பொதுத்துறை நிறுவனங்களில் நிகழ்த்தப்படும் ஆராய்ச்சிகள் தொழில்துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சோதனைக்-கூடங்களோடு மட்டும் நின்றுவிடாமல் ஆராய்ச்சிகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும். இனிவரும் காலங்களில் நடக்கவிருக்கும் ஆராய்ச்சிகளும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துகின்ற வகையில் இருக்க வேண்டும்.
– கே.ரோசய்யா, தமிழக ஆளுநர்
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும், இதுவரை அங்கு அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதிகள் இல்லை. எனவே, அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதியை மாவட்ட அளவில் ஒரு மருத்துவ-மனையிலாவது ஏற்படுத்த வேண்டும். மருத்துவ சேவைகள் அனைத்தும் மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
– செலமேஸ்வர், உச்ச நீதிமன்ற நீதிபதி.
வளர்ச்சி என்று கூறிக்கொண்டு மக்களிடம் கருத்துக் கேட்காமல் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தும் முன்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் அதுபற்றிக் கருத்துக் கேட்க வேண்டும். மக்களுடைய ஒத்துழைப்புடன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
இந்தத் திட்டம் பற்றிய விவரங்கள், ஆய்வுகள் முழுவதையும் தமிழில் மொழிமாற்றம் செய்து கிராம சபைகளில் மக்கள் தெரிந்துகொள்ள அரசு செய்ய வேண்டும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
– மேதா பட்கர், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்புத் தலைவர்
குடியரசு தின அணி-வகுப்புக்கு ரூ.100 கோடி செலவழிக்கிறீர்கள். ஆனால் ஏழை விவசாயிகளின் நிலத்திற்கு இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் தொடர்ந்து மேல்முறையீடு செய்து வருகிறீர்யீகள். வழக்குத் தொடர்வதற்கு செலவழிக்க முன்வரும் நீங்கள் ஏன் இழப்பீடு தரத் தயங்குகிறீர்கள்?
– எச்.எல்.தத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி.
தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக் கல்வித் திட்டத்தில் மாற்றம் மிக அவசியம். பள்ளிக் கல்வியை மாணவர்களுக்கு நல்ல அனுபவக் கல்வியாக மாற்றினால் மட்டுமே தகுதிவாய்ந்த, அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். இப்போது இருக்கும் பாடத்திட்டத்தில் 25 விழுக்காடு குறைத்து தொழில்திறன் மேம்பாடு உள்ளிட்ட பாடத்திட்டங்களைக் கற்பிக்க வேண்டும்.
– ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்.
குழந்தைத் திருமணம், பள்ளிகளில் பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. குழந்தைகளின் உரிமைகள் மறுக்கப்-படுவதாலேயே இத்தகைய குற்றங்கள் நிகழ்கின்றன.
குழந்தைகள்மீது நடத்தப்படும் குற்றங்கள் குறித்து காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகிய அரசு அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
– வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.