சிறப்புச் சிறுகதை
தலைமுறை
–சிங்கப்பூர் கு.சீ.மலையரசி
சென்ற இதழின் தொடர்ச்சி…
நினைவிருக்கிறதா? ஒரு நாள் காலை சென்ற ஊட்ரம் சாலையில் பேருந்து ஏறினார் உங்கள் கணவர் நல்லதம்பி. அன்று பெய்த அடைமழையால் சிலிகி சாலை முழுவதும் வெள்ளம். பேருந்து அதைக் கடக்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
அப்பொழுது பையிலிருந்த தமிழ்முரசுதான் படிப்பதற்குத் துணையாக இருந்தது என்றும், அந்தப் பேருந்தில் இருந்தவர்களில் சிலர் நண்பர்-களாகவும் மாறினார்கள் என்றும் கூறினார். அதில் சுல்தான் பள்ளிவாசலுக்கு நேரத்துடன் தொழுகைக்குச் செல்ல முடியாததை வேதனையுடன் கூறிய காதர் உசேனும் ஆவார்.
சிங்கப்பூரின் பழைமை வாய்ந்த சிறப்புக்குரிய சுல்தான் பள்ளிவாசல் 1924ஆம் ஆண்டு மறுசீரமைப்புடன் பெரிதாகக் கட்டப்-பட்டுள்ளது. அரேபியர்கள், மலாய், இந்திய இஸ்லாமியர்களுடன் மற்ற இனத்து இஸ்லாமியர்களும் தொழும் புனித இடமாக விளங்குகிறது.
சுல்தான் பள்ளிவாசலின் மதிப்புமிக்க 12 அறங்காவலர்களில் ஒருவராக ஆரம்ப காலத்தில் தாத்தாவும், பிற்காலத்தில் தந்தையும் முக்கியப் பங்கு வகித்துள்ளனர் என்று பேச ஆரம்பித்தவரின் நட்பு, இன்று வரை அவர் குடும்பத்துடன் தொடர்ந்து இருக்கிறது.
இன்று நம் நாடு நல்ல வளர்ச்சியடைந்து பல மாற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால் சிலிகி சாலையைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் இந்தச் செய்தியை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்கள்.
உங்களுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி, தியாகராஜபாகவதர் பாடிய பாடல்கள் என்றால் மிகவும் விருப்பம் என்பதால் பெரிய கிராமபோனை வாங்கி வந்து வீட்டின் நடுவில் வைத்து வெளியே தெருவரை கேட்கும்படி பாடல்களை ஒலிக்க வைத்து விடுவார். அதை அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் மகிழ்ச்சி-யோடு சேர்ந்து கேட்டுக் கொள்வார்கள்.
அப்பொழுதெல்லாம் அதுவே அவர்களுக்கும் பிரமாதமான பொழுதுபோக்கு என்றும் பிறகு அதே பழக்கத்தால் உங்கள் கணவர் (என் அப்பா) உயிருடன் இருக்கும்வரை மாதா மாதம் இந்தியன் மூவி நியூஸ் வாங்கிக் கொடுக்கத் தவறியதில்லை.
பராசக்தியில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் போல இன்னொரு நடிகன் பிறக்கப் போவதில்லை என்று அடிக்கொரு தரம் சொல்லுவார் அப்பா.
சிவாஜிகணேசன் பேசிய பக்கம்பக்கமான வசனங்களை மனப்பாடம் செய்து அப்பாவோடு நாங்களும் பேசி சிரித்து மகிழ்வோமே மறந்து விட்டீர்களா அம்மா! என்று விசும்பலோடு தாமரை பேசினாள். சற்று நேரம் எதுவும் பேசமுடியாமல் நெஞ்சை அடைப்பதைப் போல இருந்ததால், மூச்சை நன்கு இழுத்து விட்டுக்கொண்டார்.
அம்மா! உங்கள் கணவர் (என் அப்பா) இறந்த பிறகு எங்களை வளர்த்து விடவும், படிக்க வைக்கவும் நீங்கள் படித்த தமிழ் மொழிதான் துணையாக இருந்தது என்று எங்களுக்குத் தமிழ்மொழியைப் பிழையின்றிப் பேசவும், படிக்கவும் கற்றுக் கொடுத்தீர்கள். இன்று நானும் ஒரு தமிழாசிரியையாக இருக்கின்றேன் என்றால் அது உங்களால்தான், அம்மா மீண்டும் உடல்நலம் தேறி வர வேண்டும்.
உங்களின் 90ஆவது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும்! என்று குலுங்கி அழும் தன் அம்மாவின் தோள்பட்டையில் பாசத்துடன் கைகளை வைத்துப் பரிவுடன் சமாதானப்-படுத்தினாள் கீர்த்தனா. அவர் அழுவதை நிறுத்தியதும் தான் கணினியில் தேடிக் கொண்டு வந்திருந்த, தன் பாட்டிக்குப் பிரியமான பாடல்களை மெல்ல ஒலிக்க வைத்தாள்.
காற்றினிலே.. என்று தொடர்ந்து இரண்டு பாடல்கள் ஒலித்ததும் கீர்த்தனா! வேண்டாம் பரவாயில்லை நிறுத்திவிடு! பாட்டியிடம் ரொம்பவும் முக்கியமான செய்தியைச் சொல்லப் போகிறேன் என்று பீடிகை போட்டவரை, என்னவாக இருக்கும்? என்கிற கேள்வியோடு பார்த்தவள் கணினியை மூடிவைத்தாள்.
அம்மா, நீங்கள் தொடர்ந்து பேசும்முன், இந்தாருங்கள் தேநீர் வாங்கி வந்தேன். இதைக் குடித்துவிட்டுப் பிறகு பேசுங்கள் என்று அன்போடு மகள் கொடுத்ததை அருந்தியதும் அவளுக்குப் பார்வையால் நன்றியைக் கூறியவர் தன் தாயின் தலையை வருடியபடி கைகளை மெல்லப் பிடித்துக் கொண்டார் தாமரை!
அம்மா! நாம சிலை வடிக்கும் சிற்பிகளின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள், அதிலும் இராசராசசோழன் கட்டிய பெரிய கோவிலின் சிற்பக் கலையைப் புகழாதவர்கள் யாரும் இல்லை என்றுதான் கூறவேண்டும். அதில் முக்கியமானவர் கங்கைகொண்ட சோழபுரம் இராசேந்திரசோழன். நம் முன்னோர்களைக் கவுரவப்படுத்தும்படி அவர்களில் ஒருவருக்குப் பெரிய சிவலிங்கம் சன்னதியின் முன்கோபுர மாதிரியை சன்மானம் வழங்கியுள்ளார். கோபுர மாடத்தின் மீது கலசம் உள்ளது.
கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் நேர்த்தியாக இருப்பதுடன் கைதேர்ந்த வேலைப்பாடுகளைக் கொண்டும் இருந்தது என்று தலைமுறை தலைமுறையாக வாய்மொழி வழியாகச் சொல்லப்பட்டு வந்துள்ளதாக, உங்க தாத்தா பலரிடமும் பெருமையுடன் மகிழ்ச்சியோடு கூறுவதைக் கேட்டு இருப்பதாகச் சொல்லி மெய்சிலிர்த்துப் போவீர்கள்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி நம் முன்னோர்களின் வரலாறும், வளமான மரபும், கலாச்சாரமும் மிகவும் தொன்மை வாய்ந்தவை, அவற்றுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து நாம் தமிழர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லி வளர்த்தீர்கள்.
அதேபோல நம் முன்னோடிகளின் உழைப்பையும், செய்த தியாகங்களையும் நன்றி-யோடு நினைத்துப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பீர்களே! என்று தன் அம்மா வடிவம்மாள் கூறிய சிலவற்றை நினைவுப்படுத்திக் கூறி முடித்ததும். அம்மா! என்று அதிர்ச்சியுடன் அழைக்கும் கீர்த்தனாவைப் பார்த்தார்.
அம்மா! நீங்க ஒருமுறைகூட இதையெல்லாம் கூறியதே இல்லையே! எதை எதையோ படிக்கச் சொன்னீங்க. கணினியில் பல தகவல்களைத் தேடித்தேடிப் பார்க்கச் சொன்னீங்க, ஏம்மா? உங்க அம்மா உங்களுக்குச் சொன்ன நம்ம தாத்தா, பாட்டி கதைகளையெல்லாம் எங்களுக்குச் சொல்லவில்லை?
இப்பவும் இவற்றைக் கடந்து வந்துவிட்ட பாட்டியிடம்-தானே சொல்லிக் கொண்டு இருந்தீர்கள், நல்ல வேளையம்மா! உங்களுக்கும் தெரியாமல் இந்த அய்.போனை மேசையின் மேல் வைத்திருந்தேன் என்று அதை எடுத்துக் காட்டினாள். நீங்கள் பேசுவதெல்லாம் பிற்காலத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கலாம் என்று பதிவு செய்தேன். ஆனால், இப்பொழுது எனக்குத் தானம்மா இந்த அரிய தகவல் தொகுப்புத் தேவை!
கீர்த்தனா! என்றார் தழுதழுத்த குரலில் தாமரை.
ஆமாம் அம்மா! எங்களுக்கு நீங்கள் சொல்லவில்லையென்றால், வேறு யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்? சொல்லுங்கள் தலையைக் குனிந்து கொள்ளும் அம்மாவைப் பார்த்து நாங்கள் அடுத்த தலைமுறை! விழி இருந்தும் குருடர்கள்! மொழி இருந்தும் ஊமைகள்! என்றாள் உணர்ச்சி பொங்க பல்கலைக்கழக மாணவி கீர்த்தனா.
இதில் யார் மீது தவறு? என்கிற மனப் போராட்டச் சூழல் அமைதியில் நிலவியது!
ஓர் ஆங்கிலப் பாடகர் மறைந்ததும், அவரின் கடந்தகால சாதனைகளை இணையத்தில் தேடிப் பார்க்க நேரத்தை ஒதுக்கியவள்.
இதில் தான் ஆர்வம் காட்டவில்லை என்பதை உணர்ந்தாள். அம்மா, ஏதாவது கோபமாகப் பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள்! அங்கே பாருங்கள். பாட்டியின் இதயத்துடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது.
நான் போய் டாக்டரை வரச் சொல்கிறேன் என்று ஆறுதலாக அணைத்துப் பேசியவள், அப்புறம் இந்தத் தகவலையெல்லாம் கணினியில் பதிவேற்றம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து-கொள்ளப் போகிறேன்! என்று தன் மடிக்கணினியை எடுத்துக்கொண்டே கூறிய கீர்த்தனா அறையை விட்டு வெளியேறினாள்.
தாமரையின் மனதிலும் ஒரு தெளிவு பிறந்தது! தனக்கு இருக்கும் மிகப் பெரிய பொறுப்பை உணர்ந்து கொண்டார்.
(சிங்கப்பூரில் இது சிறப்பான சிறுகதை என்று தேர்வு செய்யப்பட்டது. – ஆசிரியர்)