வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

பிப்ரவரி 16-28

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

தமிழ் அழிப்பாரின் எண்ணத்துக்கு வலிமை சேர்த்துவிடக் கூடும் என்று கருதினார் புரட்சிக்கவிஞர். தம் கருத்தை வலியுறுத்தி ஆராய்ச்சித் தொடர் ஒன்றினை எழுதினார்;  வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? எனும் கட்டுரைத் தொடர், தமிழ்ப் பகைவர்களுக்குச் சாட்டையடி கொடுத்தது: தமிழ் ஆர்வலர்களுக்கெல்லாம் புது வழி காட்டியது; தெளிவூட்டியது.

– சு.மன்னர்மன்னன்

காட்சி

தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொற்கள் என்று ஆக்குவதில் பார்ப்பனர்க்குத் தனி ஆசை. அவ்வாறு செய்வதால் இந்நாட்டுக்கும் அவர்கட்கும் இல்லாத தொடர்பை உண்டு-பண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் இந்தத் தீய முயற்சியை அறிவுடைய தமிழர்களும், நடுநிலை-யுடைய உலகமும் அறிந்து நகையாடக்கூடுமே யென்பதை அவர்கள் கருதுவதேயில்லை.

தூங்கிக் கொண்டிருந்தார்கள் தமிழர்கள். அது அந்த நாள். பார்ப்பனர் அல்லல் புரிந்தார்கள் அளவில்லாமல்.

விழித்துக் கொண்டார்கள் தமிழர்கள். இது இந்த நாள். அல்லல் புரியாது அடங்கினார்களா எனில் இல்லை.

காட்சி _- தொழிற்பெயர். அதில் காண், முதனிலை, சி_-தொழிற்பெயர், இறுதிநிலை. காண் என்பதின் இறுதியில் உள்ள _ -ண், என்ற மெய்யானது _- சி, என்ற வல்லினம் வந்தால் _- ட் -_ ஆகும் என்பது சட்டம். அதனால்தான் காட்சி என்றாயிற்று. காணல், காண்டல், காட்சி அனைத்தும் ஒரே பொருள் உடையவை. எனவே காட்சி தூய தமிழ்ச் சொல். இதைப் பார்ப்பனர் தம் ஏடுகளில் காக்ஷி என்று போடுவார்கள்.

காட்சியைக் காக்ஷி ஆக்குவதில், தமிழ்ச்-சொல்லை வடசொல் ஆக்குவதில் அவர்-கட்குள்ள ஆசை புரிகிறது அல்லவா? இவ்வாறு காக்ஷி என்று பார்ப்பனர்கள் தம் ஏடுகளில் கொட்டை எழுத்துகளில் வெளியிடுவதால் நம்மவர்களும் அதையே பின்பற்றத் தொடங்கி விடுகிறார்கள்.

பார்ப்பான் சொன்னது பரமசிவன் சொன்னதல்லவா? அதனால்தான் நாம் பொதுவாக நம்மவர்கட்குச் சொல்லுகிறோம்.

தமிழ் தமிழர்க்குத் தாய்! தமிழிற் பிழை செய்வது தாயைக் குறைவுபடுத்துவதாகும். படக் காட்சிக்குரிய அறிவிப்போ, திருமண அழைப்பிதழோ, வாணிக அறிவிப்புப் பலகையோ எழுதும் போது தமிழறிஞர்களைக் கலந்து எழுதுங்கள் என்கிறோம்.

இனி இவ்வாறு தமிழ்ச் சொற்களையெல்லாம் பார்ப்பனர் வடசொற்கள் என்று சொல்லிக்-கொண்டு போகட்டுமே, அதனால் தீமை என்று தமிழரிற் சிலர் எண்ணலாம்.

அவ்வாறு அவர்கள் இந்நாள் வரைக்கும் விட்டு வைத்ததால் என்ன ஆயிற்று தெரியுமா? வடமொழியினின்றுதான் தமிழ் வந்தது, வடவர் நாகரிகத்திலிருந்துதான் தமிழர் நாகரிகம் தோன்றியது என்றெல்லாம் அவர்கள் சொல்வ-தோடு அல்லாமல், உலகையும் அவ்வாறு நம்பவைக்கவும் முயல்கிறார்கள்.

அது மட்டுமா? மேற்சொன்ன காரணங்-களைக் காட்டி, அவர்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்கள் என்னும் முடிச்சுமாறித்-தனத்தையும் மெய் என்று நிலைநாட்டி வருகிறார்கள்.

இது வட சொல்லன்று; இன்ன காரணத்தால் இது தமிழ்ச் சொல் என்று விளக்கிவர முடிவு செய்துள்ளோம். தமிழர்கள் ஊன்றிப்படிக்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *