பேசுவோர் உருவானார்கள்.
லா மெட்ரி எனும் பிரெஞ்சுக்காரர் ஒரு வைத்தியர். அந்த நாட்டு ராணுவத்தாருக்கு வைத்தியம் செய்து வந்தபோது இவருக்குக் கடும் காய்ச்சல் கண்டது. அதிலிருந்து மீண்டு வந்தவர் சொன்னார்: காய்ச்சல் உச்சத்திற்குப் போனபோது எனது சிந்திக்கும் ஆற்றல் பெரிதும் குறைந்துபோனது. இதிலிருந்து சிந்தனை என்பதே மூளையின் செயல்பாடுதான் என்று புரிபட்டது. இத்தகைய சிந்தனைகளை உள்ளடக்கி 1745இல் ஆன்மாவின் இயற்கை வரலாறு எனும் நூலை வெளியிட்டார் மனிதர். அந்த நூலின் திரண்ட கருத்து வருமாறு:
ஆன்மா என்றால் என்னவென்று நமக்குத் தெரியாது. சடப்பொருள் என்றால் என்னவென்றும் நமக்குத் தெரியாது. ஆனால், உடம்பு இல்லாத ஓர் ஆன்மாவைக் கண்டதில்லை என்பதை நாம் அறிவோம். எனவே, ஆன்மா பற்றி ஆராய நாம் உடம்பை ஆராய வேண்டும். உடம்பை ஆராய சடப்பொருளின் விதிகளை ஆராய வேண்டும். சடப்பொருள் என்பது வெறும் நீட்சியை மட்டும் கொண்டில்லை, அது இயங்கும் ஆற்றல் உடையது. உணரும் ஆற்றல் சடப்பொருளுக்கே உண்டா என்பதை நாமறியோம்.
ஆனால், கீழான மிருகங்களுக்கும் அந்த ஆற்றல் உண்டு என்பதைக் காண்கிறோம். எனவே இந்த உணர்ச்சி சடப்பொருளிலேயே ஏற்பட்ட ஒரு வளர்நிலையே தவிர, ஓர் அமானுஷ்ய சக்தியால் உடம்புக்குள் திணிக்கப்பட்ட மர்மமான ஆன்மா அல்ல என்று நம்புவதுதான் பெரிதும் தர்க்க ரீதியானது. சடப்பொருளிலேயே உள்ள துடிப்பு இயக்கமானது தாவரங்கள் மற்றும் மிருகங்கள் வழியாகச் செயல்பட்டு மனிதனில் அவனது மூளையைச் சிந்திக்கும் நிலைக்கு உயர்த்திவிட்டது. இதுவே ஆன்மாவின் இயற்கை வரலாறு.
சடப்பொருளின் வளர்நிலையே உணர்வு, மூளையின் இயக்க நிலையே சிந்தனை, அதுவும் கடவுளால் மனித உடம்பில் திணிக்கப்பட்ட விஷயமல்ல, ஜீவராசிகளின் படிப்படியான வளர்ச்சி நிலையில் ஏற்பட்ட ஓர் உச்சம். இப்படியொரு மருத்துவர் அன்று சொன்னது பிரான்சின் ராணுவ அதிகாரிகளுக்கு அதிர்ச்சியாகவும், மத நிந்தனையாகவும் இருந்தது. மெட்ரியைப் பதவி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.
பிரான்சில் இருப்பதே சிரமம் என்பதை உணர்ந்த நமது மருத்துவர் ஜெர்மனியின் லெய்டன் நகருக்குச் சென்றார். அங்கே மருத்துவத்தைவிடத் தத்துவத்தில் கவனம் செலுத்தினார். அதன் பலனாய் 1747இல் அவரின் புகழ்பெற்ற மனிதன் ஓர் இயந்திரம் நூல் வெளிவந்தது. அடுத்த ஆண்டு மனிதன் ஒரு தாவரம் வெளிவந்தது. விலங்கின் உடலானது ஓர் இயந்திரம் என்பது அது உடலியல்ரீதியாக மற்றும் ரசாயன ரீதியாக இயங்குவதிலிருந்து தெரிய வருகிறது. அதாவது அதன் இயக்கத்திற்கு ஓர் அயல் சக்தி தேவையில்லை. அதுபோல மனிதனும் ஓர் இயந்திரமே என்று ஏன் முடிவுக்கு வரக்கூடாது? மனிதனது எலும்புகள், தசைகள், நரம்புகள் எல்லாம் கிட்டத்தட்ட பெரிய மிருகங்களைப் போல இருப்பதால் இப்படிப்பட்ட முடிவுக்கு வருவதில் தவறில்லை. மனம் எனப்பட்டது உடலின் இயங்கியல் மற்றும் ரசாயன ரீதியிலான செயல்பாடுகளையே நம்பியுள்ளது. மது அருந்தினால், அபின் சாப்பிட்டால் உடல் மட்டுமல்ல நமது மனதிலும், அதன் சிந்தனை ஓட்டத்திலும்கூட மாற்றங்கள் நேருவதை உணர்கிறோம். உடலில் உரம் ஏறும்போது உள்ளமும் உரம் பெறுகிறது அன்றோ?
இப்படி விளக்கி வந்த மெட்ரி முத்தாய்ப்பாய்க் கூறினார்: ஆன்மாவின் கூறுகள் எல்லாம் மூளை மற்றும் முழு உடலின் உரிய கட்டமைப்பை நம்பியிருப்பதால் அவையும் அந்தக் கட்டமைப்பின் ஒரு பகுதியே. ஆன்மா எனப்பட்டது புத்திசாலியான இயந்திரமே. எனவே (தனிப்பட்ட) ஆன்மா என்பது ஒரு வெற்றுவார்த்தை. அதுபற்றி எவருக்கும் தெளிவான ஞானம் கிடையாது. நம்மில் உள்ள சிந்திக்கிற பகுதி என்ற அர்த்தத்தில் மட்டுமே புத்திசாலிகள் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.
கடவுள் நம்பிக்கைக்கு மிக முக்கியமான காரணமே மனிதன் தனது உணர்வுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் அல்லாடியது. அதை உடலின் ஒரு பகுதியான மூளையின் இயக்கமாக விண்டுரைத்தது மதவாதிகளுக்கு எரிச்சலைத் தந்தது என்று எளிதில் ஊகிக்கலாம். ஆனால், மெட்ரிக் தனது இந்த நூலில் அடுத்தடுத்த படிகளில் ஏறினார். புத்திசாலித்தனம் என்பது மனிதர்களிடம் மட்டுமல்ல மிருகங்களிடமும் இருப்பதை அவர் சுட்டினார். அப்படியென்றால் அவற்றிடமும் ஆன்மா உண்டா என்று கேட்டார். அவற்றுக்கும் ஆன்மா உண்டு என்றால் நீங்கள் தொலைந்தீர்கள். அவையும் நம்மைப் போல அழியாத ஆன்மாவைக் கொண்டிருக்குமா? _ இப்படிக் கிடுக்கிப்பிடி போட்டார்.
எல்லாம் சரிதான். உணர்வு என்பது சடப்பொருளின் குணம் என்றாலும் அதை அதற்கு ஊட்டிய கடவுள், அந்த முதல் இயக்கி இருக்க வேண்டுமல்லவா எனும் கேள்வி மிச்சமிருந்தது. இதற்கான மெட்ரியின் பதில்: இறுதிக் காரணி பற்றிய விவாதமெல்லாம் அர்த்தமில்லாதவை. இயற்கை தன்னை அறியாமல்தான் பட்டை உருவாக்குகிறது. வாழ்வைத் தரும்போது அது எப்படி அப்பாவியோ அப்படித்தான் வாழ்வை அழிக்கும்போதும் அது அப்பாவி. பார்க்காமலேயே அது பார்ப்பதற்கான கண்களைத் தந்தது. சிந்திக்காமலேயே அது சிந்திப்பதற்கான ஓர் இயந்திரத்தைத் தந்தது. இன்னும் டார்வின் பிறக்கவில்லை, இயற்கையின் பரிணாம இயக்கம் நிரூபிக்கப்படவில்லை. அதற்கும் முன்னே ஊகத்தின் அடிப்படையில், சடப்பொருளானது சிந்திக்கும் மனிதனாக மாறுவதற்கு ஒரு சிந்திக்கும் பேரான்மா தேவையில்லை, சிந்திக்காத இயற்கையே போதும் என்றார் இந்த மேதை. முடிவாக ஒரு நண்பர் சொல்வது போலச் சொன்னார்: இந்தப் பிரபஞ்சம் நாத்திகமாக மாறாதவரை இங்கே ஆனந்தம் இருக்காது. ஏனென்றால் அப்போதுதான் மதத்தின் பெயரால் நடக்கும் மோதல்கள் எல்லாம் முடிவுக்கு வந்திருக்கும் என்றார்.
இப்படிப்பட்ட துணிச்சல்மிகு சிந்தனை-யாளரால் அந்தக்கால அய்ரோப்பாவில் நிம்மதியாக இருக்க முடியுமா? லெய்டனிலும் வாழ முடியவில்லை. அங்கிருந்த குருமார்கள் இவரைச் சாத்தானின் தூதுவர் என்றார்கள். அரசைத் தூண்டிவிட்டு ஜெர்மனியை விட்டு வெளியேற வைத்தார்கள். பிரஷ்யாவின் ராஜா மகா பிரடெரிக் புதுமைச் சிந்தனை விரும்பி என்பதால் அவன் இவரை வரவேற்றான். பெர்லினின் விஞ்ஞானக் கழகத்தில் இவரை உறுப்பினராக்கி ஆதரித்தான். அங்கே அவர் எழுதிய ஆனந்தம் பற்றிய மூன்று நூல்களும் பரபரப்பாகப் பேசப்பட்டன.
கிரேக்கத்தின் நாத்திகவாதிகளும், பாரதத்தின் லோகாயத-வாதிகளும் தங்களது தத்துவத்தின் நீட்சியாக வாழ்வு பற்றிய ஒரு சாதகமான நோக்கைக் கொண்டிருந்ததை அறிவோம். கிரேக்கத்தின் அந்த ஞானிகள் ஹெடோனி-ஸ்டுகள் (Hedonists) எனப்பட்டார்கள். அந்த வழியில் நின்று வாழ்வைப் பாவ மூட்டையாகப் பார்க்காமல், இயல்பான இன்ப துன்பம் நிறைந்ததாக நோக்கச் சொன்னார் மெட்ரி. பிறருக்குத் துன்பம் விளைவிக்காத இன்பங்களைப் பெற ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை உண்டு என்றவர், புலன் இன்பங்களை பாவகாரியங்களாகச் சொல்லி வந்த மதவாதிகளைக் கண்டித்தார்.
ஒரு நோயாளியைக் குணப்படுத்தியதால் இந்த மருத்துவருக்கு விருந்து வைக்கப்பட்டது. அதிலே சாப்பிட்டவருக்குக் கடும் காய்ச்சல் வந்து மாண்டுபோனார் 1751 நவம்பரில். வால்டேர் கூறினார்: டாக்டரைக் கொன்றுவிட்டார் நோயாளி. பிரஷ்யாவின் ராஜா அந்த ஞானியின் இறுதி நிகழ்ச்சியில் புகழ் மாலை சூட்டினான். மெட்ரியின் நாத்திகப் பாரம்பரியம் அவரோடு முடிந்துவிடவில்லை, அது பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தது.
பாரிசில் உள்ள இயேசு சபையினரின் கல்லூரி ஒன்றில் படித்தவர்தான் டெனிஸ் திதரோ, தந்தையார் அன்பானவர் மட்டுமல்ல, விவரமானவர். சொன்னாராம்: மகனே, மகனே! பகுத்தறிவு என்பது பிரமாதமான தலையணைதான். ஆனால் அதைவிட மதம் எனும் தலையணைதான் எனது தலைக்குச் சுகமாக இருந்தது. பிள்ளை மதகுரு ஆகப்போகிறார் என்று அந்தத் தந்தைக்கு ஏக ஆனந்தம். நடந்த கதையோ வேறு. பாரிசில் தேவாலயங்களைவிட விபச்சார விடுதிகள் அதிகம் இருப்பதைக் கண்ட திதரோ, பாதிரியார் ஆகிற ஆசையைக் கைவிட்டு வக்கீல் தொழிலுக்குப் போனார். அங்கும் நிலையாக இல்லாமல் அறிவுப்பசி கொண்டு புதுப்புது இயல்களைப் படிக்கத் தொடங்கினார். பிள்ளையின் போக்கு கண்டு ஆத்திரம் கொண்ட தந்தை பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். திதரோ சொந்தக் காலில் நிற்க வேண்டியிருந்தது; இடையில் காதல் வாழ்வும் நடந்தது.
தத்துவச் சிந்தனைகள் எனும் அவரின் நூல் பெயரில்லாமல் 1746இல் வெளிவந்தது. மெட்ரியின் பகுத்தறிவுவாதமும், வால்டேரின் துள்ளல் நடையும் அதில் கலந்து நின்றன. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாண்டு போன ஓர் ஆண்-_பெண் மீது தனக்கு ஏற்பட்ட கோபத்தைத் தணிப்பதற்காகத் தனது குமாரனை சிலுவையில் அறைபட வைத்த அபத்தத்தை ஒரு கடவுள் செய்வாரா?
அதாவது, ஆதாம்_ஏவாள் தன் பேச்சைக் கேட்கவில்லை என்று, கிறிஸ்தவவாதிகளின் கணக்குப்படியான நாலாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இயேசுநாதரை சிலுவையில் அறைய வேடிக்கை பார்த்திருப்பாரா கடவுள், அவ்வளவு அபத்தமானவரா அவர் என்று கேட்டார் திதரோ. ஓர் ஆன்மா மீட்கப்பட ஆயிரக்-கணக்கான ஆன்மாக்கள் நரகக்குழியில் விழுகின்றன என்கிறார்கள் இறையியல்வாதிகள். அப்படியெனில் சாத்தான் ஜெயித்து விடுகிறது – தனது குமாரனைப் பலி கொடுக்காமலேயே _ என்று ஒரு போடுபோட்டார். இயற்கையைத் தவிர வேறு எந்த தெய்வீக வெளிப்பாடும் இல்லை என்றவர் கடவுளை விடுதலை செய்வீர் என்றார்.
இந்த முதல் நூலில் அவர் ஒரு முழு நாத்திகராகக்கூட வெளிப்படவில்லை, வால்டேரைப் போல டேயிஸ்டாகத்தான் தன்னைக் காட்டிக்கொண்டார். அப்படியும் பழமைவாதிகள் அவருக்குக் கருணை காட்டவில்லை. பாரிசின் நாடாளுமன்றம் அந்த நூலை எரித்துச் சாம்பலாக்குமாறு உத்தரவு போட்டது. அந்த உத்தரவு அந்தச் சிறு நூலுக்கு நல்ல விளம்பரமாகிப் பலரும் படித்தார்கள்; ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளில் பெயர்க்கப்பட்டது. எழுதியவர் திதரோ என்ற பேச்சு மெல்ல மெல்லப் பரவி அவரை வால்டேரின் அருகே கொண்டுபோய் நிறுத்தியது.
ஊகஅறிவுசார் தத்துவத்திலிருந்து (Speculative Philosophy) பரிசோதனைசார் தத்துவத்திற்கு (Experimental Philosophy) பயணப்பட்டதை உணர்த்தும் வகையில் பார்வையற்ற மனிதர்களைக் கொண்டு தான் நடத்திய ஆய்விலிருந்து பெறப்பட்ட தத்துவக் கோட்பாடுகளை முன்வைத்தார் திதரோ. 1749இல் வெளிவந்த பார்க்கத் தெரிந்தவர்களின் பயன்பாட்டிற்காகப் பார்வையற்றவர் பற்றிய கடிதம் என்பதில் ஒரு குருடரின் சிந்தனைகள் அந்தப் புலனறிவு இன்மையால் உருவானதாக இருப்பதைச் சுட்டிக்காட்டி கடவுளிடமிருந்து பெறப்-பட்டவை நமது சிந்தனைகள் என்றால் அந்தக் குருடருக்கு மட்டும் அவை வேறுபட்டது ஏன் என்று கேட்டார். அதன் மூலம் நமது சிந்தனைகள் கடவுளிடமிருந்து அல்லாது புலன்கள் வழிப் பெறப்பட்ட அனுபவங்களால் கட்டமைக்கப்பட்டவை என்பதை உணர்த்தினார். கடவுள் பற்றிய சிந்தனைகூட கடவுளிடமிருந்து அல்ல, சக மனிதர்களிடமிருந்து பெறப்பட்டவையே என்றார். ஒரு பார்வையற்ற பேராசிரியர் கூறுவதுபோல எழுதினார்: எனக்குப் பயன்படாத கண்கண்ணாடிகள் பற்றி என்னிடம் ஏன் பேசுகிறீர்கள்? நான் கடவுளை நம்ப வேண்டுமென்றால் நீங்கள் அவரை எனக்குத் தொட்டுக்காட்ட வேண்டும். அருமை. சகலத்தையும் தொடுவுணர்வு மூலம் அறியும் குருடர் கடவுளையும் அப்படி அறிய முயன்றதில் ஆச்சரியம் என்ன? அந்தப் பேராசிரியர் ஒரு நாத்திகராகவே வாழ்ந்து முடிந்ததாக சித்தரித்தார் திதரோ.
1754இல் அவர் வெளியிட்ட இயற்கை வியாக்யானங்கள் பற்றிய சிந்தனைகள் எனும் நூலில் ஏகக் கடவுள்வாதம், இயந்திரவியல்வாதம் போன்றவை பற்றி மட்டுமல்லாது நாத்திகவாதம் பற்றியும் அலசினார். அவருக்கு இயற்கைதான் சகலமும். நான் விவரிக்க விரும்புவது இயற்கையைத்தான்; அதைத் தவிர வேறு புத்தகம் ஏதுமில்லை தத்துவஞானிக்கு என்றார் திதரோ. பரிமாணத்தின் காரணமாய் மனிதகுலம் தோன்றியிருக்கலாம் என்று அப்போதே அறிஞர்கள் மத்தியில் அடிபட்ட பேச்சை அவரும் வழிமொழிந்தார். இயற்கையின் சாரமே இடைவிடாத மாற்றம் என்பதால் இப்படி நடந்திருக்கலாம் என்றார். எல்லாமே சடப்பொருள்தான். அதில் வாழ்வின் கூறும் _ சிந்தனா சாத்தியப்பாடும் அடங்கியுள்ளது. மனிதன் ஓர் இயந்திரம் இல்லைதான், ஆனால் அவன் சடப்பொருளற்ற ஆன்மாவும் அல்ல. உடலும் ஆன்மாவும் ஒரே அங்கவியல்தான், ஒன்றாகத்தான் சாகின்றன. ஒவ்வொன்றும் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது, மறைந்து போகிறது. உலகைத் தவிர எதுவும் மிஞ்சுவதில்லை, காலத்தைத் தவிர எதுவும் தொடர்வதில்லை என்றார் அந்த ஞானி.
இயற்கை நடுநிலையானது. அதற்கு நல்லது கெட்டது, பெரிது சிறிது, பாவி ஞானி என்று வித்தியாசமில்லை. அது தனி உயிரைக் காட்டிலும் உயிரினங்களைப் பற்றிக் கவலை கொள்கிறது. இயற்கையை நம்மால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது அல்லது அதன் அர்த்தத்தையோ, நோக்கத்தையோ அறிந்து-கொள்ள முடியாது _ நமக்காக அது அப்படி ஏதேனும் கொண்டிருந்தால். நமது ரத்தவெறியும் கம்பீரமும் கொண்ட வரலாற்றிலிருந்து தெரியவருவது என்னவென்றால் நாமெல்லாம் அதன் கரங்களில் தற்காலிகமான, நுணுக்கமான விளையாட்டுப் பொருட்களே. திதரோவின் இத்தகைய கருத்துகள் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு பற்றிப் பேசினவே தவிர கடவுளை இதிலே இழுக்கவில்லை என்பதைக் கவனிக்கவும். இதிலிருந்தே அவர் பேந்தியிஸ்டாக (Pantheist) இயற்கையையே கடவுளாக நினைக்கிற-வராக திகழ்ந்தார் என்று அவதானிக்கலாம். வேறு சில படைப்புகளில் அவர் ஒரு டேயிஸ்டாக வெளிப்பட்டிருக்கிறார் என்றும், ஆனால் கோட்பாடு ரீதியாக ஒரு சந்தேகவாதியாகத் திகழ்ந்தார் என்றும் கணிக்கிறார் டூரன்ட்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்…)