பாகம்- 5
அய்யாவின் அடிச்சுவட்டில்…
124 ஆம் தொடர்
பகுத்தறிவாளர் கழகம் தோன்றியது ஏன், எதற்காக?
கும்பகோணம் (குடந்தை) பெரியார் மாளிகையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக கமிட்டிக் கூட்டத்தில் அதன் புரவலர் என்ற முறையில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
அதில் இன்றைக்கு இயக்கத்தின் தந்தை அய்யா, அம்மா அவர்களும் இல்லாத நிலையில் லட்சியப் பயணத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று சூளுரை எடுத்துக் கொண்டு இருக்கின்ற வேளையில் பகுத்தறிவு இயக்கத்தை மக்கள் இயக்கமாக்குவோம்! என்ற தலைப்பில் எடுத்துரைத்த கருத்துகள் விடுதலை 16.05.1978, பக்கம் 3இல் பதிவானதைக் குறிப்பிடுகிறேன்.
‘நமது இயக்கம் ஒரு அரசியல் இயக்கம் அல்ல’’.
இது மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம்; மனிதாபிமான இயக்கம்; உலகத்திலே இதுபோன்ற இயக்கத்தை யாருமே துவக்கியதில்லை என்ற அளவுக்கு மிகப்பெரிய உச்சகட்டத்திலே அய்யா அவர்கள் இயக்கத்தை உருவாக்கிவைத்துவிட்டுப் போய் இருக்கின்றார்கள்.
இந்த இயக்கத்தினுடைய தனித்தன்மை எதில் இருக்கின்றது என்று சொன்னால் இந்த இயக்கத்தில் இருக்கின்ற யாரும் தமது சொந்த கவுரவத்திற்காக, பெருமைக்காக இந்த இயக்கத்தில் இல்லை. மாறாக சமுதாயத்தினுடைய கவுரவம் உயர்த்தப்பட வேண்டும்; நம்முடைய இனமானம் ஏற்றம் அடைய வேண்டும்;
அதற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட வேண்டும்; நாம் பிறவியிலேயே இழிந்த மக்கள் என்று நாட்டில் அய்யாயிரம் ஆண்டுகாலமாக இருந்த நிலையை மாற்றிட வேண்டும் என்றால் அது அரசியல்வாதிகளால் முடியாது; அதை மந்திரிசபை அமைப்பது மூலமாக மாற்றிவிட முடியாது; அதை வேறு வேறு அதிகார மட்டத்திலே இருந்து கொண்டு மாற்றிவிட முடியாது.
மாறாக மக்கள் இயக்கமாக இதனை உருவாக்கி தேவைப்படும்போது போராட்டக் களத்திலே மக்களை நிறுத்தி அவர்களுக்கு மிக மிக அடிப்படை மூலமான பகுத்தறிவு உணர்வினை உண்டாக்கிக் காட்டுவதன் மூலம்தான் செய்ய இயலும் என்பதனை அய்யா அவர்கள் தெளிவாகக் காட்டிவிட்டுப் போன பிறகு, அதனை அம்மா அவர்கள் உறுதியாக்கி விட்டுப் போன பிறகு, நாம் தொடர்ந்து பல்வேறு சோதனைகளுக்கு ஈடுகொடுத்து,
மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து நாம் மிகப் பெரியதொரு போரினை அதற்கு இடையிலே மிகப்பெரிய படைத் தலைவர்கள் எல்லாம் களத்திலே மறைந்துவிட்ட பின்னரும், மிகச் சாதாரணமான படை வீரர்கள் எல்லாம் போரிலே பின்வாங்காது களத்திலே இருக்க வேண்டும் என்கின்ற கடமை உணர்வுடன் போராட வேண்டும் என்பது எவ்வளவு அவசியப்படுகின்றதோ அதுபோன்ற காலகட்டத்தில் நாம் நின்றுகொண்டு இருக்கின்றோம்.
எனவே, நமது இயக்கத்தைப் பொருத்-தவரையிலே இதுபோன்ற பகுத்தறிவாளர் கழகமானாலும், திராவிடர் மாணவர் கழகமானாலும், திராவிடர் கழகமானாலும் அமைப்புரீதியாக சில பல வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும் இந்த நிலையிலே இந்த உணர்வு உடையவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் ஒன்று திரண்ட அந்த நிலையிலே கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதற்கு அவரவர்கள் சக்திக்கேற்ப அவரவர்கள் தங்கள் பங்கினை நல்கவேண்டும் என்பதுதான் மிக முக்கியமான _ மய்யமான கருத்தாகும்.
அந்த மய்யமான கருத்தை ஒட்டி இங்கே அரசாங்க ஊழியராக இருக்கக்கூடிய நண்பர்கள்; மற்ற பல்வேறு கட்சிகளிலே இருக்கக்கூடிய நண்பர்கள்; நேரடியாக திராவிடர் கழகத்திலே ஈடுபட்டு இருக்கின்றவர்கள் என்ற நிலையில் இல்லாத நண்பர்கள் இவர்கள் எல்லாம் ஒன்று திரண்ட நிலையிலே இங்கே அவர்கள் மிகச் சிறப்பாக பகுத்தறிவாளர் கழகத்தை ஏற்பாடு செய்து இருக்கின்றார்கள்.
இந்தப் பகுத்தறிவாளர் கழகம் குடந்தை நகரத்திற்குப் புதியதல்ல. தந்தை பெரியார் அவர்கள் 40 ஆண்டு-களுக்கு முன்னார் சென்னையிலே பகுத்தறிவாளர் கழகத்தினைத் தொடங்கினார்கள். அதிலே மிகப் பெரிய அரசு அதிகாரிகள் எல்லாம் பங்கேற்று இருக்கின்றார்கள் என்று கண்ட உடனே கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் எல்லாம் பகுத்தறிவாளர் கழகத்திலே சேரும் துணிவு வந்தது.
அதற்கு முன்னாலேயும் கூட இவர்களுக்-கெல்லாம் இந்தக் கருத்து உண்டு, இவர்கள் இந்தக் கருத்தினை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தாலும் இவர்கள் எப்படி இதனை அமைப்பு ரீதியில் ஏற்படுத்துவது, பங்கேற்பது, பணியாற்றுவது என்கின்ற ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருந்து விடுபட்டு நாமும் அமைப்பு ரீதியாக பகுத்தறிவாளர் கழகத்தின் பெயராலே தொண்டாற்றலாம் என்ற உணர்வோடு வந்தார்கள். பகுத்தறிவாளர் கழகம் என்பது ஓர் அரசியல் அமைப்பல்ல.
திராவிடர் கழகமே ஓர் அரசியல் அமைப்பல்ல என்று சொல்லிவிட்ட பிறகு பகுத்தறிவாளர் கழகம் நிச்சயமாக ஒரு அரசியல் இயக்கமாக இருக்க முடியாது.
ப.க. – தி.க. வேறுபாடுகள் என்ன?
அடிக்கடி நாம் தெளிவாக எடுத்துக்காட்டி இருப்பதைப் போல பகுத்தறிவாளர் கழகம் என்றாலும் திராவிடர் கழகம் என்றாலும் அவை ஒன்று என்றாலும் அவற்றிற்குள் சில வேறுபாடுகள் உண்டு.
முக்கியப் பெரிய வேறுபாடு என்ன-வென்றால் எல்லா திராவிடர் கழகத்தினர்களும் பகுத்தறிவாளர்கள்தான். அதற்கு மறுப்பு ஒன்றும் இருக்க முடியாது.
பகுத்தறிவாளர்-களாக இருந்தால்தான் அவர்கள் திராவிடர் கழகத்தினர்களாக இருக்க முடியும். இது நாடறிந்த உண்மையாகும். அய்யா அவர்கள் இப்படித்தான் நம்மைப் பக்குவப்படுத்தி இருக்கின்றார்கள். ஆனால் எல்லா பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்களும் திராவிடர் கழகத்தின் உறுப்பினர்கள் அல்ல என்பது வேறுபடுத்திக் காட்டக்கூடிய ஒரு நிலை!
அமைப்புரீதியாக மாறுபட்டவர்கள் வேறு அமைப்புகளில் இருந்தாலும் இந்த சமுதாயக் கொள்கைகளை எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்கின்றோம் என்று சொல்லும்போது பகுத்தறிவாளர் கழகக் கொள்கையினை ஏற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு எல்லாம் இடம் உண்டு. அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் எந்த அமைப்புகளில் இருந்தாலும் அவர்கள் பகுத்தறிவாளர்கள்தான்.
எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை; எனக்கு ஜாதி நம்பிக்கை இல்லை; மூட-நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும். ஜாதியற்ற, மூடநம்பிக்கையற்ற ஒரு உணர்வினை உருவாக்க வேண்டும் என்கின்ற எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்களை எல்லாம் அழைத்து, அவர்களை எல்லாம் இழுத்து அவர்களை எல்லாம் பொறுப்பேற்கச் செய்து மூடநம்பிக்கை ஒழிப்பை மிகத் தீவிரப்படுத்துவதற்கு நாம் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்-பதற்குத்தான் பகுத்தறிவாளர் கழகம் இருக்கின்றது.
எனவே, இந்த குடந்தை கல்லூரி இருக்கின்ற இடம், அரசு அலுவலகங்கள் மிகுதியாக இருக்கின்ற இடம், தஞ்சை மாவட்டத்திலேயே மிக முக்கியமான குறிப்பிடத்தக்க நகரம் இந்தக் குடந்தையாகும் (கும்பகோணம்).
ஆரியத்தினுடைய கோட்டை என்று கருதக்கூடியது வருணாசிரம தருமம் பாதுகாக்கப்படுகின்ற இடம் மூடநம்பிக்கை கொடிகட்டிப் பறக்கக்கூடிய இடம். இப்படி எங்கு மூடநம்பிக்கைகள் மிகுதியாக இருக்கின்றதோ அங்குதான் பகுத்தறிவாளர்-களுக்கு மிகுதியான வேலை.
அந்த நிலையினைப் பார்க்கும்போது அய்யா அவர்கள் பல ஆண்டுகளாக இடையறாது பாடுபட்டதன் பயனாய் ஆரம்ப காலத்தில் இருந்த எதிர்ப்புகளை எல்லாம் நெளிவுசுளிவாக ஆக்கிவைத்துவிட்டுப் போய்விட்டார்கள்.
இன்றைக்கு நமக்கு எந்த எதிர்ப்பும் அவ்வளவாகக் கிடையாது.
ஏதோ எதிர்ப்புகள் இருக்கின்றன என்றாலும் அவை பழைய காலத்து எதிர்ப்பு-களைப் போன்றது அல்ல.
பழைய எதிர்ப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இன்றைய தினம் உள்ள எதிர்ப்புகள் எதிர்ப்புகளே அல்ல என்றுதான் சொல்ல வேண்டும்.
முன்பு பகுத்தறிவாளர்களாக இருந்தால் நேரடியாகத் தொல்லை கொடுத்த காலம் மாறி, இன்னமும் பகுத்தறிவாளர்களாக இருந்தால் டிரான்ஸ்பர் வேறு இடத்துக்கு மாற்றுதல், போன்ற மறைமுகமான தொல்லைகள். பகுத்தறிவாளர் என்பதை மனதில் கொண்டு கொடுக்கப்படுவது இன்னமும் இருந்து-கொண்டுதான் இருக்கின்றது என்பதை நாங்கள் மறுக்கவில்லை.
ஆனால் பொதுமக்கள் ஆத்திரத்திற்கு ஆளாகக்கூடிய, ஆவேசத்திற்கு ஆளாகக்கூடிய காலகட்டத்தை எல்லாம் நாம் தாண்டி இருக்கின்றோம்.
நாம் பழைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது கழுவேற்றி வந்த மனிதனை சாதாரணமான குண்டூசியால் குத்துவது-போன்ற தொல்லைதான் ஆகும்.
அந்தக் காலத்தில் இந்தக் கொள்கை-யினைச் சொன்னதற்காக கழுவேற்றப்பட வேண்டும் என்று இருந்த காலகட்டத்தினை எல்லாம் அய்யா அவர்களும், அம்மா அவர்களும் மாற்றிவிட்டார்கள்.
பிறகு இன்றைய தினம் தார்ரோட்டிலே ராஜபாட்டையிலே நாம் சென்றுகொண்டு இருக்கின்றோம் என்ற நிலைமையினை உருவாக்கி வைத்துள்ளார்கள் என்று பல செய்திகளை எடுத்துக் கூறினேன். அன்றைக்கே, திராவிடர் மாணவர் கழகம் குறித்து கூட்டத்தில் விளக்கவுரையாற்றினேன். அதை அடுத்த கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.
– கி.வீரமணி
நினைவுகள் நீளும்…