எங்க போச்சு மோடி அலை?

மார்ச் 01-15

இவ்விடம் அரசியல் பேசலாம்

எங்க போச்சு மோடி அலை?

வாடிக்கையாளர்கள் சென்றபின், சலூனைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் சந்தானம். அந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார் தோழர் மகேந்திரன்.

“என்ன தோழர், முத்து இருக்காரா?”

“ஹஹஹ! இப்பல்லம் நீங்க உள்ள நுழையறப்பவே முத்துவைத்தான் விசாரிச்சுக்கிட்டு வர்றீங்க!”

“பின்ன, புதுசா வேலைக்குச் சேர்ந்ததா சொன்னீங்க, என்னவோ பொண்ணு பார்க்கப் போனவங்க கண்ணுல பொண்ணைக் காட்டாமல் அல்லாட விடுற மாதிரி இன்னமும் அவரை என் கண்ணுல காட்ட மாட்டிங்கறீங்களே!”

“என்ன பண்றது! அவர் இல்லாத நேரத்துலதான் நீங்க என்ட்ரி கொடுக்குறீங்க!”

“அதுசரி, இன்னைக்கும் அவரு லீவா? என்னாச்சு அவருக்கு?”

“அவருக்கு ஜூரம்தான்”

“ஜூரமா, இப்ப பன்றிக்காய்ச்சலோ பறவைக்காய்ச்சலோ பரவுதுன்னு சொல்றாங்களே… நல்லா செக் பண்ணிக்கச் சொல்லுங்க தோழர்!”

“அவருக்கு வந்திருக்குறது கிரிக்கெட் ஜூரம் தோழர்!”

“கிரிக்கெட் ஜூரமா? ஓ… இப்பப் புரியுது! கிரிக்கெட் மேட்ச் பார்க்கறதுக்காக லீவு போட்டிருக்காரா?”

“அதேதான் தோழர்! கிரிக்கெட் ஆர்வத்துல இருக்கறவங்களை சும்மாவே தடுத்து நிறுத்த முடியாது… இதுல விஜய் டிவில வேற தமிழில் வர்ணனை பண்றாங்க! பிறகெப்படித் தடுக்குறது! லீவு எடுத்துட்டுப் போயிட்டாரு!”

“தமிழா? அவங்க பேசுறது தமிழாங்கறேன்!”

“அந்தக் கூத்தை ஏன் கேட்கறிங்க, அவங்க தமிழில் வர்ணனைன்னுதான் சொன்னாங்க… நானும் ஆர்வமா இந்தியா_பாகிஸ்தான் மேட்சைப் பார்த்தால், என்னவோ அக்ரஹாரத்து வீட்டுல உட்கார்ந்து டிவி பார்க்கற மாதிரி ஆயிடுச்சு!”
“அதானே சார்… பண்ணிடுத்து, ஓடி வரச்சே, கிடைச்சுடுத்துன்னு, ஸ்விங் பண்றச்சேன்னு தேவ பாஷையில பிச்சு உதறின்டா!”

“முன்னல்லாம் ரேடியோவுல தமிழ் வர்ணனை கேட்கறப்ப “இரண்டு ஓட்டங்கள் எடுத்தார்”, “அகலப்பந்து என நடுவர் அறிவித்தார்” “தாழ்வாக வந்த பந்தை அடித்து ஆடினார்”னு சொல்றதைக் கேட்கறப்ப எவ்வளவு அருமையா இருக்கும்! அதுதான் தமிழில் வர்ணனை! இவங்க பண்றது ரோதனை!”

“உண்மையில் எனக்கு அவங்க வர்ணனையக் கேட்கறப்ப ஜீவா படம்தான் தோழரே திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தது! இடஒதுக்கீடு எதுக்குன்னு கேட்கறவங்களுக்கு இப்பவும் சாட்சியாக இருப்பது இந்தியக் கிரிக்கெட் டீம்தான்!”

“உண்மைதான்! அதுசரி, நம்ம டில்லி நிலவரத்தைப் பார்த்திங்களா?”

“மத்திய அரசுக்கு எதிரா பெரிய கலவரத்தையே உண்டு பண்ணிட்டாரே அந்த மப்ளர்மேன்!”

“கோட்டுல பெயரை எழுதி பிரிண்ட் பண்ணி பரபரப்புக் காட்டுன கோட்மேனையே தூக்கியடிச்சுட்டாரே!”

“பின்ன, அவங்க ஒழுங்கா, உருப்படியா ஆட்சி நடத்துறதை விட்டுட்டு சூலாயுதத்தைத் தூக்கிட்டுத் திரியறவங்களை வச்சு ஏடாகூடமாப் பேச வச்சு மதக்கலவர நிலவரத்தைத் தூண்டப் பார்த்தாங்க… அவங்க சூலாயுதத்தைத் தூக்கினதால மக்கள் விளக்குமாறைத் தூக்கிட்டாங்க!”

“ஆமா, ஆமா, இவங்க சும்மான்னாலும் நல்லா இருக்குற இடத்துல குப்பையைக் கொட்டி பெருக்குற மாதிரி போஸ்தான் கொடுத்திட்டு இருந்தாங்க, ஆனால் ஆம் ஆத்மி உண்மையிலேயே இவங்களைப் பெருக்கிக் கூட்டித் தள்ளிட்டாங்க!”
“அப்போ அந்த மோடி அலை மோடி அலைன்னு சொன்னாங்களே அந்த அலை எங்க போயிருக்கும்?”

“அது எந்தப்பக்கம் அலையுதோ! ஆக, டில்லி தேர்தல் முடிவுக்குப் பிறகு, “மோடி”ங்கற பிராண்டோட மதிப்பு தடால்னு கவுந்திடுச்சுன்னு சொல்லுங்க!”

“படுபாதாளத்துக்கே போயிடுச்சு! இனி அதை வெளில எடுக்கணும்னா பாதாளக்கரண்டியைப் போட்டுத்தான் தேடணும்!”

“செங்கல் சிமெண்டு வச்சுக் கட்டிட கட்டடம்னா எத்தனை வருஷம்னாலும் நிற்கும், வெறுமனே சினிமா சூட்டிங்குக்குப் போட்ட கட்டிடம்னா ஒரு மாசம்கூடத் தாக்குப்பிடிக்காது! இதுல ஜெயிச்சா மோடி மோடின்னு சொல்றவங்க, இப்ப தோத்ததுக்கு மட்டும் அமீத் ஷாவைப் பலியாக்குறாங்க!”
“ஆமா, ஆமா, அவரும் ஏற்கெனவே கரகாட்டக்காரன் வில்லன் சந்தானபாரதி மாதிரியேதான் இருப்பாரு! இப்போ சந்தானபாரதியை காமெடியன் சந்தானமாக்கிட்டாங்க!”

“டெல்லிலதான் அந்த அடின்னா தமிழ்நாட்டிலும் கேவலப்படுத்திட்டாங்களே!”

“பின்ன, போட்டி தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இல்லை, எங்களுக்கும் அ.தி.மு.க.வுக்கும்தான்னு எம்புட்டு சவடால் பேச்சு விட்டாங்க! இப்ப என்னடான்னா டெபாசிட்டுக்கே டெபாசிட் வாங்க முடியாத அசிங்கம்!”

“அவங்க என்ன செய்வாங்க பாவம்… “நானும் ரவுடிதான் ரவுடிதான்”னு சவுண்டு விட்டுப் பார்த்தாங்க! பொதுமக்கள் என்னடான்னா, தம்பி இது ரத்த பூமி, கொஞ்சம் ஓரமா போயி விளையாடுன்னு சொல்லி விரட்டிட்டாங்க!”

“மிஸ்டு காலை நம்பி மிஸ்ஸாயிட்டாங்கன்னு சொல்லுங்க!”

“அதேதான்! இனி பி.ஜே.பி. அலுவலகத்திற்கு கால் பண்ணி சொன்னால் மட்டும்தான் சேர்த்துப்போம்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடலாம்!”

“ஹஹஹ! அதுசரி, பிரதமர் மோடியோட பெயர் பிரிண்ட் ஆன கோட்டோட நிலையைப் பார்த்திங்களா?”

“ஆமா ஆமா அதை ஏலத்துக்கு விட்டுட்டாரே!”

“பின்ன, ஏதோ புள்ள ஆசைப்பட்டுச்சுங்கற மாதிரி அவரோட கோட்டுல பெயரை பிரிண்ட் பண்ணச்சொல்லி, அதை மாட்டிக்கிட்டு அழகு பார்த்தாரு! அது குத்தமா? ஆளாளுக்குக் கிண்டலடிச்சு, எனக்கு இந்த கோட்டே வேணாம்னு வெறுக்குறாப்புல பண்ணிட்டீங்களே!”

ஆமா… இதுக்குப் பேருதான் மாட்டிக்கிட்டு முழிக்கிறது! சரி, காஸ்ட்லி கோட்டுனு சொல்லி நம்மள கிண்டல் பண்றாங்களே, இதுல இருந்து எப்படித் தப்பிக்கிறதுன்னு அவருடைய 11 பேர் கொண்ட குழு யோசிச்சுச் சொல்லியிருக்கும்-போல, அதுக்காகத்தான் இந்த விளம்பர ஸ்டண்ட். அது கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் போயிருக்கு தெரியுமா!

“ஆமா ஆமா, அதுவும் தெரியும், அந்தத் தொகையை கங்கையைச் சுத்தப்படுத்துற திட்டத்துக்குப் பயன்படுத்தப் போறதும் தெரியும்!”

“இதுக்குத்தான் பெரியவங்க அன்னைக்கே சொன்னாங்க… ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு!”

“இவங்க எங்க அளக்குறது! கோடிகோடியால கொட்டுறாங்க! ஆத்துக்குள்ள பொணத்தை அப்படியே கொட்டுறது, ஆத்தோரத்துல அரைகுறையா பொணத்தை எரிச்சுட்டு அப்படியே தூக்கி எறியறதுன்னு கண்ணுக்குத் தெரிஞ்சு தப்பு நடக்குது! அதைத் தடுத்தாலே கங்கை சுத்தமாயிடும்!”

“சரியாச் சொன்னீங்க! அதேபோல கஞ்சா அடிக்கிற அகோரிப் பார்ட்டிங்க, போதையில அரைகுறை நிர்வாணமா திரியிறதை, சிவனோட அவதாரம் மாதிரி பார்க்கறது… அறிவியல் வளர்ந்த நூற்றாண்டிலும் இந்த அயோக்கியத்-தனமான்னு நினைக்கத்தோணுது! இவனுங்களை விரட்டிவிட்டாலே காசியும் கங்கையும் ரொம்பவே சுத்தமாயிடும்!”

எப்படியோ, இப்படி பொதுமக்கள் மத்தியில் சீன் போடுறதுக்காகவே இனி தினமும், சுடோகு வரைந்த கோட்டு, பரமபதம் வரைந்த கோட்டு, தாயக்கட்டம் வரைந்த கோட்டெல்லாம் போட்டுக் கழித்து, ஏலத்துக்கு விட்டு அதை வைத்து எதையாவது சுத்தப்படுத்துறேன்னு சீன் போட்டு ஓட்டு வங்கலாம்னு ப்ளான் பண்ணுவாரு!”

“போச்சுடா! அய்டியா வேற கொடுத்துட்டீங்-களா?! இனி விதவிதமான கோட்டுதான்! சூட்டுதான்! ஹஹஹ! சரியாச் சொன்னீங்க!

– கல்வெட்டான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *