தாய்மதம் திரும்புதல் எனும் கூத்து

பிப்ரவரி 16-28

இவ்விடம் அரசியல் பேசலாம்

தாய்மதம் திரும்புதல் எனும் கூத்து

-கல்வெட்டான்

மத்தியானம் சாப்பிட்டு முடித்துவிட்டு, வாடிக்கையாளர்கள் யாருமில்லாததால் சாவகாசமாக பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தார் சந்தானம். அந்த நேரத்தில் நுழைந்தார் தோழர் மகேந்திரன்.

“வாங்க தோழர்! சவுக்கியமா? சாப்பிட்டீங்களா?”

“சாப்பிட்டாச்சு தோழர்… எங்க நம்ம புது ஆளு முத்துவைக் காணும்?”

“முத்து ஒரு முக்கியமான வேலையா வெளில போயிருக்கார் தோழர்”

“என்னது, நான் வர்றப்பல்லாம் அவரைப் பார்க்க முடியலையே, டைமிங் மிஸ் பண்றேனோ?! அதுசரி, அப்படியென்ன முக்கியமான வேலை? என்னிடம் சொல்லலாமில்ல?”

“அது ஒரு பெரிய காமெடி தோழர்! உங்களிடம் சொல்லியே ஆகணும்!”

“அப்போ சொல்லுங்க, நாம சேர்ந்தே சிரிக்கலாம்!”

“அரசியல் கூட்டங்களுக்கு ஆள் சேர்க்கறதுக்காக பணமும் பிரியாணியும் கொடுத்துக் கூட்டிட்டுப் போறதைக் கேள்விப்பட்டிருப்போம்ல, இப்போ கொஞ்ச நாளா தாய் மதம் திரும்புதல்னு சொல்லி, மதமாற்றம் பண்றதுக்காகவும் ஆள் புடிக்கிறாங்களாம்!”

“இதென்ன புதுக்கதை? தாய் மதம் திரும்புறவங்க தாங்களே மனமுவந்து பண்றதால்ல பேப்பர்ல போடுறாங்க?”

“அதெல்லாம் டுபாக்கூர் செய்திங்க தோழர்! உண்மையில் வருமானத்துக்கு கஷ்டப்படுற ஏழை ஜனங்களை ஒரே ஒருநாள் மட்டும் வந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லிக் கூட்டிட்டுப் போறாங்களாம்!

இதுல நிறையப் பேரு அதே இந்து மதத்தைச் சேர்ந்தவங்கதானாம்! ஆனால் பப்ளிசிட்டி ஸ்டண்டுக்காக வேற மதத்திலிருந்து திரும்பி வர்றதாக்காட்டி, அதுக்காக தடபுடலா யாகம்லாம் நடத்தி சீன் போடுறாங்க தோழர்!”

“இவங்க யாகம் நடத்துறதுலதான் எக்ஸ்பர்ட் ஆச்சே! காலைல கக்கூஸ்ல முக்கு முக்குன்னு முக்கிட்டு எதுவும் வரலைன்னாக்கூட அதுக்கும் ஒரு பரிகாரம், யாகம்லாம் வச்சு காசைப் புடிங்கிடுவாங்களே!”

“ஆமாம் தோழர்! பெரியார் வழியில சீர்திருத்தக் கல்யாணத்தை காமராஜர் ஆதரிச்சாரு. யாகம், ஓமகுண்டம், அய்யர்னு எந்தச் சடங்கும் இல்லாமல் ஊர்ப்பெரியவங்க முன்னிலையில் கல்யாணத்தை நடத்தி, இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் அனைத்திற்கும் முன்மாதிரியா இந்த தமிழ்நாடு இருந்துச்சு.

இப்பவும்கூட நிறைய இடங்களில் சீர்திருத்தக் கல்யாணம் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆனாலும் அங்க விட்ட வருமானத்தைப் பிடிக்கிற மாதிரி, புதுவீடு கட்டினால் கணபதி ஹோமம் நடத்தியே ஆகணும்னு ஒரு பழக்கத்தைப் பரவலா நம்ம மக்கள் மத்தியில திணிச்சுட்டாங்க பார்த்திங்களா?”

“நானும் இதைப் பற்றி யோசிச்சிருக்கேன் தோழர். முன்னல்லாம் பால் காய்ச்சறதுன்னா புதுவீட்டில் பாலைக் காய்ச்சி எல்லாருக்கும் குடுத்துட்டு, சாமியக் கும்பிட்டு, சாப்பாடு போட்டு முடிச்சுக்குவாங்க.

இப்போ கணபதி ஹோமம்னு கொண்டாந்து விடிய விடியப் புகை போட்டு, ஏற்கெனவே வீட்டுக்கடன்ல இருக்குறவன்கிட்ட, மிச்ச மீதி வளையல், கம்மலையும் வித்து யாகம் நடத்த வைக்கிறாங்க. சீர்திருத்தக் கல்யாணம் மாதிரி, சீர்திருத்தப் புதுமனை புகுவிழாவையும் அறிமுகப்படுத்தணும் போல!”

“சரியாச் சொன்னீங்க தோழர்!”

“அதுசரி, முத்துவைப் பற்றிச் சொல்லவே இல்லையே! அவரு என்ன பண்ணிட்டு இருக்கார்?”

“இந்த தாய்மதம் திரும்புதல் கூத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கறதுக்காகத்தான், முத்து இந்து மதத்துக்கு மாறப்போறதா தகவல் சொல்லி, அந்த விழாவுக்கு அனுப்பி வச்சிருக்கேன்! அதுமட்டுமில்ல, இப்போ முத்துவை தமிழ்நாட்டிலுள்ள வெவ்வேறு மாவட்ட இந்து அமைப்புகளும் அவங்களோட மதமாற்ற நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டிருக்காங்களாம்!

அதுக்கு வெயிட்டா பணம் தர்றதா சொன்னாங்களாம் தோழர்!”

“ஆக மொத்தம், ஏசுவும் இல்லை, ராமனும் இல்லைன்னு எல்லாருக்கும் ஈஸியாப் புரியும்! புரிஞ்சாலும் புரியாதமாதிரியே நடிக்கிறதுக்கும் பழகிட்டாங்க நம்ம மக்கள்! இந்த மாதிரி காமெடி விழாவில் செமயா மூக்குடைபடும் நாளைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்!”

“அதுக்குச் சாட்சியாத்தான் நம்ம முத்துவைத் தயார்ப் பண்ணிக்கிட்டிருக்கேன் தோழர்!”

“நல்ல காரியம் தோழர்! இவங்களுக்கு இதை விட்டால், அடுத்து நடிகைகளைத்தான் சீண்டிப் பார்ப்பாங்க! அண்மையில்கூட நயந்தாரா நடிச்ச வீடியோ கிளிப் ஒன்னை வச்சுக்கிட்டுப் பிரச்சினையக் கிளப்பிப் பார்த்தாங்க, படிச்சிங்களா?”

“ஆமா தோழர், எதோ ஒயின்ஷாப்புல நயந்தாரா பீர் வாங்கற மாதிரி ஒரு படத்துக்கு எடுத்த சீன் லீக் ஆகி, அதை வைத்துக் கலாச்சாரம் பாதிக்கப்படும்னு போராட்டத்துக்குத் தயார் ஆகிட்டாங்களே!”

“இவங்களோட போராட்ட அறிவிப்பெல்லாம் வெத்து சீன்தான்! தில்லுதுரை மாதிரிதான் பேட்டி கொடுப்பாங்க, ஆனால் உண்மையில் சரியான பயந்தாங்கொள்ளி லெட்டர்பேடுகள்!”

“எதை வச்சுச் சொல்றிங்க தோழர்?”

“உண்மையில் இன்டக் பீரெல்லாம் வியாபாரம் பண்றது யாரு?”

“தமிழ்நாடு கவர்மெண்ட்”

“அப்போ இவங்க போராட்டத்தை தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எதிராதான நடத்தணும்? இன்னொரு பெண்மணிக்கு எதிராத்தான உண்மையில் இவங்க போராடணும்? ஆனால் அவங்களுக்கு எதிரா போராடினால், போலீஸ் புடிச்சுட்டுப் போயி முட்டிக்கு முட்டி பேத்துடுவாங்கன்னு பயம் இருக்குல்ல!”

“அதுவும் சரிதான்! இவங்களுக்குத் தேவை விளம்பரம்தான்! நம்ம பிரதமரும் இவங்க ஆளுதான!”

“ஆமா ஆமா! கொஞ்ச நாளா கோட்ஷேவ பெருமையா சொல்லிக்கிட்டும், விளம்பரம் பண்ணிக்கிட்டும் இருந்தாங்க! இப்போ கோட்டை பெருமையா சொல்லிக்கிட்டுத் திரியறாங்க!”

“எந்தக் கோட்டை சொல்றிங்க? அவரு பெயரு போட்ட கோட்டா?”

“அதேதான்! நாங்க எங்க வீட்டில் கோழி வளர்க்கும்போது, கோழி றெக்கையில கலரு சாயம் அடிப்போம். நாங்க பச்சை கலர் சாயம் போட்டால், பக்கத்து வீட்டுக்காரங்க அவங்க வளர்க்கற கோழிகளுக்கு சிவப்புக் கலர் சாயம் அடிப்பாங்க! அப்போதான் கோழி மாறிடாது! அதுதான் இப்போ என் நினைவுக்கு வருது தோழர்!”

“ஆமா, ஆமா, இவரு வெளிநாட்டுச் சுற்றுப்பயணம்னு அடிக்கடி ஏகப்பட்ட நாடுகளுக்கு டூர் அடிக்கிறாரு! அங்க தொலைஞ்சு போகாம இருக்கணும்னா இப்படிப்பட்ட கோட்டு அவசியம்தான்!”

“நாட்டுக்கு நல்லது செஞ்சு பேர் எடுக்கறாரோ இல்லையோ, இப்படி கோட்டு மாட்டியாவது பேர் எடுத்துடுவார்ல!”

“ம்ம்ம்… தேர்தலுக்கு முன்ன வரைக்கும் மோடி இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றி எழுதப்போறதா ஒரு மாயையை உண்டுபண்ணி பி.ஜே.பி.யை ஆட்சிக்குக் கொண்டு வந்தாங்க! அதுக்காக விளம்பரம் பண்றதுக்காக ஏகப்பட்ட தொகையைச் செலவு பண்ணினாங்க. இப்போ நிலைமை தலைகீழா மாறிடுச்சு. மோடியோட ஒவ்வொரு காமெடியையும் மக்கள் கண்டுபிடிச்சுடுறாங்க!”

“ஆமா தோழர், இந்தக் கோட்டு விஷயத்தைக்கூட வாட்ஸ் அப், பேஸ்புக்னு எல்லாத்திலும் ஷேர் பண்ணி, அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு எறிஞ்சுட்டாங்க!”

“வாட்ஸ் அப்ல இப்போ என்ன தோழர் லேட்டஸ்ட் மேட்டர்?”

“எல்லாம் தமிழ்நாடு பி.ஜே.பி.யோட மிஸ்டுகால் மேட்டர்தான்! உறுப்பினரா சேர்றதுக்கு ஒரு மிஸ்டு கால் போதும்னு இவங்க விளம்பரம் பண்றதும் அமேசான் காட்டு மூலிகை வியாபாரிகள் விளம்பரம் பண்றதும் ஒன்னுபோல இருக்குதுன்னு ஒப்புமைப்படுத்தி நக்கலடிச்சுக்கிட்டிருக்காங்க தோழர்!”

“உண்மைதான், ரெண்டுமே வளர்றதா சொல்றது மாயைதான்! இப்பல்லாம் எங்க கட்சிக்கு லட்சம் உறுப்பினர் இருக்காங்க, கோடி உறுப்பினர் இருக்காங்கன்னு குட்டியூண்டு கட்சியும் கூட அறிக்கை விடுறப்ப, தமிழ்நாட்டிலிருக்கும் பி.ஜே.பி.யும் அறிக்கை விடுறதுல சளைச்சவங்களா என்ன?!”

“அப்போ அடுத்த ஆபரேசன்ல நம்ம முத்துவை மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லிட வேண்டியதுதான!”

“ஹஹஹஹ! பண்ணிட்டாப் போச்சு!”, என சிரித்தபடியே தோழர் மகேந்திரன் அங்கிருந்து விடைபெற்றார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *