அய்யாவின் அடிச்சுவட்டில்…. 125 ஆம் தொடர்

மார்ச் 01-15

மாவோவின் புரட்சியையும் மிஞ்சியது அய்யாவின் புரட்சி

15.04.1978 மாலை குடந்தையில் (கும்பகோணத்தில்) நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக கமிட்டிக் கூட்டத்தில்   நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். அதில் திராவிடர் மாணவர் கழகம் தோன்றக் காரணம் மற்றும் காரணமானவர்கள் ஆகியவற்றைத் தெளிவாக எடுத்துரைத்தேன். அதிலிருந்து விடுதலையில் பதிவான சில முக்கியப் பகுதிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். (விடுதலை 17.5.1978, பக்கம் 3)

இந்த திராவிடர் மாணவர் கழகம் தோற்றுவிக்கக் காரணமாக இருந்த நண்பர்கள் சிலர் இன்னும் இருக்கின்றார்கள். இன்னும் இந்த உணர்வுடனேயே இருக்கின்றார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் இந்த உணர்ச்சி குன்றாதவர்-களாகவே காட்சி அளிக்கின்றார்கள் என்பதைப் பார்க்கின்றோம்.

தண்ணீர்ப் பானை சம்பவத்திற்கு மூலகாரணமான நண்பர் தவமணிராஜன் அவர்கள் சிவகாசியில் கூட்டுறவு வங்கி ஒன்றில் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற அதிகாரியாக இன்னமும் இருக்கின்றார். (பிறகு சில ஆண்டுகள் கழித்து மறைந்தார்.)

அவர் அய்யா, அம்மா ஆகியோரிடத்தில் மிக்க அன்புள்ளங் கொண்டவராக இருந்து வந்தவர் ஆவார். அடிக்கடி அவர்களைக் கண்டு அளவளாவியவர் ஆவார்.

சென்ற வாரம் அவரை சென்னையில் சந்திக்க நேர்ந்தபோது சென்னையில் நடக்க இருக்கின்ற மாணவர் பயிற்சி முகாமுக்கு தாங்கள் வரவேண்டும், முகாமைத் தொடங்கிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் வருவதாக மகிழ்வுடன் ஒத்துக் கொண்டு உள்ளார்.

நமது மாணவர்களுக்கும் இப்படிப்-பட்டவர்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்பும், சரித்திரச் சான்றுகளுக்குச் சம்பந்தப்-பட்டவர்களை நேரில் காணும் வாய்ப்பும் கிட்டினால் மாணவர்களுக்கும் மற்றவர்-களுக்கும் மிக்க மகிழ்ச்சியையும் பயனையும் அளிக்கும் என்பதில் அய்யம் இல்லை.

அதேபோல இந்தக் குடந்தை கல்லூரியிலே தண்ணீர்ப் பானைப் போராட்டம் நடந்தபோது அதில் மிகத் தீவிரமாக இருந்தவர்களில் ஒருவர்தான் அன்று மாநிலங்களவையில் (தி.மு.கழக சார்பில்) உறுப்பினராக இருந்து மிகத் துடிப்புடனே செயல்பட்டு வருகின்ற அருமை நண்பர் ஜி.லட்சுமணன் எம்.பி. அவர்கள் ஆவார்.

அவர் ஆழமாக வரலாற்றுச் சுவடிகளை எல்லாம் படித்தவர். குடந்தை அரசினர் கல்லூரியில் பார்ப்பனர்களுக்குத் தனி தண்ணீர்ப் பானை, மற்றவர்களுக்குத் தனிப் பானை வைத்திருந்ததனால், தண்ணீர்ப் பானைத் தகராறு ஏற்பட்ட விவரங்களை எல்லாம் எடுத்துச் சொன்னால் மிகவும் பயன் உள்ளதாக அமையும். இன்றைக்கு டில்லியில் அவர் இல்லத்திற்குக்-கூட பெரியார், அண்ணா இல்லம் என்றுதான் பெயர் வைத்து உள்ளார்.

மிகச் சோதனையான கட்டம் கடந்த காலத்தில் ஏற்பட்ட போதுங்கூட அவர் பயந்து ஓடி ஒதுங்கிவிடவில்லை. தாம் பெற்ற பதவியைப் பிறருக்கு அடகு வைக்காமல் இருந்தார் என்றால், காரணம் அவர் திராவிடர் மாணவர் கழகத்தில் ஆரம்ப காலத்திலே பெற்ற கொள்கைப் பிடிப்பும், சுயமரியாதை உணர்வுமேயாகும்.

இவர்கள் மட்டும் அல்ல; இன்னும் பல நண்பர்கள் இன்னும் இதே உணர்வுடனே இருந்துகொண்டு வருகின்றார்கள்.

மாணவர் கழகம் என்பது கொல்லரது உலைக்கூடத்திலே இரும்பினைக் காய்ச்சி அடித்துப் பொருள்களைத் தக்க வடிவமைப்போடு உருவாக்குவது போல மாணவர் கழகம் அய்யா அவர்களின் இயக்கம் என்ற உலைக்கூடத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு அடிபடுகின்றார்-களோ (பக்குவப்-படுகின்றார்களோ) அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் இயக்கத்திற்கு வாளாய், கேடயமாய்  மற்ற போர்க் கருவிகளாய் பயன்பட முடியும். பயன்பட வேண்டும்.

எல்லாவிதமான சோதனைகளையும் தாங்கக்கூடிய பரிபக்குவத்தை மாணவ நண்பர்கள் இந்தக் கட்டத்தில் நன்கு பெற வேண்டும்.

வெறும் ஆவேசமாகப் பேசிவிடுவதன் மூலம் மட்டுமே நாம் காரியத்தைச் சாதித்துவிட முடியாது. அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதுதான் நமது மாணவர்களின் பணியாக இருத்தல் வேண்டும்.

மற்ற இயக்கங்களிலும் மாணவர்களிடையே ஆவேசம் இருக்கும். திடீர் என்று ஒரு காரியத்தைச் சுலபமாக ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் எப்படி முடிப்பது? யாரால் முடிப்பது? எங்கு கொண்டுபோய் விட்டுவிடும் என்பதே தெரியாத அமைப்புகளாகத்தான் அவை  சொந்த சிந்தனையை இணைத்து இயங்கும்.

ஆனால், நம்முடைய அமைப்பு அப்படிப்பட்ட நல்ல காரியங்களைத் தொடங்குவதற்கு முன்பு அறிவுப்பூர்வமாக நன்கு சிந்தித்து அதன் பிறகே காரியத்தில் இறங்கச் செய்யும்.

சுருங்கச் சொன்னால் நம் கிளர்ச்சி என்றால் நம் மாணவர்களுக்காகச் செய்கின்ற கிளர்ச்சியே தவிர, மாணவர்களைக் களத்தில் இறக்கி விடுகின்ற கிளர்ச்சியினை நாம் என்றுமே செய்ய மாட்டோம்.

சீனத்தின் கலாச்சாரப் புரட்சி, மாவோவின் கலாச்சாரப் புரட்சி பற்றியும் நான் அறிந்துள்ளேன். ஆனால், தந்தை பெரியார் அவர்களுடைய கலாச்சாரப் புரட்சி 1925லேயே முகிழ்த்தது. பல நூற்றாண்டு-களாக சமுதாயத்தில் நடைபெற்று வந்த மூடநம்பிக்கைத் திருமணத்திற்கு மாறாக பார்ப்பானை அழைக்காமலும், மூட-நம்பிக்கையினை நீக்கியும் திருமணத்தைச் செய்து வைக்கத் தொடங்கி, அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து, அது ஆண்டுதோறும் பல்லாயிரக்-கணக்கில் நிகழும்படிச் செய்து, சட்டம் அதைச் செல்லாது என்று தீர்ப்பு அளித்த பிறகும்கூட, சட்டத்தைப் பற்றி சமுதாயம் கவலைப்படாமல் எத்தனையோ பத்தாயிரக்கணக்கான திருமணங்கள் நடந்து வந்திருக்கின்றன.

சீனப் புரட்சியை ஆங்கிலத்தில் எழுதினார்கள். பல நாடுகளிலும் பரப்பினார்கள். நமது கலாச்சாரப் புரட்சியை நாம் ஆங்கிலத்தில் எழுதவில்லை. நாம் வெளிநாடுகளில் பரப்பவும் இல்லை. இச்செய்தி மட்டும் வெளிநாடு போய் இருந்தால் இதுவே அகில உலகத்திலும் மற்றவர்கள் சிந்தனைக்கும் மேலானது, தனித்தன்மை-யானது. தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை, பெரியார் இயக்கத்தின் சாதனை என்று போற்றப்பட்டு இருக்கும். இதனை இளம் உள்ளங்களும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்ஸ் தமது தத்துவத்தினைச் சொல்வதற்கு முன்னால் பிரிட்டிஷ் மியூசியம் என்ற நூலகத்திலே பல நூற்றுக்கணக்கான புத்தகங்களிடையே பல மாதங்கள் அங்கு உட்கார்ந்து கொண்டு ஆராய்ந்து படித்துப் படித்துத்தான் தமது தியரியை எழுதினார். மற்றவர்கள் சொன்ன கருத்துகளை அய்யா சொல்லவில்லை. அய்யா சொன்ன கருத்தை இன்னாரும் சொல்லி இருக்கின்றார்; அதுவும் இவ்வளவு காலந்தாழ்ந்து சொல்லி இருக்கின்றார் என்பதைக் காட்டத்தான் பயன்படும். எனவே அய்யா சொல்லாத கருத்துகளே கிடையாது. எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும், சந்தேகங்களுக்கும் அய்யா அவர்கள் நூல்களிலுள்ள கருத்துகளிலே விடை கிடைக்கும்.

மாணவர்களைப் பிரச்சாரப் படையாக முன்னிறுத்திப் பயன்படுத்திக் கொள்வோமே தவிர, அவர்களைக் களப்பலியாகக்கூடிய காரியத்தை என்றைக்குமே செய்யாதவர்கள் நாங்கள்.

இது அய்யா அவர்கள் நம்மைப் பக்குவப்படுத்தி வைத்துள்ள வழியாகும். நம்மை அய்யா அவர்களுக்குப் பின்னரும் அய்யா அவர்கள் போட்டுத்தந்த பாதையிலே அம்மா அவர்கள் வழி நடத்திச் சென்றார்கள் என்று குறிப்பிட்டு என்னுரையை நிறைவு செய்தேன். கூட்டத்தில் ஏராளமான கழகத் தோழியர்கள் மற்றும் தோழர்கள் உள்ளிட்ட (தி.மு.க. தோழர்கள் போன்றோர்) பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

* * *

மேலக்கோட்டையூர் சின்னையாபுரம் இந்து நாடார் நடுநிலைப் பள்ளியின் 75ஆம் ஆண்டு நிறைவு விழா 09-.04.1978இல் நடைபெற்றது. பெரியார்_மணியம்மையார் மன்றத்தின் தலைவர் எம்.கே.-இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்துகொண்டு பள்ளியின் மன்றக் கட்டிடத்தைத் திறந்துவைத்து உரையாற்றினேன்.

விழாவில் பள்ளியின் தாளாளர் பெரியார் பெருந்தொண்டர் மதுரை பே.தேவசகாயம் அவர்களுக்கு ஊர்ப் பொதுமக்களின் சார்பாக கல்வித் தந்தை என்று பட்டமளித்து, வாழ்த்துரை வழங்கினேன். நண்பர் தேவசகாயம் அவர்கள் ஒரு கடவுள் நம்பிக்கைக்காரராக இருந்திருந்தால் அவர் புண்ணியத்திற்காக இந்த ஊரில் பெரிய கோவில் கட்டி, அதன் மூலம் தான் எப்படி சொர்க்கத்திலே முதல் இடம் பிடிப்பது என்றுதான் காரியங்களைச் செய்து கொண்டிருப்பார்.

ஆனால், வாழ்நாளெல்லாம் இந்தச் சமுதாயத்திற்காகவே வாழ்ந்த தனிப்பெரும் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் தொண்டராக தேவசகாயம் அவர்கள் இருந்த காரணத்தினால்தான், கடவுளை மற _ மனிதனை நினை என்ற உணர்ச்சியோடு கடவுளை மறந்து _ இந்த ஊர் மக்களை நினைத்து மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்காக பள்ளிக்கூடக் கட்டிடத்தைப் புதுப்பித்து புதிய மன்றங்களையும் திறந்து வைக்கச் செய்திருக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்களின் தொண்டர் என்ற காரணத்தினால்தான் மன்றங்களுக்குப் பொருத்தமான பெயர்கள் என்றும் நிலைக்கும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள், ஒரு பொருள் அல்லது ஒரு சொத்து நிலையாக எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் தனக்கு என்று இல்லாமல் பொதுவுக்கு என்று ஆக்கிவிட வேண்டும். தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு வீடு ஒன்று இருந்தால், அவனுக்குப் பிறகு அவனுடைய பிள்ளையின் வீடு என்று ஆகி, அதன் பின்னர் அவன் பேரப் பிள்ளை-களுக்குள்ளாக ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு பாகம் பிரிக்கப்பட்டு அந்த வீடு கொஞ்ச காலத்தில் அடையாளம் தெரியாமல் போய்விடும்.

அந்த வீட்டையே பொது நன்மைக்கு என்று, பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்தக் கொடுத்துவிட்டால் என்றென்றைக்கும் அவர் பெயர் நிலைக்க அவர் கொடுத்தது என்று பொதுக் காரியங்களுக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கும். ஊரில் எப்போதும் நிலைத்திருப்பதைப் பார்க்கலாம். இந்த வார்த்தையின் அடிப்படையில்தான் நமது அன்னையார் அவர்கள் தலைமையில் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த இல்லம் பெரியார்_ அண்ணா நினைவாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதைப் போல தம்முடைய சொத்தை கல்வி வளர்ச்சிக்குச் செலவிட்டதாலேதான் இன்றைக்கு கல்வித் தந்தை என்று பாராட்டுப் பெறுகிறார்.

இன்றைக்கு, தமிழ்நாட்டிலே உள்ள கல்விக்கூடங்கள் எல்லாமே தந்தை பெரியார் அவர்கள் உழைப்பின் நினைவுச் சின்னங்கள்தான்!

சரஸ்வதி கடாட்சம் உனக்குக் கிடையாது என்று நாட்டின் மிகப் பெரும்பான்மை மக்களைவிடக் கேவலமாக ஒதுக்கிய நிலையில் நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தோம். காமராசர் தலைமையில் இங்கே ஆட்சி அமைந்தபோது கல்வி வெள்ளம் மடைதிறந்தது.

வெறும் படிப்பு மட்டுமல்ல; சோறு போட்டுப் படிப்பு; துணி கொடுத்துப் படிப்பு என்ற நிலை வந்தது. அதன் பின்னர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் புதுமுக வகுப்பு வரை இலவசக் கல்வியாயிற்று.

மனித வாழ்க்கை என்பது, மக்கள் சமூகத்துக்குத் தொண்டாற்றுவதுதான் என்ற லட்சியத்தோடு வாழ்ந்திட வேண்டும்.

உருவத்தினால் மட்டும் மனிதர்களாக உள்ளவர்கள் முழு உணர்வுகளாலும், உள்ளத்தாலும், மனிதர்களாக வாழ்ந்திட வேண்டும். வாழ்ந்திடச் செய்திட வேண்டும் என்ற உறுதியை இந்த விழாவில் பங்கேற்கும் அனைவரும் பெற்றிடவும் நண்பர் தேவசகாயம் முயற்சியால் இக்கல்வி நிலையம் மென்மேலும் வளர விழைகிறேன் என்று என்னுடைய உரையை நிறைவு செய்தேன். விழாவில் பெருந்தலைவர் காமராசர் மன்றத்தின் தலைவர்  உட்பட ஏராளமான ஊர்ப் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

– கி.வீரமணி

(நினைவுகள் நீளூம்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *