அன்னை நாகம்மையாரின் ஒப்பற்ற தொண்டு

மார்ச் 01-15

பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அன்னை நாகம்மையார். சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் பிறந்தவர். தந்தை பெரியாரின் தாய் சின்னத்தாயம்மையாரின் ஒன்றுவிட்ட தம்பி மகளாவார். பள்ளி சென்று கல்வி கற்கவில்லை எனினும் உலக அறிவில் சிறந்து விளங்கினார். பெரியார் அவர்களை மணந்துகொண்ட பின், பெரியாரின் பொதுவாழ்வுக்கு உறுதுணையாக, மேடைப் பேச்சுக்கான தனித்த ஆற்றலை வளர்த்துக் கொண்டு பொதுவாழ்விற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டார்.

1920ஆம் ஆண்டு தந்தை பெரியார் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டபோது கதர் உடுத்தி எளிய தோற்றத்திற்கு மாறினார். பூவும்  பொட்டும் பிற அணிகலன்களும் அடிமைச் சின்னங்கள் என சுயமரியாதை இயக்கம் பிரகடனப்படுத்தியபோது அவற்றைத் துறந்து பிறருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.

 

1921ஆம் ஆண்டில் ஈரோட்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலின்போது அரசாங்கம் 144 தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. தந்தை பெரியாரும், அவரது தொண்டர்களும் தடையை மீறியதால் கைது செய்யப்பட்டனர். மறுநாள் அன்னையார் தந்தை பெரியாரின் தங்கை ஆர்.எஸ்.கண்ணம்மாளுடன் சென்று தடையுத்-தரவை மீறினார். மறியலை நிறுத்துவதென்றால் ஈரோட்டில் நாகம்மையாரைத்தான் கேட்க வேண்டும் என்று காந்தியாரே கூறியுள்ளதி-லிருந்து அம்மையாரின் உறுதியினைத் தெரிந்து கொள்ளலாம். திகைப்படைந்த அரசு, உடனே தடையுத்தரவை நீக்கியது.

1924ஆம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் போராட்டத்திலும் பங்கு கொண்டதுடன், பல பெண்களையும் பங்கு கொள்ளச் செய்தார். இவர் தலைமையேற்று வைக்கம் தெருக்களில் பெண்கள் படையை நடத்திச் சென்ற பாங்கு இப்போராட்டத்தின்பால் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்ச்சிகளை இப்போராட்டம் தட்டி எழுப்பியது! இதுகுறித்து தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள்,

வீட்டின் ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார், தீண்டாமை எனும் பேயை வெட்டி வீழ்த்தவேண்டி வைக்கம் சத்யாகிரகப் போரில் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகை மாலையும் சூட்டினார் என்று பாராட்டி எழுதினார்.

1925ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. குடிஅரசு பத்திரிகையும் வெளிவந்தது. தாம் இருக்கும்வரை குடிஅரசு பத்திரிகையின் பதிப்பாசிரியராகவும் பிரசுரகர்த்தாவாகவும் இருந்துள்ளார். சுயமரியாதை இயக்கம் வெற்றி பெற்றதற்கும் அதில் பெண்கள் நிறையப் பேர் கலந்து கொண்டதற்கும் அன்னையாரே காரணம். அவர் தமது கணவரின் எல்லா முயற்சிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்ததே சுயமரியாதை இயக்கத்தின் வெற்றிக்குக் காரணமாகும். எல்லோரையும் அன்புடன் உபசரிப்பார். பொதுஜன நன்மைக்காக வேலை செய்த எல்லா இளைஞர்களையும் பெண்களையும் தமது சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து வந்தார். அவர் தமது சிறந்த கொள்கைகளுக்காக வேலை செய்தவர்களுக்-கெல்லாம் ஒரு தாயாக இருந்தார். அவர்களுடைய சொந்த சவுகரிங்களை அவர் தாமே நேராகக் கவனித்து வந்தார். சமூகப் போராட்டத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு அவர் அபயம் அளித்தார் என்று தோழர் எஸ்.ராமநாதன் கூறியுள்ளார்.

அன்னையாரின் மலாய் நாட்டுப் பயணத்தைப்பற்றி, சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த முன்னேற்றம் பத்திரிகை, அவர்களின் மலாய் நாட்டு விஜயத்தால் மலாய் நாட்டு மக்கள் எல்லாம் அவருக்கு அறிமுகமானார்கள். மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கம் அதிதீவிரமாய்ப் பரவியிருந்ததைப் பார்த்த அன்னையார் அடைந்த களிப்பு அளப்பரியது. சிங்கப்பூருக்கு வந்திருந்து திரும்புங்கால் அவர்களுக்கு விருப்பமான _ தேவையான மலாய் நாட்டுப் பொருள் என்ன வேண்டுமென்று நாம் கேட்டதற்கு நீங்கள் எல்லாம் இம்மலாய் நாட்டில் சுயமரியாதை  இயக்கத்தைப் பரப்பியிருப்பதே நான் விரும்பும் பொருள் என்று அன்னையார் சொல்லிய வார்த்தைகள் இன்னும் நமது செவியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வீராங்கனையாய், ஒரு சமுதாயப் போராளியாய், ஓர் அன்னையாய் அருந்தொண்டாற்றிய அன்னை நாகம்மையார் 11.5.1933 அன்று மறைந்து சுயமரியாதை இயக்கத்தின் பொன்னேடுகளில் பொறிக்கத்தக்க பொன்னொளிச் சுடரானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *