ஆசிரியர் பதில்கள்

பிப்ரவரி 16-28

ஆசிரியர் பதில்கள்

மீத்தேன் பின்னணியில் முதலாளிகள்

கேள்வி : அமெரிக்காவும் இந்தியாவும் வெறும் நட்பு நாடுகள் மட்டுமல்ல, மிக நெருங்கிய கூட்டாளிகள் என குறிப்பிடுவதன் மூலம் ஒபாமா எதைத் தெரிவிக்க விரும்புகிறார்?
– நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்

பதில் : இதற்கு முந்தைய அரசு மக்கள் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, அணுஉலை_சக்தி ஒப்பந்தத்தில் (மின்சார உற்பத்தி) விபத்து ஏற்பட்டால் வெளிநாட்டுக் கம்பெனி பொறுப்பேற்காது எனும் நட்டஈட்டை உள்நாட்டுக் கம்பெனி உரிமையாளர்களே ஏற்கவேண்டுமென்பது போன்ற பிரச்சினைக்குரியதெல்லாம் ஓ.கே. என்று கூறி மோடி அரசு கையொப்பமிட்ட மகிழ்ச்சியிலும், பெரிய முதலாளிகளுக்குத் தாராளமாக திறந்துவிடப்பட்டதால் பூரித்தும் கூறியிருப்பாரோ ஒபாமா?

கேள்வி : குற்றவாளிக்கு ஆதரவாக பகிரங்கமாக செயல்படும் பவானி சிங் தொடர்ந்து வாதிட எந்த அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்?
பா.கந்தசாமி, நாகர்கோவில்

பதில் : பெங்களூர் வழக்கில் எத்தனையோ விசித்திரங்கள் _ புரியாத புதிர்கள் _ அதில் இதுவும் ஒன்று _ ஹூம்… அச்சோ!

கேள்வி : கருப்பினத்தில் தோன்றி, வெள்ளை மாளிகையை ஆளும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அன்று கருப்பர் என்பதால் அமெரிக்காவில் பாரபட்சமாக நடத்தப்பட்டார் என இந்தியக் குடியரசு தினவிழாவில் தன் ஆதங்கத்தைக் கூறியிருப்பது குறித்து?
தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : அமெரிக்காவிலும் நிறவெறி உள்நீரோட்டமாக சட்டத்தைப் புறந்தள்ளி ஓடுகிறது என்பதை வேதனையின் வெளிப்பாடாகத் தெரிவித்துள்ளார் போலும்!

கேள்வி : குடமுழுக்குத் திருவிழா நாளிதழ் விளம்பரத்தில் கலைஞரின் புகைப்படத்தோடும், தனது புகைப்படத்தோடும் கட்சிப் பிரமுகர்கள் வெளியிடுவது கலைஞரின் நற்பெயருக்குக் களங்கமல்லவா? இதை அவர் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? – க.சிவப்பிரகாசம், திட்டக்குடி

பதில் : வன்மையாகக் கண்டிக்க வேண்டும். கொள்கைச் சறுக்கலில் அ.தி.மு.க.வோடு, இப்படி சில கத்துக்குட்டிகள் தலைமைக்கு இழுக்குத் தேடவும் கூடாது; தலைமை இதைப் பொறுத்துக் கொள்ளவும் கூடாது. உடனே கண்டித்து அறிக்கைவிட வேண்டும்.

கேள்வி : அரசியல் சட்ட முகவுரையில் உள்ள மதச்சார்பின்மை மற்றும் சமதர்மம் என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்பதற்கான விவாதம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பா.ஜ.க. மற்றுமொரு பிற்போக்குச் சிந்தனைக்கு அடிகோலியுள்ளதே?
– த. அன்புச்செல்வன், மதுரை

பதில் : அரசியல் சட்ட அடிக்கட்டுமானம் (Basic Structure) என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளால் உறுதி செய்யப்பட்ட, விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று என்று தெரியாததுபோல, சில பா.ஜ.க.வின் இரட்டைக் குரல் மன்னர்கள் பேசுகிறார்கள் _ ஏமாறக் கூடாது.

கேள்வி : மதப்பிரச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை குறித்து?
– தி.சத்தியமூர்த்தி, வேலூர்

பதில் : அனைத்துக் காவல்துறை, தேர் இழுக்கும் கலெக்டர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும் நடவடிக்கை என்றால் வரவேற்கலாம்! கேள்வி : புது உலக தீர்க்கதரிசி,  தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் அர்த்தமற்ற சம்பிரதாயங்களின் கடும் எதிரி அய்.நா.பன்னாட்டு அமைப்புக் கழகம் அய்யாவுக்கு வழங்கிய பட்டயத்தின் தலைப்பில் அருமையான சொற்பொழிவான ஆராய்ச்சியுடன் கூடிய தங்கள் சிறப்புக் கூட்ட சொற்பொழிவினை குறுந்தகடாக வெளியிடுவீர்களா?
– கு.பழநி, புதுவண்ணை

பதில் : ஏற்கெனவே வந்துவிட்டது; இப்போது குறுந்தகடு (DVD) கிடைக்கிறதே!

கேள்வி : கருநாடகாவில் ஆடம்பரத் திருமணங்களுக்குத் தடை விதித்துப் புதிய சட்டம் அமல்படுத்த இருப்பதைப்போல் தமிழ்நாட்டிலும் கொண்டுவரப்படுமா?
– நீ.மணிகண்டன், சேலம்

பதில் : தமிழ்நாட்டில் முதல்வர் யார் என்பது முடிவானால் இதுபோன்ற பிரச்சினைகளை அவர்களிடம் எடுத்துச் செல்ல முடியும்! அதுவரை கப் சிப்.

கேள்வி : இந்தியத் துறைமுகங்கள் தனியார் மயமாக்கப்படும் என செய்தி வெளிவந்துள்ளதே? இதனால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?
– ஆ.வீரபிரபாகரன், தூத்துக்குடி

பதில் : மக்களுக்கு நாமக்கட்டி இலவசமாகக் கிடைக்கும். முதலாளிகளுக்கு தேன் கலந்து இனிப்பு கிடைக்கும்!

கேள்வி : உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டபோது தங்களின் மறக்கமுடியாத நிகழ்வாக எதனைக் குறிப்பிடுவீர்கள்?
– த.கண்ணதாசன், திருவள்ளூர்

பதில் : எனது ஒரு மணி நேர உரைக்குப் பின் அமைச்சர் தகுதியில் உள்ள மாநாட்டின் தலைவர் நிகழ்ச்சியின் முடிவுரையில் திராவிடர் கழகத்தினைப் பற்றி வெகுவாகப் பாராட்டியதும், மாநாட்டில் நான் கூறிய பெரியார் கருத்துகளுக்கு இருபாலர், முதியோர்_இளையர் எல்லோரும் தொடர்ந்து பாராட்டுத் தெரிவித்ததும் மறக்க முடியாத நிகழ்வாகும்!

கேள்வி : இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக பன்னாட்டு மனித உரிமை கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ள கண்டனத்திற்குப் பிறகாவது மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமா?
– தி.வெற்றிமாறன், கல்லக்குறிச்சி

பதில் : மாநில அரசுகளுக்கு இத்தகவல் தெரியுமா? அதை முதலில் சொன்னால் அல்லவா பிறகு பதில் கூறமுடியும்!

கேள்வி : மீத்தேன் திட்டத்தை மக்கள் எதிர்க்கக் காரணம் என்ன? அரசு ஏன் அதைச் செயல்படுத்துகிறது?
– கா.கன்னியப்பன், வாலாஜாபாத்

பதில் : மீத்தேன் திட்டம் மண்ணின் வளத்தைச் சுரண்டி, விவசாயத்திற்கு லாயக்கற்றதாக அந்தப் பூமிகளை மாற்றும் அபாயம் இருக்கிறது. அரசுக்கு முதலாளிகளை மனமகிழச் செய்வதில் அவ்வளவு அலாதி கவனம் போலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *