கர்மவீரன் கோட்சேயாம்! பாராளுமன்றத்தின் முன் சிலைகளாம்!

பிப்ரவரி 16-28

கர்மவீரன் கோட்சேயாம்!
பாராளுமன்றத்தின் முன் சிலைகளாம்!

 

சந்திரபிரகாஷ் கவுசிக்

காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் சிலை வைக்க மத்திய அரசை  நாடியுள்ளதாக கூறியுள்ளது. நாடு முழுவதும் கோட்சேவிற்கு சிலைகள் அமைக்க வேண்டும் என்று இந்து மகாசபை கூறியிருந்தது.

இந்த நிலையில் முதலில் நாடாளுமன்றத்தில் சிலை அமைத்துவிட்டு பிறகு மற்ற இடங்களில் அமைக்க வேண்டும் என்று தற்போது மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

இதுகுறித்து டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சந்திரபிரகாஷ் கவுசிக் கூறியதாவது: இதுவரை நமது நாட்டை ஆண்ட அரசுகள் நாதுராம் கோட்சே போன்ற கர்மவீரரை தேசத்தின் எதிரியாகவும் கொலைகாரனாகவும் சித்தரித்து வந்தது. ஆனால் கோட்சே அப்படியாப்பட்டவர் அல்ல, அவர் ஒரு உண்மையான தேசபக்தர்.

அவரை நாம் கொலைகாரராகப் பார்க்கக்கூடாது. ஆனால், நமது தேசத்தை ஆண்ட தேசவிரோத சக்திகள் நம்மை அப்படிப் பார்க்க வைத்துவிட்டனர். தற்போது தேசநலனில் அக்கறை கொண்ட அரசு மலர்ந்திருக்கிறது. இது ஒரு இந்து ராஷ்டிரம். இதை மத்திய அரசே ஒப்புக்கொண்டு விட்டது.

பிரதமர் மோடிகூட பல மேடைகளில் இதைக் கூறியுள்ளார். இந்த நாட்டில் உள்ள ஒருவர் இந்து நாடு என்று கூறுவதில் தவறு என்ன என்று புரியவில்லை. மோடி ஒன்றும் பாகிஸ்தானிலோ, அல்லது இஸ்ரேலிலோ சென்று இந்து நாடு பற்றிப் பேசவில்லை. இந்து நாட்டில் இருந்து இந்து நாட்டைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

சாக்சி

கோட்சேவிற்கு சிலை வைக்கும் முடிவு நடாளுமன்றத்தில் இருந்தே தொடங்க வேண்டும். தெருவிற்குத் தெரு சிலைவைக்கும் முன்பு நாடாளுமன்றத்தில் சிலை வைத்தால் அதற்குத் தகுந்த மரியாதை கிடைக்கும்.

இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே எங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசை அணுகியுள்ளனர். முதலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிலை வைத்த பிறகுதான் மற்ற இடங்களிலும் வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். இதற்கு மத்திய அரசும் அனுமதியளிக்கும் என்று உறுதிபடக் கூறுகிறோம்.

சாக்சி, கோட்சேவைப் பற்றிக் கூறியது, பிறகு பின்வாங்கியது பற்றிக் கேட்டபோது, நமது நாட்டின் மீது பற்றுக்கொண்ட தேசபக்தர்கள் அனைவரும் கோட்சேவை ஒரு கர்மவீரன் போன்றுதான் பார்க்கிறார்கள். இந்துக்களின் பாதுகாவலனாகிய கோட்சேவை திறந்த மனதுடன் இதுவரை ஆதரிக்க யாருக்கும் துணிச்சல் இல்லை, காரணம் சில தேசவிரோத சக்திகளின் பிடியில் நமது நாடு சிக்கி இருந்தது. இப்போது நாம் பயப்படத் தேவையில்லை.

இன்று கோட்சே போன்று வீரம், விவேகம் கொண்ட இளைஞர்கள் பெருகியுள்ளனர். இவர்களுக்கு எல்லாம் இனி சுதந்திரம்தான். இவர்கள் நினைத்தால் இந்து தேசத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டு செல்ல முடியும். அரசியல்வாதிகளுக்கு அரசியல் லாபம்தான் முக்கியம்.

அதனால்தான் ஆளும் பா.ஜ.க. அரசு கோட்சே பற்றி திறந்த மனதுடன் முடிவெடுக்க இயலவில்லை. ஆனால் தற்போது நடப்பது இந்து அரசு. ஆகையால் எந்த முடிவிற்கும் தயக்கம் கொள்ளத் தேவையில்லை. கோடான கோடி இந்துக்களின் ஆதரவு என்றும் பா.ஜ.க. அரசிற்கு உள்ளது என்று கூறினார்.

ஆதாரம்: http://www.liveaaryaavart.com/2014/12/demand-for-putting-Godsey-idol-in-parliament.html

கோட்சே போன்ற மகா புருஷர்களுக்கு இந்தியாவில் சிலை வைக்காமல் பாகிஸ்தானிலா வைக்க முடியும்?

– இந்து மகாசபைத் தலைவர் சந்திரபிரகாஷ் கவுசிக், (எக்னாமிக் டைம்ஸ் 17.12.2014)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *