2000 ஆண்டு பழங்குடி மன்னர் பரம்பரை
உலகின் மிகப் பழமையான மன்னர் வம்சம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிந்து-போனது. அதுவும் இந்தியாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மன்னர் ஒருவரின் தத்துப் பிள்ளையாக எடுக்கப்பட்டு மன்னர் ஆனவர். இந்தியாவின் முதல் சூத்திரப் பேரரசு மவுரியப் பேரரசு. அதைப்போலவே பழங்குடி மன்னர் பரம்பரை ராடு எனும் சமஸ்தானத்தை ஆண்ட பரம்பரை. அதன் கடைசி மன்னரான சிந்தாமணி ஷரன்நாத் சகாதேவ் எனும் பெயர் கொண்ட ராடு மகாராஜாதான் கடந்த ஜூலை மாதத்தில் மறைந்து போனார்.
அவருக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே அந்த மன்னர் பரம்பரை தொடர வாய்ப்பில்லை. உலகின் மிகப் பழமையான மன்னர் பரம்பரைகளில் எஞ்சியிருப்பவை ஜப்பான் மன்னரும், கொரியாவின் ஹாங் பாங் பரம்பரையும், பல்கேரிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவரும்தான் இன்றைய நிலையில் இருப்பவர்கள்.
ராடு மகாராஜா பரம்பரை கடந்த 1950 ஆண்டுகளாக இருந்துவந்தது ஆகும். கி.பி.64இல் தொடங்கிய வம்சம் கி.பி.முதல் நூற்றாண்டில் மத்ரா முண்டா எனும் பழங்குடி மன்னர் பானி முகுத்ராய் என்பவரை சுவீகாரம் எடுத்தார். அவரது வாரிசுகள்தாம் ராடு ராஜாக்கள் என்கிறது வரலாறு.
ராடு ராஜ்யத்தின் கோட்டை கொத்தளங்-களைப் பேணி வருவதற்கெனத் தனியான அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டை 103 அறைகளைக் கொண்டது. இங்கிலாந்து நாட்டின் பக்கிங்காம் அரண்-மனையைப் போலவே கட்டப்பட்டுள்ளது. இம்மன்னர் பரம்பரையின் தனிப்பெரும் சிறப்புகளை கடைசி மன்னரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரான ராஞ்சியிலுள்ள கல்லூரிப் பேராசிரியர் அதிதேந்திரநாத் சகாதேவ் கூறியிருக்கிறார்.
குடிமக்களிடம் வரி ஏதும் வசூலிக்கப்பட்டது கிடையாது. நவராத்திரி பண்டிகையின்போது பழங்குடிகளின் தலைவர்கள் தரும் தான்யங்கள், ஆடு, மாடுகள் தவிர வேறு எதையும் மன்னர்கள் பெற்றுக் கொண்டதில்லை. ஆனாலும் பெரும் பரப்பிலான நிலங்களை மன்னர்கள் கல்வி, மதம், மற்ற தேவைகளுக்காக நன்கொடை அளித்தது ஏராளம். இந்தத் தானங்களுக்காக மன்னர் விதித்த நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். மன்னர் தானம் தந்ததாகத் தெரிவிப்பதோ, குறிப்பு எழுதுவதோ, கல்வெட்டுப் பதிப்பதோ கூடாது என்பது மட்டுமே நிபந்தனை. தமிழ்நாட்டு நிலையோடு பொருத்திப் பாருங்கள் விளம்பர உத்திகளை! மக்கள் பணத்தில் மக்களுக்காகச் செலவு அழிப்பதில் செய்யப்படும் விளம்பரங்களை, பொறிக்கப்படும் சலவைக் கல்வெட்டுகளை! சொந்தச் சொத்தைத் தந்தவர் விளம்பரமே கூடாது என்கிறார். கிறித்துவ தேவாலயம், காவல் நிலையம், ராஞ்சி பொழுதுபோக்கு மன்றம் முதலிய எல்லாமே அவருடைய நிலத்தில்! ஒரு கல்வெட்டும் இல்லை.
வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்தே கோடீசுவரக் கொடிகட்டிப் பறந்தது பிர்லா குடும்பம்! அதன் ஆதிகர்த்தா பல்தேவ் தாஸ் பிர்லா! பிரிட்டிஷ் அரசிடம் ராஜா பட்டம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். (செட்டி நாட்டு அரசர் அண்ணாமலை செட்டியாரும் இப்படி ராஜா பட்டம் வாங்கியவர்தான்.) பணம் வைத்திருந்த பிர்லா நிலம் வைத்திருக்கவில்லை. ராடு மன்னரான பிரதாப் உதயநாத் சகாதேவ் என்பாரை அணுகினார். அற்பத் தொகையைப் பெற்றுக்கொண்டு லோகர்தாகா எனுமிடத்தில் பெரும் பரப்பளவு நிலத்தைக் கொடுத்தார். நன்றிக் கடனாக ஒவ்வொரு ஆண்டு நவராத்திரி பண்டிகையின்போது பிர்லா மன்னரைச் சந்தித்து தங்க நாணயம் ஒன்றைத் தருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
அவருடைய நாட்டில் கிளர்ச்சி ஏதும் நடந்ததில்லை. சண்டைகள் போட்டதோ, வென்றதோ பற்றிய குறிப்பும்கூட இல்லை. ஆயுதங்கள் எதுவுமே மன்னரின் கோட்டையில் கிடையாது. வரவேற்பறையில் பழங்காலப் போர்வாள் ஒன்று மட்டுமே உண்டு. காட்சிப் பொருளாக!
வங்காளத்திலிருந்து வந்த ராணி லட்சுமண் குன்வர் என்பவர் துர்கா பூஜையை இம்மன்னரிடமும் மக்களிடமும் புகுத்தியிருக்-கிறார். இதே வங்காளத்தவர்தான் கிருஷ்ண வழிபாட்டை குஜராத் மாநிலத்தில் புகுத்தியவர்கள்.
மன்னர் பரம்பரையில் பெண்கள் சமமாக நடத்தப்பட்டனர். மகளுக்கும் மருமகளுக்கும் ஆண்களைப் போலவே அனைத்து உரிமைகளும்!
சூத்திரன் எனக் கூறி சிவாஜிக்குத் தொல்லை தந்த ஆரியக் கொடுமைகளை நினைத்துப் பாருங்கள்! இந்நாட்டுப் பூர்வ குடியைச் சேர்ந்த மன்னர்களின் நடத்தையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! வந்தேறிகளின் வஞ்சக வலையைப் புரிந்து கொள்ளுங்கள்!
– அன்றில்