ஹரப்பா நாகரிகம்-லோதல்: சிந்து சமவெளியின் சான்று – 2

பிப்ரவரி 16-28

லோதல்: சிந்து சமவெளியின் சான்று – 2

ஹரப்பா நாகரிகம்

-எஸ்.தீபிகா தொல்லியல்துறை ஆய்வு மாணவர்

முதிர்வடைந்த _ ஹரப்பா நாகரிகப் பண்புகளின் (பண்பாட்டின்) சில சிறப்பு அம்சங்கள்:-_

1. முதிர்வடைந்த ஹரப்பன் நாகரிக நகரங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, பெருநகரம் அல்லது நகரம், துறைமுக நகரம், சிறுநகரம் ஆகும்.

2. பெரும்பாலான நகரங்கள் இரண்டு பகுதிகளாக அமையப் பெற்றுள்ளன. அதில் ஒன்று கோட்டைப் பகுதி, மற்றொன்று மக்கள் வாழும் உள்நகரமாகும்.

 

3. நகரத்தில் அமைந்துள்ள கோட்டைப் பகுதி பெரும்பாலும் உள்நகரத்தின் உள்ளேயோ அல்லது உள்நகரத்தை விட்டு சிறிது வெளி தூரத்திலோ அமையப் பெற்றிருக்கும். அந்தக் கோட்டைப் பகுதியானது எப்போதும் நகரத்தின் மேற்குப் பகுதியிலேயே காணப்படும்.

4. உள்நகரமானது மிகச் சிறந்த முறையான மனையமைப்பைக் கொண்டது. அதன் தெருக்கள் ஓர் ஒழுங்குமுறையில் அமையப் பெற்றவை. ஹரப்பன் நாகரிகத் தெருக்கள் எப்போதும் வடக்கு _ தெற்காகவும், கிழக்கு _ மேற்காகவும் 1:2:3:4 என்ற அளவில் அமைந்திருக்கும். இவ்வாறு மொத்த உள்நகரமும் சமமான கட்டிடத் தொகுதிகளாக வகைப்படுத்தி இருப்பதைக் காணலாம்.

5. ஒவ்வொரு தொகுதியிலும் அமைந்துள்ள வீடுகளின் வாசல்கள் அனைத்தும் ஒரு தெருவை நோக்கும் வண்ணம் அமையப் பெற்றுள்ளன. வீடுகளில் ஒரு முற்றமும், அதனைச் சுற்றி அறைகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஓர் அறையில் தீ மேடை /தீ பீடம் அமையப் பெற்றுள்ளது. பெரும்-பாலான அறைகளின் தரைகள் களிமண் பூசப்பட்டதாகவோ அல்லது மண் செங்கற்களால் அமையப் பெற்றதாகவோ இருக்கின்றன.

6. மூடப்பெற்ற சுகாதார வடிகால்கள் முதிர்வடைந்த ஹரப்பன் நகரங்களில் காணப்படுகின்றன. அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் கழிவு நீர் ஊறுதொட்டி அமையப்பெற்றுள்ளதை அகழ்வாராய்ச்சியில் காணமுடிகிறது.

7. அகழாய்வின்போது ஹரப்பா நாகரிக நகரங்களில் ஒரே வகையாகக் காணப்படும் கலைப் பொருள்களில் மிகவும் முக்கியமானது ஹரப்பன் முத்திரைகளாகும். இந்த ஹரப்பன் முத்திரைகள் பெரும்பாலும் மாவுக்களால் (Steatile) ஆனவை. சதுர வடிவில் 2 முதல் 3 செ.மீ. பக்கங்களை உடையன.

முத்திரையின் முன்பகுதியில் எப்போதும் ஒரு விலங்கு அல்லது மனித உருவத்துடன் சில ஹரப்பன் நாகரிகத்தின் எழுத்துகள் பொறிக்கப்-பட்டிருக்கும். சில முத்திரைகள் எழுத்துகள் இல்லாமலும் கிடைத்துள்ளன. சதுரம் மட்டும் அல்லாமல் செவ்வகம் அல்லது வட்ட வடிவம் கொண்ட முத்திரைகளும் கண்டறியப்-பட்டுள்ளன.

8. ஹரப்பா நாகரிக எழுத்துகள் முத்திரைகளில் மட்டும் இல்லாமல் மற்ற கலைப் பொருள்களிலும் காணப்படுகின்றன.

9. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் ஒரே முறையான எடை மற்றும் அளவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரும்-பாலான எடைகள் கன சதுர வடிவை உடையன. செர்ட் (Chert), சால்சிடோனி (Chalcedony), சுண்ணாம்புக்கல் (limestone) போன்றவற்றால் செய்யப்பட்டவை ஆகும். எடை போடும் தராசுகள் மொகஞ்சதாரோ, லோதல், கலிபாங்கன் போன்ற இடங்களில் கண்டறியப்-பட்ட போதும் அவை அனைத்தும் முழுமையாக அமையப்பெறவில்லை.

10. ஹரப்பன் நாகரிகத்தின் நகரங்கள் மிகச் சிறந்த வணிக நகரங்களாக விளங்கின. அகழாய்வு செய்யப்பெற்ற எண்ணற்ற இடங்கள் இதனைச் சான்றளிக்கின்றன. மெசபடோமி-யாவுடன் கடல் வழியாகவும், மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுடன் தரை வழியாகவும் வணிகம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதற்கு சான்றாக ஹரப்பன் நாகரிகத்தின் பானை ஓடுகள் மற்றும் கலைப் பொருள்கள் அயல்நாடுகளின் அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

11. ஹரப்பன் நாகரிகத்தின் பல இடங்களில் கண்டறியப்பட்ட தானியக் கிடங்குகள், விவசாயப் பொருள்கள் உற்பத்தி அதிக அளவில் இருந்திருப்பதை மெய்ப்பிக்கின்றன. இந்தத் தானியக் கிடங்குகள் பொதுவாக நகரத்தின் கோட்டைப் பகுதியிலேயே காணப்படுகின்றன. கோதுமை, பார்லி, பயிறு வகைகள் விளைவிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் அகழாய்வில் உறுதிப்படுத்தப்-பட்டுள்ளன.

12. ஹரப்பா நாகரிகத்தின் அகழாய்வில் முதல் இடுகாடு / கல்லறை (R-37)  ஹரப்பன் நகரத்தில் கோட்டைப் பகுதியில் S-W திசையில் கண்டறியப்பட்டது. அகழாய்வில் காணப்பெற்ற உடல்கள் அனைத்தும் நீண்ட சதுரக் குழியில், தலைப்பகுதி வடக்குத் திசையை நோக்கி புதைக்கப் பெற்றுள்ளன.

உடல்களுடன் ஈமச்சடங்குப் பொருள்களும் குழிகளில் காணப்படுகின்றன. இறப்புக்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றி அவர்கள் அறிந்திருந்தனர் என்பதை இது மெய்ப்பிக்கிறது. சில ஹரப்பன் புதைத்தலில் இறந்தவர்களின் உடல் எரிக்கப்பட்டற்கான சான்றும், பகுதி பகுதியாகப் புதைக்கப்பட்டதற்கான சான்றும் காணப்-படுகின்றன.

பிற்கால ஹரப்பா நாகரிகம் (2050-1700 B.C.) – வீழ்ச்சி:-

ஹரப்பா நாகரிகம் திடீரென வீழ்ச்சி அடைந்ததற்கான சான்றுகள் இல்லை. பல்வேறு கருத்துகளை அகழாய்வில் இருந்து கண்டறியப்பெற்ற சான்றுகளின் மூலம் ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சியை ஆராய்ச்சியாளர்கள் தொகுத்துள்ளனர்.

1. வெள்ளம், வறட்சி, மழையின்மை, ஆறுகளின் வழி மாற்றம், நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஹரப்பன் நாகரிகம் வீழ்ச்சி அடைந்திருக்கக் கூடும் என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

2. அயல்நாட்டவரின் படையெடுப்பால் ஹரப்பன் நாகரிகம் வீழ்ச்சி அடைந்திருக்கலாம் என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர். மொகஞ்சதாரோ தெருக்களில் கண்டறியப்பெற்ற எலும்புக் கூடுகளும், பலுசிஸ்தானில் (Balochistan) உள்ள பல இடங்களில் பிற்கால ஹரப்பா காலத்தில் எரிக்கப் பெற்றிருப்பதை அகழாய்வில் காண முடிகிறது.

3. கொள்ளை நோய் தீவிரமாகப் பரவிய காரணமும், ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சிக்குச் சான்றாக அமையலாம் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பிற்கால ஹரப்பா நாகரிகத்தின் கடைசிக் காலங்களில் பல நகரங்கள் முழுமையாக கைவிடப்பட்டு மக்கள் வெளியேறினர். மெதுவாக ஹரப்பன் நாகரிகம் வீழ்ச்சியடைந்து, அழியப்பெற்று, மறைந்துபோனது.

சுமேரியன், எகிப்திய நாகரிகம் போல தொடர்ச்சியான வரலாற்றுச் சான்றுகள் ஹரப்பன் நாகரிகத்திற்குக் கிடைக்கவில்லை. முழுமையாக அழிந்தும், மறைந்தும் போன ஹரப்பன் நாகரிகம் தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் போதே மீண்டும் கண்டறியப்பட்டது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *