மே 23 , 2011 சிகாகோ நகரிலே மிகப் பெரிய கொண்டாட்ட நாள் ! மூன்று நாள் கொண்டாட்டம் ஆரம்பித்துள்ளது. பெரிய கூடைப்பந்துப் போட்டி நடக்கும் யுனைட்டட் அரங்கில் 10000 பேர்தான் அனுமதிக்கப் பட்டனர். ஆனால், உலகமே “ஓ” வென்று இந்த விழாவைப் பார்த்து மகிழ்ந்தது.
அமெரிக்கா மட்டுமன்றி உலகமே ” ஓ” வென்றால் ஓப்ரா வின்ஃபிரி தான்.
அவரது 25 ஆண்டுகாலத் தொலைக்காட்சி, புகழின் உச்சாணிக் கொம்பிலே இருக்கும் போது அவர் அதை முடித்துக் கொள்கின்றார். அவருடன் அந்த நிகழ்ச்சியில் வேலை செய்தவர்கள் அவருக்கு ஒரு மிகச் சிறப்பான மகுடம் சூட்டும் பிரிவு விழா நடத்த ஏற்பாடுகளைச் செய்தனர். மூன்று நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில் யார் யார் வருவார்கள் என்பது ஓப்ரா அம்மையாருக்கே தெரியாது. பல அரிய நிகழ்ச்சிகள் நடக்கும் என்பது மட்டுந்தெரியும். பல ஆச்சரியப்படும் அரிய நிகழ்ச்சிகள் நடத்திய அவரையே ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இன்று செல்வச் சீமாட்டியாகப் பணத்திலும், புகழிலும் புரளும் இவரது ஆரம்ப காலம் ஏழ்மையும், துன்பமும் நிறைந்திருந்தது..அதைத் தாண்டித்தான் கடுமையான உழைப்பால் இவ்வளவு உயர்ந்துள்ளார். இவ்வளவு பெயரும் புகழும் பெற இவர் என்னதான் அப்படிச் சாதித்துவிட்டார்? அதுதான் அவர் மகிமைகளுள் மிகவும் சிறந்து மகிழவைக்கும் மகிமை !
ஒரு துறையென்று இல்லாமல் பல துறைகளில் மனித நேயத்தின் மாண்புகளில் தங்க முத்திரை பதித்துவிட்டதுதான் அவரது சாதனைகளின் சிறப்பு.
தனி மனித விடுதலைக்கான திறவுகோல் கல்வி என்பதை உலகுக்கு, அதுவும் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியவர்களை அறிய வைத்தார். அறிய வைத்தது மட்டுமல்லாமல் அதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தார். பள்ளிகளும்,நூலகங்களும் படைத்துத் தந்தார்.
அமெரிக்கா,ஆப்பிரிக்கா என்று உலக மெங்கும் கல்விக்காக கோடி கோடிகளை வாரி வழங்கி வழி நடத்தி வருகின்றார்.
இவரது நிகழ்ச்சிகள் பல தேவையான அதிசயங்களை நடத்திக் காட்டும் நிகழ்ச்சிகளாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட 276 பேர் செப்டம்பர் 13, 2004 ஆம் ஆண்டின் 19 ஆவது ஆண்டு தொடக்க விழாவிற்கு அழைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரின் முக்கியத்தேவை கார் என்பது அறியப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர். ஒருவருக்கும் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாது. திடீரென்று ஓப்ரா உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புது கார் காத்துக் கொண்டிருக்கின்றது என்று அறிவித்து மகிழ்ச்சிக் கடலில் முழுக வைத்தார்.
ஒரு மழலைப் பயிற்சி ஆசிரியை மிகவும் பாராட்டப்பட்ட நல்ல பெண். அவரை ஒரு நாள் முழுதும் ஒரு நல்ல உல்லாச உலகத்திலே (Spa) விடுமுறை கொடுத்து அனுப்பி விட்டு ஓப்ரா அந்த வகுப்பை நாள் முழுதும் கவனித்து நடத்தினார். மழலைகள் வகுப்பு என்பது எவ்வளவு பொறுப்பான, கவனமான வேலை என்பதை உலகுக்கு உணர்த்தினார். தேர்ந்தெடுக்கப்பட்ட 302 ஓப்ரா நிகழ்ச்சி தொடர் பார்வையாளர்கள் 25ஆம் ஆண்டு (கடைசி ஆண்டு) துவக்க விழாவிற்கு அழைக்கப் பட்டிருந்தனர். ஜான் ட்ரவோல்ட்டா, பால் சைமன் போன்ற பலர் அன்று முன்னறிவிப்பின்று கலந்து மகிழ்வித்தனர். அந்த 302 பேரையும் அய்ந்தே வார்த்தைகளினால் ஆச்சரியத்தில் அதிர வைத்து விட்டார். “நீங்கள் என்னுடன் ஆசுத்திரேலியா போகப் போகின்றீர்கள்” !என்றார்.
– டாக்டர் சோம.இளங்கோவன்