பூமியைப் போன்ற அளவுள்ள அய்ந்து கிரகங்கள் சுற்றி வரும் ஒரு நட்சத்திரம் நாசாவின் கெப்ளர் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுவரை கண்டறியப் பட்ட நட்சத்திரங்களிலேயே மிகப் பழைமையான நட்சத்திரமாகக் கருதப்படும் இதற்கு கெப்ளர் 444 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கெப்ளர் 444அய் பூமியை விடச் சிறியதான புதன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு இடைப்பட்ட அளவில் உள்ள அயந்து கிரகங்கள் சுற்றி வருகின்றன. கெப்ளர் 444 குடும்பத்திலுள்ள கிரகங்கள் தங்களது சூரியனை 10 நாள்களுக்கும் குறைவான நேரத்தில் சுற்றி வந்துவிடுகின்றன. அதேபோல பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தில் பத்தில் ஒரு பங்கு தூரத்திற்குள் வட்டப் பாதையில் சுற்றி வந்துவிடுகினறன என வானியலாளர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற பழைமையான நட்சத்திரத்தைச் சுற்றி ஏராளமான சிறிய கோள்கள் சுற்றி வருவதைப் பார்த்ததில்லை. இது மிகவும் சிறப்பானது. கெப்ளர் 444 சூரியக் குடும்பமானது நமது சூரியக் குடும்பத்தைவிட இரண்டரை மடங்கு பழைமையானது. நமது சூரியக் குடும்பம் 450 கோடி ஆண்டுகள்தான் பழைமையானது என சிட்னி பல்கலைக்கழக இயற்பியல் கல்லூரிப் பேராசிரியர் டேனியர் ஹுபர் கூறியுள்ளார்.