கோவில் நிதி மக்களுக்காக்வே!
”நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோவில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே” என்ற தலைப்பில் 21.01.2015 அன்று விடுதலையில் ஆசிரியர் அறிக்கை வெளிவந்தது. ஆசிரியரின் அறிக்கை தொடர்பான கருத்து குறித்த பல்துறை அறிஞர்களின் எண்ணப் பதிவுகள் இங்கே…
ச.இராசரத்தினம், வரியியல் வல்லுநர், பல்துறை எழுத்தாளர்
கோவில் சொத்துகளில் ஒரு பகுதியைக் கடன் பத்திரங்களாக வசூலிக்கலாமே என்ற ஆசிரியரின் அறிக்கை வரவேற்கத்தக்கதே. அதனை மேலும் விரிவாக்க சில யோசனைகள்.
பெரியார் குறிப்பிட்ட முதலாளிகளின் பெட்டகங்களில் முடங்கிக் கிடக்கக்கூடிய தங்க ஆபரணங்களும் கருப்புப் பணமும் எவருக்கும் பயன்படுவதில்லை. இறக்குமதிகளாலும் கடத்தல் மூலமும் வரும் தங்கம் நமது பொருளாதாரத்தைச் சீர்குலைக்கிறது.
அதைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை. வரிக்குட்பட்ட ஒரு பொது மன்னிப்புத் (Amnesty) திட்டத்தின் கீழ் அரசிடம் வங்கிகளின் மூலம் வைப்பாக (Deposit) அதன் மதிப்புக்கேற்ப பத்திரங்கள் (Gold Bonds) வழங்கலாம்.
அவற்றின் மூலாதாரத்தைப் பற்றிய தகவல் தேவையிருக்காது. அவை திரும்பப் பெறும்போது மூலாதாரம் இல்லாத பகுதிக்கு 30 விழுக்காடு வரி வதிப்பு உண்டு.
அதேசமயம் ஒரு உச்ச வரம்புக்கு மேல் எந்த நபரோ நிறுவனமோ தங்கம் வைத்திருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்ற சட்டமும் இயற்றி அமலுக்கு வர ஏற்பாடு செய்வதும் திட்டத்தின் ஒரு பகுதி.
இதுபோன்ற சட்டங்கள் சில நாடுகளில் உண்டு. அது மாதிரியே ரொக்கப் பணத்திற்கும் உச்ச வரம்பு வைத்து அதிகப்படியான பணத்தைப் பறிமுதல் செய்யலாம் என்ற சட்டத்துடன் கூடிய அடித்தளத்தேவைப் பத்திரங்களுக்காக (Infrastructure Bond) ஒரு பொது மன்னிப்புத் திட்டம் கொண்டு வந்தால், கருப்புப் பணத்தையும் ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
அமுதன், ஆவணப்பட இயக்குநர்
நல்ல யோசனைதான். மக்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும், நாடு வளர்ச்சியடையும் என்றுதான் வாக்களித்தோம். கல்வி, மருத்துவம் போன்ற பல அத்தியாவசிய செலவுகளுக்குப் பணம் இல்லை என்கிறது மத்திய அரசு.
இப்படியொரு சூழ்நிலையில் கோவில்களில் முடங்கிக் கிடக்கும் பணத்தினை எடுத்துப் பயன்படுத்துவதில் தவறில்லை. இந்துமதம் அனைவரையும் காப்பாற்றக்கூடியது, அனைவரையும் நல்வழிப்படுத்துகிறோம், திரும்ப வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றனர்.
திருப்பதி கோவிலின் டெபாசிட்டுக்கு ஆண்டு வட்டி மட்டும் 655 கோடி ரூபாய், தலைமுடி காணிக்கை 190 கோடி ரூபாய் என்ற கணக்கு… சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.
கோவில் நிர்வாகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இந்தியா முழுவதும் உள்ள கோவில்கள் அறநிலையத்துறையின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
மக்கள் பணம் கண்டிப்பாக மக்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். ஆசிரியரின் கருத்து வரவேற்கத்தக்கது.
முனைவர் அ.இராமசாமி, வரலாற்றுப் பேராசிரியர், மேனாள் துணைவேந்தர்
மக்கள் நலம் விரும்புவோர் வரவேற்பர். ஜனநாயகத்தில் அரசு என்பது மக்கள் நலம் பேணும் அரசாக (Welfare State) இருக்க வேண்டும்.
மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற எல்லா வகையிலும் நிதி ஆதாரங்களைத் தேட-வேண்டியது அவசியமாகிறது. இன்றைய இந்திய மத்திய அரசு எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் வரி போட்டு முடித்தாகிவிட்டது.
மேலும் நிதியைத் திரட்ட எங்கே போவது?
கோவில்களில் குவிந்துள்ள செல்வங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆசிரியர் கூறுவது சரியான நேரத்தில் கூறப்பட்ட சரியான அறிவுரையாகும். கோவில்களில் உள்ள செல்வங்களை யார் கொடுத்தது? கடவுள் கொடுத்ததா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் பார்ப்பனர்கள் கொடுத்ததா? உண்மையில் மன்னர்கள்தான் கொடுத்தார்கள்.
மக்களிடம் இருந்து திரட்டிய செல்வத்தைத்தான் மன்னர்கள் கோவில்களுக்குக் கொடுத்தார்கள். எனவே, திரும்ப மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதில் தவறு ஏதும் இல்லை.
அதிலும் _ கோவில் நிதியைக் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றுதான் ஆசிரியர் கூறியிருக்கிறார். எனவே, இது ஒரு நல்ல திட்டம். மக்கள் நலம் பேணும், மக்கள் நலனை விரும்புகின்ற எவரும் இந்தத் திட்டத்தை வரவேற்பார்கள் என்பது உறுதி.
ஆளூர் ஷாநவாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
கோவில், தேவாலயம், பள்ளிவாசல் சொத்துகள் இவற்றை நிர்வகிக்கின்ற நிர்வாகிகளுக்கோ, வழிநடத்துகின்ற மத குருக்களுக்கோ உரியவை அல்ல. மக்களுடைய பயன்பாட்டுக்காக மக்களால் கொடுக்கப்பட்ட அந்தச் சொத்துகள் மக்களுக்குத்தான் பயன்பட வேண்டும்.
நிர்வகிக்கிறவர்களும், வழிநடத்துபவர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் முதலாளித்துவ சக்திகளுமே சொத்துகளை அனுபவிக்கின்றனரே தவிர, மக்கள் அதற்கு வெளியேதான் இருக்கின்றனர். குறிப்பாக, முஸ்லிம் செல்வந்தர்களால் முற்காலத்தில் வழங்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
ரூ.4 லட்சம் கோடியைத் தாண்டும் அளவுக்கு மதிப்புடைய சொத்துகளுக்கு உரிய சமூகமாக இந்திய முஸ்லிம் சமூகம் இருக்கின்றபோதும், வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் இடஒதுக்கீடு கேட்டு மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வாய்ப்புக்காக ஏங்கி நிற்கின்ற சமூகமாக உள்ளது.
வக்பு வாரியத்தின் சொத்துகள் அனைத்தையும் முறையாக அரசு அம்மக்களுக்குப் பயன்படும் வகையில் கொடுத்திருந்-தால் இந்த நிலை வந்திருக்காது.
குமாரதேவன், வழக்குரைஞர்
ஆக்கப்பூர்வமான கருத்து. இதனால் எங்கள் மனம் புண்படுகிறது, கோவிலுக்கு எந்த நோக்கத்திற்காகக் கொடுத்தோமோ, அந்த நோக்கம் அழிந்து போகிறது என்கின்றனர். இது முற்றிலும் தவறான பார்வையுடையது.
எல்லா வளங்களையும் பெற்று நலமாக வாழ வேண்டும் என்பதற்குத்தானே பக்தர்கள் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துகின்றனர். அந்த அடிப்படையில் நிதிப் பற்றாக்குறையால் இன்று நாடு தவிக்கும் சூழலில் மக்கள் கொடுத்த அதே நோக்கத்திற்காகவே அது செலவிடப்படுவதில் தவறில்லையே.
கோவில்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் செல்வங்களை -_ சொத்துகளைப் பயன்படுத்த அரசு ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும். கோவில் பணத்தை மீட்டு மக்களுக்கு உதவிடச் செய்வது அரசின் கடமை. இதன்மூலம் நாம் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். நம் நாட்டின் வெளிநாட்டுக் கடன் கணிசமாகக் குறையும்.
பத்துத் தலைமுறைக்குப் பற்றாக்குறையே வராது.