உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆசிரியர்-வடமொழி நடத்திய பண்பாட்டுப் படையெடுப்பு
ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர் டத்தோ மாரிமுத்து அவர்களின் பெருமுயற்சியாலும் டத்தோ சாமிவேலு அவர்களின் ஒத்துழைப்புடனும் மலேசிய அரசின் ஒரு மில்லியன் டாலர் உதவியுடனும் நடைபெற்ற மாநாட்டில் உலகளாவிய நிலையில் தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும்விதத்தில் அமைந்த ஆசிரியர் அவர்களின் உரையிலிருந்து சில துளிகள்:
உலகளாவிய அளவில் தமிழ்மொழி செழிக்க வேண்டுமானால், தொழில்நுட்பம் புகவேண்டும். சுமார் 60 நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் இணையத் தமிழ் பிறந்தது. உலகம் முழுவதும் தமிழ் பரப்பும் சமுதாயத் தொடர்புச் சாதனமாக இணையம் பயன்படுகின்றது.
தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், சுவடிகள் போன்றவற்றைப் பாதுகாத்துப் பேணுதல், புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு மொழியை வளப்படுத்துதல் போன்ற நோக்கங்களோடு எண்ணற்ற தமிழ்த்தளங்கள் வந்தவாறு உள்ளன. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக தமிழ் இணையதளங்கள் விளங்குகின்றன.
இந்த அறிவியல் முறைகளைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால் மட்டுமே உலகளாவிய நிலையில் தமிழ் பேசப்படும். தமிழர்கள் மதிக்கப்படுவார்கள் என்று தமிழ் பேசும் மக்கள் மதிப்புப் பெறுவதற்கான வழிவகைகளைச் சுட்டிக் காட்டினார்.
தமிழ் மொழியின் பெருமை, பரமசிவனுடைய டமாரத்தில் இருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ சொல்லி விடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலனை அழைத்ததாலும், எலும்பைப் பெண்ணாக்கின-தாலும், மறைக்கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மையுற்றதாகி விடாதுஎன்று கூறும் தந்தை பெரியார், ஒரு மொழியின் தேவை முக்கியத்துவமெல்லாம் அது பயன்படுகின்ற தன்மையைப் பொறுத்ததேயாகும் எனக் குறிப்பிடுகிறார்.
மேலும், மக்களது அன்றாட வாழ்க்கையில் அவர்களது அறிவை வளப்படுத்தும் தன்மையில் எந்த வகையில் உபயோகப்படும்படி இருக்கிறது என்பதையே அளவுகோலாகக் கொண்டு அளக்க வேண்டும் என்கிறார் என தந்தை பெரியாரின் கருத்தினை எடுத்துரைத்தார்.
தகவல் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தகவல் யுகத்தில் கணிப்பொறிதான் கருவி, தகவலுக்கு மொழிதான் கருவி. எனவே மக்கள் பேசும் மொழி கணிப்பொறிக்குத் தேவை. உலக மொழிகளைக் கணிப்பொறியில் கையாள புத்தம் புதிய வசதிகளும் தொழில்நுட்பங்களும் வளர்ந்த வண்ணம் உள்ளன.
தமிழ் விசைப்பலகையின் வடிவமைப்பைத் தரம்படுத்தியது போல மொழி ஆய்வுக் கருவிகளை மின்_அகராதி (e-dictionary) சொற்களஞ்சியம் (thesaurus)) பெருந்தரவு (corpus) போன்றவற்றில் உருவாக்க வேண்டும். அப்போதுதான் உலகளாவிய நிலையில் தமிழ்மொழி வளரும் என தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு வழி கூறினார்.
எழுத்துக்கலையின் தொன்மையினை, திராவிடர்கள் மீதான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு என்ற ஆதாரக் களஞ்சியத்தி-லிருந்து எடுத்துக் காட்டினார். தமிழ் இலக்கியங்களில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு இருந்த விதத்தினை, அறிஞர் அண்ணா எழுதிய ஆரிய மாயை என்னும் நூலிலிருந்து எடுத்து விளக்கினார்.
கணினித் தமிழ் எழுத்துரு பயன்பாட்டில் நிகழவிருந்த பண்பாட்டுப் படையெடுப்பு முறியடிப்பினை, விடுதலை (28.10.2010) நாளிதழில் வெளிவந்த அறிக்கை மற்றும் செய்திகளின் அடிப்படையில் விளக்கம் கொடுத்தார்.
தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொற்கள் என்று ஆக்குவதில் ஆதிக்கப் பழைமைவாதி-களுக்குத் தனி ஆசை. அவ்வாறு செய்வதால் இந்நாட்டுக்கும் அவர்கட்கும் இல்லாத தொடர்பை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். ஆனால், இந்தத் தீய முயற்சியை அறிவுடைய தமிழர்களும், நடுநிலையுடைய உலகமும் அறிந்து நகையாடக்கூடுமே என்பதை அவர்கள் கருதுவதேயில்லை.
இதோ, வடமொழி எனக் கருப்படும் தமிழ்மொழி வேர் அடையாளத்துடன் சில சொற்களைப் பற்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் அறிவார்ந்த விளக்கம்! என்று கூறிய ஆசிரியர், புரட்சிக்கவிஞரின் வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா எனும் நூலிலிருந்து மீன், நேயம், பூசை, தெய்வம் போன்ற சில சொற்களை எடுத்துக்கூறி விளக்கம் தந்தார்.
தமிழ் எழுத்துக் குடித்தனத்தைச் சிக்கனப்படுத்தும் வழிமுறைகளாக, தொடக்க நிலையில், தற்சமய நடைமுறையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், மேலும் சீர்திருத்த நடைமுறை ஆக்கத்திற்கு, தமிழ் வளர்ச்சிக்கான கணினி ஆக்கப் பணிகள், தமிழ் வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகள் ஆகியன குறித்துப் பேசிய ஆலோசனைகள் பாராட்டி வரவேற்கத்தக்கன.
ஆசிரியரின் சிறப்புரை புத்தகமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
————-
உலகத் தமிழ் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி
தமிழர் வாழ்ந்த விதம், வளர்ந்த விதம், இன்று வாழ்கின்ற முறை அனைத்தையும் உலகத் தமிழ்ப் பேராளர்களுக்கு சுவையோடு விவரிக்கும் அரிய வாய்ப்பை அண்மையில் பெற்றார், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. இடம்: கோலாலம்பூர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு. முன்னிலை: மலேசியத் தமிழ்த் தலைவர் டத்தோ சாமிவேலு மற்றும் 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஈராயிரம் தமிழ்ப் பேராளர்கள். …
“உலகளாவிய நிலையில் தமிழும், தமிழரும் என்ற தலைப்பில் மாநாட்டில் சிறப்புரையாற்றிய கி.வீரமணி அவர்கள், தமிழுக்கும்-தமிழருக்கும் கிடைத்த அரும்பொருளில் திருக்குறளுக்கு ஈடு இணை எதுவும் இல்லை’ என்றார்.
தமிழ்த் தலைவர் வீரமணி எங்கள் வழிகாட்டி’ என்று, சிறப்புரைக்கு முன் அறிமுகம் செய்த டத்தோ சாமிவேலு, மலேசியத் திராவிடர் கழகம் எங்களுக்கு உணர்வூட்டும் அமைப்பு என்றும் கூறினார்.
இறுதி நாள் கூட்டத்தில், மலேசிய இரண்டாம் கல்வி அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்விலும் அவரை முன்னிலைப்படுத்திய டத்தோவும், அவரின் ஏற்பாட்டுக் குழுவினரும் பெயர் குறிப்பிட்டு அவருக்கு நன்றி நவில மறக்கவில்லை.. 57 நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது-கோடிக் கணக்கானோர் தமிழைப் பேசுகின்றனர்.
தமிழ் மொழி வாடாமல் வதங்காமல் மேலும் வளர வேண்டும் என்பதில் தமிழினத்திற்கு அக்கறையும், பொறுப்பும் அதிகரித்து வருகின்றன என்று கூறிய திரு. கி.வீரமணி, சிங்கப்பூரில் தமிழ் அதிகாரத்துவ மொழியாக விளங்குவதையும், மலாய் மொழியை தேசிய மொழியாகக் கொண்ட மலேசியாவில், தமிழ்ப் பள்ளிகளுக்கும், தமிழ்க் கற்பித்தலுக்கும் நிறைய நிதி ஒதுக்கப்பட்டு வருவதையும் பாராட்டினார்.
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்களை அங்கீகரித்ததில் தமிழகம் அல்லாத முதல் நாடு சிங்கப்பூர் எனப் பலத்த கையொலிகளுக்கிடையே குறிப்பிட்ட அவர், பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகள் இன்றைய நவீன முன்னேற்றங்களுக்கு வழி திறந்தவை என்றார்.
வேதங்கள் சம்ஸ்கிருத மொழியில் அமைந்தவை என்பது சரியல்ல – அவை தமிழில்தான் இருந்தன என்பதை அண்மைய நூல் ஒன்றின் (நாவாலியூர் நடராஜன் எழுதிய வட மொழி இலக்கிய வரலாறு’) மேற்கோளுடன் குறிப்பிட்ட திரு.வீரமணி, தமிழுக்கும் செம்மொழி அங்கீகாரம் பல ஆண்டுப் போராட்டத்திற்குப் பின் தான், 2004இல் 11 தகுதிகளின் அடிப்படையில் கிடைத்தது என்றார்.
மண்ணுக்கு உரம் தேவை – அதன் பயனாகப் பயிர்களை கூடுதலாக உண்டாக்கலாம். ஆனால் உரத்தையே உணவாகக் கொள்ளலாமா? என்ற கேள்வியுடன், சிறப்புரைக்குச் சிறப்புச் சேர்த்தார் இணை வேந்தர் கி.வீரமணி.
– சிங்கப்பூர் முதுபெரும் எழுத்தாளர் ஏ.பி.இராமன் முகநூலில் எழுதியுள்ளது.